காங்கிரஸ்ஸுக்கு சட்டமன்றத் தேர்தலில் மூன்று முறை தொடர்ந்து வெற்றியளித்த டெல்லி மக்கள் இம்முறை அக்கட்சியை அழுகிய வெங்காயத்தை தூர எறிவதைப் போல தூக்கி எறிந்துவிட்டார்கள்.
திறமையான முதல்வர் என்று பெயர் பெற்ற ஷீலா தீக்க்ஷித்தையே தூக்கி எறிந்ததன் பின்னணிக் காரணங்களுள் ஒன்றாக வெங்காயம் தான் இருக்கிறது.
உரித்துப் பார்த்தால் வெங்காயத்தில் உள்ளீடு இருக்கிறதோ இல்லையோ, காங்கிரஸ்ஸின் தோல்விக்கான காரணங்களை உரித்துப் பார்க்க வேண்டியது அந்தக் கட்சிக்கு நன்மையாகவே அமையும். ஆம், டெல்லியில் காங்கிரஸ்ஸின் இந்த படுதோல்விக்கு வெங்காயமும் ஒரு பிரதான காரணி எனலாம். ஓர் அரசியல் ஆய்வாளரின் பார்வையில் காங்கிரஸ்ஸின் தோல்விக்கு மூன்று பிரதான காரணங்களைச் சொல்லலாம்.
1. வெங்காயம்.
சாமானிய மக்களைப் பொருத்தவரை, அடிப்படையிலும் அடிப்படையான உணவு, உடை, உறைவிடம் ஆகியனவே. போராட்டமாகக் கழியும் வாழ்க்கையில் மெட்ரோ போன்ற அதிவசதிகள் ஈர்ப்பதில்லை எனலாம். வெங்காயத்துக்கே வக்கற்றுப் போன நிலையில், கிலோ ரூ. 100 வரை விற்ற வெங்காயம் உரிக்கப்படாமலே மக்களுக்குக் கண்ணீர் வரவழைத்தது என்றால் அந்த ஆதங்கம் ஆளுங்கட்சி மீதான கோபமாக திடப்பட்டது. கடைசி நிமிடங்களில் சுதாரித்துக் கொண்ட ஷீலா நடமாடும் மலிவு விலைக் கடைகள் மூலமாவது வெங்காயத்தை சகாய விலைக்கு விற்றுப் பார்த்து, மக்கள் தன் ஆட்சியைத் தாளிப்பதிலிருந்து தற்காத்துக் கொள்ள முயன்றார். ஆனால் அது காலங்கடந்த செயலாகவே அமைந்தது.
இதே வெங்காயக் காரணம் தான் 1998ல் பாரதிய ஜனதா ஆட்சியையும் முடித்து வைத்தது நினைவிருக்கலாம். அப்படி 1998ல் முதல்வர் நாற்காலிக்கு வந்த ஷீலா அதே காரணத்தாலேயே பதவி இறங்க நேரிட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
2. பாலியல் வன்புணர்வுகள்
தேசத்தின் தலைநகரில் ஓடும் பேருந்தில் இணை மருத்துவ மாணவியொருவருக்கு நேர்ந்த கொடூரமான பாலியல் வன்புணர்வு, இதயமுள்ள எல்லோருக்கும் இரத்தங் கசிய வைத்த செய்தியானது. மாணவியைக் காப்பாற்ற அரசு சிங்கப்பூர் தூரமும் சென்றாலும் அம்முயற்சிகள் வீணாகிப் போனது. மேலும், பாலியல் குற்றங்களுக்கெதிரான பொதுமக்களின் உள்சினம் வெளிப்படுத்தப்படவும் அச்செய்தியே காரணமானது.
தேசத்தின் தலைநகரில் பெண்களுக்குப் பாதுகாப்பில்லாத நிலை இருக்கிறது என்பதே அரசு மீதான கோபத்துக்குப் போதுமானது. சாமானியனின் கோபம் நின்று, நிதானித்து தேர்தலின் போது ஆட்சியைக் கொல்லும். கொன்றிருக்கிறது. மட்டுமல்ல, பெண்களின் பாதுகாப்பு குறித்து பேசும்போது, பெண்கள்தான் கவனமாக இருக்க வேண்டுமென ஷீலா துடுக்குத்தனமாக பேசியது இளைய சமூகம் மத்தியில் அவருக்குப் பெருத்த எதிர்ப்பை உருவாக்கியிருந்தது.
3. காமன்வெல்த் ஊழல்கள்
இதில் கூடவா ஊழல் செய்வார்கள் என்று அப்பாவிகள் ஆச்சரியப்படுமளவுக்கு காங்கிரஸ் பிரமுகர்கள் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் அடித்த கொள்ளையும், மாநில மத்திய அரசுகள் அந்த விவகாரங்களைக் கையாண்ட விதமும் திருவாளர் வாக்காளருக்குத் திகைப்பையே ஏற்படுத்தியது. அதனால் தான் அவரும் அரசுக்குத் திகைப்பை ஏற்படுத்தும் முடிவை நோக்கிப் பயணித்திருக்கிறார்.
காங்கிரஸ்ஸுக்கு எதிரிடையாக அமைந்த இந்தப் பிரதான காரணங்களால் இயல்பாக மக்கள் எதிர்கட்சியான பாரதிய ஜனதாவுக்கு வாக்களித்திருக்க வேண்டும். ஆனால், டெல்லி மக்கள் பாரதிய ஜனதாவுக்கும் முழுமையாக வாக்களிக்க விரும்பாததால் தான், 'ஒரு வாய்ப்பில்' களத்தின் உள்ளே வந்துவிட்ட ஆம் ஆத்மி கேஜ்ரிவால் ஆச்சரியப்படத்தக்க வெற்றிகளை ஈட்ட முடிந்தது. இந்த வெற்றியை அவரே எதிர்பார்த்திக்க மாட்டார். காங்கிரஸ்ஸுக்கு மாற்று தேடி, ஆனால் பாரதியஜனதாவுக்கும் வாக்களிக்க விரும்பாத மக்களின் வாக்குகள் யாவும் அரவிந்தையே தேடி வந்துள்ளன. திருவாளர் பொதுஜனத்தின் இந்த மனப்பான்மையை 'ஆம் ஆத்மி' புரிந்து கொள்ள வேண்டும். அப்படி புரிந்து கொள்வதே அதன் எதிர்கால வளர்ச்சிக்கு உத்வேகமாக அமையும்.
காங்கிரஸ் சுய ஆய்வு செய்யப்போவதாக அறிவித்திருக்கிறது. வெற்றி கண்ணை மறைக்கும்போதெல்லாம் மனம் போன போக்கில் நடைபோட்டுவிட்டு, தோல்வி தென்படுகையில் சுய ஆய்வு என்கிற பச்சாதாபத்தை அக்கட்சி கையிலேந்துகிறது. ஊழலால் அவப்பெயர் உண்டாக்கிய லலித் மோடிகளையும் சுரேஷ் கல்மாடிகளையும் களையெடுப்பதுடன் வகுப்புவாதத்துக்கு எதிரான தனது தோற்றத்தைப் பெருக்கிக் கொள்வதில் தான் காங்கிரஸ்ஸின் மீட்சி இருக்கிறது எனலாம்.
- இ.ஹ
நன்றி : http://www.inneram.com/
No comments:
Post a Comment