Tuesday, December 3, 2013
எம்.ஜி.ஆரும் அ.கா.அ. அப்துல் ஸமதும்
எம்.ஜி.ஆருடன் நெருங்கிய பிணைப்புடைய சிராஜுல் மில்லத், அவருடைய மறைவின்போது மணிவிளக்கில் நீண்ட கட்டுரை எழுதினார். ‘எம்.ஜி.ஆர். ஒரு சகாப்தம்’ என்ற அந்த நினைவுக் கோவையின் சில பகுதிகள் :
ஒரு முறை எம்.ஜி.ஆர் அவர்களிடம் அவரே திப்பு சுல்தானாக நடிக்க வேண்டும் என்ற எனது விருப்பத்தைத் தெரிவித்துவிட்டு டெல்லி சென்று விட்டேன். அன்று மாலை பத்திரிக்கை நிருபர்கள் அவரைச் சந்தித்தபோது திப்பு சுல்தான் படம் வெளிவரப்போகிறது என்றும், கதை வசனத்தை அப்துல் ஸமது எழுதுவாரென்றும் சொல்லியிருந்தார். இதை பத்திரிக்கையில் படித்த என் நண்பர்கள் தொலைபேசி மூலம் எனக்குத் தெரிவித்தார்கள். சமுதாயத்தில் இதை சில இளைஞர்கள் வரவேற்றார்கள். நானும் சினிமா உலகத்தில் மூழ்கிவிடுவேன் என்று பெரியவர்கள் வருத்தப்பட்டார்கள். ஆனால், காயிதே மில்லத் அவர்களுக்கு நடந்த உண்மையை விளக்கியிருந்தேன்.
இந்த காலக்கட்டத்தில் நான் கோவைக்குப் போயிருந்தபோது எனக்கு வரவேற்பளித்த இளைஞர் சங்கத்தார் “திப்பு சுல்தான் திரைப்பட வசனகர்த்தாவே வருக!” என அழைப்பு விடுத்தார்கள். ஆக, என்னுடைய படவுலகப் பிரவேசம் அதோடு முடிந்தது.
ஆனாலும் எம்.ஜி.ஆர். அவர்களை சிறப்பாசிரியராகக் கொண்டு ‘சமநீதி’ என்ற வார இதழ் வெளிவந்தது பலருக்கு நினைவிருக்கலாம்.
இந்தப் பத்திரிக்கை அங்கப்பன் நாயக்கன் தெருவில் இருந்த என்னுடைய அச்சகத்தில் அச்சிடப்பட்டதும் அதன் அச்சிடுவோராக என் பெயர்தான் வெளிவந்து கொண்டு இருந்ததும் பலபேர் நினைவில் இருக்க நியாயமில்லை.
என்னிடமிருந்த இந்த அச்சு இயந்திரத்தை நான் விற்க நினைத்தபோது எம்.ஜி.ஆர். அதை வாங்கி திரு. தென்னரசு அவர்களுக்கு அன்பளிப்பாக வழங்கினார்.
சினிமா உலகிலிருந்து நான் வெகுதூரத்தில் இருந்த நிலையிலும், அரசியல் தொடர்புடைய எந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தாலும் அல்லது தலைவர்களுக்கு விருந்தளித்தாலும் எம்.ஜி.ஆர். என்னையும் அழைக்காமல் இருந்ததில்லை. அவர் குண்டடிப்பட்டு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்ட அரைமணி நேரத்தில் நான் அவரைச் சென்று பார்த்தேன்.
(‘சமநிலையச் சமுதாயம்’ பத்திரிக்கையில் ஜே.எம்.சாலி அவர்கள் எழுதிய ‘இலக்கிய இதழியல் முன்னோடிகள்’ என்ற கட்டுரைத் தொகுப்பிலிருந்து)
நன்றி : http://nagoori.wordpress.com/
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment