Tuesday, December 3, 2013

எல்லா ஸ்டார்களுமே யாரோ ஒருவருடைய ஊக்குவிப்பின் மூலமாகதான் நமக்கு கிடைத்திருக்கிறார்கள்.


எம்.ஜி.ஆர் நாயகவேடத்துக்கு பொருத்தமான முகவெட்டு கொண்டவர் அல்ல என்று எல்லீஸ் ஆர்.டங்கன் ஆரம்பத்தில் மறுத்த தகவலை தோழர் Narain Rajagopal ஒரு ஆவணப்படத்தை முன்வைத்து எழுதியிருக்கிறார் (எம்.ஜி.ஆரை சதிலீலாவதியில் அறிமுகப்படுத்தியவரே டங்கன்தான் என்பது வேறு விஷயம்)

எம்.ஜி.ஆர் மட்டுமல்ல. பல நாயகர்களுக்கும் ஆரம்பத்தில் இதே நிலைமைதான்.

சிவாஜி பராசக்தியில் நடித்துக் கொண்டிருந்தபோது, தயாரிப்பாளர்களில் ஒருவரான மெய்யப்ப செட்டியாருக்கு ‘ரஷ்’ பார்த்து, அவரை பிடிக்கவில்லை. “மீன் உணவுக்காக வாயை திறந்து மூடுவது மாதிரியிருக்கிறது” என்று சிவாஜியின் டயலாக் டெலிவரி நக்கல் அடிக்கப்பட்டது. கலைஞர் மற்றும் இயக்குனர்கள் கிருஷ்ணன் பஞ்சு விடாப்பிடியாக சிவாஜியை சிபாரிசு செய்தார்கள். அறிஞர் அண்ணா பர்சனலாக தன்னுடைய நட்பு செல்வாக்கினை பயன்படுத்தி செட்டியாரை ஒப்புக்கொள்ளச் செய்தார். இல்லாவிட்டால் ‘செவாலியே’ நமக்கு மிஸ் ஆகியிருக்கக்கூடிய வாய்ப்புகள் அதிகம்.


போலவே, கமல்.

டீனேஜிலேயே நடிப்பு வாய்ப்பு கிடைக்காமல் வெறுத்துப்போய் நடன உதவியாளராக பணியாற்றினார். சிறுவயது ஸ்டார் என்பதால் பெரிய நடிகர்களின் செல்லம்.

“நடிக்க வேண்டியதுதானே? உனக்குதான் நடிப்பு நல்லா வருமில்லே?” எம்.ஜி.ஆர் ஒரு படப்பிடிப்பில் கமலிடம் கேட்டார்.

நடிப்பு வாய்ப்பு கேட்டு போனபோது கிடைத்த கசப்பான அனுபவங்களால் கமல் வெறுத்தநிலையில் சொன்னார். “ஓணான் மாதிரி இருக்கேன். என்னைப் போய் நடிகனா ஏத்துப்பாங்களா?”

“யாருப்பா சொன்னா? நீ அழகன். கண்டிப்பா மக்கள் உன்னை ஏத்துப்பாங்க” என்று தைரியம் கொடுத்தார் எம்.ஜி.ஆர்

எம்.ஜி.ஆரின் அந்த ஊக்கவார்த்தைகள் இல்லாமல் இருந்திருந்தால் ஒருவேளை கமல் இன்னேரம் ரகுராம் மாஸ்டர் மாதிரிதான் ஆகியிருப்பார். இத்தனை தேசிய விருதுகளை தமிழுக்கு வாங்கித் தந்திருக்க மாட்டார்.

வாய்ப்புகளில்லாமல் சென்னை தெருக்களில் புல்லட்டில் சுற்றிக் கொண்டிருந்தாராம் விஜயகாந்த். புல்லட்டில் அமர்ந்திருந்த கேப்டனின் கம்பீரத்தை கண்டுகொண்டவர் எஸ்.ஏ.சி.தான். “நீதான்யா ஹீரோ” என்று கொத்திக்கொண்டு போனார்.

எல்லா ஸ்டார்களுமே யாரோ ஒருவருடைய ஊக்குவிப்பின் மூலமாகதான் நமக்கு கிடைத்திருக்கிறார்கள்.


தகவல் தந்தவர் Yuva Krishna
 யுவகிருஷ்ணா

No comments: