Tuesday, December 3, 2013

அழகுக் குறிப்புகள் !



















அகரம் முதலாம் தாய்மொழி அழகு
இகரம் துவக்கும் வார்த்தைகள் அழகு
சிகரம் உயர்ந்த இமயம் அழகு
இரக்கம் நிறைந்த இதயம் அழகு

முழுமதி யதற்கு முகில்கள் அழகு
முன்னிர வுக்கு மின்மினி அழகு
முதியவர் கட்கு முன்நரை  அழகு
முதிர்கன்னி யற்கு மெளனம் அழகு


பிரிந்த தண்டவாளம் பயணிக்க அழகு
பிரியாத சொந்தபந்தம் பழகுதற்கு அழகு
புரிந்த நண்பர்கள் இளமைக்கு அழகு
புரியாத அன்பர்க்கு போதித்தல் அழகு

லாபமோ நட்டமோ நேர்மையே அழகு
கோபமோ தாபமோ பொறுமையே அழகு
பாவமோ பழியோ பரிகாரம் அழகு
சாபமோ சதியோ போராட்டம் அழகு                   

காதலோ காமமோ கல்யாணம் அழகு
கண்ணிலோ பெண்ணிலோ கண்ணியம் அழகு
காலிலோ கையிலோ கட்டுப்பாடு அழகு
கனவிலோ நினைவிலோ கற்புதான் அழகு

மரக்கிளை களுக்கு மலர்கள் அழகு
மழைமுகில் களுக்கு மின்னல் அழகு
மணமக் களுக்கு மென்னகை அழகு
மதபோத கர்க்கு வாய்மைதான் அழகு

தொழுகைக்கு விழிக்கும் விடிகாலை அழகு
தொழுதபின் அருந்தும் தேநீர் அழகு
திருமறையோதித் துவக்கும் நாள் அழகு
இருகரமேந்திக் கேட்கும் துஆ அழகு

உழுகின்ற போதிலே வயல்வெளி அழகு
விழுகின்ற இளவெயில் நடைக்கு அழகு
விழுதுகள் தொங்கிடும் ஆலும் அழகு
பழுதற்ற எண்ணத்தில் ஆளும் அழகு

அகமதி யர்க்கு அறமே அழகு
அகமதி லென்றும் அன்பே அழகு
முகமதில் தங்கும் புன்னகை அழகு
இகமது இகழா இல்லறம் அழகு

முகமதி யர்க்கு முகமன் அழகு
அகமது(ஸல்)வைத் தந்த அல்லாஹ் அழகு
சுகமிது நிலைக்க இஸ்லாம் அழகு
யுகமிது இழந்தால் மறுமையே அழகு!

சபீர்
Source : http://adirainirubar.blogspot.in

1 comment:

திண்டுக்கல் தனபாலன் said...

அனைத்தும் அழகு...

ரசித்தேன்... வாழ்த்துக்கள்...