Saturday, December 21, 2013

கேட்டேன் ! கொடுத்தான் . கேட்பேன் ! கேட்டுக் கொண்டே இருப்பேன்

இறைவனிடம்
ஒருநாள்
சோம்பலைக் கொல்ல
சுறுசுறுப்பைக் கேட்டேன்
அவன்
சூரியனை அனுப்பி வைத்தான் !

சூடு தாங்காமல்
கொஞ்சம் சுகம் தா என்றேன்
அவன்
இலைகளை
ஆட விட்டான் !

ஆடிப் பழுத்த இலைகளை
புழுதியில் புரட்டி விட்டு
வந்த வேகக் காற்று
வெட்கமாய் என்
தேகம் தொட்டு
வியர்வை துடைத்தது !

பம்பரமாய் சுற்றி சுழன்ற
உடம்புக்கு
இதமாய்
ஏணி வைத்து
இறங்கி வந்த
ஆகாயத் தாமரை
கையால்
ஒத்தடம் தந்தது !

பாண்டிய நாட்டு
அருவாளால்
வெட்டுப் பட்டது போல்
அஸ்தமனச் சூரியன்
ஆகாயத்திலிருந்து
அறுந்து விழுந்தது !

இப்போது ...
ஆயாசம் ஏற்பட
இறைவா ..
ஓய்வு கொடு என்றேன் !

அவன் -
உறக்கத்தை
அனுப்பி வைத்தான் !

இன்ஷா அல்லாஹ் ...
நாளை சந்திப்போம் !



Abu Haashima Vaver