Tuesday, December 24, 2013

சார்பு இல்லாத, தனக்கென்று அரசியல் இல்லாத மனிதர் யார்தான் இருக்கிறார்கள்?

வாழ்த்துகள் மனுஷ்ய புத்திரன்...

இப்படியொரு நிலைத்தகவலை என்னிடமிருந்து பலரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். ஒரு எழுத்தாளரின் மனைவி பேட்டி என் பொறுப்பில் இருந்த இணைப்பிதழில் வெளியானபோது அதிகமும் பொங்கியவர் மனுஷ்தான். ‘வேலை போக வாய்ப்பிருக்கிறது...’, ‘தனது அரசியலுக்காக இதையெல்லாம் பயன்படுத்திக் கொள்கிறார்...’ என்பது உட்பட பல நிலைத்தகவல்களை எழுதினார்.

இதுபோக பல விஷயங்களில் இருவரும் எதிரும், புதிருமாகத்தான் இருக்கிறோம். சில மாதங்களுக்கு முன் இணையத்தில் குறிப்பிட்ட சிலர் அவரை வக்கிரத்துடனும், வன்மத்துடனும் தாக்கியபோது மவுனமாக நின்றவர்களில், வேடிக்கைப் பார்த்தவர்களில் அடியேனும் ஒருவன்.

இப்படி ஏராளமான முரண்பாடுகள் இருவருக்கும் இடையில் இருக்கின்றன. இதை எல்லாம் அறிந்தவர்கள் இணையத்தில் இருக்கிறார்கள். அவர்களுக்கு எல்லாம் இந்த நிலைத்தகவல் ஆச்சர்யத்தை அளிக்கும்.


‘ஒருவேளை மனுஷ் செட் கூட சிவராமன் சேர்ந்துட்டாரா?’, ‘விநாயக முருகன் நாவல் தொடர்பாக சமீபத்தில் நடக்கும் பிரச்னையில் குளிர்காய நினைக்கிறாரா’,  ‘சாருவுக்கும் சிவராமன்னுக்கும் எப்போதுமே ஆகாது... எனவே இதை பயன்படுத்திக் கொள்கிறாரா...’,  ‘எதிரிக்கு எதிரி நண்பன்னு கைகோர்த்துட்டாரா..?’

என்றெல்லாம் கேள்விகள் எழும்.

இந்தக் கேள்விகள் எதுவும் தவறில்லை. ஏனெனில் அப்படித்தான் வாழ சபிக்கப்பட்டிருக்கிறோம். முரண்பாடுகள் அனைத்தையும் பகை முரண்பாடுகளாகவே பார்க்கவும், கருதவும், ஏற்கவும் பழகியிருக்கிறோம். நட்பு முரண்பாடுகளும் சாத்தியமே என்ற எண்ணம் ஒருபோதும் ஒருவருக்கும் தோன்றுவதில்லை.

ஒரு மனிதரை நிராகரிக்க லட்சம் காரணங்களை அடுக்கும் நாம், அந்த மனிதரை ஏற்க இருக்கும் ஒரேயொரு காரணத்தை கூட பரிசீலிக்க தயாராக இருப்பதில்லை.

ஒரு நிகழ்வில் நமக்கு எதிரான நிலைப்பாட்டை ஒருவர் எடுத்ததாலேயே அவரை விரோதியாக பார்ப்பது; அதன் காரணமாகவே காற்றில் பரவும் ‘வதந்திகளை’ சட்டென்று நம்புவது; சம்பந்தப்பட்டவர் கெட்டவர்தான் என்பதை வலியுறுத்த பொய்களை உண்மை என்று அடித்துச் சொல்வது; அவரது முன்னேற்றம் - வளர்ச்சிக்கு பின்னால் நிச்சயமாக அந்த மனிதரது உழைப்போ, திறமையோ இருக்காது என தொடை தட்டுவது; எந்தத் திறமையும் அவருக்கு இல்லை என திரும்பத் திரும்ப பேசுவதன் வழியாக அது நிஜமாக இருக்குமோ என்ற தோற்றத்தை பலகீனமானவர்களிடம் ஏற்படுத்த முயல்வது...

இதெல்லாம் நம் குருதியில் ஊறியவை. அதனாலேயே நம்மை, நமது செயற்பாட்டை விமர்சிப்பவர்களை பகையாளியாகவே கருதுகிறோம்.

இந்த மனப்பான்மையிலிருந்து சர்வ நிச்சயமாக நான் வேறுபட்டவன் அல்ல. ’ஸ்பெஷலாக’ செவ்வாய் கிரகத்தில் உற்பத்தியான உயிரா நான்? இல்லை. இந்த சமூகத்தை சேர்ந்தவன். இதிலேயே வாழ்பவன், உழல்பவன். எனவே மேலே சொன்ன அத்தனை கல்யாண குணங்களும் என்னிடமும் இருக்கின்றன.

என்றாலும் -

’நக்கீரன்’ வாரம் இருமுறை வெளியாகும் ’எதிர்க்குரல்’ பத்தி கொஞ்சம் மாற்றியிருக்கிறது.

விளக்கமாக சொன்னால்தான் சரியாக இருக்கும்.

கிட்டத்தட்ட பதினாறு ஆண்டுகளாக பத்திரிகைத் துறையில் உருண்டு, புரண்டு வருகிறேன். வார - மாத இதழ்களின் தயாரிப்பில்தான் பெரும் பொழுதை வாழ்க்கையில் செலவிட்டிருக்கிறேன். அதனாலேயே ஒவ்வொரு பக்கமும் எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது என்று தெரியும்.

வெகுஜன இதழ்களை பொறுத்தவரை ஒவ்வொரு பக்கமும், ஆயிரக்கணக்கான - லட்சக்கணக்கான மதிப்பு கொண்டவை. ஒரு பக்கத்துக்காக ஒவ்வொரு பத்திரிகையும் நிர்ணயிக்கும் விளம்பர விலைதான், கட்டுரை - கதைகள் - செய்திகளாக மற்றப் பக்கங்களை அலங்கரிக்கும் எழுத்துக்கும் பொருந்தும்.

எனவே இதழ் தயாரிப்பில் ஈடுபட்டிருப்பவர்கள் கவனமாகத்தான் பணியாற்ற வேண்டும். கட்டுரை, செய்திகளை தேர்ந்தெடுக்க வேண்டும். எந்த விஷயத்தை குறித்து எழுதினாலும் அல்லது மற்றவர்கள் எழுதியதை எடிட் செய்தாலும் அது படிப்பவர்களுக்கு எளிமையாக புரியும்படி இருக்க வேண்டும். வாசகர்கள் ஒரு பக்கத்தை ஸ்கிப் செய்கிறார்கள் என்றால், மொத்த உழைப்பும் வீணாகிவிடும். குறிப்பிட்ட இதழ் சரியாக இல்லையென்றால் நிர்வாகத்துக்கு பதில் சொல்லும் கடமை இதழ் தயாரிப்பில் ஈடுபட்டிருப்பவர்களுக்கு இருக்கிறது.

எல்லாவற்றையும் விட அனைத்துப் பத்திரிகைகளின் நிர்வாகத்துக்கு என்றும் ஓர் அரசியல், கண்ணோட்டம், பார்வை, சார்பு இருக்கிறது. இதற்கு தகுந்தபடிதான் இதழை தயாரிப்பவர்கள் அசைய வேண்டும், ஆட வேண்டும்.

பளிச்சென்று சொல்வதெனில், வெகுஜன இதழ்கள் என்பது பியூர்லி பிசினஸ்தான். சமூகத்தை புரட்டும் நெம்புகோல், அது இது என்பதெல்லாம் வானத்தைப் பார்த்து கனவு காண உதவும். மற்றபடி எதார்த்தத்தில் அப்படியெல்லாம் எதுவும் இல்லை.

இதுபோக ஒவ்வொரு இதழுக்கும் குறிப்பிட்ட வர்க்கம் சார்ந்த வாசகர்கள் இருக்கிறார்கள். அவர்களை மையமாக வைத்துத்தான் எந்தவொரு பக்கத்தையும் பூர்த்தி செய்ய வேண்டும்.

வெகுஜன பத்திரிகை என்னும் பற்சக்கரம் இப்படித்தான் சுழல்கிறது. அதன் அச்சை, சுழற்சியை அவ்வளவு சுலபத்தில் மாற்ற முடியாது. ஏனெனில் நிலவும் சமூக அமைப்பின் அங்கம்தான் வெகுஜன இதழ்களும். எனவே சமூக அமைப்பு மாறாமல் வெறும் பத்திரிகைகள் மட்டும் மாற வேண்டும் அல்லது மாற்ற வேண்டும் என்று நரம்பு புடைக்க ‘வாய்ஸ்’ கொடுப்பது அறிவீனம்.

இந்த அறிவீனத்துக்குத்தான் தெரிந்தோ தெரியாமலோ நாம் அனைவரும் பலியாகிறோம்.

உதாரணமாக அனைத்து வார இதழ்களும் சினிமா செய்திகளை தாங்கியே வருகின்றன என இணையத்தில் பொங்கும் எத்தனைப் பேர் திரைப்படம் சார்ந்த எந்த செய்திகளையும் வெளியிடாமல் கடந்த நான்கு ஆண்டுகளாக வெளியாகி வரும் ‘புதிய தலைமுறை’ வார இதழை படிக்கிறோம் அல்லது ஆதரிக்கிறோம்?

பதில் சொல்ல முடியவில்லை அல்லவா? இதுதான் சாமி எதார்த்தம். எதையும் ஆராயாமல் நம்மால் விமர்சிக்க முடியும். புறம்தள்ள, புறம் பேச முடியும். ஆனால், களத்தில் நிற்கவோ அல்லது நிற்பவர்களுக்கு தோள் கொடுக்கவோ நாம் தயாராக இருப்பதில்லை.

ஆனால், இந்த வெகுஜன பத்திரிகைகளின் இயங்கும் விதத்துக்கு உட்பட்டு எதை செய்ய முடியுமோ அதையெல்லாம் கண்டிப்பாக செய்யலாம். அப்படித்தான் பல பத்திரிகையாளர்கள் சமூக கண்ணோட்டத்துடன் செய்திகளை சேகரிக்கிறார்கள், கட்டுரைகளை எழுதுகிறார்கள், கதைகளை பிரசுரிக்கிறார்கள்.

உண்மையில் பாராட்டப்பட வேண்டியதும், தலையில் தூக்கி வைத்து கொண்டாடப்பட வேண்டியதும் இந்த அணுகுமுறையைத்தான்.

ஞாநி, தோழர் இரா.ஜவஹர் உட்பட பலரை மரியாதைக்குரியவர்களாக நான் நினைப்பது இந்த வகையில்தான்.

அச்சில் சுழன்றபடியே நிச்சயம் மாற்றத்துக்கான விதைகளை தூவ முடியும். அப்படி எழுதப்படும் கட்டுரைகள், செய்திகளை வைத்துத்தான் தீவிர இடதுசாரிகள் அனைவரும் சமூக நிகழ்வுகளை அலசுகிறார்கள், ஆராய்கிறார்கள், சமூக மாற்றத்துக்கான செயற்பாட்டில் இறங்குகிறார்கள்.

சுருக்கமாக சொல்வதெனில் வெகுஜன இதழ்களில் வெளியாகும் செய்திகள், கட்டுரைகள், கதைகள் இல்லையேல், மார்க்சிய - லெனினிய குழுக்கள் இல்லை.

விஷயத்துக்கு வருவோம்.

மேலே குறிப்பிட்டபடித்தான் ‘நக்கீரன்’ வாரம் இருமுறை இதழையும் தயாரிக்கிறார்கள். இந்தப் பத்திரிகையின் வாசகர்கள் அடித்தட்டு மக்கள். பள்ளிப் படிப்பை முடித்துவிட்டு குடும்பச் சூழ்நிலை காரணமாக வேலைக்கு செல்லும் இளைஞர்கள்தான் ‘நக்கீரனை’ வாங்குகிறார்கள். இவர்களுக்கான வாசிப்பு பழக்கம், அறிவு ஓர் எல்லைக்கு உட்பட்டதுதான். இதனை கருத்தில் கொண்டுதான் ஒவ்வொரு சொற்களையும், வாக்கியத்தையும் எழுத வேண்டும்.

உண்மையிலேயே கடினமான பணி இது. அந்த இதழில் பணிபுரிபவர்களுக்கு இந்த ‘நெசவு’ பழக்கப்பட்டது.

ஆனால், வெளியில் இருந்து ‘பத்தி’ எழுதுபவர்களுக்கு இது கடினமான சவால்.

சின்ன குத்தூசி, தான் வாழ்ந்த வரையில் அதை செய்தார். தோழர் இரா.ஜவஹர், ‘கம்யூனிசம் நேற்று இன்று நாளை’ மற்றும் ‘மார்க்சிய பொருளாதாரம்’ ஆகிய இரு தொடர்களை எழுதினார்.

கற்பதற்கு கடினமான கம்யூனிச சித்தாந்தத்தை அவ்வளவு எளிமையாக தோழர் இரா.ஜனஹரால் எழுத முடிந்ததற்கு காரணம், அந்தளவுக்கு அந்த கோட்பாட்டை அவர் உள்வாங்கியிருந்ததுதான்.

மனுஷ்ய புத்திரன் அதைதான் ‘எதிர்க்குரல்’ பத்தியில் செய்து வருகிறார்.

கிட்டத்தட்ட 25 ஆண்டுகளாக தீவிர இலக்கிய பரப்பில் புழங்கி வருபவர் அவர். தமிழ்ச் சிறுபத்திரிகையுலகின் குறிப்பிடத்தகுந்த கவிஞர்களில் ஒருவர். பத்தாண்டுகளுக்கும் மேலாக ‘உயிர்மை’ என்னும் இலக்கிய மாத இதழை நடத்தி வருபவர்.

அப்படிப்பட்டவரிடம் இருக்கும் கலைச்சொற்களும், அவரது சேகரிப்பில் இருக்கும் வார்த்தைகளும் அழுத்தமானவை, பல அடுக்குகளாக விரியும் அளவுக்கு கனம் பொருந்தியவை. தொடர் வாசிப்பில் பயிற்சிப் பெற்றிருக்கும் இலக்கிய வாசகர்கள் அந்த சொற்களையும், வார்த்தைகளையும் எளிதில் ஜீரணிப்பார்கள். உள்வாங்கிக் கொள்வார்கள்.

ஆனால், வெகுஜன இதழின் வாக்கியத்துக்கு பழக்கப்பட்ட சாதாரண வாசகர்கள்?

சிரமம்தான். அவர்களுக்கு தெரிந்த சொற்கள் - வாக்கியங்களை வைத்தேத்தான் சகலத்தையும் புரிய வைக்க வேண்டும்.

இதை அநாயாசமாக மனுஷ்ய புத்திரன் செய்து வருகிறார். அந்த வாசகர்களுக்கு புரியும் விதத்தில் தன் கருத்துகளை முன்வைக்கிறார். சொற்களும், வாக்கியங்களும் எளிமையானவை. ஆனால், சொல்லப்படும் கருத்து கனம் பொருந்தியவை. அதில் அவர் காம்ப்ரமைஸ் ஆகவில்லை.

‘எதிர்க்குரல்’ தொடங்கப்பட்ட காலம் முதல் விடாமல் அதை படித்து வருபவன் என்ற முறையில் சொல்கிறேன். கிரேட். சமகால அரசியல், பண்பாட்டு நிகழ்வுகள் குறித்த தன் எதிர்வினையை உலகில் வேறு எங்காவது ஒரு தீவிர இலக்கிய கவிஞர் இந்தளவுக்கு மூர்க்கத்துடன் முன்வைத்து வருகிறாரா என்பது சந்தேகமே.

எப்போதாவது கட்டுரைகள் எழுதுவார்கள். சமூக பண்பாட்டு சீரழிவுகளை சாடுவார்கள். ஆனால், வாரம் இருமுறை - அதுவும் ஏ4 அளவில் மூன்று அல்லது நான்கு பக்கங்களில் தொடர்ச்சியாக எழுதி வருகிறார்களா? கண்ணுக்கு எட்டிய தொலைவு வரை ஒருவரும் தென்படவில்லை. ஒருவேளை ஏதேனும் ஒரு மூலையில் யாரேனும் இதுபோல் இயங்கி வரலாம்.

ஆனால், தமிழில்?

உங்கள் மனசாட்சியை தொட்டுச் சொல்லுங்கள். எத்தனை கவிதைத் தொகுப்புகளை படித்து வருகிறீர்கள். எத்தனை கவிஞர்கள் உங்களுக்கு அறிமுகமாகியிருக்கிறார்கள். அவர்களில் எத்தனைப் பேர் சமூக நிகழ்வுகளை சாடி கட்டுரைகளை - அதுவும் வெகுஜன இதழில் எளிமையாக புரியும் வகையில் எழுதி இருக்கிறார்கள் அல்லது எழுதி வருகிறார்கள்?

மனுஷ்ய புத்திரன் இதை செய்து வருகிறார் அய்யா.

மோடி, ஈழப்பிரச்னை, மீனவப் பிரச்னை, கூடங்குளம், விவசாயிகளின் பிரச்னை, காங்கிரஸ்... என சமகால நிகழ்வுகள் அத்தனை குறித்தும் எழுதியிருக்கிறார். எழுதியும் வருகிறார். இவையெல்லாமே ஸோ கால்ட் இலக்கியவாதிகள் பேசத் தயங்கும் விஷயங்கள் என்பதுதான் முக்கியம். இலக்கியவாதிகளை சொல்வானேன். தொழில்முறை பத்திரிகையாளர்களும் பேசப் பயந்த, தயங்கும் விஷயங்கள் இவை.

அதற்காக மனுஷ் எழுதிய அனைத்துமே முத்துக்கள் என்றோ, வைரங்கள் என்றோ சொல்லவில்லை. சில கட்டுரைகள் சுமாரானவை. அவரிடமும் சார்புத்தன்மை இருக்கின்றன அவை அவரது கட்டுரைகளிலும் வெளிப்படுகின்றன.

இருந்துவிட்டு போகட்டுமே?

சார்பு இல்லாத, தனக்கென்று அரசியல் இல்லாத மனிதர் யார்தான் இருக்கிறார்கள்? தனது சார்பு - அரசியலுக்கு உட்பட்டு ஒருவர் என்ன செய்திருக்கிறார் என்பது பார்ப்பதுதானே முக்கியம்?

அப்படிப் பார்க்கும்போது மனுஷ்ய புத்திரன் என்னளவில் போற்றுதலுக்கு உரியவராகத்தான் இருக்கிறார். ’எதிர்க்குரல்’ பத்தி அதற்கு சாட்சி.

இந்தப் பத்திகளின் மூன்றாம் பாகம்தான் நாளை (25.12.2013 அன்று) மாலை சென்னை அண்ணாசாலையில் உள்ள புக் பாயிண்ட் அரங்கில் வெளியாகிறது. அதற்காகத்தான் மனுஷ்ய புத்திரனை மனதார வாழ்த்தி இந்த நிலைத்தகவல். தொடர்ந்து அவர் உற்சாகத்துடன் இயங்க வேண்டும், எழுத வேண்டும் என்ற ஆசையின் வெளிப்பாடாகவும் இதை கொள்ளலாம்.

இத்துடன் அவரது கவிதைத் தொகுப்பும் வெளியாகிறது. அவரது கவிதைகள் எப்படியிருக்கும் என்பது நாம் அறிந்ததுதான். அதனால்தான் அதைக் குறித்து இங்கு எதுவும் சொல்லவில்லை. அறிந்தவற்றுக்கு அறிமுகம் எதற்கு?

வாய்ப்பு இருந்தால் ‘எதிர்க்குரல்’ மூன்று பாகங்களையும் ஒருசேர படித்துப் பாருங்கள். சமகால தமிழக வரலாற்றை தீவிர இலக்கியத்தை சேர்ந்த ஒரு கவிஞர் எப்படி சாதாரண வாசகருக்கும் புரியும் வகையில் எழுதியிருக்கிறார் என்பதை உணர்வீர்கள்.

லாஸ்ட் பட் நாட் லீஸ்ட், இப்படியொரு நிலைத்தகவல் எழுதியதால் இனி மனுஷ்ய புத்திரனை விமர்சிக்கவே மாட்டேன் என்பது பொருளல்ல. போலவே ‘தனக்கு ஆதரவாக’ நான் எழுதியதாலேயே மனுஷ் என்னை ஏற்பார் என்றும் அர்த்தமல்ல.

இருவரும் முரண்படும் புள்ளிகள் அப்படியேதான் இருக்கின்றன. எனவே பரஸ்பரம் ஒவ்வொருவரும் தங்களை நிலைநாட்டிக் கொள்ள முகநூலில் அடித்துக் கொள்ளத்தான் செய்வோம். அதுவும் மூர்க்கத்துடன்தான் இருக்கும்.

அந்த எரிச்சல் அல்லது ஆத்திரம் அல்லது கோபத்தில் மனுஷ்ய புத்திரனின் அனைத்து செயற்பாட்டையும் நான் நிராகரித்தால் என்னை விட முட்டாள் வேறு யாரும் இருக்க மாட்டார்கள்.

ஏனெனில் தன்னளவில் நேர்மையாக செயல்படும் ஒரு சமூக செயற்பாட்டாளரை புறக்கணிப்பது என்பது சமூக மாற்றத்துக்கான விதையையே நசுக்குவதற்கு சமம்.

மனுஷ்ய புத்திரன் களத்தில் நிற்கும் செயற்பாட்டாளர்.

நாளைய அவரது புத்தக வெளியீட்டுக்கு வாழ்த்துகள்...
கே. என். சிவராமன்
 

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails