Monday, December 2, 2013

நகை இலவசம்

தம் கணவரைப் பார்த்துக் கவலைப்பட்டார் மனைவி. அவரது முகத்தைப் பற்றிய கவலை. ‘பேசும்போதெல்லாம் இப்படி இளித்த முகமாய் இருந்தால் எப்படி? மக்கள் மத்தியில்

இவருக்கான கண்ணியம், மதிப்பு, மரியாதை குறைந்து போகாதா? விளையாட்டுப் பிள்ளையாக நினைத்துக்கொள்வார்களே!’

இறுக்கமான முகம்; உம்மணாம் மூஞ்சி என்றெல்லாம் மனைவி கணவனைப் பார்த்து நினைத்தால், வருத்தப்பட்டால் அர்த்தம் உள்ளது. நேர்மாறாய், அவரது புன்முறுவலும் இன்முகமும் கவலை அளித்தால்? ஒருவேளை புன்னகை அளவை மீறியிருக்குமோ? ஒருநாள் பொறுக்கமாட்டாமல் மனைவி சொல்லிவிட்டார்.

“உங்கள் புன்னகையைக் கொஞ்சம் குறைத்துக் கொள்ளுங்களேன்.”


மனைவியை ஏறிட்டார் கணவர். நபியவர்களின் உற்ற தோழர் அவர். அபூதர்தா ரலியல்லாஹு அன்ஹு. “உம்முதர்தா! நபியவர்கள் புன்னகையற்ற முகத்துடன் பேசி நான் பார்த்ததேயில்லை. எனவே அதையே நானும் பின்பற்றுகிறேன்.”

முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களைத் தோழர்கள் அணுஅணுவாய்ப் பின்பற்றியிருக்கிறார்கள்; எல்லையற்ற அன்புடன், தம் உயிரினும் மேலாய் நேசித்திருக்கிறார்கள் என்பதெல்லாம் நாம் அறிந்த விஷயம். அதற்கான சான்றும் இந்த நிகழ்வில் ஒளிந்துள்ளது என்பது அடுத்த விஷயம். ஆனால் இந்தக் கட்டுரையின் நோக்கம் முற்றிலும் வேறு விஷயம்.

புன்னகை!

மனித உறவும் தொடர்பும் இருக்கிறதே அது ஒரு கலை. அறிவியலுக்கு அப்பாற்பட்ட கலை. மனித உறவு என்பது கலை என்றால், பிள்ளைகளிடம் உறவாடுவது பெருங்கலை. ஊரோடும் உறவோடும் உலகோடும் எப்படிப் பழகிச் சிறந்தாலும் தோற்றாலும் நம் பிள்ளைகள் இருக்கிறார்களே அவர்களுடன் பழகிச் சிறக்க இக்கலையின் ஒரே ஒரு நுணுக்கத்தையாவது அறிய வேண்டியது நமக்குக் கட்டாயம்.

அது புன்னகை!

இன்றைய தேதிக்கு தங்கம் விற்கும் விலையில் குண்டுமணி நகை வாங்க அண்டா நிறைய பணம் எடுத்துச் செல்லவேண்டியிருக்கிறது. எனவே பைசா செலவற்ற புன்னகையைப் பற்றி அறிந்து அணிந்து கொள்ளலாம். அது எளிது.

பிள்ளைகளிடம் உறவாடுவது பெருங்கலை. இதன் நெளிவு சுளிவு அநியாயத்திற்குக் கஷ்டம் என்பதால் பெரும்பாலான நாம் - நாமென்றால் பெற்றோர்கள், ஆசிரியர்கள் – இதற்காகத் தேர்ந்தெடுக்கும் முறை கண்டிப்பும் அடக்குமுறையும். சினமும் கடுகடுப்பும் பூசிய முகமூடியை மாட்டிக்கொண்டு கறார், கட்டளை என்றுதான் பிள்ளைகளிடம் பழகுகிறோம். ‘பூச்சாண்டியிடம் பிடித்துக் கொடுத்துவிடுவேன்’ என்று அவர்கள் கைக்குழந்தையாக இருக்கும்போதே அதைத் துவக்கிவிடுகிறோம். இப்படி ஒரு கடுமையான எல்லைக்கோட்டை வைத்துக்கொண்டால்தான் பிள்ளைகளை வெற்றிகரமாய் வளர்க்கமுடியும், அவர்களைச் சிறப்பானவர்களாய் உருவாக்க முடியும் என்பது நமது மூடிய நம்பிக்கை.

புன்னகையும் இன்முகமாய் அவர்களிடம் பழகினால், ‘அதற்குப் பெயர் செல்லம். அது அவர்களைக் கெடுத்துக் குட்டிசுவராக்கிவிடும்’ என்பது நமது எச்சரிக்கை எண்ணம். உண்மை யாதெனில், இத்தகைய அணுகுமுறை பலவீனமான மனிதர்களுடையதாம்.

தன்னம்பிக்கை நிறைந்த, உயர்ந்த உள்ளம்கொண்டவர்கள் என்ன செய்வார்களாம்?

தங்கள் குழந்தைகளிடம் இன்முகம் கொண்டவர்களாய் இருப்பார்கள். இதமான குடும்பச் சூழ்நிலையை உருவாக்குவார்கள். அதன்மூலம் தங்கள் பிள்ளைகளைத் தங்களுக்கு நெருக்கமாய் இழுத்து அவர்கள் தங்களிடமிருந்து பயிலச் செய்கிறார்கள். தங்களுக்குக் கட்டுப்படும் பிள்ளைகளாய் அவர்களை உருவாக்கி அவர்களது வளர்ச்சியை நல்வழியில் செலுத்துகிறார்கள். புத்திசாலியான பெற்றோர் தங்களது புன்னகையின் மூலம் பிள்ளைகளைச் செயல்படுத்துகிறார்கள். அவர்களை அன்புடன் அரவணைக்கிறார்கள். அவர்களது தவறுகளைப் பொறுமையுடன் திருத்துகிறார்கள் என்று விபரம் நீள்கிறது.

பிள்ளைகளுக்குப் பெற்றொரே முன்மாதிரி. அவர்களே அவர்களுக்கு முதல் முக்கியப் பாதுகாவலர்கள். எனவே அவர்களிடமிருந்து தாம் பெறும் புன்னகையும் பாராட்டும் நற்சொல்லும் ஒரு குழந்தைக்கு வெகு முக்கியமானதாக அமைந்து விடுகிறது; அளவற்றத் தாக்கத்தை ஏற்படுத்துகிறது.

முக மலர்ச்சியுடன் திகழ்வதை, என்னவோ இயல்புக்கு விரோதமான காரியம்போல் நம்மில் சிலர் கருதுகிறோம். ஆனால், இயல்பு வாழ்க்கை நெறியான இஸ்லாத்தை நமக்குக் கற்றுத் தந்த முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் முன்மாதிரி இவ்விஷயத்தில் அபாரமானது என்றுதான் வரலாற்று நிகழ்வுகள் தெரிவிக்கின்றன. நபியவர்கள் தம் தோழர்களிடம் எப்பொழுதுமே இன்முகத்துடனும் புன்னகையுடனும் இருந்திருக்கிறார்கள். ஜரீர் இப்னு அப்துல்லாஹ் ரலியல்லாஹு அன்ஹு, “நான் இஸ்லாத்தை ஏற்றபின், என்னை நபியவர்கள் காணும்போதெல்லாம் புன்னகையுடனே என்னை வரவேற்பார்கள்” என்று குறிப்பிட்டுள்ளார்கள். (புகாரி)

ஒருவேளை இது ஜரீருக்கு மட்டும் கிடைத்த பிரத்தியேக பாக்கியம் போலும் என்று நினைத்தால், அப்துல்லாஹ் இப்னுல் ஹாரித் ரலியல்லாஹு அன்ஹு, “நபியவர்களைப்போல் புன்னகை புரிபவர்கள் எவரையும் நான் பார்த்ததே இல்லை” என்று குறிப்பிட்டுள்ளார். (Al-Albaani: Saheeh) நாம் மேலே பார்த்த அபூதர்தா (ரலி) நிகழ்வும் இந்த வகையில்தான் இணைகிறது.

இதெல்லாம் பெரியவர்களுக்குப் பொருந்தும். பிள்ளைகள் வால்களாயிற்றே. அவர்களுக்குரியவை குறும்பும் சுட்டித்தனமும் அல்லவா? நம் மனத்தினுள் எழும் கேள்வி நியாயமானது. ஆனால், நபியவர்கள் குழந்தைகளிடமும்கூட அதேயளவு அன்பும் அக்கறையும் பாசமும் கொண்டவர்களாய்த்தான் இருந்திருக்கிறார்கள். அவர்கள் குழந்தைகளிடம் முகஞ்சுளித்ததாக எந்தக் குறிப்புமே இல்லை. மாறாக, முக்கியமான தோழர்கள் மத்தியில் இருந்த நேரத்திலும்கூட, குழந்தைகளிடம் புன்னகைத்து விளையாடி மகிழ்ந்திருக்கிறார்கள்.

ஒருமுறை ஜாபிர் இப்னு அப்துல்லாஹ் ரலியல்லாஹு அன்ஹுவும் சில தோழர்களும் நபியவர்களுடன் இருக்கும்போது யாரோ அவர்களை உணவு உண்பதற்கு அழைத்திருக்கிறார்கள். அனைவரும் கிளம்பிச்செல்ல, வழியில் நபியவர்களின் பேரர் ஹுஸைன் தெருவில் பிள்ளைகளுடன் விளையாடிக் கொண்டிருந்திருக்கிறார். நபியவர்கள் விரைந்து சென்று தம் கைகளை அகல விரிக்க, அதைக்கண்டு ஹுஸைன் அங்குமிங்கும் ஓட நபியவர்களும் சிரித்து மகிழ்ந்திருக்கிறார்கள். பிறகு பேரரைத் தூக்கி முகவாய்க்கட்டையில் ஒரு கையும், தலைக்கும் காதுக்கும் பின்னால் ஒரு கையும் வைத்து அனைத்து முத்தமிட்டு, ‘ஹுஸைன் என்னைச் சேர்ந்தவர்; நான் அவரைச் சேர்ந்தவன். அவர்மீது நேசம் கொள்பவர்கள்மீது அல்லாஹ் நேசம் கொள்வானாக. ஹஸனும் ஹுஸைனும் உயர்வான இருவர்கள்’ என்று பேசிய ஹதீது அத்-தபரானீயில் பதிவாகியுள்ளது. [At-Tabaraani] [Al-Albaani: Hasan]

மக்கள் அனைவரையும் பணத்தால் திருப்திபடுத்த முடியாது. ஆனால் முகமலர்ச்சியுடனும் நல்ல பண்புகளுடனும் அதைச் சாதிக்க முடியும் என்பதும் (முஸ்லிம்) நபிமொழி. எனில், நமது பொறுப்பில் உள்ளவர்களிடம் நாம் காண்பிக்கும் புன்னகை அவர்களுக்கு வலிமையளிக்கும் என்பது உண்மை.

நம் பிள்ளைகளிடம் நல்ல பண்புகள் வளர வேண்டியது எவ்வளவு முக்கியமோ அதே அளவு அவர்களது மனம் மகிழ்வுற வேண்டியதும் அவசியம். அவர்களைத் தீயொழுக்கத்திலிருந்தும் பிரச்சினைகளிலிருந்தும் பாதுகாப்பது நமது கடமை. அதற்கு அதிகமதிகம் துஆக்களும் நிதானமும் நம்மிடம் தேவைப்படுகிறது. நமது இன்முகமும் நிதானமும் பிள்ளைகளைத் தாங்கிப்பிடித்து, வலிமையளித்து அவர்களுடன் இணக்கமான உறவை நிலைநாட்ட உதவுகிறது. ஒழுக்கக் கேடுகளிலிருந்து அவர்களைக் காக்கவும் நல்ல வழியில் அவர்களை இழுத்துவந்து வலுப்படுத்தவும் இவை அடிப்படை.

அதேநேரத்தில் -

எப்போதாவது கட்டாயமேற்படும்போது, முகஞ்சுளிப்பது, கடிந்துகொள்வது போன்றவையெல்லாம் அவர்களைச் சீர்திருத்தும் உபகரணங்களாக - உபகரணங்களாக மட்டுமே - பிரயோகிக்க வேண்டும். அதுவும் எப்படி? சமயோசிதமாய், தேவைப்படும்போது மட்டுமே! ஏனெனில் நமது முகமலர்ச்சி நமக்கும் பிள்ளைக்களுக்கும் இடையே எப்படி உறவை வலுப்படுத்துகிறதோ, அதேபோல் முகஞ்சுளிப்பும் கடுகடுப்பும் பிள்ளைகளுக்கு பெற்றோர்மேல் அதிருப்தியை அதிகப்படுத்துகிறது. அவர்களுக்கு நம்மீதுள்ள அன்பை பலவீனப்படுத்திவிடுகிறது.

“ஒருவர் தம் குடும்பத்தினரிடம் இளவயது வாலிபனைப்போல் இருக்க வேண்டும். தேவைப்படும் தருணங்களில் அவன் முதிர்ச்சியுற்ற மனிதனாய் இருக்க வேண்டும். தம் குடும்பத்தினரிடம் முகமலர்ச்சியும் நற்பண்புகளும் நகைச்சுவை புரிவதும் குழந்தைகளை வழிநடத்தச் சிறப்பான முறை. ஆனால் அதேநேரத்தில் அது பெற்றோரின் மரியாதைக்கு பங்கம் விளைவிக்கக்கூடாது” என்று உமர் ரலியல்லாஹு அன்ஹு தெரிவித்திருக்கிறார்கள்.

அதாவது பிள்ளைகளைத் திருத்தவும் அவர்களது தவறுகளைச் சுட்டிக்காட்டவும் தேவையான அளவு சினம் காட்டலாம். ஆனால் அப்பொழுதும்கூட புன்னகைக்கலாம். எப்படி?

கோபத்துடன் இருக்கும்போது எப்படி புன்னகைப்பது என்பதை நபியவர்கள் நமக்குக் கற்றுத்தந்துள்ளார்கள். கஅப் பின் மாலிக் (ரலி) தாம் தபூக் படையெடுப்பின்போது தகுந்த காரணமின்றி கலந்துகொள்ள முடியாமல்போன நிகழ்வை விவரிக்கும்போது, நபியவர்கள் மதீனா திருப்பியபின், தாம் அவர்களுக்கு முகமன்கூறியபோது, அவர்கள் இலேசான கோபத்துடன் புன்னகைத்ததைக் குறிப்பிடுகிறார்கள். (புகாரி, முஸ்லிம்)

நகைச்சுவை உணர்வு பிள்ளைகளிடம் ஏற்படும் சிடுசிடுப்பையும் மன உளைச்சலையும் நீக்க உதவுகிறது. நமது இல்லத்தில் மகிழ்வைப் பரப்புகிறது. நமது மனங்களில் இதமான உணர்வு பரவி, அது பிள்ளைகளின் மனத்தில் பாதுகாப்புணர்வை அளிக்கிறது. கடுகடுப்பும் முகஞ்சுளிப்புமான பெற்றோர் அமையும்போது இவையெல்லாம் தொலைந்துவிடுகின்றன.

ஆழ்மனத்திலிருந்து வெளிவரும் உண்மையான சிரிப்பு பிள்ளைகளிடம் அவர்களுடைய பால்யப் பருவங்களில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தும் என்று ஜெர்மன் மனவியலாளர்கள் ஆய்வின் மூலம் நிரூபிக்கிறார்கள். இதன் அடிப்படையில், ‘உடலுக்கு உணவு எந்தளவு முக்கியமோ அந்தளவு சிரிப்பும் முக்கியம். நன்றாகச் சிரிக்கும் குழந்தை நலமுடன் வளர்கிறது’ என்று அவர்கள் உறுதிப்படுத்துகிறார்கள். எனவே தட்டில் சோறும் முகத்தில் புன்னகையும் நிறைத்து பிள்ளைகளுக்குப் பரிமாறுவது நல்லது.

பிள்ளைகளுக்குப் பயிற்றுவிக்கும் வழிமுறைகளில் புன்னகை ஏற்படுத்தும் ஆக்கபூர்வமான தாக்கத்தையும் மனவியலாளர்கள் தெரிவிக்கிறார்கள். களிப்பும் மகிழ்வும் திருப்திகரமான மனச்சூழ்நிலையை உருவாக்குகின்றன என்கிறார்கள் அவர்கள். எளிதாய்ப் பயிலும் மனச்சக்தியை அது பிள்ளைகளிடம் தூண்டுகிறதாம். ஏனெனில் மகிழ்வுணர்வு நமது மனச் சக்தி விசாலமடைவதற்கும் வளர்வதற்கும் தயார்படுத்துகிறது. இதற்கு மாறாய், துயரமும் கையாலாகத்தனமும் வாழ்க்கையைப் பற்றி மனத்தளர்சியுள்ள எண்ணத்தைப் பதிக்கிறது.

டாக்டர் நமக்கு எழுதித்தரும் மருந்தை சாப்பாட்டுக்கு முன், பின், என்று எவ்வளவு சிரத்தையாய்ப் பின்பற்றுகிறோம். அதே சிரத்தையுடன் நம் பிள்ளைகளின் நலனுக்காக கீழுள்ளதை முயன்று பழகலாம்.

    பிள்ளைகள் நம்மை நெருங்கும்போதெல்லாம் புன்னகைக்கலாம்.
    நாம் வீட்டிலிருந்து கிளம்பும்போது புன்னகைக்கலாம்.
    அவர்கள் பள்ளிக்குக் கிளம்பும்போதும் திரும்பும்போதும் புன்னகைக்கலாம்.
    நாம் வேலையிலிருந்து திரும்பும்போது அலுவல் பிரச்சினைகளையெல்லாம் செருப்புடன் வெளியே உதறிவிட்டு புன்னகையுடன் நுழையலாம்.
    அவர்களை நாம் எழுப்பும்போது அவர்கள் முதலில் காண்பது நமது புன்னகையாக இருப்பது சிறப்பு.
    அவர்களை உறங்க வைக்கும்முன் புன்னகைக்கலாம். அவர்களது தப்பு, தவறுகளை விசாரிக்க விரும்பும்போதும் புன்னகைக்கலாம்.

இவையெல்லாம் பிள்ளைகள் நம்மிடம் பாதுகாப்பை உணர்ந்து மெய் பேசவைக்கும். நம் புன்னகை பிள்ளைகளின் அச்ச உணர்வையும் வருத்த உணர்வையும் விட்டு அவர்களுக்குப் பாதுகாப்பு அளிக்கும். நம்முடனான அவர்களது தகவல் தொடர்பை வலுவானதாய் மாற்றும். நமது கட்டளைகளும் ஆலோசனைகளும் அவர்களுக்கு பாரமாக இருக்காது. எனவே கட்டுப்படுவார்கள். நம்மைச் சந்திக்க ஏங்குவார்கள். நம்மைச் சினமூட்டும் எதையும் செய்யத் தயங்குவார்கள். ஏனெனில் அவர்கள் நமது இன்முகத்தையும் புன்முறுவலையும் தொலைக்க விரும்பமாட்டார்கள்.

இதையெல்லாம் படித்துவிட்டு ஏதோ நான் இக்கலையில் விற்பன்னன் என்று யாராவது நினைத்தால் ஒரு ரகசியம் அறிவது அவசியம். யாருக்கும் தெரியாமல் தினமும் கண்ணாடியில் புன்னகைத்துப் பழகி வருகிறேன். ஏனெனில் முயற்சியுடையார் இகழ்ச்சியடையார்!


-நூருத்தீன்
Source : http://darulislamfamily.com/f

1 comment:

திண்டுக்கல் தனபாலன் said...

பெற்றோர்கள் அனைவரும் அறிய வேண்டிய உணர வேண்டிய கருத்துக்கள்... பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி ஐயா...

நூருத்தீன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்...

LinkWithin

Related Posts with Thumbnails