Wednesday, December 4, 2013

அடையாள அட்டை

தர்வேஷ் முஹம்மது ( பாலஸ்தீனக் கவிஞர் )
தமிழில் : டாக்டர் அஹமது சுபைர் , பேராசிரியர் , அரபித்துறை , புதுக் கல்லூரி , சென்னை .
****************

பதிவு செய் ! எழுதிக் கொள் !
நான் ஒரு அரபி
எனது அடையாள அட்டை எண் 786
எனக்கு எட்டுக் குழந்தைகள் !
இதையும் பதிவு செய் -
கோடை கழிந்தால் ஒன்பதாவது
உனக்கு என்மீது கோபமா ?

பதிவு செய் ! எழுதிக்கொள் !
நான் ஒரு அரபி
நான் என் தோழர்களுடன்
கல் குவாரியில் வேலை செய்கிறேன்
எனது எட்டுக் குழந்தைகளுக்காக !


நான் கற்களை வெட்டுகிறேன்
பாறைகளைப் பிழிகிறேன்
ரொட்டித் துண்டையும்
சில துணிகளையும்
நோட்டுப் புத்தகங்களையும்
விலை கொடுத்து வாங்குவதற்காக !

நான் ஒன்றும் தர்மம் கேட்கவில்லை
உன் வாசலில் பிச்சை எடுக்கவில்லை
உனக்கு என்மீது கோபமா ?

பதிவு செய் ! எழுதிக்கொள் !
நான் ஒரு அரபி
நான் உழுத நிலங்களை
நீ பிடுங்கிக் கொண்டாய்
என் மூதாதையர்கள்
எனக்காக விட்டுச் சென்றதை !

அந்நிலைத்திலே நான் பயிரிட்டேன்
என் குழந்தைகளுடன்
நீ அதையும் விட்டுவைக்கவில்லை !

எனது பேரக் குழந்தைகளுக்கு
இந்தப் பாறைகளைத் தவிர
மிச்சமெதுவுமில்லை !
உனது அரசாங்கம் அதையும் அபகரிக்க
திட்டமிடுகிறதாமே
என்ன அது உண்மையா ?

தயவு செய்து இப்பொழுது
இதை பதிவு செய் !எழுதிக்கொள் !
எல்லாவற்றிற்கும் மேலாக
உன் முதல் பக்கத்தில் !

நான் யாரையும் வெறுக்கவில்லை
நான் யாரிடமும் திருடவில்லை !
ஆனால்...
என்னைப் பட்டினிப் போட்டு
கொல்ல நினைத்தால்....

பலாத்காரமாய்
அபகரிப்பவனின்
மாமிசத்தையும் நான் தின்னுவேன் !

எச்சரிக்கை
எனது பசியின் எச்சரிக்கை
எனது கோபத்தின் எச்சரிக்கை !


@ தர்வேஷ் முஹம்மது பாலஸ்தீனியக் கவிஞர். 1941 ம் ஆண்டு பிறந்தார் . இவரது " ஆலிவ் மரத்தின் இலைகள் " என்ற கவிதைத் தொகுப்பிலிருந்து " அடையாள அட்டை " என்ற கவிதையின் ஒரு சில பகுதிகள் இவை. பாலஸ்தீன அரபிகளை ஓயாது விசாரணை செய்யும் இஸ்ரேலிய சிப்பாயின் கேள்விகளுக்கு பதில் சொல்லும் விதமாக இக்கவிதை அமைந்துள்ளது. இவரது கவிதைகளால் சினமுற்ற இஸ்ரேலிய அரசு இவரை துன்புறுத்தியது. சிறையிலும் அடைத்தது .

நன்றி: நமது முற்றம் - நவம்பர் - 2006

தகவல் தந்தவர் : அபூ ஹாஷிமாAbu Haashima Vaver

No comments: