அடையாள அட்டைகளை திரும்பப் பெறுவது, அளவுக்கு மீறிய பாதுகாப்புகளை குறைப்பது, அமெரிக்க அதிகாரிகளுடனான சந்திப்புகளை ரத்து செய்தது போன்றவை ஆறுதலான செய்தி. போபாலில் பல்லாயிரம் மக்களைப் படுகொலை செய்த வாலன் ஆண்டர்சனைத் தப்பவைத்த தேசம்......
இன்று அமெரிக்கப் பள்ளிகள் மற்றும் தூதரகங்களில் பணியாற்றும் இந்தியர்களின் சம்பளவிவரங்களைக் கோரியுள்ளது.அமெரிக்கத் தூதரக அதிகாரிகளின் கூட்டாளிகள் என்ற பெயரில் விசா பெற்று வந்துள்ள ஓரினச் சேர்க்கையாளர்களை இந்தியச்சட்டப்படி கைது செய்யும் அளவுக்கு இந்நடவடிக்கை நீளலாம் எனத் தெரிகிறது.
இவை பழிவாங்கல் நடவடிக்கை என்றாலும், அமெரிக்கர்கள் நம் சட்டத்தை விட மேலானவர்கள் அல்ல என்று காட்டும் காலங்கடந்த முயற்சி எனலாம்.
தேவயானி கோப்ரகடே தன் பணியாளரை மோசமாக நடத்தியிருந்தால் அது குற்றம்தான். ஆனால் ஒரு மிகப்பெரிய நாட்டின் துணைத் தூதரை தெருவில் விலங்குபோட்டு அழைத்துச் சென்றது அகம்பாவச் செயல்.
அப்துல் கலாம், ஜார்ஜ்ஃபெர்ணாண்டஸ், ஷாருக்கான் உள்ளிட்ட இந்தியப் பிரபலங்களை அமெரிக்கா விமான நிலையத்தில் இழிவுபடுத்திய போதும்,,
இந்தியாவையும் அதன் மக்களையும் அத்து மீறி உளவு பார்த்தபோதும் அமைதி(?) காத்த இந்தியா
இப்போதாவது விழித்ததே ....அதற்காக அகமகிழ்ந்து எழுதிய வாழ்த்து...
............................................................................................................
தாய்நாடே வாழ்க..
...............................
தன்மானம் பெற்றாய் - உன்
தலைநிமிர்வு வாழ்க
பெண்மானம் காத்தாய்- நீ
பெருமை பொங்க வாழ்க
பெண்ணை இழிவு செய்யும் -அப்
பேதையரின் மமதை
மண்ணைக் கவ்வச் செய்தாய் -உன்
மாண்பு மேலும் வாழ்க
நாகரீக நாளில் -அ
நாகரிகம் செய்த
நாகப் பாம்பின் தலையை - நீ
நசுக்குகிறாய் வாழ்க
அடிமைபோல் இருந்தாய் - நாம்
அவமதிக்கப்பட்டோம்
இடிமுழக்கம் செய்தாய் - எம்
இதயம் போற்ற வாழ்க
காலம்கடந்து விழித்தாய் - உன்
கண்விழிப்பு வாழ்க
ஏலம் போடப் பார்த்தான் - நீ
எதிர்த்தடித்தாய் வாழ்க
ஏகாதி பத்தியம் - அதற்
கேறிவரும் பைத்தியம்
ஆகா ஒரு வைத்தியம் -என்
அன்னை தேசம் வாழ்க
கொடுமையாளன் முன்பு -நம்
கொடிகள் தாழலாமா?
அடிமையாக லாமா? - உன்
ஆத்திரங்கள் வாழ்க
விலங்குபுத்தி தேசம் - கை
விலங்கு போட்டபோது
விலங்கொடிக்க எழுந்தாய் - நமை
விளங்கவைத்தாய் வாழ்க..
எழுந்து நின்று விட்டாய் - எம்
இதயம் மகிழ வைத்தாய்
நலிந்து போய் விடாதே - உன்
நாகரீகம் வாழ்க..
1 comment:
வீரமிகு வரிகள்...
வாழ்த்துக்கள்...
Post a Comment