குளம் குறித்த கனவுகளும், நினைவுகளும் இல்லாதவர்கள் குளத்தோடான பரிச்சயம் இல்லாதவர்கள். அதிலும் குறிப்பாக பால்யகாலத்தில் கிராமத்துக் குளங்களில் பல்டியடித்தவர்களுக்குள் எப்போதும் உறைந்து கிடக்கும் அந்த கனாக் காணும் குளங்கள். எங்கே சென்றாலும் அவர்கள் அதை ஒரு நினைவுக் குமிழியாகச் சுமந்து திரிகிறார்கள். அவ்வப்போது கிடைக்கும் அழகிய தருணங்களில் அவர்கள் அந்த நினைவுக் குமிழியைத் திறந்து குளத்தின் வாசனையை ஆழமாய் உள்ளிழுக்கின்றனர். இன்னும் சிலர் குளத்தை ஒரு பாயாய்ச் சுருட்டி கக்கத்தில் வைத்துக் கொள்கிறார்கள். வேனிற்காலத்தின் வியர்வை அருவிகளுக்கிடையே குளத்தின் ஞாபகத்தை உதறி விரித்து அதில் ஈரத் துளிகளை இழுத்தெடுக்க முயல்கின்றனர்.
குளங்கள் வேறெதையும் அறிவதில்லை. தனக்குள் குதிக்கும் மழலைகளின் கால்களுக்கு அவை ஈரக் கம்பளத்தை விரித்துச் சிரிக்கின்றன. கரையோரங்களில் சிப்பிகளுக்குச் சகதி வீடுகளை சம்பாதித்துக் கொடுக்கின்றன. கலுங்கின் இடையிடையே நீக்கோலிகளுக்குப் புகலிடம் கொடுக்கின்றன. ஈரச் சகதிகளின் ஓரங்களில் கெண்டை மீன்களை ஒளித்து வைத்து வேடிக்கை காட்டுகின்றன.. குளம் ஒரு அன்னை. தனக்குள் நுழையும் அத்தனை பேருக்கும் பாரபட்சமின்றி ஒரே ஈரத்தைத் தான் பகிர்ந்தளிக்கிறாள். தனது அகலமான கைகளை விரித்து, கோழி தன் குஞ்சுகளை சிறகுகளுக்குள் அடைகாப்பது போல அரவணைத்துக் கொள்கிறாள்.
எனது பால்யத்தின் கிளைகளில் நினைவுகளின் குருவிகள் சிறகுலர்த்துகின்றன. அவை சிலிர்க்கும் இறகுகளிலிருந்து பல குளங்கள் தெறித்து விழுகின்றன. சர்ப்பக் குளம் எனது பால்யத்தின் பாதங்களுக்கு ள் இன்னும் நகர்ந்து கொண்டே இருக்கிறது. அந்தக் குளத்தின் கலுங்கில் அமர்ந்திருக்கின்றன ஏராளம் கதைகள். யாரேனும் கேட்பார்களோ எனும் எதிர்பார்ப்பைத் தேக்கி வைத்து அவை காத்திருக்கின்றன. நிராகரிக்கப்படும் தருணங்களில் அந்தக் கதைகள் குளத்தில் குதித்து தற்கொலைக்கும் முயல்கின்றன. ஆனால் குளம் மீண்டும் அவற்றைக் கரையேற்றித் ஈரத்தால் தலைதுவட்டி அமர வைக்கிறது.
கோனார் எருமைகளை ஓட்டியபடி நுழையும் சாய்வான படிக்கட்டொன்று அந்தக் குளத்தில் உண்டு. எருமைகள் அவருக்குத் தோழன். ஆறறிவுள்ள மனிதர்களிடமிருந்து வருகின்ற நிறமாற்றங்கள் ஐந்தறிவு விலங்குகளுக்கு இருப்பதில்லை. அவருக்கு எருமையின் நிறம் கறுப்பு அவ்வளவே. வைக்கோலைச் சுருட்டி அவற்றின் முதுகில் படிந்திருக்கும் அழுக்கை அவர் அழுத்தமாய்த் தேய்க்கும் போது ஒரு மசாஜ் சென்டரில் மயங்கிக் கிடக்கும் நிலையில் எருமைகள் கிடக்கும். எருமை மாடென்று யாரேனும் அவரைத் திட்டினால் ஒருவேளை அது அவரைப் பொறுத்தவரை இனிமையான பாராட்டாய் காதுகளில் நுழையக் கூடும். குளிப்பாட்டி முடித்து ஒவ்வொரு எருமையாய் கரையில் ஏற்றி, மூக்கணாங்கயிறைச் சுருட்டி அவற்றின் முதுகில் வைத்தால் அவை அசையாமல் நிற்கும் !
சங்கேத வார்த்தைகளை அதிகம் பயன்படுத்தியது விலங்குகளாய்த் தான் இருக்க முடியும். கயிறைச் சுருட்டி முதுகில் வைத்தால் அசையாமல் நிற்கும் எருமைகள், அதே கயிறை முதுகிலிருந்து எடுத்து விட்டால் நடக்கத் துவங்கிவிடுகின்றன. விலங்குகள் மனிதர்களின் தோழர்களல்ல, சொந்தங்கள். கூட்டிக் கழித்துக் கணக்குப் பார்த்து கால்நடைகளை வளர்ப்பதில்லை கிராமத்து வெள்ளந்தி மனிதர்கள். அவர்களுக்கு பால்கொடுக்காத மாடும், சம்பாதிக்காத மகனும் ஒரே மாதிரி தான். வருமானம் வரவில்லையென வழியனுப்பி வைப்பதில்லை. முடிந்தபட்டும் பாசத்தைப் பகிர்ந்து கொண்டே இருக்கிறார்கள்.
குளங்கள் ரகசியங்களைத் தனக்குள்ளே புதைத்து வைக்கின்றன. குளங்களுக்குள் இறங்கும் மனிதர்களின் குலங்களை அவை பார்ப்பதில்லை. குணங்களை அவை வெளியே சொல்வதில்லை. மத்தியான வேளைகளில், ஆளரவமற்ற குளக்கரையில் ரகசியத் தவறுகள் செய்யும் அவசரக் காதலர்களை அது நாட்டாமை முன் கொண்டு நிறுத்துவதில்லை. சலனமற்ற முதுகுடன் அவை அமைதியாய் இருக்கின்றன. அவ்வப்போது அவற்றின் நீர் வளையங்கள் மட்டும் ஒரு வெட்கத்தின் வீணை இசையாய் மௌனத்துடன் அலைந்து அடங்குகிறது.
வண்ணான் தனது அழுக்கு மூட்டையை அவிழ்த்து வைக்கும் பகுதி ஒன்று சர்ப்பக் குளத்தில் உண்டு. அவனுடைய வறுமையின் ஓசை அந்தக் கற்களில் ஆக்ரோஷமாய் வந்து மோதும் துணிகளின் வாயிலிருந்து பீறிட்டுக் கிளம்பும். அவன் ஊரின் அழுக்கைக் கழுவி முடித்து கனமான மூட்டையுடன் கரையேறுவான். அவனுடைய பிய்ந்து போன கைகளின் துணுக்குகளை மவுனமாய் ஏந்தியபடி குளம் அவனை வெறித்துப் பார்த்துக் கொண்டிருக்கும்.
பால்யத்தின் பரவசம் குளங்களே. அவற்றின் முதுகில் ஏறி நீச்சல் அடித்து மறுகரையில் ஒதுங்குகையில் சாம்ராஜ்யத்தைப் பிடித்த சக்கரவர்த்தியாய் மனதுக்குள் ஒரு வீரவாளும், கிரீடமும் உருண்டு வரும். அதன் கரையோரங்களில் டவல்களால் குட்டிக் குட்டி மீன்களைப் பிடிக்கும் போது அவை குளத்திலிருந்து தப்பி மனதில் நீந்தத் துவங்கும். சிப்பிகளைத் தேடிக் கண்டுபிடிப்பது தனிக் கலை. ஒரு இடத்தில் ஒரு சிப்பி அகப்பட்டால் அதைச் சுற்றி அடுக்கடுக்காய், மண்ணுக்குள் சிப்பிகளின் பேரணியே ஒளிந்திருக்கும் வாய்ப்பு உண்டு என்பது பாடம். அள்ளி அள்ளி அதைப் பைகளில் சேமிக்கும் போது சாதனையாளனாய் மனம் சந்தோசப்படும்.
எல்லா நினைவுகளையும் குளம் தனது தண்ணீரின் மேலும், படிக்கட்டுகளிலும், கலுங்கிலும், கரையோர மரங்களிலும் எழுதி வைக்கிறது. தண்ணீர் உலரும்போது கதைகள் மண்ணுக்குள் இளைப்பாறுகின்றன. வெயிலில் உடைந்து கிடக்கும் குளத்தின் இடுக்குகளில் அவை அடுத்த நீரின் வருகைக்காய்க் காத்திருக்கின்றன. மீண்டும் தண்ணீர் வரும்போது விதையிலிருந்து சட்டென வெளிக்கிளம்பும் ஒரு அமானுஷ்ய மரம் போல மீண்டும் தண்ணீரின் மேல் அசைவாடத் துவங்குகின்றன.
குளங்கள் பால்யத்தின் போதிமரங்கள். அவை நிம்மதியின் ஞானத்தை மனதுக்குள் ஊற்றி நிறைக்கின்றன. காலம் மனிதனை குளங்களை விட்டு நகரங்களை நோக்கித் தகரப் பேருந்துகளில் அடக்கி அனுப்புகிறது. அவன் தனது நினைவுகளில் மட்டுமே அடைகாக்கும் குளத்துடன் பயணிக்கிறான். அந்தக் குளம் அடிக்கடி அவனது கனவில் குஞ்சுகளைப் பொரிக்கிறது.
வருடங்களின் விரட்டல்களுக்குக் பின்னும் குளம் நமது வருகையை எதிர்பார்த்துக் காத்திருக்கும். பால்யகாலத்தில் கடல்போலத் தோன்றும் குளம் இப்போது சின்னதாகச் சிரிக்கும். அதன் கரையோரங்களில் நடக்கையில் காற்றில் அலையும் கால்நூற்றாண்டுக்கு முந்தைய சிரிப்புச் சத்தங்களைப் பொறுக்கி எடுக்க முடியும். அவை இப்போதும் குளத்தைச் சுற்றியே அலைந்து கொண்டிருக்கும். சொல்லிய சொல்லும், சிரித்த சிரிப்பும், அழுத அழுகையும் காற்றின் அலைவரிசையை விட்டு எங்கும் விலகிவிடுவதில்லை. அவை ஒலி இழைகளாகக் காற்றில் அலைந்து கொண்டே இருக்கின்றன. அதைச் சரியான அலைவரிசையில் இழுத்தெடுக்க நமது மனம் ஒரு வானொலியாய் அவ்வப்போது மாறும். உணர்வுகளின் ஒத்த அலைவரிசையில் அவை தெள்ளத் தெளிவாகக் கேட்கின்றன..
நகரங்களின் அவசர வாழ்க்கையில் குளங்கள் இருப்பதில்லை. இருக்கின்ற குளங்களும் காங்கிரீட் கால்களுக்குள்ளே நசுங்கி, மகாபலிபோல மண்ணுக்குள் மண்ணாகிப் போய்விடுகின்றன. குளங்களுக்கு மேல் விரிகின்ற பூமியின் அடுக்குமாடி பிரமிப்புகள் தங்கள் கொண்டையிலோ, பின் முற்றத்திலோ நீச்சல் குளங்களைப் பொரிக்கின்றன. மணல் இல்லாத, மீன்களும், சிப்பிகளும் இல்லாத, குளிக்கும் எருமைகளும், வெளுக்கும் வண்ணானும் தொலைந்து போன நீச்சல் குளங்கள் பிளாஸ்டிக் பூக்களைப் போல பல்லிளிக்கின்றன. அறைகளில் குளித்தபின்பே வாசனைகளற்ற அந்தக் குளங்களில், குளிக்க வருகின்றனர் அந்தஸ்தின் பிள்ளைகள். குளோரின் போர்த்திய தண்ணீரின் எரிச்சலில் இருந்து தப்பிக்க கண்கள் கண்ணாடி முகமூடிகளுடன் இமைக்கின்றன. குளத்தை விட்டுக் கரையேறியபின்னும் ஷவர்களில் குளித்து விட்டு தான் வெளியேறுகின்றனர் மக்கள்.
நடுத்தர நகரவாசிகளுக்கு குளங்கள் பிளாஸ்டிக் பக்கெட்டுகளில் அடைபட்டுவிட்டன. கைப்பிடி உடைந்து போன பிளாஸ்டிக் பாத்திரங்களில் அவர்கள் குளங்களை அள்ளி அள்ளிக் குளித்துக் கொள்கிறார்கள். அவை உதட்டுக் கதவுகளைத் தாண்டி உள்ளே நுழைகையில் உப்புக் கரிக்கின்றன. இன்னும் சிலருக்கு துளித்துளியாய் ஷவர்களின் மெல்லிய துளைகள் வழியாக விழுந்து கொண்டே இருக்கிறது கிராமத்துப் பால்யத்தில் அவரவர் நீந்தி விளையாடிய குளம்.
ஏதேனும் ஒரு கதையில், "ஒரு ஊரில் ஒரு குளம் இருந்தது" என வாசிக்கும்போது எல்லோரின் மனதிலும் சட்டென மின்னி வரும் குளங்களே அவர்களுக்குள் உறைந்து கிடக்கும் குளம். குளங்கள் வற்றுவதுண்டு, ஆனால் அவை அழிவதில்லை. ஒவ்வோர் மனிதனின் நினைவுப் பிரதேசத்தின் மன விளிம்புகளிலும் இன்னும் நீர்வளையங்களை உருவாக்கிக் கொண்டே அமைதியாய் இருக்கிறது.
*
சேவியர்.
ஒரு கிராமத்தானின் நினைவுகள்
No comments:
Post a Comment