Thursday, December 26, 2013

மூன்று பேரும் கோரசாக ஒரே வாய்சில் பதில் அளித்தனர்..!


ஒருநாள், ஓர் அரபி பெண்மணி தன் வீட்டுக்கு வெளியே பார்த்த போது, நீண்ட நரைத்த தாடி வைத்த வயதான மூன்று கிழவர்கள் தம் வீட்டு வாசற்படியில் ரொம்ப நேரமாக அமர்ந்திருக்க கண்டார்.

வாயிற்கதவை திறந்து,
'ஐயா பெரியவர்களே..., தாங்கள் யார் என்று தெரியவில்லை. ஆனால், பசியோடு இருப்பீர்கள் என்று எண்ணுகிறேன். வீட்டின் உள்ளே வாருங்கள், ஏதாவது உணவு உண்ணுங்கள்'

மூவரில் ஒரு கிழவர் பதிலளித்தார்.
'குடும்பத்தலைவன் வீட்டினுள்ளே இருக்கிறாரா?'

'இல்லை, ஐயா... வெளியே சென்றிருக்கிறார்'



'அப்படி என்றால், அதுவரை நாங்கள் உள்ளே வரமாட்டோம்'

சிறிது நேரம் கழித்து அப்பெண்ணின் கணவர் வந்தார். அவரிடம் மனைவி நடந்தவற்றை தெரிவித்தார்.

'அப்படியா, சரி, இப்போது நான் வந்து விட்டதாக அவர்களிடம் சொல்லி, அவர்களை சாப்பிட வீட்டினுள் கூப்பிடு, என் செல்வமே' என்றார் கணவர்.

அப்பெண், வெளியே சென்று, அந்த முதியவர்களை அதன்படியே அழைத்தார்.

அதற்கு ஒரு முதியவர் பதிலளித்தார். 'நாங்கள் மூன்று பேரும் சேர்ந்து உள்ளே வர மாட்டோம், யாராவது ஒருவர் மட்டுமே வருவோம்'

'ஏன் அப்படி?' ...கேட்டார் பெண்.

அதற்கு அவர்களில் ஒருவர்... 'எனது பெயர் செல்வம். இவரின் பெயர், வெற்றி. அவரின் பெயர், அன்பு. நீ உள்ளே சென்று, உனது கணவரிடம், எங்கள் மூவரில் யாராவது ஒருவர் மட்டுமே வரமுடியும் என்பதால், எங்களில் யார் உன் வீட்டினுள் வரவேண்டும் என்று கேட்டு விட்டு வா' ....என்று இப்படி பதில் அளித்தார்.

பெண் உள்ளே சென்று விஷயத்தை சொல்லி கணவரிடம் அவரின் கருத்தை கேட்டார்.

கணவருக்கோ செமை குதூகலம். 'ஆஹா, எவ்வளவு அருமையான செய்தியை நீ கொண்டு வந்தாய். ஆகவே, நாம், அவர்களில் செல்வத்தை உள்ளே கூப்பிடுவோம்'. என்றார்.

ஆனால், மனைவியோ அவரை மறுத்து... 'என தருமை கணவரே. ஊரின் மிகப்பெரிய வணிகராக நிறைய தொழில்கள் செய்யும் நீங்கள் ஏன், வெற்றியை உள்ளே அழைக்க கூடாது? அதுதானே உங்களுக்கு அதிக செல்வத்தை தங்கள் உழைப்பின் மூலமாக பன்மடங்காக்கி தரும்?' என்றார்.

'அட, இதுவும் சரி போல தோணுதே... சிந்திப்போம்' என்று கணவன் யோசிக்க ஆரம்பிக்க....

அதுவரை இவர்களின் பேச்சை ஓரமாக நின்று உன்னிப்பாக கேட்டுக்கொண்டு இருந்த மகள், மிகச்சரியாக விஷயத்தை உணர்ந்து... தன் பெற்றோரிடம் தனது யோசனையை சொன்னார். 'அபு & உம்ம், நாம் ஏன் அன்பை அழைக்க கூடாது? நம் வீடு முழுதும் அன்பு பெருகி வழியுமே, எல்லாரும் மகிச்சியாக இருக்கலாமே? இது நல்ல யோசனை அல்லவா?'

சற்று யோசனைக்கு பிறகு, தாயும் தந்தையும் மகளின் யோசனைக்கு வேறு வழியின்றி... சம்மதித்து... 'ஓகே, நாம் அன்பையே அழைப்போம்' என்று முடிவு எடுத்தனர்.

மனைவி, வெளியே வந்து... 'உங்களில் யார் அன்பு? அவர் எங்கள் வீட்டு விருந்தாளியாக உள்ளே வந்து மதிய உணவு விருந்தில் கலந்து கொள்ள அழைக்கிறேன்' என்றார்.

உடனே, அன்பு எழுந்தார், வீட்டினுள் நுழைந்தார்... பெண் அவரை பின்தொடர எத்தணிக்கையில்... அப்போதுதான் கவனித்தார்...

மற்ற இரு வெண்தாடி கிழவர்களும் அன்பை பின்தொர்ந்து வீட்டினுள் நுழைவதை கண்டார்.

'நான் அன்பை மட்டும்தானே அழைத்தேன்? நீங்களும் எப்படி உள்ளே வருகிறீர்கள்?' என்று ஆவல் அடங்காமல் உடனே கேட்டுவிட்டார்.

அதற்கு,
'பெண்ணே,
நீ வெற்றியை அழைத்து இருந்தால்.... வெற்றி மட்டும் வீட்டுக்குள் வந்திருப்பார்.
நீ செல்வத்தை அழைத்து இருந்தால்.... செல்வம் மட்டும் வீட்டுக்குள் வந்திருப்பார்.
ஆனால், நீ அன்பை அழைத்து விட்டாய் பெண்ணே. அன்பு எங்கே செல்கிறாரோ... அவரை தொடர்ந்து மற்றவர்கள் பின் தொடர்ந்து செல்வதும், அன்பு எங்கே இருக்கிறாரோ... அவரோடு செல்வமும் வெற்றியும் சேர்ந்தே இருப்பதும் எம் வழக்கம் '
...என மூன்று பேரும் கோரசாக ஒரே வாய்சில் பதில் அளித்தனர்..!


Mohamed Ashik
 

1 comment:

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

நன்றி பகிர்வுக்கு.
பதிவர் ஆஷிக் அவர்களுக்கும் நன்றி!