Friday, December 6, 2013

மண்டேலா - வெள்ளை இருட்டை விரட்டிய கறுப்பு ஒளி : கலைஞர் கருணாநிதி

சென்னை: தென் ஆஃப்ரிக்காவின் மக்கள் தலைவர் நெல்சன்  மண்டேலாவின் மரணத்திற்கு இரங்கல் தெரிவித்து திமுக தலைவர் விடுத்துள்ள இரங்கல் செய்தியில், "வெள்ளை இருட்டை விரட்டிய கறுப்பு ஒளி மறைந்தது" என்று திமுக தலைவர் கலைஞர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.

தனது இரங்கல் செய்தியில் மண்டேலா விடுதலையான தருணத்தை கட்சி மாநாடொன்றில் தான் அறிவித்த போது எழுந்த ஆரவாரத்தை கலைஞர் கருணாநிதி நினைவு கூர்ந்துள்ளார்.


கலைஞர் கருணாநிதி இரங்கல் அறிக்கை முழு விவரம்:

வெள்ளை இருட்டை விலக்க வந்த கருப்பு நிலா மறைந்து விட்டதாம்!
1990ஆம் ஆண்டு பிப்ரவரி திங்கள் 11ஆம் நாள் காலை திருச்சியில் திராவிட முன்னேற்றக் கழக மாநாடு நடைபெற்றுக் கொண்டிருந்த போது; மகிழ்ச்சி பொங்கிட துள்ளிக் குதித்துக் கொண்டு மேடையிலிருந்த ஒலி பெருக்கியின் முன்னால் நான் வந்து நின்றேன். அலைகடலெனக் குழுமியிருந்த தமிழக மக்களைப் பார்த்துச் சொன்னேன். "தமிழகப் பெருங்குடி மக்களே! கழக உடன்பிறப்புக்களே! எல்லையற்ற மகிழ்ச்சியை ஏந்தி வந்துள்ள செய்தி;

27 ஆண்டுக் காலம் சிறையில் அடைக்கப்பட்டிருந்த தென்னாப்பிரிக்கா நாட்டின் கறுப்பர் இனத் தலைவன் நெல்சன் மண்டேலா விடுதலை செய்யப்பட்டு விட்டார் - இந்த மகிழ்ச்சியைக் கொண்டாட மாநாட்டுப் பந்தலில் குழுமியிருப்போர் அனைவரும் எழுந்து நின்று தொடர்ந்து கையொலி செய்யுங்கள்" இந்தக் கருத்தமைந்த என் வேண்டுகோள் கேட்டு; மண்டேலா விடுதலையால் மகிழ்ச்சியில் ஆழ்ந்தோர் மாநாட்டில் "நான் போதும் போதும்'' என்று கையமர்த்தும் வரையில்; கடலில்லா திருச்சியில் கடலலைகளின் முழக்கத்தைச் செய்தனர். அந்த முழக்கம் தான் இப்போதும் என் செவிகளில் ஒலித்துக் கொண்டிருக்கின்றன.

நேற்று கூட ஆங்கில நாளேடு ஒன்றில் அவருடைய குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர், "அவரோடு இருக்கும் ஒவ்வொரு நிமிடமும் எனக்கு வியப்பே மேலிடுகிறது. நோயின் உபாதையினால் அவர் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியிருந்தாலுங்கூட, அவரோடு பிறந்த போராடும் குணம் அப்படியே இப்போதும் நீடித்திருப்பது எமக்கு ஆச்சரியமாக இருக்கிறது" என்று குறிப்பிட்டதைப் படித்தேன். நுரையீரல் தொற்றின் காரணமாக பல மாதங்கள் மருத்துவ மனையிலேயே இருந்து சிகிச்சை மேற்கொண்டு செப்டம்பர் மாதம் முதல் வீடு திரும்பி வீட்டில் இருந்தவாறே மருத்துவக் கண்காணிப்பில் இருந்து வந்த மண்டேலா மரணமடைந்து விட்டார்.

குடிசையில் பிறந்து, குடிசையில் வளர்ந்தவர். ஆரம்ப வயதில் ஆடுமாடுகள் மேய்க்கிற வேலை மண்டேலாவுக்கு (அவர் அன்னை எழுதப் படிக்கத் தெரியாதவர்)  ஆயினும் மகனைப் பள்ளிக் கூடத்துக்கு அனுப்பி வைத்தார். 1938ஆம் ஆண்டு அவரது உறவினர் ஜோன்கின்டாபா முயற்சியினால் மண்டேலா; முதலில் "கெல்ட் டவுன்'' கல்லூரியிலும், பிறகு "போர்ட்ஹேர்'' கல்லூரியிலும் சேர்க்கப்பட்டார். அப்போதுதான் அவரது முதல் போராட்டத்துக்கான துளிர் விடத் தொடங்கியது. அங்கே வெளிப்பட்ட இன வேற்றுமைக் கொடுமையை எதிர்த்து இளைஞர் மண்டேலா தலைமையில் வேலை நிறுத்தம் அறிவிக்கப்படவே; கல்லூரி நிர்வாகம் மண்டேலாவை வெளியேற்றியது. ஆம் - மண்டேலாவுக்கு அவர் நடத்திய உரிமைப் போரில் கிடைத்த முதல் தண்டனை அது!

மன்னிப்பு கேட்டுக் கொண்டால் மீண்டும் கல்லூரியில் சேரலாம் என்று கூறப்பட்டது. அதை மானப் பிரச்சினை என்று கூறி மறுத்து விட்டார் மண்டேலா.

அப்போது மண்டேலா, "எங்களுக்கு சுதந்திர உரிமை இல்லையென்றால், நான் அடைபட்டுள்ள சிறைச்சாலையே திருப்தி அளிக்கக் கூடியது'' என்று கூறிவிட்டார். அவர் நடத்திய போராட்டங்களின் தொடர்ச்சியாக நீண்ட கால சிறை வாழ்க்கையைத்தான் அவர் ஏற்றுக் கொள்ள நேர்ந்தது. சிறைக் கொடுமைகளைப் பற்றி, "சிறைக் கொடுமை என்னை இன்னலுக்கு ஆளாக்கவில்லை. சிறைக்கு வெளியே என் மக்கள் அனுபவிக்கும் துன்ப துயரங்களை எண்ணித்தான் நான் வேதனையைத் தாங்கிக் கொள்ள முடியாமல் இருக்கிறேன்" என்று விவரித்திருக்கிறார்.

மண்டேலாவின் இந்தத் தியாக வாழ்க்கை தென்னாப்பிரிக்க நாட்டு இளைஞர்களுக்கு மட்டுமல்ல; இந்தப் பூமிப் பந்தில் வாழ்ந்து கொண்டு புத்துலகம் காணத் துடிக்கின்ற ஏறுநடை இளைஞர்களுக்கெல்லாம் இதய கீதமாகும். இளம் வயதிலேயே புரட்சிக்காரராக மாறி, தென்னாப்பிரிக்காவின் விடுதலைக்காக பாடுபட்ட நெல்சன் மண்டேலாவின் மறைவுக்காக இரங்கல் தெரிவிக்கும் இந்த நேரத்தில், அவர் கூறிய சில வரிகள் நினைவுகொள்ளத் தக்கதாகும்.

"The Indian campaign became a model for the type of protest that we in the youth league were calling for" (இளைஞர் இயக்கத்தின் சார்பில் நாங்கள் நடத்தி வரும் எதிர்ப்புப் போராட்டத்திற்கு இந்தியர்கள் நடத்திய இயக்கமே முன் மாதிரியாக இருந்தது.) உலகத்தில் விடுதலை இயக்கங்கள் உயிரோடு இருக்கும் வரையில் நெல்சன் மண்டேலாவின் நினைவும் நீடித்திருக்கும். வாழ்க மண்டேலாவின் புகழ்!

இவ்வாறு கலைஞர் கருணாநிதி தனது இரங்கல் செய்தியில் கூறியுள்ளார்
நன்றி  :http://www.inneram.com/

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails