Saturday, December 28, 2013

அம்மாவைப் புகழ்ந்து கணக்கற்ற புகழ் பாடலகள் அத்தாவைப் பற்றி ..!!!!


நபி (ஸல்) அவர்கள் கூறியதாக இப்னு உமர் (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: ""உபகாரத்திலெல்லாம் மிகப்பெரிய உபகாரம் ஒருவர் தமது தந்தையின் நேசத்திற்குரியவரையும் நேசிப்பதாகும்.'' மற்றோர் அறிவிப்பில், "நிச்சயமாக உபகாரத்திலெல்லாம் மிகப்பெரிய உபகாரம் ஒருவர் தமது தந்தை நேசித்தவரை, தந்தையின் மரணத்திற்குப் பிறகும் நேசிப்பது'' என்றார்கள். (ஸஹீஹ் முஸ்லிம்)

இரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம் "அல்லாஹ்வின் தூதரே! எனது பெற்றோர்களுக்குரிய உபகாரங்களில் அவர்கள் மரணமடைந்த பிறகும் நான் அவர்களுக்கு செய்யவேண்டிய உபகாரம் எதேனு மிருக்கிறதா?'' என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள் "ஆம்! நான்கு விஷயங்கள் உள்ளன. 1) அவர்களுக்கு துஆ செய்வது அவ்விருவருக்காகவும் அல்லாஹ்விடம் பாவமன்னிப்பு கோருவது 2) அவர்கள் செய்த உடன்படிக்கையை நிறைவேற்றுவது 3) அவர்களது நண்பர்களை கண்ணியப்படுத்துவது 4) இரத்த பந்துக்களுடன் இணைந்திருத்தல். இரத்த பந்தம் என்ற உறவுமுறை அவ்விருவரின் மூலமே தவிர எற்பட முடியாது'' என்று கூறினார்கள். (அல் அதபுல் முஃப்ரத்)

 (நபியே!) உமதிறைவன் தன்னைத் தவிர (மற்றெவரையும்) வணங்கக் கூடாதென்றும் (கட்டளையிட்டிருப்பதுடன்) தாய் தந்தைக்கு நன்றி செய்யும்படியாகவும் கட்டளையிட்டிருக்கிறான். அவர்களில் ஒருவரோ அல்லது இருவருமோ உம்மிடம் முதுமையை அடைந்துவிட்டபோதிலும் அவர்களை வெருட்டவும் வேண்டாம். அவர்களை (நிந்தனையாகச்) "சீ' என்று சொல்லவும் வேண்டாம். அவர்களிடம் (எதைக் கூறியபோதிலும் புஜம் தாழ்த்தி) மிக்க மரியாதையாக (வும் அன்பாக)வுமே பேசும். அவர்களுக்கு மிக்க அன்புடன் பணிந்து நடப்பீராக அன்றி "என் இறைவனே! நான் குழந்தையாக இருந்தபொழுது (மிக்க அன்பாக) என்னை அவர்கள் வளர்த்து போஷித்த பிரகாரமே, நீயும் அவ்விருவர் மீதும், அன்பும் அருளும் புரிவாயாக!'' என்றும் நீர் பிரார்த்திப்பீராக! (அல்குர்அன் 17:23,24)

 அவர்களுக்கு மிக்க அன்புடன் பணிந்து நடப்பீராக! அன்றி, என் இறைவனே! நான் குழந்தையாக இருந்தபொழுது (மிக்க அன்பாக) என்னை அவர்கள் வளர்த்து போஷித்த பிரகாரமே, நீயும் அவ்விருவர் மீதும், அன்பும், அருளும் புரிவாயாக! என்றும் நீர் பிரார்த்திப்பீராக! (அல்குர்அன் 17:24)
-------------------------------------------------------------------------------------------------------------------


வாப்பா...(அத்தா .அப்பா )
அப்படின்னு சொல்லும்போதே
என் மனசுக்குள்
ஒரு
அறுபது வருஷத்தை
விரித்து வைக்கும்
வரலாற்று பெட்டகம்
என் வாப்பா !

வாப்பா பாவம் ! ஏழை பெற்றோருக்குப் பிறந்த இரண்டாம் மகன் !
கஷ்டப்பட்டு படித்தது கொஞ்சம்தான் .

வாப்பாவுக்கு பதினஞ்சு வயசு இருக்கும்போது கோட்டாறு பணிக்கர்மார்
தெருவில் நடந்த பெரியார் ஈ.வெ.ரா.வின் கூட்டத்திற்கு நண்பர்களோடு
போயிருக்கிறார்கள். அப்போதெல்லாம் பெரியாருக்கு முஸ்லிம்களிடம் நல்ல வரவேற்பு.

அங்கே நடந்த பிரச்சினையில் போலீசுக்கும் மக்களுக்கும் கைகலப்பு.
வாப்பா அப்பவே கொஞ்சம் பலசாலி.
ஒரு போலீஸ் இன்ஸ்பெக்டரை அடித்துத் துவைத்து விட்டு
வந்து விட்டார்கள்.
சில நாட்களிலேயே மோப்பம் பிடித்து வந்து விட்டது போலீஸ்.
பிறகு ஊரில் இருப்பது சரியில்லையென்று வாப்பாவை யாருடனோ
சிங்கப்பூருக்கு கப்பலேற்றி விட்டார்கள் .

வாப்பா சிங்கப்பூரில் ஒரு தொழிலாளியாக கடுமையாக உழைத்தார்கள்.
கொஞ்ச வருஷங்களுக்குப் பிறகு ஊருக்கு வந்த வாப்பாவுக்கு கல்யாணம் செய்து வைத்தார்கள்.
எங்க உம்மாவை கல்யாணம் செய்து கை பிடித்த நேரம் வாப்பாவுக்கு நல்ல நேரம். சில வருடங்களில் சிங்கப்பூரில் பிரபலமாக இருந்த M.R.&CO என்ற பிரிட்டிஷ் கம்பெனியில் வாப்பாவுக்கு வேலை கிடைத்தது. அதன் பிறகு வாப்பாவின் வாழ்வில் வசந்தம்தான்.

எங்க வாப்பா உம்மாவுக்கு நாங்கள் ஆறு பிள்ளைகள்.
ஆறும் ஆண்பிள்ளைகள்.

வாப்பா இயற்கையிலேயே வாட்ட சாட்டமான ஆள். துணிச்சல் மிக்கவர்.
சிங்கப்பூர் சைனாக்காரர்களோடு சகவாசம்...அடிதடி எல்லாம் அத்துப்படி.
எதற்கும் அஞ்சாத நெஞ்சம் இளமையிலேயே வந்து விட்டது.
ஊருக்கு வந்தால் நான்தான் அவர்களுக்கு கைகாலெல்லாம் பிடித்து விட வேண்டும். நான்தான் கொஞ்சம் புஷ்டியாக இருப்பேன். அதிலும் எனக்கு
சந்தோசம்தான்.
வாப்பா பிரிட்டிஷ் கம்பெனியில் வேலை செய்ததால் ஆங்கிலம் அவர்களுக்கு தண்ணீர் பட்ட பாடு. வாப்பா பேசும் பிரிட்டிஷ் இங்க்லீஷ்
பேச ஊரில் யாரும் இல்லை. அப்படி யாராவது கிடைத்தால் வாப்பாவுக்கு
சந்தோஷம் தாங்க முடியாது. நேரம் போவது தெரியாமல் பேசிக் கொண்டிருப்பார்கள்.

வாப்பாவிடம் நான் நிறைய அடி வாங்கி இருக்கிறேன்.
ஆனால்... வாப்பாவுக்கு என் மீது அலாதியான பாசம் உண்டு.
அதனால்தானோ என்னவோ... வாப்பாவின் வீரமும் துணிச்சலும் என்னோடு ஒட்டிக் கொண்டு விட்டது.
மதுரை யூனிவர்சிட்டியில் பளுதூக்கும் போட்டியில் நான் வெற்றி பெற்று
சில நாள் கழித்து ஊருக்கு வரும்போது தந்தி பேப்பரில் வந்திருக்கும்
நான் வெற்றிபெற்ற சேதியை பத்திரமாக எடுத்து வைத்து என்னிடம்
காட்டி சின்ன பிள்ளைபோல் சந்தோஷப்படுவார்கள்.
என் நெஞ்சில் குத்துவார்கள். நான் தம் பிடிப்பதை பார்த்து " நீ என்னைவிட பலசாலியா ?" என்று கேட்டு மகிழ்வார்கள்.

என்னைப்போலவே வாப்பாவை பற்றிய பெருமைமிக்க நினைவுகள்
என் சகோதரர்களிடமும் நிறைய இருக்கிறது.

அப்போது ஊரில் பிரபலமாவது லேசுபட்ட காரியமல்ல.
வாப்பா பிரபலமானார்கள்.
வாவர் ஹாஜியார் என்றால் அப்படி ஒரு பெயர் அன்றும் இன்றும்
வாப்பாவுக்கு உண்டு.

வாப்பா வாழ்க்கையை வாழ்ந்து அனுபவித்தார்கள்.
அத்தனை செல்வம் அவர்கள் சம்பாதித்தார்கள்.
நிறைவாக வாழ்ந்தார்கள்.
வாப்பாவுக்கு வயசு 72 . ஒருநாள் இரவு பதினோரு மணிக்கு லேசாக
நெஞ்சு வலிக்குது என்றார்கள். நானும் தம்பி சைபுல்லாஹ்வும்
ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் சென்றோம்.
நடந்து வந்து காரில் ஏறிய வாப்பாவை ஒரு மணி நேரத்தில்
உடலாக வீட்டுக்குக் கொண்டு வந்தோம் !
வாப்பா எங்களை விட்டு பிரிந்து விட்டார்கள் !
அந்த நாள் இந்த டிசம்பர் - 26.... 1992.
அதேபோல்
மற்றொரு டிசம்பர் 26... வருஷம் ...1998
என் கண்மணி மகள் ஆறு வயது ஹாஷிமா
எங்களை விட்டுப் பிரிந்த நாள் !
எங்கள் வாழ்க்கையிலும்
டிசம்பர் 26 சுனாமி நாள்தான்...

அல்லாஹ் போதுமானவன் !


-------------------------------------------------------------
  அத்தா

அத்தா என்பது பழந்தமிழ்ச் சொல்
  அத்தன் என்பதுதான் அத்தா என்று அழைக்கப்படுகிறது. அத்தன் என்றால் தகப்பன் என்று பொருள்.
பழைய இலக்கியங்களில் அத்தா என்ற சொல்லை நிறைய இடங்களில் காணலாம். அத்தா அச்சன் முத்தன் அப்பா என்பதெல்லாம் தகப்பன் என்பதனையே குறிக்கும்.
"அத்தா இது கேள் என ஆரியன் கூறுவான்" கம்பராமாயணம்.
"அத்தா உனக்காளாய் இனி அல்லேன் எனலாமே" தேவாரம்
------------------------------------------------------
உங்கள் தந்ததயரைப் பற்றி கருத்துரையை கொடுங்கள் அதனை ஒருபதிவாக போட முயல்வோம் .


No comments:

LinkWithin

Related Posts with Thumbnails