Monday, December 2, 2013

பச்சைத்தொப்பி கட்டாயம் தேவை..



சென்றவாரம் திருமணம் முடித்த இளவல் சச்சிதானந்தம் என் மீது பேரன்பு பொழிபவர்.இன்று மதியம் எம் கல்லூரிக்கே வந்து காத்திருந்து தனது மாமனார் இல்லத்திற்கு அவசியம் வரவேண்டும் என அன்புக்கட்டளைப்போட்டு அள்ளிச் சென்றுவிட்டார்..
அவரது மாமனார் இந்திரகுமார் எக்ஸ்னோரா இயக்க முன்னணி பிரமுகர், நாட்டுநலப்பணித்திட்ட மாணவர்களுக்கு வழிகாட்டி என்ற அளவில் அறிந்துள்ளேன்.
பம்மலில் உள்ள அவர் இல்லத்தைப் பார்த்து மனங்குளிர்ந்தேன். மகிழ்ந்து போனேன். அது இயற்கைத்தோழமை இல்லம்(ECO FRIENDLY HOME).

மின்விசிறி,குளிரூட்டி போன்ற எந்தச் சாதனங்களும் இல்லாவிட்டாலும் வீடு குளுமையாகவே இருக்கும்.

கார்பண்டைஆக்சைடு வின் விகிதம் கூடினால்தான் வெப்பம் கூடும், இயற்கைத்தோழமை இல்லத்தில் கரியமிலவாயு விகிதம் அதிகரிக்காது..அதற்கேற்ற ஏற்பாடு.

மாடி முழுவதும் தோட்டம். எராளமான மூலிகைச்செடிகளோடு பூசணி,தக்காளி மற்றும் நறுமணப்புற்கள்.

மழைநீர் சேகரிப்புக்கென நேர்த்தியான அமைப்பு..மூலிகைத்தன்மையோடு மழைநீரை நிலத்தடியில் சேமிக்கும் ஏற்பாடு...


தாவரக் குப்பையிலிருந்து உரம் தயாரித்தல், மீன்கழிவுகளைக் கூட பயிருக்கு உரமூட்டும் மருந்தாக மாற்றல், கொசுப்பெருகாமல் தடுக்க வளர்க்கப்படும் மண்புழுக்கள் ,
செப்டிக் டேங்க் கழிவு நீரை சுத்திகரித்து செடிகளுக்கு செலுத்துதல், சோப்பு நீரை உறிஞ்சி சுத்திகரிக்கும் செடிகள் என எல்லாமே ஆச்சர்யம்.

நூற்றுக்கணக்கானோர்க்கு சூழலியல் பயிற்சி வழங்கிவரும் அவர் படித்திருப்பதோ எந்திரவியல் பட்டயப்படிப்பு..

புவிவெப்பமயமாதல், நதிநீர் மற்றும் மழைநீர் சேமிப்பு,
எதிர்கால விவசாயம், விவசாயத்தின் எதிர்காலம் என சூழலியல் சார்ந்து நிறையவே பேசினோம்..

இதே கருப்பொருளில் வைரமுத்து எழுதியுள்ள “ மூன்றாம் உலகப்போர்” நாவல் குறித்தும் பேச்சு வந்தது....

கவிஞரைத் தொடர்புகொண்டு அவரைப்பேச வைத்தேன்..இருவருக்கும் மகிழ்ச்சி...

கட்டடங்களுக்கு தாவரங்களால் பச்சைத்தொப்பி அணிவித்தால்தான்

புவிவெப்பமாதல் பிரச்சனையை சமாளிக்கமுடியும் என்றார்..

எல்லாக் கட்டடங்களுக்கும் பச்சைத்தொப்பி அவசியம் என்றே எனக்கும் தோன்றுகிறது...


Haja Gani
ஆக்கம் ஹாஜா கனி 

No comments: