Friday, December 6, 2013

காதல் பரிசு

முனைவர் பட்டம் பெறுவதென்பது ஒரு சாதனை என்றும் ஒரு வேதனை என்றும்கூடச் சொல்லலாம். யாருக்கு சாதனை, யாருக்கு வேதனை என்பது பட்டம் பெறும் நபரைப் பொறுத்தது. ஆனால் முஹ்யித்தீன் அப்துல் காதர் என்று பெயர்கொண்ட என் தம்பி தீனைப்  பொறுத்தவரை அது கடுமையான உழைப்புக் கிடைத்த பரிசு. நானும் இந்தத் துறையில் இருப்பதனால் எனக்கு நன்றாகவே தெரியும்.

ஒருமுறை என்னிடம் ஆர்.கே. நாராயண் நாவல்களில் எம்.ஃபில் பட்ட ஆய்வு செய்த ஒரு சகோதரி, என்னைக் கலக்காமலே தன்னிஷ்டத்துக்கு தீசிஸ் ரெடி செய்து பிரிண்ட் செய்து எடுத்துக்கொண்டு வந்துவிட்டார்! என் கையெழுத்துக்காக. கடுமையான சிபாரிசு வேறு அவருக்கு! சரி, உள்ளே என்ன இருக்கிறதென்று பார்த்தால், எனக்கு பெரிய அதிர்ச்சி! அப்போது ஆர்.கே. நாராயண் உயிரோடு இருந்தார். பார்த்திருந்தால் அவருக்கும் அதிர்ச்சியாக இருந்திருக்கும். என்ன என்கிறீர்களா? அவருடைய கதைகளின்மீது எம்.ஃபில். செய்கிறேன் என்று சொல்லிவிட்டு, இருக்கின்ற ஐந்து அத்தியாயங்களில் ஒரு மூன்று அத்தியாயங்களுக்கு  அவருடைய கதைகளையே – டிட்டோவாக – டைப் செய்து அழகாக பைண்ட்-டும் செய்திருந்தார்!


”அம்மா, நான் இதுவரை ஜெயிலுக்குப் போனதில்லை. ஆனால் ஆர்.கே.நாராயண் உயிரோடு இருப்பதால், நீங்களும் நானும் ஜெயிலுக்குப் போகும் வாய்ப்பு உறுதி. அதனால் தயவு செய்து ஏதாவது ‘ஆய்வு’ மட்டும்  செய்து கொண்டு வாருங்கள் என்று சொல்லி திருப்பி அனுப்பினேன்!

பி.எச்.டி. பட்ட ஆய்வுகளும் இதற்குக் குறைந்தவை அல்ல! ஆய்வுகளை தடித்த நூல்களாகக் கொண்டு போய் பல்கலைக் கழகத்தில் ஒப்படைக்கும்போது அதை வாங்கிக்கொள்ளும் ப்யூன்கள் அதை அப்படியே தூக்கி செக்‌ஷனுக்குள் கடாசுவார்கள் பாருங்கள்! ஆஹா, அற்புதமான காட்சி. ஆனால் நிறைய ஆய்வுகளுக்கு ’உரிய மரியாதை’ அதுதான் என்று பின்னர்தான் எனக்குத் தெரிந்தது.

ஒருமுறை என் நண்பர் ஒருவரிடம் பி.எச்.டி. ஆய்வு செய்தார் இன்னொரு நண்பர். ”பாருங்கள் ரூமி, என்னிடமே கொண்டு வந்து ஒரு அத்தியாயத்தைக் கொடுத்து நான் கஷ்டப்பட்டு எழுதினேன் என்று சொல்லி கொடுத்துவிட்டுப் போகிறார்” என்றார். அதிலென்ன உங்களுக்கு பிரச்சனை என்று கேட்டேன். ”அந்த அத்தியாயம் நான் எழுதியது. என்ன, நான் நான்கு சக்கர வாகனங்களைப் பற்றி எழுதினேன். இப்போது அது இரண்டு சக்கர வாகனமாக மாறிவிட்டது” என்றார்!


தம்பி தீனின் ஆய்வு முறையாகவும் முழுமையாகவும் இருந்ததற்கு முக்கிய காரணம் தம்பி மட்டுமல்ல. அவருடைய வழிகாட்டியாக இருந்த ஜமால் முஹம்மது கல்லூரியின் முன்னாள் நட்சத்திர முதல்வர் ஷேக் சாரும் தான். ஆமாம். அவர் வேலை செய்வதில் மட்டுமல்ல, வேலை வாங்குவதிலும் ஒரு பூதம்! விரல் நுனிகளில் விஷயங்களை வைத்திருப்பவர். எவ்வளவு கஷ்டப்பட்டு பெரிய பழத்தை உரித்து சாறு எடுத்துக் கொடுத்தாலும், தண்ணீர் அதிகமாகக் கலந்துவிட்டது, இனிப்பு குறைவாக உள்ளது, இங்கே கொஞ்சம் கசப்பாக உள்ளதே என்றெல்லாம் சொல்லிவிடுவார். அவரைத் திருப்திப் படுத்திவிட்டால் போதும், தீசிஸ் பக்காவாகிவிட்டது என்று அர்த்தம்.

”சென்ற 25-11-2013 அன்று பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில், தமிழக ஆளுநரும் பல்கலைக்கழகத்தின் வேந்தருமாகிய மேதகு திரு. கே. ரோசய்யா, ஆடிட்டர் முஹிய்யத்தீன் அப்துல் காதருக்கு டாக்டர் பட்டம் வழங்கி கௌரவித்தார்” என்று பத்திரிகைச் செய்தி கூறுகிறது. என்னைப் பொறுத்தவரை ஆளுநர் வழங்கினாலும் அரைவேக்காடு வழங்கினாலும் – ஒருவேளை இரண்டும் ஒன்றுதானோ? ம்ஹும், சில சமயங்களில் அப்படிச் சொல்லிவிட முடியாது – அது முக்கியமல்ல. உடல் நலம் குன்றிய ஆளுநர் அமர்ந்துகொண்டே பட்டங்களை வழங்கினார் என்றும் சொல்லப்படுகிறது. அவர் உட நலம் சீரடைய என் பிரார்த்தனைகள்.

தம்பியின் நெடுநாளைய கனவு ஒன்று நிறைவேறி இருக்கிறது. டாக்டர் பட்டம் என்பது பலரைப் பொறுத்த அளவில் ‘வாங்கப்படுவது’. சிலரைப் பொறுத்த அளவில்தான் அது உழைப்புக்குக் கிடைத்த பலனாக உள்ளது. அந்த வகையில் தம்பி தீனுக்குக் கிடைத்தது இரண்டாவது வகை. அதுவும் மேலாண்மைத் துறையில்!  (அதைப்பற்றி என்னால் யோசிக்கவே முடியவில்லை. நான் பி.காம். படித்திருந்தால் நிச்சயம் ஃபெயில் ஆகியிருப்பேன். [ஆங்கில இலக்கியம் பற்றி தீனும் இப்படித்தான் சொல்வாரே?])

இதில் விஷேஷம் என்னவென்றால், மாணவர் இருந்தது சிங்கப்பூரில். வழிகாட்டி இருந்தது இந்தியாவில்! அவ்வப்போது அலைபேசியில் பேசிப்பேசியும், தேவைப்படும்போது தன் கம்பனி வேலைகளை விட்டுவிட்டு திருச்சி வந்து பேசியும் தீன் இந்த பட்டத்தை வாங்கியிருக்கிறார்.  இதை மிகமுக்கியமானதாக நான் கருதுகிறேன்.

எனெனில் வேலை இல்லாமலிருக்கும் ஒருவர், ஒரு வேலை வாங்குவதற்காக, அதற்காக தன்னை தகுதிப்படுத்திக்கொள்வதற்காக பி.எச்.டி செய்வதை நாம் அறிவோம். ஆனால் ஏற்கனவே வேலையில் – இல்லையில்லை – ஒரு கம்பனி முதலாளியாக / பார்ட்னராக  இருக்கும் ஒருவர், சிங்கப்பூரில் இயங்கிக்கொண்டிருக்கும் சில பல வெளிநாட்டு பல்கலைக்கழகங்களில் கடந்த 19 ஆண்டுகளாகப் பகுதிநேரப் பேராசிரியராக  வேலை பார்க்கும் ஒருவர் , வருமானத்தைப் பொறுத்தவரை இறைவன் அருளால் எந்தக் குறையும் இல்லாமல் வாழ்ந்துவரும் ஒருவர், சிங்கப்பூரில் இயங்கிவரும் ஜமால் முஹம்மது கல்லூரியின் சிங்கப்பூர் சாப்டரின் தலைவராக இருக்கும் ஒருவர், சிங்கப்பூரில் பல ஆண்டுகளாக அதன் குடிமகன் அந்தஸ்தில் குடும்பத்தோடு ‘செட்டில்’ ஆன ஒருவர் – பாடுபட்டு, ஷேக் சாரின் கிடுக்கிப் பிடிகளுக்குள் எதிலும் சிக்காமல் வெற்றிகரமாக பி.எச்.டி. பட்டம் வாங்குகிறார் என்றால் அது நிச்சயம் சப்ஜக்டின்மீதும், படிப்பின் மீதும் அவர் கொண்ட காதலை மட்டுமே காட்டுகிறது.

ஒருவகையில் அவருடைய எல்லா வெற்றிக்கும் பின்னால் இந்தக் காதலே இருக்கிறது. எனவே இந்த பி.எச்.டி. ஒரு காதல் பரிசு.

இது கொஞ்சம் காலதாமதமான பதிவுதான். என்றாலும் பரவாயில்லை. ஒரு புரட்சிக் கவிஞனின் பெயரால் இயங்கும் பாரதிதாசன் பல்கலைக்கழகத்திலிருந்து இப்பட்டம் அவருக்குக் கிடைத்திருப்பது பற்றி எனக்கு கூடுதல் சந்தோஷம். 

 by நாகூர் ரூமி
நன்றி : http://nagoorumi.wordpress.com/

1 comment:

திண்டுக்கல் தனபாலன் said...

முஹ்யித்தீன் அப்துல் காதர் அவர்களுக்கு வாழ்த்துக்கள்...