Monday, December 23, 2013

"செட் ஆகிடுச்சுன்னா தொடர்ந்து நிறைய பிஸ்னஸ் செய்யலாம்"

நான் என்பது பொதுப்பெயர்
-நிஷா மன்சூர்

அது ஒரு கோடைகால உச்சிநேரம்.
பொருளாதார ரீதியிலும் மனரீதியிலும்
ஒரு சிக்கலான காலகட்டத்தைத் தாண்டி வந்திருந்தேன்,
வணிகராகவும் எழுத்தாளராகவும் பரிணமித்த ஒரு தமிழ் எழுத்தாளரை சந்திக்கச் சென்றபோது அவர் கடையில் இல்லை.போனில் தொடர்பு கொண்டபோது
"பார்த்து ரொம்பநாளாச்சே,
வாங்களேன் வீட்டில் சந்திக்கலாம்" என்றார்.

வீடு கிட்டத்தட்ட ஆறு கிலோமீட்டர் தூரமிருந்தது,
இருபது ரூபாய் கேட்ட ஆட்டோக்காரரைப் புறக்கணித்துவிட்டு
நான் நடந்தேபோக முடிவு செய்தேன்( சாப்பாட்டுக்கு உதவுமே).

கோடைகால மத்தியான நேரத்தில் கையிலுள்ள சூட்கேசுடன் நடப்பது சிரமமாக இருந்தாலும் மதிய உணவு நேரமாதலால் ஒருவேளை அவர் சாப்பிடச் சொல்லி வற்புறுத்தக் கூடுமென்பதும்
அதிகநேரம் பிகு செய்யாமல் சாப்பிட்டுவிட்டால் இன்னொரு இருபதுரூபாய் மிச்சப்படுத்துவது மட்டுமின்றி ஒரு நல்ல
சாப்பாடு (இருபது ரூபாய்க்குக் கிட்டாத) சாப்பிட முடியுமென்பதும் உற்சாகமூட்டுவதாக இருந்தது.

நடக்க நடக்க கையிலிருந்த சூட்கேஸ் கனத்தது,அதை எங்காவது வைத்துவிட்டுச் சென்றிருக்கலாம் என்று தோன்றினாலும் ஒருவேளை சேம்பிள் காட்டுங்க என்று கேட்டுவிட்டாரென்றால் ஆர்டரும் வாங்கி விடலாமே என்ற எண்ணம் அதைத் தடுத்தது.

இடதுகையிலிருந்த கைக்குட்டை வியர்வையை ஒற்றி ஒற்றி கிட்டத்தட்ட முழுசாக நனைந்திருந்தபோது வீடு,இல்லை இல்லை பங்களா வந்து சேர்ந்திருந்தேன்.
குரைத்துக்கொண்டிருந்த நாயை அதட்டியபடியே வாங்க வாங்க என்று வரவேற்றார், சாப்பிட்டுவிட்டுக் கைகழுவியபடியே அவர்.

ஹாலில் இருந்த சோபாவும் சுழன்று குளிரூட்டிய மின்விசிறியும் மிகுந்த ஆசுவாசத்தைத் தந்தன.
கையைத் துடைத்தபடியே வந்தமர்ந்த அவர் "சாப்பிட்டீங்களா"
என்றார்,
"இனிமேத்தான்" என்ற மெல்லிய குரல் அங்கு ஒலித்த டெலிபோன் மணிக்குள் ஐக்கியமாகிப்போனது.
போனில் பேசிமுடித்த அவர்
"அப்புறம் பிஸ்னஸ் எப்படிப் போயிட்டிருக்கு,
சேலரியெல்லாம் பரவால்லையா..??" என்று ஆரம்பித்து வியாபார நிலவரம் பற்றியும் இன்னும் அவர் ஷோரூம் அப்டேட் செய்வது குறித்தும் உரையாடிக் கொண்டிருந்தார்.
எனக்கோ நாவறண்டு தவித்தது,
"கொஞ்சம் தண்ணி..." என்று இழுத்தேன்.

அவர் டைனிங் டேபிளின் மீதிருந்த சாப்பிட்டு மீதம் வைத்திருந்த செம்பிலிருந்த கால்வாசி தண்ணீரை எடுத்துத் தந்தபடியே சொன்னார்
" எல்லோரும் சாப்பிட்டிருக்காங்க அதான்,
தண்ணி போதுமில்ல" என்று.

ஆறுகிலோமீட்டர் மத்தியான வெயிலில் நடந்த பாவப்பட்ட தொண்டையை நனைக்க அந்தத் தண்ணீர் போதுமானதாக இல்லையெனினும் இனியும் கேட்டு அவரைச் சிரமத்திற்கு உள்ளாக்க வேண்டாமே என்று "போதும் போதும் " என்றேன்.

பின்பு சேம்பிள் பார்த்து ஒரு ஆர்டர் கொடுத்தபிறகு " இது இன்ஷியல் ஆர்டர்தான்,
செட் ஆகிடுச்சுன்னா தொடர்ந்து நிறைய பிஸ்னஸ் செய்யலாம்"
என்றவர் அப்ப கெளம்பறீங்களா என்ற பாவனை தொனிக்க புன்னகைத்தபடியே ஷோபாவிலிருந்து எழுந்தார்.

"ஓகே,தேங்க்யூ சார்,
தேங்க்யூ வெரிமச் என்று கைகுலுக்கி விடைபெற்று வெளியே வந்தேன், குளிர்ந்த அவர் கையிலிருந்து வந்த சாப்பாட்டு வாசம் என் கையையும் தொற்றிக் கொண்டது.

வெளியே
தார் இளகிக் குழம்பாகி நின்ற நெடுஞ்சாலையிலிருந்து வெளியான அனலானது பசித்த என் வயிறுக்குள் தீயாய் நுழைவதை உணர முடிந்தது.சுயவெறுப்பும் சுய இரக்கமும் கையிலிருந்த சூட்கேசில் பெருஞ்சுமையாய் கனக்க,
இனியும் இயலாதெனக் கூவியழைத்தேன்,
"ஆட்டோ ஓ ஓ...."


-நிஷா மன்சூர் Nisha Mansur

No comments: