Friday, December 6, 2013

பாட்டுக்கொரு புலவன் பாரதி- சிந்துக்குத் தந்தை!

06/12/2013 அன்று துபைச் சங்கமம் தொலைக்காட்சியில் நடைபெற்ற மகாகவி பாரதியார் விழாவில் கவியன்பன் கலாம் பாடிய கவிதையும்; அதன் காட்சிப் படங்களும்.

வானமதின் வெளிச்சத்தை வழித்துப் பூசி
 ..........வார்தைகளைக் கோத்திட்டப் பாவில் பேசி
தேனமுதம் பிழிந்தெடுத்த தமிழில் பாடும்
..........தேமதுர ஓசைகளாய் ஆங்குக் கூடும்
யானையதின் வலிமைபோல திண்மை கூறும்
.........ஆர்க்கும்தான் வீரங்கள் நேராயச் சேரும்
கானமழை பெய்ததனால் புலமைப் பெற்றாய்
......... கவிதைகளில் சிந்துக்குத் தந்தை நீயே!


உலைபோல கொதிக்கின்ற உணர்வில் விஞ்சும்

 ..........உண்மைக்குத் தயங்காத  உறுதி நெஞ்சம்

தலைமேலே முண்டாசு  முறுக்கு மீசை

  ..........தலைவணங்காச் செருக்கோடு பாடும் ஓசை

அலைபோல மிதந்துவரும் சந்த ஓட்டம்

 .........ஆனந்தக் கும்மியிலே  தீரா நாட்டம்

மலைபோல  நிலைத்திட்ட  சந்தப் பாட்டில்

 .......மனவுறுதி பெற்றிடுவோம் தாயின் நாட்டில்!


    இடர்களையும், வறுமையையும் துணிந்துக் காத்து

   ............... இந்தியாவின் விடுதலைக்கு எழுத்தால் ஆர்த்து

   கடந்தகாலப் பாடலுக்கு மாற்றம் செய்தான்

     ............... கவிதையிலே புதுக்கவிதை வளரச் செய்தான்

   மடமைகளும் கொடுமைகளும்  ஒழியச் செய்தான்

      ...................மங்காத கவித்தீபம் பரவச் செய்தான்

    கடமைகளில் விடுதலையின் தாகம் தந்தான்

  ................கண்விற்றுச் சித்திரத்தைப் பெறுதல் நொந்தான்!


 சாதிகளை ஒழிப்பதற்குப்   பாடு  பட்டான்

.............சார்ந்திருந்த சடங்குகளை விட்டு விட்டான்

நீதியொன்றே வேண்டுமென்று பாடிச் சொன்னான்

............நீசர்கள் வெள்ளையரை ஓடச் சொன்னான்

வாதிடுவோர் எல்லாரின் வாயைக் கட்டி

.......................வண்டமிழின் பெருமைகளைப் பாரில் சுட்டி

காதினிலே இன்பத்தேன் தமிழைத்   தந்தான்

....................கற்றிருந்த மொழிகளிலே  உயர்வாய்ச் சொன்னான்


“கவியன்பன்” கலாம்
அலைபேசி: 0508351499

மின்மடல்: kalamkader2@gmail.com


No comments: