Sunday, December 29, 2013

சன் தொலைக் காட்சி வீரபாண்டியன் மீது இந்துத்துவ அமைப்புக்கள் தாக்குதல் - அ.மார்க்ஸ்

இரு வாரங்களுக்கு முன் சென்னையில் எஸ்.டி.பி கட்சியினரின் விழா ஒன்றில் NCHRO அமைப்பினர் வெளியிட்டுள்ள முசாபர்நகர் வன்முறைகள் குறித்த உண்மை அறியும் குழு அறிக்கை வெளியிடப்பட்டது. அதை வெளியிட்டு உரையாற்றியபின் அதே நாளில் ‘பெஃபி’ அரங்கில் நடைபெற்றுக் கொண்டிருந்த இளம் பத்திரிக்கையாளர் சந்திப்பிற்கு வந்துவிட்டேன்.

நான் வந்தபின் சன்டிவி வீரபாண்டியன் உரையாற்றியுள்ளார். அப்போது முஸ்லிம்களுக்கான ஒரு வலுவான ஊடகம் இல்லாதது குறித்துப் பேசிய அவர் மோடி குறித்தும் பா.ஜ.க குறித்தும் வெளிவந்துள்ள பல மாற்றுச் செய்திகளை வெளியிட முஸ்லிம்கள் ஊடகத் துறையில் கால் பதிக்க வேண்டும் என்பதை வற்புறுத்தியுள்ளார்.


இந்தப்பேச்சுகள் அங்கு வந்திருந்த சிலரால் பதிவு செய்யப்பட்டு இணையத் தளங்களில் வெளியிடப்பட்டுள்ளன. இதை ஒட்டி இந்துத்துவ அமைப்புகள் வீரபாண்டியனுக்கு எதிராக பல்வேறு திசைகளிலிருந்து தாக்குதல் தொடுக்கத் தொடங்கியுள்ளனர். தொலை பேசியில் பெயரைச் சொல்லியும், சொல்லாமலும் மிரட்டுவது, ஆபாசமாகத் திட்டுவது, சமூக ஊடகங்களில் வன்முறையைத் தூண்டும் வகையில் எழுதுவது, சன் தொலைக்காட்சி நிர்வாகத்திற்கு வீரபாண்டியன் நிகழ்ச்சியை நிறுத்துமாறு அழுத்தம் கொடுப்பது, 'விஜயபாரதம்' முதலான அவர்களின் இதழ்களில் தாக்கி எழுதுவது எனப் பலவாறாகவும் இந்தத் தாக்குதல்கள் அமைந்துள்ளன.

இந்துத்துவ அமைப்புகளைச் சேர்ந்தோர் சன் டிவி நிர்வாகத்தைச் சந்தித்து, வீரபாண்டியனை நீக்காவிட்டால் இனி சன் டிவி விவாத நிகழ்ச்சிகளில் தாங்கள் யாரும் கலந்து கொள்ளப் போவதில்லை எனவும் மிரட்டியுள்ளதாகக் கேள்விப்படுகிறோம். பதினேழு ஆண்டுகளாக சன்டிவியில் பணியாற்றிக் கொண்டுள்ள வீரபாண்டியனின் நிகழ்ச்சி இந்த வாரம் காணக் கிடைக்குமா என்ன்க்கிற ஐயம் இப்போது எழுந்துள்ளது.

சன் டிவியில் வீரபாண்டியன் நடத்தும் விவாத நிகழ்ச்சிகள் பெரிய அளவில் மக்களால் விரும்பப்படுபவை. சொல்லப்போனால் இன்று காட்சி ஊடகங்களில் நடைபெறும் இத்தகைய விவாதங்களுக்கே அவரது நிகழ்ச்சிகள்தான் முன்மாதிரிகளாக இருந்துள்ளன.

வீரபாண்டியனின் சொந்தக் கருத்துக்கள் எதுவாக இருந்தபோதிலும் விவாதங்களின்போது அவர் மிக்க நடுநிலையுடன் செயல்பட்டு வந்துள்ளதை அவரது விவாத நிகழ்ச்சிகளைக் கவனித்திருப்போர் அறிவர். நானே பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டுள்ளேன். நடுநிலையாகத்தான் செயல்படுவார்.

ஒரு ஊடகவியலாளரிடம் சமூகம் எதிர்பார்ப்பது அவர் எழுத்தில், செய்தி அளிப்பில் நடுநிலையாக இருக்க வேண்டும் என்பதுதான். அதற்காக அவருக்கென சொந்த கருத்துக்களோ, சொந்த அரசியலோ இருக்கக்கூடாது என்பதல்ல. ஊடகவியலாளர்களுக்கு இதர குடிமக்களைப்போலவே எல்லாவிதமான அரசியல் உரிமைகளும் உண்டு.

முஸ்லிம்களின் தரப்புச் செய்திகள் ஊடகங்களில்போதுமான அளவில் இடம்பெறவில்லை என்கிற கவலை எல்லோருக்குமே உண்டு. அப்படியான சூழலில் முஸ்லிம்களுக்கென ஊடகங்கள் தேவை என ஒருவர் கருத்துச் சொன்னதற்கு இத்தகைய எதிர்ப்பு வந்துள்ளது வருந்தத்தக்கது. இதை “முஸ்லிம்களைத் தூண்டி விடுவது” என்கிற ரீதியில் பா.ஜ.கவினர் திரிப்பது அவர்கள் எவ்வளவு தூரம் சகிப்பின்மையுடன் உள்ளனர் என்பதைத்தான் வெளிப்படுத்துகிறது. மாற்று அரசியல் கருத்துக்களை அரசியல் ரீதியாகச் சந்திப்பதுதான் அரசியல் அமைப்புக்களுக்கு அழகு. இப்படித் தரம் குறைந்த அளவில் மிரட்டுவதும், தங்களுக்குப் பிடிக்காத ஊடகக்காரர்களை வேலை நீக்கம் செய்ய வேண்டும் என நிர்வாகத்தை மிரட்டுவதும் வன்மையாகக் கண்டிக்கப்படவேண்டிய ஒன்று. இப்போதே இப்படி என்றால் இவர்கள் ஆட்சிக்கு வந்தால் எப்படி நடந்து கொள்வார்கள் என்பதை நாம் யோசிக்க வேண்டும். தொலைபேசியில் மிரட்டும்போது கூட ஒரு நபர், “இன்னும் நாலு மாசந்தாண்டா உங்க ஆட்டமெல்லாம், அப்புறம் பாத்துக்கிறோம்டா..” எனச் சொல்லியுள்ளதாக அறிகிறோம்.

இது ஊடகச் சுதந்திரத்திற்கு விடப்பட்ட .ஒரு சவால். ஒரு சக ஊடகக்காரருக்கு ஏற்பட்டுள்ள இந்த ஆபத்து இனி யாருக்கும் வரலாம் என்பதை ஊடகத்துறையினர் உணர வேண்டும். இப்படி ஒவ்வோரு கட்சியும் தங்களுக்குப் பிடிக்காதவரை வேலையை விட்டு நீக்க வேண்டும் என இறங்கினால் இது எங்கு கொண்டுபோய் விடும்?

வீரபாண்டியன் நிகழ்ச்சிகளைப் புறக்கணிப்போம் என்கிற மிரட்டலின் காரணமாக இனி அவரது நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்படுமேயானால, இனி இத்தகைய விவாத நிகழ்சிகளில் இந்துத்துவவாதிகள் பங்கு பெறும்போது நாங்கள் பங்குபெற இயலாது என முஸ்லிம் அமைப்பினரும், எங்களைப் போன்ற மதச் சார்பற்ற சக்திகளும், இடதுசாரிகளும் அறிவிப்பார்களேயானால் அது எத்தகைய நிலைக்கு இட்டுச் செல்லும்?

சக ஊடகவியலாளருக்கு ஏற்பட்டுள்ள இந்த நெருக்கடிக்கு எதிராக இந்துத்துவவாதிகளின்

நிகழ்ச்சிகளைப் புறக்கணிப்போம் என ஊடகவியலாளர்கள் அறிவிக்கும் நிலை வந்தால் பா.ஜ.கவின் நிலை என்ன ஆகும்?

இந்துத்துவவாதிகள் சிந்திக்க வேண்டும்.

ஊடகத் துறையினரும், நிர்வாகமும் இந்தச் சவாலை தைரியமாகவும் ஊடகவியலாளர்களின் கருத்துச் சுதந்திரத்தை எக்காரணதிற்காகவும் விட்டுக் கொடுக்காமலும் எதிர்கொள்ள வேண்டும்.

நன்றி- அ.மார்க்ஸ் அவர்களுக்கு

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails