Wednesday, December 4, 2013

'மாற்றம் வெளியில் இருந்து வராது' - சூர்யா (நேர்காணல்)

சரவணன் எனும் சாதாரணன்!


புதிய தலைமுறை இளைஞர்களுக்கு – அவர்கள் மாணவர்களோ, ஆசிரியர்களோ, அலுவலகப் பணியாளர்களோ, சுய தொழில் செய்பவர்களோ, அறிவியலாளர்களோ, ஐடி வல்லுநர்களோ  ஏன் சினிமா நட்சத்திரங்களாகவோ கூட இருக்கலாம்- ஒரு சில தனித்த அடையாளங்கள் உண்டு. அவர்கள் தங்கள் திறமைகளின் மூலம் வளர நினைப்பவர்களாக இருப்பார்கள். பழம் பெருமைகளைவிட புதிய முயற்சிகளில் நம்பிக்கை கொண்டிருப்பார்கள். மாற்றம் வேண்டும் என நம்புவார்கள். ஆனால் அந்த மாற்றத்தை மந்திரத்தால் கொண்டு வர முடியாது, கல்வியின் மூலம்தான் நிகழத்த முடியும் என்றும் எண்ணுவார்கள். அந்தக் கல்வியைக் கடைக்கோடி மனிதனுக்கும் கொண்டு சேர்க்க தன்னால் ஆன முயற்சிகள் அனைத்தையும் மேற்கொள்வார்கள். சமூக விழிப்புணர்வு, சமூகப் பொறுப்பு இரண்டும் அவர்களின் அடையாளங்கள்.
இந்த மாதிரியான புதிய தலைமுறை இளைஞர்களில் ஒருவர் சூர்யா. இன்று திரை உலகில் பிரபலமாக இருக்கும் இந்த இளைஞர் வாழ்வில் இருந்து என்ன கற்றார்? அவரின் வெற்றியிலிருந்து நாம் என்ன கற்றுக் கொள்ளலாம்? 


லட்சியம்: எதை செஞ்சாலும் அதோட சிறப்பான எல்லையை தொடணும்
 

சரவணன்னு ஒரு சாதாரணமான ஒரு பையன் இருந்தான். எல்லாப் பசங்களை மாதிரியே 12பி பஸ்சுலே காலேஜூக்கு போயி, பி.காம் படிச்சிட்டு.. அரியர்ஸ் வைக்காமே பாஸ் பண்ணிட்டு.. எது நம்மோட வாழ்க்கை, எது நம்மோட வேலை, எதிர்காலத்திலே என்னதான் பண்ணப் போறோம் என்கிற குழப்பங்களும், சந்தேகங்களுமாக, கேள்விகளுமாக வலம் வந்தவன்.
அப்பா பெரிய நடிகரா இருந்தாலும், சரவணன் காலேஜ் முடிச்சப்ப அப்பாவோட பேங்க் பேலன்ஸ் ரொம்ப கம்மிதான். மூணு இல்லைன்னா நாலு லட்சம். அவன் ஸ்கூல் படிக்கறப்பவே அப்பா, படங்களை ரொம்ப குறைச்சிக்கிட்டு, தேர்ந்தெடுத்து நல்ல படங்களா பண்ண ஆரம்பிச்சிருந்தாரு. அதாவது வருமானத்தை குறைச்சிக்கிட்டு, ஆத்ம திருப்திக்கு படம் பண்ண விரும்பினார்னும் சொல்லலாம்.
வீட்டுக்கு மூத்த பையன் சரவணன். தம்பி, தங்கச்சி எல்லாம் படிச்சிக்கிட்டிருந்தாங்க. குடும்பத்தோட பொறுப்புகளை தோள்ல தூக்கி சுமக்கணும்னு அவனுக்கு அப்படி ஒரு வெறி. ஏன்னா சரவணனோட அப்பா, ஒரு நடிகனின் மகனாக அவனை வளர்க்கலை. ஒரு சராசரி மிடில் கிளாஸ் பையனாகதான் சரவணன் வளர்ந்தான்.
எங்கேயாவது, எதையாவது ஆரம்பிச்சாகணும் இல்லையா? சரவணனோட சொந்தக்காரங்க நிறைய பேர் கார்மெண்ட் தொழிலில் ஈடுபட்டிருந்தாங்க. அவனும் ஒரு கார்மெண்ட் கம்பெனியிலே வேலைக்கு சேர்ந்தான். ஆரம்பத்துலே 700 ரூபாய் சம்பளம்.
செய்யும் தொழிலே தெய்வம்னு ரொம்ப சின்சியரா வேலை பார்த்தான். எதை செஞ்சாலும் அதோட சிறப்பான எல்லையை தொடணுங்கிறது மட்டும்தான் சரவணனோட லட்சியம். ரொம்ப சீக்கிரத்துலேயே 8000 ரூபாய் சம்பளம் வாங்குற அளவுக்கு முன்னேறினான். பதினைஞ்சி வருஷத்துக்கு முன்னாடி, அது ரொம்ப நல்ல சம்பளம்.
அப்போவெல்லாம் சரவணனுக்கு சினிமாவில் நடிக்கணும்னு பெரிய லட்சியம் எதுவும் கிடையாது. ரஜினி, கமல் படங்களை தியேட்டரில் பார்க்கும் சாதாரண ரசிகன். சினிமா தொடர்பான குடும்பத்தில் இருப்பவன்னு அவனை சுத்தி இருக்கறவங்களுக்கு கூட தெரியாது. கதாநாயகனுக்கான முகவெட்டு தனக்கு இருப்பதா சரவணனும் ஒருநாளும் நினைச்சது கிடையாது.
நான்தாங்க அந்த சரவணன்.

ரிஸ்க் எடுக்கலாம், ஆனால் யோசித்து..

கார்மெண்ட்லே வேலை பார்த்துக்கிட்டிருந்தப்போ சொந்தமா ஒரு ஃபேக்டரி ஆரம்பிக்கணும்னு நெனைச்சேன். அப்பவே அதுக்கு ஒரு கோடி ரூபாய் தேவைப்பட்டுது. அவ்வளவு பணத்தை வங்கியில் கடனோ, உடனோ வாங்கலாம். அவ்வளவு பெரிய ரிஸ்க்கை நான் தனியா எதிர்கொள்ளலாம். ஆனா அது குடும்பத்தை பாதிக்குமோன்னு ஒரு சஞ்சலம்.
இந்தச் சூழலில்தான், அப்பாவை பார்க்க வீட்டுக்கு வந்துக்கிட்டிருந்த இயக்குனர்கள் நிறைய பேர் “நடிக்கிறீங்களா?”ன்னு கேட்க ஆரம்பிச்சாங்க. தொடர்ச்சியா மறுத்துக்கிட்டிருந்தேன்.
ஒரு என்ஜினியர் பையன் என்ஜினியர் ஆகணும், டாக்டர் பையன் டாக்டர் ஆகணும்கிற மாதிரி நடிகன் பையன் நடிகன் ஆவணுமான்னு நெனைச்சிக்கிட்டு இருந்தேன். ஏதோ வாய்ப்பு கிடைக்குதே என்பதற்காக எந்த ஒரு துறையிலும் ஈடுபட்டுடக்கூடாது. எதில் ஈடுபட்டாலும் முழுமனதோடு செய்யணும், மனசுக்கு ரொம்ப புடிச்சி பண்ணனும்னு எனக்கு ஆசை.
இயக்குனர் வசந்த் ‘ஆசை’ படம் எடுக்குறப்பவே என்னை கேட்டிருந்தாரு. என்னோட உடல் அமைப்பு, முகவெட்டு இதுக்கெல்லாம் சினிமா சரிப்படுமான்னு திரும்ப திரும்ப யோசிச்சிக்கிட்டிருந்தேன். அப்பா பண்ணுனதைதானே நீயும் பண்ணப்போறே? இதிலென்ன கஷ்டம்னு நிறைய பேரு கேட்டாங்க.
இயக்குனர் மணிரத்னம் சொந்தமா ‘நேருக்கு நேர்’ படத்தை தயாரிச்சார். என்னை கேட்டப்போ மறுக்க முடியலை. அவர் சினிமாவை பார்க்கும் பார்வையே வேற. தமிழ் சினிமாவை நிறைய மாற்றி அமைச்சிருக்கார். என் மேலே எனக்கு இருந்த நம்பிக்கையைவிட, அவருக்கு ரெண்டு மடங்கு அதிகமா இருந்தது. அவரோட பேசின ரெண்டு, மூணு சந்தர்ப்பங்களில் சினிமா என்னை ஈர்க்க ஆரம்பிச்சது. அதுக்கு முன்னாடி அப்பாவோடு போயி ஷூட்டிங் கூட பார்த்தது இல்லை. நடிகன் ஆகணும்னு சொல்லிட்டு கண்ணாடி முன்னாடி நின்னு என்னை நானே பார்த்துக்கிட்டது இல்லை.
நல்லா யோசிச்சேன். அப்பா முன்னாடி சொன்ன அட்வைஸ் நினைவுக்கு வந்தது. “ஒரு டிகிரியை முடிச்சிடு. அதுக்கப்புறம் என்ன ஆகலாம்னு யோசிச்சிக்கலாம்”
இப்போ எங்கிட்டே ஒரு டிகிரி இருந்தது. கூடவே கார்மெண்ட் எக்ஸ்போர்ட் தொழிலில் கொஞ்சம் அனுபவமும் இருந்தது. ஒரு படம் நடிச்சிப் பார்க்கலாமே, சரியாவந்தா தொடர்ந்து நடிக்கலாம். இல்லைன்னா மறுபடியும் கார்மெண்ட் தொழிலுக்கு போயிடலாம்னு நெனைச்சேன்.
சரவணனா இருந்த நான் ‘சூர்யா’ ஆனேன்.
 
தோல்விகளை விழுங்கு, அடையாளத்தை தேடு

சினிமாத்துறை ஆரம்பத்துலே ரொம்ப கஷ்டமா இருந்துச்சி. என்னோட பிளஸ் என்ன, என்னோட மைனஸ் என்னன்னு எனக்கே தெரியாது. எந்த மாதிரி படங்களை என்னால செய்யமுடியும். எப்படி டிரெஸ் பண்ணனும். எப்படி நடிக்கணும். இதையெல்லாம் தெரிஞ்சுக்க எனக்கு நாலு வருஷம் ஆச்சி.
இடையில் நிறைய தோல்விகள். எனக்கான நேரத்துக்காக, மீனைப்பிடிக்க காத்துக்கிட்டிருக்குற கொக்கு மாதிரி அமைதியா இருந்தேன்.
இயக்குனர் பாலாவோட ‘சேது’ பார்த்தப்போதான் எனக்கு ஏதோ ஒரு பிடிப்பு கிடைச்சமாதிரி உணர்ந்தேன். எந்த மாதிரியான படங்களை நான் நடிக்கணும்னு ஒரு ‘ஐடியா’ அப்போதான் கிடைச்சது. “உங்க இயக்கத்துலே ஒரு படம் நடிக்கணும்னு சார்” னு பாலா சாரிடமே கேட்டேன். அவரோட அடுத்த படமான ‘நந்தா’வில் நடிக்க வெச்சார். அதுக்கப்புறம் தொடர்ச்சியா ஏறுமுகம்தான்.
ரொம்ப ஈஸியா சொல்லிட்டேன். ஆனா வெற்றிக்காக பெரிய போராட்டமே நடத்த வேண்டியிருந்தது. அந்த நாலு வருஷத்திலே எவ்வளவு கேலி, எவ்வளவு கிண்டல், எத்தனை போராட்டம்?
சினிமாத்துறைக்கு வந்தும் நான் சரவணனாவே இருந்தேன். எப்படியாவது சூர்யாவா மாறிடணும்னு வெறித்தனமா உழைச்சேன். எனக்கு அப்போ சரியா டான்ஸ்கூட வராது. ஒரு பத்திரிகையில் கூட எழுதினாங்க. ‘இவர் டான்ஸே ஆடாமல் இருந்தா புண்ணியமா போகும்’னு. 24 வயசுக்கு அப்புறமாதான் டான்ஸே கத்துக்க ஆரம்பிச்சேன். அதுக்கப்புறம்தான் ஸ்டண்ட் கத்துக்கிட்டேன். இதெல்லாம் சின்ன வயசுலேயே கத்துக்கிட்டாதான் உண்டுன்னு சொல்லுவாங்க. ஒரு மனுஷனாலே பண்ண முடியறது இன்னொரு மனுஷனாலே நிச்சயம் முடியும்னு நம்பினேன்.
இதற்கிடையே வேற ஒரு பிரச்சினையும். ‘நீ பார்க்க உங்கப்பா மாதிரியே இருக்கே. அவரு 20, 25 வருஷம் நடிச்சதைதான் திரும்ப நீயும் நடிக்கப் போறே. அவரைதானே அப்படியே நீ ஜெராக்ஸ் பண்ணப்போறே’ன்னு நிறையபேர் பேசினாங்க. அவரோட ரத்தம் நான். அவரோட சாயல் என்னுடைய நடை, உடை, பாவனைகளில் இருப்பதில் ஆச்சரியம் எதுவுமில்லை. ஆனா எனக்கான ஒரு தனித்துவம் வேணும்னு விரும்பினேன்.
அப்பா நடிச்ச படங்களை பார்ப்பதை தவிர்த்தேன். அப்பா அப்போ டிவி சீரியல்களில் ரொம்ப நல்லா பண்ணிக்கிட்டிருந்தார். தினமும் வீட்டில் எல்லாரும் அப்பாவோட நடிப்பை பார்த்துக்கிட்டிருப்பாங்க. நான் வீட்டிலேயே இருந்தாலும் அதெல்லாம் பார்க்கமாட்டேன். அவரோட தாக்கம் எனக்குள்ளே ஊடுருவிடக்கூடாதுன்னு ரொம்ப மெனக்கெட்டேன். எனக்குன்னு ஒரு அடையாளத்தை நான் தேடிக்கிட்டிருந்த காலக்கட்டம் அது.
தொடர்தோல்விகளால் சோர்வடையும் போதெல்லாம் பாரதியார் கவிதைகள்தான் எனக்கு ஆறுதல்.
 
சுய அனுதாபம் கூடாது

யாருமில்லாத தனியறையில் சத்தமாகப் பாடுவேன். ஒருக்கட்டத்தில் என் உள்மன எழுச்சிகளை சமனப்படுத்த தியானம் செய்ய ஆரம்பித்தேன். அது மனதை ஒருமுகப்படுத்த, எனக்குள்ளேயே ஒரு சக்தியை வளர்க்க ரொம்பவும் உதவியது. என்னை நானே அப்போதுதான் நம்ப ஆரம்பித்தேன்.
அய்யோ நான் பாவம்னு அனுதாபத்தை எனக்கு நானே வளர்த்துக்காம இருந்தது என்னை சீக்கிரமா வெற்றி பெற வெச்சது. யாரிடமும் என் சோகத்தை பகிர்ந்துக்கிட்டதில்லை. ஏன்னா ஒருத்தரோட சோகம் இன்னொருத்தருக்கு அவ்வளவு முக்கியமா படாது.
நாம் எது நடக்கணும்னு விரும்புகிறோமோ, அதை உள்மனசுலே ஒரு விதையா விதைச்சிட்டு, செடியா வளர்க்கணும். அதுவே பூத்து, காய்ச்சி, பழம் தரும். அந்த நாலு வருஷம் எனக்கு கத்துக்கொடுத்த முக்கியமான பாடம் இது. அந்த காலக்கட்டத்துலே நான் என்னென்ன தப்பு பண்ணேன்னு எனக்கே தெரியும். திரும்பவும் எந்த காலத்திலேயும் அந்த தப்புகளை திரும்ப செய்யவே மாட்டேன்.
அப்பா கொடுத்த சுதந்திரம் என்னை பொறுப்புணர்வு கொண்டவனா மாற்றியது. என் குடும்பம் தந்த ஆதரவும், என்னோட போராட்டமான கட்டத்தில் ரொம்ப முக்கியமானது.
  
கல்விதான் கரை சேர்க்கும்

சினிமாவில் அப்பாவின் அடையாளம் எனக்கு இருக்கக்கூடாதுன்னு நெனைச்சேனே தவிர, நான் பெரிதும் வியக்கும் ஆளுமை அவர். ஒரு எழுத்தாளர், ஓவியர், நடிகர்னு அவருக்கு ஏராளமான பரிமாணங்கள். அவரோட மற்ற பல திறமைகளை என்னாலே சரியா பின் தொடர முடியவில்லைங்கிற வருத்தம் எனக்கு இருக்கு.
ஆனா உடல்நலம் மீதான அக்கறை, சமூகம் மீதான பார்வைன்னு அப்பாவை அப்படியே பின் தொடர்ந்துக்கிட்டிருக்கேன். இதையெல்லாம் அப்பா எனக்கு தனியா டியூஷன் எடுக்கலை. ஆனா உணர வெச்சிருக்காரு.
காலுக்கு செருப்பு கூட இல்லாம ஸ்கூலுக்கு போய் படிச்ச மாணவர்கள் என்ன மார்க் எடுக்குறாங்க. பஸ்லயும், கார்லயும் ஸ்கூலுக்கு போன நாங்க என்ன மார்க் எடுக்கிறோம். கல்வி மட்டுமே தங்களை கரை சேர்க்கும்னு நெனைக்கிறவங்க கடைசியா எங்கே போய் சேரமுடியுது. இதுமாதிரியான விஷயங்களை எங்களுக்கு அனுபவப்பூர்வமா அப்பா காட்டியிருக்காரு. கல்விதான் சாமானிய மனிதனின் வாழ்க்கையை மாற்றியமைக்கக்கூடிய ஆயுதமா இருக்குங்கிறதை நல்லா புரிய வெச்சிருக்காரு. ஒரு ஏழை குடும்பத்தில் ஒரே ஒருவருக்கு நல்ல கல்வி கிடைச்சா, அவங்க குடும்பமே எப்படி மாறுதுங்கிறதை அப்பாதான் காமிச்சார். ஒவ்வொரு வருஷமும் நல்ல மதிப்பெண் வாங்குற மாணவர்களுக்கு மேற்படிப்புக்கு பலவருஷமா உதவித்தொகை வழங்கிட்டு வர்றாரு. வாழ்க்கையிலே ஒளி தெரியாம திரியறவங்களுக்கு கல்விதாங்க கலங்கரை விளக்கம்.
 
கிடைப்பதைத் திருப்பிக் கொடு

மனிதர்கள் எல்லாருக்குமே ரெண்டு கண்ணு, ஒரு மூக்கு, ஒரு வாய்தான். ஆனா நடிகனை மட்டும் சமூகம் ஸ்பெஷலா கொண்டாடுது. திரையில் நான் சிரிச்சா, படம் பார்க்குற அத்தனை பேரும் சிரிக்கிறாங்க. நான் அழுதா அத்தனை பேரும் அழுறாங்க. நேருக்கு நேர் படத்தில் நடிச்ச சூர்யா இல்ல, இப்போ நான். நான் சொல்லுறதை நிறைய பேர் கேட்கிறாங்க. நான் சொன்னா, அது சரியா இருக்கும்னு நம்பறாங்க. இப்படி எனக்கு அவங்களோட நம்பிக்கையை அள்ளி கொடுக்குற சமூகத்துக்கு நான் என்ன பண்ணனும்னு எனக்குள்ளே கேள்வி எழுந்துச்சி. இப்போ நான் பண்ணிக்கிட்டிருக்கிற சமூகப்பணிகள்தான் அந்த கேள்விக்கான பதில்.
அப்பா ஏற்கனவே செய்துக்கிட்டிருந்த கல்வி உதவித்தொகைங்கிற விஷயத்தை கொஞ்சம் பரவலா, பெரிய அளவுலே செய்ய ஆரம்பிச்சோம். நல்ல மதிப்பெண் வாங்குறவங்களுக்கு ஊக்கத்தொகைன்னு முன்னாடி கொடுத்துக்கிட்டிருந்தோம். அப்பாவோட வழிகாட்டுதல்படி ஒவ்வொரு மாணவனின் பொருளாதாரச் சூழலை வெச்சி உதவ தொடங்கினோம்.
‘அகரம்’ என்கிற சமூகச்சேவை அமைப்பு இங்கேதான் தொடங்குது. முழுக்க முழுக்க இலவசக்கல்வி வழங்குகிற ஒரு பெரிய தரமான பள்ளியை உருவாக்கணும் என்பது எங்களோட லட்சியம். அந்த மாதிரி பள்ளியை நடத்த அனுபவம் தேவை. காஞ்சிபுரம் பக்கத்துலே பாலூர் என்கிற ஊர்லே இருந்த ஒரு ஆதிதிராவிடப் பள்ளியை தத்தெடுத்து உதவ ஆரம்பித்தோம். அடிப்படை வசதிகளே இல்லாத அந்தப் பள்ளியை, ரெண்டு வருஷத்துலே தலைகீழா மகிழ்ச்சிகரமான வகையில் மாற்றினோம். இந்தமாதிரி மாத்தினதுக்கு எதிர்ப்பும் ஒரு பக்கத்தில் இருந்து வந்தது. ஆனா அரசுத்தரப்பில் கிடைச்ச நல்ல ஆதரவோடு எல்லாத்தையும் சமாளிச்சோம்.
‘அகரம்’ அமைப்புக்கு நல்ல பெயர் கிடைக்க ஆரம்பிச்சது. பள்ளிக்கு உள்ளே மட்டுமில்லாம, பள்ளிக்கு வெளியேயும் கல்வி தொடர்பான பணிகளை தொடர்ந்தோம். டியூஷன் மாதிரி இல்லே இது. பள்ளியிலே கல்வி. பள்ளியை விட்டு வெளியே வந்தா, கல்வியை தாண்டி ஒரு மாணவனுக்கு எதுவெல்லாம் தேவைப்படுமோ அதையெல்லாம் சொல்லிக் கொடுத்தோம். இந்த முறைக்கு நல்ல வரவேற்பு இருந்ததாலே தமிழ்நாட்டுலே ஒரு பதினைந்து இடத்துலே இந்தமாதிரி செய்ய ஆரம்பிச்சோம்.
நிறைய தன்னார்வலர்கள் எங்களுக்கு பக்கபலமா வந்தாங்க. நாலாவது, அஞ்சாவது படிக்கிற குழந்தைகளை தத்தெடுத்து, அவங்க கல்விக்கு பொறுப்பு ஏத்துக்கிட்டாங்க. ஒவ்வொரு குழந்தைக்கும் ஒரு அண்ணாவையோ, அக்காவையோ, சித்தப்பாவையோ, சித்தியையோ, மாமாவையோ, அத்தையையோ – இரத்த உறவு இல்லாத – புது உறவுகளா ‘அகரம்’ அறிமுகப்படுத்திச்சி. வாரத்துக்கு ஒரு முறையோ, மாசத்துக்கு ஒருமுறையோ இந்த உறவுகள் சந்திச்சி, ஒருத்தரை ஒருத்தர் புரிஞ்சுப்பாங்க. ‘வாழை’ என்கிற சமூக அமைப்பின் இந்த கான்செப்டை புடிச்சி, வழிகாட்டிகள் என்கிற பேருலே இந்த வேலையை செய்ய ஆரம்பிச்சோம்.
ஒத்த சிந்தனை உள்ளவங்க ஒண்ணு சேர்ந்தா எதையெல்லாம் நினைக்கிறோமோ, அதையெல்லாம் செய்ய முடியும். யாராவது நல்ல விஷயம் செய்யுறதா கேள்விப்பட்டோம்னா, அதை பாராட்டுறதோட நிறுத்திக்காம, தங்களையும் நிறையபேர் இணைச்சுக்கறாங்க.
பத்திரிகையாளரா அறிமுகமாகி, எனக்கு நல்ல நண்பரா மாறியவர் ஞானவேல். நான் எதையெல்லாம் செய்ய ஆசைப்படுகிறேனோ, அதையெல்லாம் அவர் செய்து முடித்துக் கொடுக்கிறார். இதற்காக அவரோட வேலையை விட்டுட்டு என்னோட வந்து சேர்ந்தார். அப்புறம் ஜெயஸ்ரீ வந்தாங்க. ஞானவேல் வேலைகளை அவங்களும் தொடர்ந்து செய்யுறாங்க. இப்போ அகரம் அமைப்பின் செயலர் இவங்க. என்னோட பணி என்னன்னா, கொஞ்சம் ஓய்வு கிடைச்சாலும் அகரத்துக்கு செலவிடறேன். பொருளாதாரரீதியா உதவக்கூடிய சக்தியும் எனக்கு இருக்கு. ‘அகரம்’ என்னோடதோ, வேறு யாரோடதோ கிடையாது. பல பேரின் உழைப்பு, சேவை மனப்பான்மையில் இயங்குகிற அமைப்பு இது. இது முழுக்க முழுக்க ஒரு மக்கள் இயக்கம்.
 
நல்ல மனிதர்களை உருவாக்கினால் நல்ல சமூகத்தை உருவாக்கலாம்

சரி. நிறைய பேருக்கு கல்விக்கான வழிகாட்டுதலை கொடுக்கிறோம். கல்வியை முடிச்சதுக்கப்புறம்?
ஒரு புள்ளிவிவரம் பார்த்தோம். பள்ளிக்கல்வியை முடிக்கும் ஏழை மாணவர்களில் வெறும் பதினைஞ்சு சதவிகிதம் பேருதான், உயர்கல்விக்கு போறாங்க. கையெழுத்து போடத் தெரிஞ்சா மட்டும் படிச்சவன் கிடையாது. பத்தாவதோ, பண்ணிரெண்டாவதோ படிச்சிட்டா மட்டும் படிச்சிட்டதா அர்த்தம் கிடையாது. பட்டப்படிப்பு முடிச்சாதான் ஒரு முழுமையான கல்வியை கற்றதா அர்த்தம்னு நம்பறேன்.
+2லே ஆயிரத்து இருநூறுக்கு ஆயிரத்து நூத்தி ஐம்பது எடுத்த பசங்க கூட, காலேஜூக்கு எங்கே போறது, எப்படி விண்ணப்பிக்கிறது, காலேஜூக்கு போனா காசு செலவாகுமேன்னு பயந்துக்கிட்டு திருப்பூர் பனியன் பேக்டரிக்கோ, இல்லைன்னா ஆடு, மாடு வாங்கி தனியா தொழில் பண்ணவோ ஆரம்பிச்சிடறாங்க. யாரையாவது உதவி கேட்கணும்னு கூட தோணாதவங்க இவங்க.
இவங்களை தேடி கண்டுபுடிச்சு, “நீதானே +2லே இவ்வளவு மார்க் வாங்கினே? நீ காலேஜ் படிக்கணும், வா”ன்னு கூப்பிட்டு அவங்க பட்டப்படிப்பு முடிக்கிறதை எங்க பொறுப்பா எடுத்துக்கிட்டோம்.
டிகிரி முடிச்சதுக்கப்புறம்?
வேலை வேணும் இல்லையா? ‘கேம்பஸ் இண்டர்வியூ’ மாதிரி நடத்தி அவங்களுக்கு வேலையும் வாங்கிக் கொடுக்கிறோம். எங்க அகரம் பவுண்டேஷனுக்கு ஆதரவு கொடுக்கிற தன்னார்வலர்கள், கார்ப்பரேட் நிறுவனங்கள்னு பலரும் இதுக்கு உதவறாங்க.
கல்வியை கொடுப்பது மட்டுமில்லை. வாழ்க்கையையும் ஒருத்தருக்கு வழங்கறதுதான் எங்களோட ‘விதை’ திட்டம். நல்ல மனிதர்களை நாமே உருவாக்கி விதைத்தால்தான் எதிர்காலத்தில் சமூகம் நல்லமாதிரியா வளர்ந்து நிற்கும் என்பது எங்களோட எண்ணம்.
 
மாற்றம் வெளியில் இருந்து வராது

கல்விதான் எல்லாத்தையுமே மாற்றும். வெறுமனே மாற்றம், மாற்றம்னு சொல்லிக்கிட்டிருக்கிறதுலே பிரயோசனம் இல்லை. மாற்றத்தை விரும்புபவர்கள் கல்விக்கு முக்கியத்துவம் தந்தாகணும். நம்ம சமூகத்தோட பிரச்சினை ஊழல்னு எல்லாரும் சொல்லுறோம். இதை எப்படி சமாளிக்கப் போறோம்? எல்லா கெட்ட விஷயத்துமே மூலம் அறியாமை. கல்வி என்கிற வெளிச்சம் மட்டுமே அறியாமை இருளை போக்கும். ரொம்ப கஷ்டப்படுற குடும்பங்களில் இருந்து வர்றவங்க கல்வியின் மூலமா நல்ல வாழ்க்கையை அடைஞ்சாங்கன்னா, நிச்சயமா வழிதவறவே மாட்டாங்க.
ஊழலை ஒழிக்கணும்னா யாராவது மூணாவது ஆளு வந்து ஒழிச்சிட மாட்டாங்க. ஒவ்வொரு தனி மனிதனும் தனக்குள்ளேதான் இதற்கான போராட்டத்தை நடத்தணும். எல்லாருமே கூடுதலான ஏதோ ஒரு வசதியை எதிர்ப்பார்க்கும்போதுதான் ஊழல் தொடங்குதுன்னு நெனைக்கிறேன். சின்ன சின்ன விஷயங்களிலே கூட நாம ஊழலுக்கு எதிரா நின்றாகணும். நீங்க வாங்குற ஒரு வீட்டை பத்திரப்பதிவு அலுவலகத்துலே பதிவு பண்ணும்போது கூட, முறையா எந்த விதிமுறையையும் மீறாம செய்யணும். இதுலே உங்களுக்கு ஒரு சின்ன லாபத்தை எதிர்ப்பார்த்து, லேசா மீறினாகூட அதுவும் ஊழல்தான்.
இப்போதைய பிரச்சினை என்னன்னா நாம யாரை பின் தொடரணும், யாரை முன் நிறுத்தணும் என்கிற குழப்பம் எல்லாருக்கும் இருக்கும். இவர் ஒழுங்கா, அவர் ஒழுங்கான்னு மாத்தி, மாத்தி கேட்டுக்கிட்டிருக்கோம். நாம ஒழுங்கா இருந்தாதான் இவர், அவர் எல்லாம் ஒழுங்காவாங்கங்கிறதை நாம முதல்லே புரிஞ்சுக்கணும்.
 
அரசியல் தப்பில்லை, ஆனா எனக்கு வேணாம்

வழிதெரியாமல் கூட நான் நிச்சயமாக அரசியல் பக்கம் போய்விட மாட்டேன். என் மனசுக்கு புடிச்ச விஷயங்களை செய்யணும். எனக்கு இப்போது சமூகத்தில் இருக்கும் இடத்தையும், அடையாளத்தையும் கொடுத்தவர்களுக்கு, எதையெல்லாம் திருப்பிக் கொடுக்க முடியுமோ, அதையெல்லாம் திருப்பிக் கொடுக்க நினைக்கிறேன். நாங்க செஞ்சிக்கிட்டிருக்கிற வேலைகளை சேவையென்று சொல்லமாட்டேன். இது எங்களோட பொறுப்பு. இதுக்கு எந்த அரசியல் நோக்கமும் நிச்சயமா கிடையாது.
நான் அரசியலுக்கு போகமாட்டேன்னு சொல்றதாலே, அரசியலை வெறுக்குறதா அர்த்தமில்லை. மவுனமா, உன்னிப்பா அரசியலை கவனிக்கிறேன். மனசுக்குப் புடிச்சி, முழுமையா அர்ப்பணிப்பு உணர்வோட அரசியலில் ஈடுபட முடியும்னா, யார் வேணும்னாலும் ஈடுபடலாம். அரசியலை முழுமையாக தெரிஞ்சுக்கிட்டு இளைஞர்கள் அரசியலுக்கு வரலாம். அரசியலின் கஷ்ட, நஷ்டங்கள் என்னென்ன என்பதை அறிஞ்சிக்கிட்டு வரணும்.
 


வெற்றியின் ரகசியம்

எனக்கு பெரிய ஆதர்சம் என்று சொன்னால் ஏ.ஆர்.ரஹ்மானும், டோனியும்தான். எவ்வளவு பெரிய வெற்றிகளை குவித்தும், அடக்கமா எப்படி இருக்க முடியும் என்பதை இவங்க கிட்டேதான் கத்துக்கணும். ஆஸ்கர் விருதை ரஹ்மானும், உலகக் கோப்பையை டோனியும் தள்ளிநின்று மூணாவது மனிதர்களாக பார்க்கக்கூடிய மனப்பக்குவத்தை பெற்றிருக்காங்க. இந்த மனப்பான்மையை வளர்த்துகிறதுதான் அடுத்தடுத்த வெற்றிகளை குவிக்க உதவும். இல்லேன்னா கிடைச்ச வெற்றியையே நினைச்சி, நம்மை நாமே மெச்சிக்கிட்டு தேங்கிடுவோம்.
எந்தவொரு சூழ்நிலையிலும் நீங்க செய்துக்கிட்டிருக்கிற வேலையோட சிறப்பான எல்லையை தொடணும். எதை எடுத்துக்கிட்டாலும், எதை கத்துக்கிட்டாலும், எதை நினைச்சாலும், எப்படி செயல்பட்டாலும் முழுமையாக, சிறப்பாக செயல்பட்டால் வெற்றி உறுதி. நான் என்னுடைய துறையில் வெற்றி கண்டிருக்கிறேன் என்று நீங்கள் நம்பினால், இதுமட்டும்தான் என்னுடைய வெற்றி ஃபார்முலா.

நேர்காணல் : யுவகிருஷ்ணா, அதிஷா
(நன்றி : புதிய தலைமுறை)
நன்றி : http://www.luckylookonline.com/s

                                                 யுவகிருஷ்ணா

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails