Sunday, June 30, 2013

பொறியியல் கல்லூரியில் என் பயிற்சி வகுப்புகள் - படங்கள்

அஸ்ஸலாமு அலைக்கும்,

http://info-vlsi.blogspot.in/2013/07/smvec-workshop-pics.html

பாண்டிச்சேரியின் பிரபல கல்வி நிறுவனங்களில் ஒன்றான ஸ்ரீ மணக்குள விநாயகர் பொறியியல் கல்லூரியில், சமீபத்தில், மூன்றாம் ஆண்டு மாணவர்களுக்கு, எலெக்ட்ரானிக் தொழில்நுட்பத்தின் ஒரு பகுதியான VLSI Design துறையில் பயிற்சி வகுப்புகள் நடைபெற்றன. ஐந்து நாட்கள் நடைபெற்ற இந்த வகுப்புகளில் நான் கலந்துக்கொண்டு, நானறிந்த யுக்திகளை மாணவர்களுக்கு பயிற்றுவித்தேன். இறைவனின் கிருபையால் மிக நல்ல முறையில் நடந்து முடிந்த இந்த பயிற்சி வகுப்புகள் குறித்த பதிவு மற்றும் படங்களை மேலே உள்ள லின்க்கை சுட்டி பாருங்கள்..
வஸ்ஸலாம்,

உங்கள் சகோதரன்,
ஆஷிக் அஹமத் அ

பாலையான வாழ்க்கையைப் பசுஞ்சோலையாய் ஆக்க..


பாலையான வாழ்க்கையைப்

பசுஞ்சோலையாய் ஆக்கவே

பாலைவன நாட்டுக்கே

பறந்து வந்த பறவைகள் நாங்கள்...

இச்சையை மறந்தோம்;

இன்பத் தாய்நாட்டை துறந்தோம்;

பச்சிளம் குழந்தைகளை பாராமுகமானோம்;

பணத்தால் வேலியிட்டு உறவுகளை தூரமாக்கினோம்...

இருளகற்றும் மெழுகுவர்த்தியானோம்;

இனிய சுக(ம்)ந்தம் தரும் ஊதுபத்தியானோம்;

Friday, June 28, 2013

குழந்தைகளுக்கு நன்னடத்தை ஊட்டுதல்


1. குழந்தைகளைக் கீழ்ப்படிதல் உள்ளவர்களாக வளர்த்த வேண்டியது ரொம்ப முக்கியம். அதற்காக என்னென்ன செய்ய வேண்டுமோ அவற்றைச் சிறு வயதிலேயே செய்யுங்கள். “அடி உதவற மாதிரி அண்ணன் தம்பி உதவ மாட்டான்” என்றொரு பழமொழி உண்டு. குழந்தைகளை பெற்றோர் கண்டித்து, தண்டித்து வளர்ப்பதில் தவறில்லை. ஆனால் அது சின்ன வயதிலேயே ஆரம்பிக்க வேண்டும். வளரும் வரை செல்லம் கொடுத்துவிட்டு வளர்ந்தபின் தண்டிக்காதீர்கள். அது அவர்களை ரொம்பவே பாதிக்கும்.

2. குழந்தையை அப்பா கண்டிக்கும் போது அம்மா தடுக்கக் கூடாது. இருவரும் ஒரேமாதிரி நடந்து கொள்ளவேண்டும். தப்பு செய்தால் இரண்டுபேருமே தண்டிப்பார்கள் எனும் நிலை வேண்டும். அதே போல நல்லது செய்தால் இருவரும் பாராட்ட வேண்டும். அது தான் குழந்தை குழம்பாமல் நல்ல செயல்களை விரைவில் கற்க உதவும்.

Thursday, June 20, 2013

குழந்தைகளுக்கு தன்னம்பிக்கை ஊட்டுதல். My Top 6 !


குழந்தைகளுக்கு உணவு ஊட்டுவதை விட முக்கியமானது அவர்களுக்கு தன்னம்பிக்கை ஊட்டுதல். உங்களுக்காக My Top 6 !

1 குழந்தைகளை நீங்கள் அன்பு செய்வீர்கள் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் அதைக் குழந்தைகளுக்கும் தெரியப்படுத்த வேண்டும். உர்ரென்று இருந்தால் தான் குழந்தை பயப்படும், ஒழுங்காக இருக்கும் என்றெல்லாம் கற்பனையை வளர்த்துக் கொள்ளாதீர்கள். உங்களின் நிபந்தனையற்ற அன்பு அவர்களுடைய தன்னம்பிக்கைக்கு முதல் தேவை.

2. சின்னக் குழந்தைகள் எப்போ பார்த்தாலும் எதையாவது திறந்து, எதையாவது நோண்டிக் கொண்டே இருப்பார்கள். அதிலும் கிச்சன் கபோட்களும், கரண்டிகளும் அவர்களுடைய பேவரிட். இதெல்லாம் அவர்கள் தங்கள் தன்னம்பிக்கையை தானாகவே வளர்த்துக் கொள்ளும் வழிகள். இதை ஆங்கிலத்தில் பேபி புரூஃபிங் (baby proofing ) என்பார்கள். அவர்களை அனுமதியுங்கள். ஆபத்தில்லாத சூழலை உருவாக்குங்கள்.

3. வீட்டிலுள்ள சின்ன சின்ன வேலைகளில் குழந்தைகளை ஈடுபடுத்துங்கள். சமையலில் உதவுவது, வீட்டை சுத்தம் செய்வது, படுக்கையை சரி செய்வது என எதுவானாலும் பரவாயில்லை. இவையெல்லாம் குழந்தையின் தன்னம்பிக்கையை வெகுவாக வளர்க்கும்.

Wednesday, June 19, 2013

தாய்மார்களின் கூச்சல் தாங்க முடியவில்லை !

'அய்யையோ !' என்ற மனைவியின்  அலறல் கேட்டு கணவன் கத்துகிறார்
'ஏன் இப்படி கத்துகிறாய்' என்று
இங்கே வந்து பாருங்கள் உங்கள் பிள்ளைகள் ( அப்பவும் நம்ம பிள்ளைகள் என்ற வார்த்தை வருவதில்லை) பண்ற அநியாயத்தை ! என்று கதறுகிறாள்
( அரசியல் குற்றவியல் சட்டப் பிரிவு தண்டிக்கப் படும் குற்றத்தைப் போல் )
கணவன்  மனைவியின்  அலறல் கேட்டு ஓடி வந்து பார்த்து
'இதற்கா இவ்வளவு கூக்குரல்' என மனைவியை கண்டிக்கிறார்
'ஆமா உங்களுக்கு என்னைத்தான் கண்டிக்கத் தெரியும். பெத்தவளுக்குத்தானே பிள்ளையின் அருமைத் தெரியும் ' என்று முனங்கிக் கொண்டு பிள்ளைகளை கண்டிக்கிறாள் தாய் .

அப்படி என்னதான் குழந்தைகள் குற்றம் செய்து விட்டார்கள்!
படங்களைப் பாருங்கள்Tuesday, June 18, 2013

காவிரி உப்புஇனத்தின் பெயரால்

மொழியின் பெயரால்

மண்ணைப் பிரித்தவர்கள்

இறுதியில்

மேகம் கொட்டிச் செல்லும்

மழையையும்

கொள்ளையடித்தார்கள் !

***

வானுக்கும் பூமிக்கும்

கதவு போட முடியாததால்

காற்று மட்டும்

வேலி தாண்டி வந்து

வருடிச் செல்கிறது!

***

ஜாதி மத வெறுப்பின்

அடுப்புக்கு

விறகாகாமல்

பசித்த வயிறுகளுக்கெல்லாம்

அமுத மழை பொழிபவர்கள்

ஏர் பிடித்து வாழ்பவர்கள்!

Sunday, June 16, 2013

ஒரு கவிஞனின் முகவரி

கட்டிவைத்த
கரையில்லா வெள்ளம்

எந்நாளும் நீரோடும்
உயிர் நதி

காலவாய்க் கொட்டுகளுக்குக்
கட்டுப்படாத தேனீ

வெட்டிப்பேச்சு விரும்பாத
வேங்கை

எதற்கும்
வெட்கமின்றி ஒளிவதில்லை
கருத்தோடு நெருப்பெரியும்
காட்டுத்தீ

விழி பார்த்து
உள்மொழி காணும் தேடல்

தூற்றி வெறுப்போர்க்கும்
விளக்கம் நெய்யும் தறி

ரசனையெனும்
அமுதக்கடலில் மிதப்பு
அதில் துடிப்புகளின்
துடுப்புகளாய் அலைவு

பொய்கேட்டுத்
தீயாகும் ரத்தம்

விரோதிக்கும் அன்பளித்து
வாக்களிக்கும் நெஞ்சம்

அன்புடன் புகாரி 
http://anbudanbuhari.blogspot.in/

Friday, June 14, 2013

அடுத்த பிரதமர் மோடிநரேந்திரமோடிக்கு நிர்வாகத்திறமை உண்டு என்பதை ஒப்புக்கொள்வதில் நமக்கு ஆட்சேபணை எதுவுமில்லை. ஒரு மாநிலத்தின் முதல்வர் பதவிக்கு ஹாட்ரிக் அடிப்பதெல்லாம் அபாரமான சாதனைதான். கோத்ரா ஒன்றே அவரை நிராகரிக்க போதுமான காரணமுமில்லை. ஆனால் அவரால் மட்டுமே இந்தியாவை ரட்சிக்க முடியும், அவர் அடுத்து பிரதமர் நாற்காலியில் அமர்வதை ஆண்டவன் நினைத்தாலும் தடுக்க முடியாது என்பதைப் போன்ற பிரமையெல்லாம் வெத்து சவடால்தான். மோடி, ஊடகங்களால் ஊதிப்பெருக்கப்படும் பலூன் மட்டுமே. முன்பு ஆந்திராவில் சந்திரபாபு நாயுடுவை அசைக்கவே முடியாது என்று இதே ஊடகங்கள் இதே போல ஊதியதை மறந்துவிடக்கூடாது.

இந்தியாவிலேயே குஜராத் நெ.1 மாநிலம். அம்மாநிலம் உலகவங்கியில் ஒரு லட்சம் கோடி சேவிங்ஸ் அக்கவுண்டில் போட்டிருக்கிறது. குஜராத்தில் மின்வெட்டே கிடையாது. குஜராத்தின் நதிகளில் தண்ணீருக்குப் பதிலாக தேனும், பாலும்தான் ஓடுகிறது என்பது மாதிரி ஏகப்பட்ட கட்டுக்கதைகளை குஜராத்துக்கு வெளியே தூணிலும், துரும்பிலும் கூட கேட்கமுடிகிறது. மோடி பதவியேற்ற பிறகு குஜராத்தைவிட பல மாநிலங்கள் (தமிழகம் உட்பட) கூடுதல் பொருளாதார வளர்ச்சி அடைந்திருக்கிறது. இத்தனைக்கும் இம்மாநிலங்களில் ஆட்சிமாற்றம் நிகழ்ந்தும் வளர்ச்சியில் எந்த தடையுமில்லை. குஜராத்தின் தனிநபர் வருமானத்தை விட ஐந்து மாநிலங்களில் (தமிழகம் உட்பட) வருமானம் அதிகம். தொழில் வளர்ச்சியிலும் கூட மற்ற மாநிலங்களை குஜராத் எவ்வகையிலும் முந்தவில்லை. இவரது காலக்கட்டத்தில் குஜராத்தைவிட தமிழ்நாட்டிலேயே கூட அந்நிய முதலீடு அதிகம். கல்வி, நலவாழ்வு, வருமானம் அடிப்படையிலான ஹூயுமன் டெவலப்மெண்ட் இண்டெக்ஸில் கூட இந்திய மாநிலங்களில் குஜராத்துக்கு பதினோராவது இடம்தான். எப்படி யோசித்தாலும் எந்த வகையிலும் குஜராத் முதலிடத்தில் இல்லை எனும்போது, மோடி சார்பாக செய்யப்படும் ஊடகப் பிரச்சாரங்கள் கோயபல்ஸ் தன்மை கொண்டவை என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை. மோடி ஒரு தலைசிறந்த நிர்வாகியுமில்லை. அதே நேரம் மோசமான ஆட்சியாளரும் இல்லை என்பதுதான் உண்மை.

திரும்பத் திரும்ப குஜராத்தியர்கள் அவரையே தேர்ந்தெடுக்கிறார்களே, சிறப்புகள் இல்லாமலா மூன்றாவது முறை முதல்வர் ஆவார் என்று கேட்கிறார்கள். அப்படிப் பார்க்கப்போனால் இவரைவிட அசைக்க முடியாத இடத்தில் ஷீலாதீட்சித் இருக்கிறார். அவரை பிரதமர் பதவியில் வைத்து கற்பனையில் கூட எந்த ஊடகமும் அழகு பார்க்கவில்லையே?

Sunday, June 9, 2013

"வரம்பு”

வாழ்வியல் வயலின்  வரப்பு

.....வகுத்திடும் கொள்கை வரம்பு

தாழ்விலா வாழ்வை நிரப்பும்

.....தகுதியின் வரம்பே நிலைக்கும்

ஏழ்மையை வறுமைக் கோட்டின்

... எல்லையாய்ச்  சொல்லும் நாட்டில்

ஏழ்மையின் வரம்பும் நீங்கா

....இழிநிலை என்றும் காண்பாய்!அளவினை மீறும் வரம்பே

...அசைத்திடும் நாக்கின் நரம்பால்

பிளந்திடும் பகையும் திறக்கும்

....பிறர்மனப் புண்ணில் சிரிக்கும்

அளவிலா வரம்பு கடந்தால்

..அக்கறைக் கூட இடர்தான்

களவிலாக் கற்பைப் பேண

...காதலில் வரம்பைக் காண்பாய்!


Friday, June 7, 2013

அவசரமாய்த் தொடர்பு கொள் !


அவசரமாய்த் தொடர்பு கொள் !
தகவல் வந்த திசைக்கும்
எனக்கும் இடையே
சில
மாநிலங்கள் இருந்தன.

நேற்று வரை
இம்மென்றால் இறக்கி வைத்த
இணையம்,
இன்று உம்மென்று இருந்தது.

என் மின்னஞ்சல்
அச்சு ஒடிந்து போன
ஒற்றைச் சக்கரத் தேராய்
மலையடிவாரத்தில் மண்டியிட்டது.

நைந்து போன வாழைநாராய்
என்
கணிப்பொறி இணைப்பு
இறுதி மூச்சை இழுத்துக்
கொண்டிருந்தது.

தொலை பேசியை
அவசரமாய் இழுத்து
பரபரப்பாய் அழுத்தினால்,
எதிர் பக்கத்தில் அது
நிதானமாய் அடித்து ஓய்ந்தது.

Thursday, June 6, 2013

You Will Like To Know..நீங்கள் அறிய விரும்புவீர்கள் ..

The most beautiful names belong to Allah:அல்லாஹ்வின் அழகிய பெயர்கள் الأَسْمَاءُ الْحُسْنَى
99 names of muhammad_rasool

Peace be on you
View all

Wednesday, June 5, 2013

காயிதே மில்லத் லாட்ஜில் தங்க மாட்டார்கள் .
கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத் இஸ்மாயில் சாஹிப் அவர்கள் 1969 ல் கோட்டாருக்கு வந்தபோது அவர் தங்குவதற்கு ஒரு வீட்டை ஏற்பாடு செய்தார்கள். முஸ்லிம்களின் மாபெரும் தலைவர் அவர். காயிதே மில்லத் லாட்ஜில் தங்க மாட்டார்கள் . அதனால் புதிதாக கட்டப்பட்ட ஒரு வீட்டில் அவர்கள் தங்க வைக்கப்பட்டார்கள். ( அப்படி புதிய வீடு எதுவும் அவர்கள் கேட்கவில்லை என்பது வேறு விஷயம் ) " அல்லாஹு அக்பர் " கோசம் முழங்க மக்கள் திரண்டு வந்து அவர்களை வீட்டில் இறக்கி விட்டார்கள். அன்றிரவு ,காலில் தேய்ப்பதற்குகோடாலி தைலம் கேட்டார்கள். மலேசியாவிலிருந்து வந்த பெரிய பாட்டில் தைலம் கொடுக்கப்பட்டது.அதை உபயோகித்து விட்டு அங்கேயிருந்த தேக்குமரத்தால் செய்யப்பட்ட புத்தம் புது அலமாரியில் வைத்தார்கள். தாங்கள் கொண்டு வந்திருந்த பொருட்களையும் தன்னோடு எப்போதும் கொண்டு வரும் குரானையும் அந்த அலமாரியிலேயே வைத்தார்கள். இரவு உணவுக்குப் பின் குரான் ஓதிவிட்டு அதன்பிறகு தூங்கி எழுந்து, சுப்ஹு தொழுகை முடித்து , வீட்டு அலமாரியிலிருந்த குரானை எடுத்து ஓதிக் கொண்டிருந்தார்கள்.

Tuesday, June 4, 2013

கலைஞரோடு சில மணித்துளிகள்

கலைஞரோடு சில மணித்துளிகள்
  by நாகூர் ரூமிசில நாட்களுக்கு முன்பு கவிஞர் இளையபாரதி அலைபேசினார். கலைஞருக்கு வயது 90 ஆகிறது. அதன் பொருட்டு ஒரு நிகழ்ச்சி நடக்க இருக்கிறது. தொன்னூறு கவிஞர்களை அவர் சந்திக்க இருக்கிறார். அந்த 90-ல் ஒருவராக நீங்கள் வரச்சம்மதமா என்று கேட்டார். என்றாகிலும் ஒருநாள் கலைஞரைச் சந்திக்கவேண்டும் என்று நான் நினைத்துக்கொண்டுதான் இருந்தேன். அந்த வாய்ப்பை இறைவன் கொடுத்துவிட்டதாக நினைத்தேன். நிச்சயம் வருகிறேன் என்று சொன்னேன்.

பிறகு கொஞ்ச நேரம் கழித்தோ அல்லது  மறுநாளோ கவிஞர் வைரமுத்துவிடமிருந்து அலைபேசி வந்தது. அவர்தான் இந்நிகழ்ச்சியை ஏற்பாட்டு செய்வதாகவும், நான் வரமுடியுமா, என் உடல்நிலை ஒத்துக்கொள்ளுமா என்றும் கேட்டார்.  இதயநாள அடைப்புக்காக நான் பாரதிராஜா சிறப்புமருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தபோது (என் தம்பி காதர் மூலமாக செய்தியறிந்து) அந்த மருத்துவமனையின் எம்.டி.க்கு அலைபேசி என்னை சிறப்பாக கவனித்துக்கொள்ளச் சொன்னவர் அவர். அவரிடமும் நாம் நிச்சயம் வருகிறேன் என்று சொன்னேன்.

LinkWithin

Related Posts with Thumbnails