Showing posts with label தாய். Show all posts
Showing posts with label தாய். Show all posts

Tuesday, September 16, 2014

அழைத்துச் செல்லலின் நோக்கம்



தாயை தன்னுடன் அழைத்துச் செல்லல் சேவை
தாய் தன் பிள்ளையை தன்னுடன் அழைத்துச் செல்லல் பாசம்

தந்தையை தன்னுடன் அழைத்துச் செல்லல் ஆணை
தந்தை தன் பிள்ளையை தன்னுடன் அழைத்துச் செல்லல் கடமை

காதலன் காதலியை தன்னுடன் அழைத்துச் செல்லல் அச்சாரம்
கணவன் மனைவியை தன்னுடன் அழைத்துச் செல்லல் அடிபணிதல்

சகோதரி சகோதரனோடு சேர்ந்து செல்லல் பாதுகாப்பு
நண்பன் நண்பனோடு சேர்ந்து செல்லல் பொழுதை மகிழ்விக்க


Friday, May 23, 2014

தாயே உன் புன்னகைப் பரிமாறலில் என் முகவரியும் கூட சேர்ந்தே மண மணக்கும்

அத்தனையும்
இனிக்கும்
அக்கறையாய்
அன்பினையும்
சேர்த்து
பெற்றவள்
பரிமாறும்
உணவுக்கு
முன்னால்
முக்கனியும்
சுவைத்தோற்கும்
முன் நாக்கில்
தேனூறும்

பிட்சாவும்
பர்கரும்
குறைப்பிரசவ
கோழி வறுவலும்
பேச்சுக்கு
மட்டுமே
மணக்கும்

Saturday, December 28, 2013

அம்மாவைப் புகழ்ந்து கணக்கற்ற புகழ் பாடலகள் அத்தாவைப் பற்றி ..!!!!


நபி (ஸல்) அவர்கள் கூறியதாக இப்னு உமர் (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: ""உபகாரத்திலெல்லாம் மிகப்பெரிய உபகாரம் ஒருவர் தமது தந்தையின் நேசத்திற்குரியவரையும் நேசிப்பதாகும்.'' மற்றோர் அறிவிப்பில், "நிச்சயமாக உபகாரத்திலெல்லாம் மிகப்பெரிய உபகாரம் ஒருவர் தமது தந்தை நேசித்தவரை, தந்தையின் மரணத்திற்குப் பிறகும் நேசிப்பது'' என்றார்கள். (ஸஹீஹ் முஸ்லிம்)

இரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம் "அல்லாஹ்வின் தூதரே! எனது பெற்றோர்களுக்குரிய உபகாரங்களில் அவர்கள் மரணமடைந்த பிறகும் நான் அவர்களுக்கு செய்யவேண்டிய உபகாரம் எதேனு மிருக்கிறதா?'' என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள் "ஆம்! நான்கு விஷயங்கள் உள்ளன. 1) அவர்களுக்கு துஆ செய்வது அவ்விருவருக்காகவும் அல்லாஹ்விடம் பாவமன்னிப்பு கோருவது 2) அவர்கள் செய்த உடன்படிக்கையை நிறைவேற்றுவது 3) அவர்களது நண்பர்களை கண்ணியப்படுத்துவது 4) இரத்த பந்துக்களுடன் இணைந்திருத்தல். இரத்த பந்தம் என்ற உறவுமுறை அவ்விருவரின் மூலமே தவிர எற்பட முடியாது'' என்று கூறினார்கள். (அல் அதபுல் முஃப்ரத்)

 (நபியே!) உமதிறைவன் தன்னைத் தவிர (மற்றெவரையும்) வணங்கக் கூடாதென்றும் (கட்டளையிட்டிருப்பதுடன்) தாய் தந்தைக்கு நன்றி செய்யும்படியாகவும் கட்டளையிட்டிருக்கிறான். அவர்களில் ஒருவரோ அல்லது இருவருமோ உம்மிடம் முதுமையை அடைந்துவிட்டபோதிலும் அவர்களை வெருட்டவும் வேண்டாம். அவர்களை (நிந்தனையாகச்) "சீ' என்று சொல்லவும் வேண்டாம். அவர்களிடம் (எதைக் கூறியபோதிலும் புஜம் தாழ்த்தி) மிக்க மரியாதையாக (வும் அன்பாக)வுமே பேசும். அவர்களுக்கு மிக்க அன்புடன் பணிந்து நடப்பீராக அன்றி "என் இறைவனே! நான் குழந்தையாக இருந்தபொழுது (மிக்க அன்பாக) என்னை அவர்கள் வளர்த்து போஷித்த பிரகாரமே, நீயும் அவ்விருவர் மீதும், அன்பும் அருளும் புரிவாயாக!'' என்றும் நீர் பிரார்த்திப்பீராக! (அல்குர்அன் 17:23,24)

 அவர்களுக்கு மிக்க அன்புடன் பணிந்து நடப்பீராக! அன்றி, என் இறைவனே! நான் குழந்தையாக இருந்தபொழுது (மிக்க அன்பாக) என்னை அவர்கள் வளர்த்து போஷித்த பிரகாரமே, நீயும் அவ்விருவர் மீதும், அன்பும், அருளும் புரிவாயாக! என்றும் நீர் பிரார்த்திப்பீராக! (அல்குர்அன் 17:24)
-------------------------------------------------------------------------------------------------------------------

Wednesday, November 27, 2013

பொழுதுகளின் எல்லையற்ற நீட்சிகளில் ...











பொழுதுகளின்
எல்லையற்ற நீட்சிகளில்
நீந்திச் செல்லும்
எண்ணற்ற காட்சிகளிலும்
வந்து வந்து
கலைந்து செல்கிறது
அது !

குதூகலிக்கும் தருணங்களிலும்
கூடிக்கூடி குலாவி
கும்மாளமிடும்
குடும்ப சங்கமங்களிலும்
எங்கோ ஒரு மூலையில்
ஒளிந்து கொண்டுதான் இருக்கிறது
அது !

Tuesday, November 19, 2013

பாலூட்டி சீராட்டி வளர்த்த தாயின் ஏக்கம்

பாலூட்டி சீராட்டி வளர்த்தேன்
பாடல் பாடி உறங்க வைத்தேன்
சிறகடித்து பறந்து இரையை சேர்த்து
குஞ்சின் வாயில் ஊட்டும் பறவைபோல்
கண்மணி மகனை பேணி வளர்த்தேன்.
கை பிடித்து நடக்க பழகிக் கொடுத்தேன்
கற்பதற்கு வேண்டியதை செய்துத் தந்தேன்
உறவுமுறை சொற்களை சொல்லிக் கொடுத்தேன்
உறவினரை அறிமுகம் செய்து வைத்தேன்
உயர்ந்து விட்டவனுக்கு மன முடித்து வைத்தேன்

வேண்டியதை சேர்த்துக் கொண்டான்
வேண்டிய உறவுகளை அறுத்து நிற்கின்றான்
வார்த்த என் உறவையும் அறுக்கும் நாள் நெருங்கி விடுமோ!
வார்த்த என் உறவையும் அறுக்கும் நாள் வந்தால்
பாசத் துடிப்போடு உயிர் என்னை விட்டு நீங்கும்

Monday, November 4, 2013

இருட்டில் பிறந்து வெளிச்சத்தில் வளரும் ஆச்சரியம் !

ஹிஜ்ரி -
ஓர் அதிசயம் !
இருட்டில் பிறந்து
வெளிச்சத்தில் வளரும்
ஆச்சரியம் !

தாய் வயிற்றில்
இருக்கும் வரை
கரு !
பிறந்தால்தான்
அது
குழந்தை !
கலைந்துபோனால்
குருதிக் குவியல் !

Thursday, October 3, 2013

மயக்கம்.....!

தாங்கிய தாய் வயிற்றில் ஒரு மயக்கம்!
தரணி மண் மீது விழுந்தபின் ஒரு மயக்கம்!

விழுந்த வேதனையில் விடியும்வரை ஒரு மயக்கம்!
விடிந்தபின் பசி கொடுக்கும் ஒரு மயக்கம்!

பசி நீங்க பருகும் தாய்ப்பால் ஒரு மயக்கம்!
தாய்ப்பால் நின்றவுடன் தானாக வரும் ஒரு மயக்கம்!

தகுதிகாண் பருவம்வரை தாங்காத ஒரு மயக்கம்!
தக்கதொரு காலத்தில் கல்வியே ஒரு மயக்கம்!

வளர்ந்த பின் பருவ காலத்தில் ஒரு மயக்கம்!
வடிவழகு மனைவி மீது ஆசை ஒரு மயக்கம்!

Thursday, February 7, 2013

உன்னழகு உனை விட்டுப் பிரியுமென்ற பேதமை புத்தி பெற்றாய்!

வேர் வழி  நீர் மரத்தை வலுவூட்ட
தொப்புள் கொடி வரும் சத்து சிசுவை வளர்க்க
உண்ட உணவில் சத்தாய் வந்தடைய உருவாகி
வயிறை விட்டுப்  பிரிய தொப்புள் கொடி அறுபட்டது

உன்னுடலில் உருவாகும் பால் எனக்காக உருவாக
உருவாகும் பாலை  உயிர் வாழ உவகையுடன் தந்தாய்
உன்னழகு உனை விட்டுப் பிரியுமென்ற பேதமை புத்தி பெற்றாய்
உருவாகும் பாலை தருவதை நிறுத்தி பால்கட்டி நடுங்குகின்றாய்

உன்  பால் நான் குடிக்க உயர்வாய் இருப்பேன்
உன்பால் உயிராய் இருப்பேன்
உன் பால் உன்னிடமே இருக்க உன் மேனி கெடும்
உன்பாலை ஊர வைத்தவன் உனை வருத்துவான்

பாலைத் தந்தவன் ஒருவனிருக்க
பாசமிருந்தும் பாலைத் தர மறுப்பதேன்
ஈராண்டு பாலை கொடுத்து எனை வளர்த்தால்
ஈன்ற பால் எதிர் கொல்லி நாசினியாக இருந்து எனை வளர்க்கும்

உன்பாலைவிட உயர்வான பாலுண்டோ!
உவகையாய் எனைப் பெற்று உன்பால் உறிய இசைந்திடு
தாயாய் பெண்பாலாய் இருக்க
தாய்ப் பாலின் மகிமை அறியாததேன்!

தகப்பனை முன்னிறுத்தி பெயரிட
தாயின்  பெயரை முகமூடிட்டு மறைப்பதேன்
தகப்பன் அடித்தளமாக நின்றாலும்
தாயே கட்டிடமாகியது

Monday, December 17, 2012

நண்பன் ,வேதாந்தி ,வழிகாட்டி!


பையனைக் கூப்பிடு
தம்பி உன்னை அப்பா கூப்பிடுராங்கப்பா
ஏன்ப்பா!
எங்கப்பா போறே  சூப்பரா ட்ரஸ் பண்ணிட்டு ?
ஒரு வேலையா போறேன்பா.
அதான் கேட்கிறேன்! அப்படி என்ன வேலை சொல்லேன்?
உங்களுக்கு சொன்னாலும் புரியாதப்பா !
அப்படில்லாம் சொல்லக் கூடாது. அப்பா உனக்கு ஒரு நண்பன் ,வேதாந்தி, வழிகாட்டி மாதிரி
அதான் நீங்க சின்ன வயசிலேந்து சொல்லி எனக்கு நெட்டுரு ஆயிடுச்சே
அப்ப சொல்லேன் இப்ப..?
எதை நெட்டுரு பண்ணுனதையா!
இல்லப்பா நீ எங்கே போறேன்கிறதை சொல்லு.
அது உங்களுக்கு தேவை இல்லைப்பா.
சரிப்பா நீ போ உனக்கு நேரமாச்சு.

பையன் முனங்கிக் கொண்டே 'வழிகாட்டி தான் ரோட்டிலேயே இருக்கே. அதோட இவரையும் கொண்டு நிறுத்திட வேண்டியதுதான் . நண்பனாம் இவர் வயசுக்கு நான் நண்பனாம். நான் போற இடத்துக்கு இவர் வர முடியுமா. வேதாந்தியாம் அது சரி அவர் அப்படியே இருந்துட்டு போகட்டும் .என்னை  வேரே இவர் ஏன் வேதாந்தியாகச் சொல்றாரு'
இவ்வாறு சொல்லிக் கொண்டே மகன் தனது  நண்பனைப் பார்க்க துரிதமாக ஓடுகின்றான்.

'நட்புடன் நல்வழி காட்டினேன்
வேதத்தை படிப்பித்து வளர்த்தேன்
வழிகாட்டியாக வாழ்ந்து காட்டினேன்
கூ டாத நட்பு வழி மாற்றி விட்டது
பாசத்தோடு வளர்த்தவன் விலகி நிற்க
யாரிடம் சொல்லி மனதை ஆற்றுவேன்' - அப்பாவின் முனங்கள்

Saturday, November 10, 2012

நமக்கு முதல் ஆசிரியராக அமைவது நம் தாய்தான்

 இறைவன் படைப்புகளில் மனித படைப்புதான் உயர்வானது .மனிதனுக்குள் எத்தனையோ ஆற்றல்கள் ஒளிந்துக் கொண்டிருந்தாலும்  அதனை வெளிக் கொணர ஒரு ஊக்கமும்,முயற்சியும் தேவைப்பட்டாலும் அதனைத்  தூண்ட ஒரு ஆசிரியர் தேவை .அந்த ஆசிரியர் உதவி கிடைக்காமல் சிறப்படையமுடியாது .விளக்கு ஒளி கொடுக்க எண்ணை தேவை. ஆசிரியர் இல்லாமல் முதலில் படிக்கப் பழகுவது  இருளில் தூசியை அகற்ற விளக்குமாறு கொண்டு கூட்டுவதுபோல் ஆகிவிடும், நமக்கு முதல் ஆசிரியராக அமைவது நம் தாய்தான் அவள் நற்சொல் பேசுவதிலும்,உற்சாகம் கொடுப்பதிலும்,அரவணைத்து போவதும் மற்றும்  தன் நன்னடத்தையாலும் தன்  குழந்தைக்கு சிறந்த ஆசிரியராக இருக்க முடியும் அதற்கு
உருதுணையாக இருப்பது தந்தையும் மற்றும் நல்ல  சூழலில் வளர்வதுமாக  இருக்கும்.தாய்  மகளுக்கு தனக்கு தெரிந்த அத்தனை கலையையும்  சொல்லித் தருவாள்.தனக்கு தெரியாததையும் அறிந்துக் கொள்ள வழி வகுப்பாள். உடை உடுத்துவது முதல் சமைப்பதுவரை தெரியவைப்பாள். பொதுவாக  தாயின்   குணமே மகளுக்கும் இருக்கும்.  அதனால்தான் தாயைப்போல பிள்ளை நூலைப் போல சேலை  என்பார்கள். ஒரு தகப்பன் கெட்டவனாக இருந்தால் அதனால் அந்த தாய் படும் அவதியினைப் பார்த்து அந்த தாய்க்கு  பிறந்த குழந்தைகள் பொறுப்புடன் நடப்பார்கள். தாய் மார்க்கப் பற்றும் நன்னடத்தையும் கல்வி அறிவும் பெற்றிருக்க தனது குழந்தையையும்  சிறப்பாக வளர்ப்பாள்.  அந்த குழந்தை வளர வளர ஒரு ஆசிரியர் அதற்கு அவசியம் தேவைப்படுகிறது. இந்த உலகில் இறைவனைப் பற்றியும் அவனது படைப்புகளின் ஆற்றல் அறிய வருகின்றான் .கல்வியின் மீது நாட்டம் கொள்கின்றான்

Friday, November 9, 2012

டாக்டர் ஆகணும் ! ஆமாம் ஆமாம் ஆமாம்!!!

'ஏன்டா தாளை கிறுக்கி கிழித்துப் போடறே !' கோபமாக தாய்
'நீ தானே டாக்டர் ஆகுனும்னு சொன்னே!' ஐந்து வயது பையன்
'அதுக்கு தாளை கிழிக்கனுமா!' தாய்
'டாக்டர்
தாள்லே கிறுக்கி  கிழிச்சுத்தானே கொடுக்குறாரு!' பையன்



மன்னவா! மக்கள் பயப்படுகிறார்கள்!
அப்படி யார் சொன்னது ?
மக்கள் பேசிக்கொள்கிறார்கள்!
அங்கே யார்! வரச் சொல்!
மக்கள் பயப்படுகிறார்களா ?
இல்லை! மரியாதை செய்கிறார்கள்!
பின் ஏன் நீங்கள் வந்தீர்கள்?
மரியாதையின் நிமித்தம் பார்க்க வந்தோம்
நீர் ஏன் பயப்படுகிறார்கள் என்று சொன்னீர்?
வெளிச்சம் இல்லையாம் அதனால் கொசு கடிக்கிறதாம்.
வெளிச்சமும் குளிர்ச்சியும் இருக்கத்தானே செய்கிறது
அனைவரும் 'ஆமாம் ஆமாம் ஆமாம் '

Wednesday, August 8, 2012

அம்மா என்றழைக்காத உயிரில்லையே

அம்மா என்றழைக்காத உயிரில்லையே
அம்மாவை மதிக்காது உயர் வில்லையே
நெஞ்சில்  நின்று வாழும் ரூபம்
பெற்ற தாயன்றி வேரொன்று ஏது ? 
                                            - அம்மா

அகமதர்  நபிதொட்டு அனைத்துயர் மேதைகளை
அகிலத்திற் களித்தது  தாய் தானம்மா
மகன் பெற்ற புகழ் கண்டு போறாமை உலகத்தில்
மனம் பொங்கி மகிழ்வதும் தாய் தானம்மா
பேருச்சி மலை மீது புகழ் ஓங்கி நின்றாலும்
நான் எந்தன்  தாய் பாதம் கீழ் தானம்மா
தாயை நான் மறந்தாலும் தாய் என்னை மறக்காத 
தருமத்தை  யான்  மறவா   நிலை வேண்டுமே !
என் தாயே பொறுப்பாயே
                                               - அம்மா

உன் தாயின் பாதத்தில் உன் சொர்க்கம் நபிசொன்ன
பொன் வாக்கு என் நெஞ்சின் அலை யானதே
பொற் தாயின் பணிவிடையால் பேருவை   சுல் கர்ணிக்கு
பெருமானை தரிசிக்கும் நிலை போனதே
வயதான தாய் வீட்டில் பணிவிடை என் பொருப்பில்
உயர்வான கடன் ஹஜ்ஜும் கடனில்லையே
இறைபொருத்தம் யான் வேண்டின் எனை ஈன்ற தாய் பொருத்தம்
கிடைத்தாலே புவிவாழ்வில் அது போதுமே !
                                  
  என் தாயே பொருந்துவாயே !
                                                                                  - அம்மா 

பொன் முத்து மணி என்ன  பூலோக செல்வங்கள்
பூராவும் ஒரு தாய்க்கு ஈடாகுமா!
மலை போன்று விலை வைத்து புவி சந்தை எங்கிலும்
கேட்டாலும் தாயன்பு கிடைக்காதம்மா
ஈரைந்து மாதங்கள் உன் வயிற்றில் எனை சுமந்து
நீ பட்ட பெரும் பாட்டை மறை கூறுதே !
காலங்கள் எல்லாமும் நொடி நொடியாய் நன்றி கடன்
செய்தாலும் பெற்றெடுத்த கடன் தீருமா ?
                                  என் தாயே என்னுயிரே  !
                                                                                  - அம்மா 

தாயில்லா பிள்ளைகள் தவிக்கின்ற நிலை கண்டு
கரையாத கல் நெஞ்சும் கரையுதம்மா.
நோய் பட்டு தன் பிள்ளை பாய் தன்னில்  கிடக்கையில்
வாய் விட்டு அழுவதும் தாய் தானம்மா
பாலூட்டி  சோறு(ruu)ட்டி  ஈ எறும்பு கடிக்காமல்
இரவெல்லாம் விழித்ததும் தாய் தானம்மா
தாயே உன் பொன் மனம் கலங்காமல் பார்த்துன்னை
தலை மீது வைத்தல் என் கடமை அம்மா
                                                  என் தாயே இதயமே
                                                                     -அம்மா.

முதற்கடமை யார் மீது என கேட்க மும்முறை
அருந்தாயைச் சொன்னார்கள்  நபி நாதரே
நபி  மூஸா  சுவனத்து தோழராய் ஆனவர்
முதிர் தாய்க்கு பணி செய்த அரும் தோழரே 
மறை வேதம் கிரந்தங்கள் இறைத்தூதர்  உயர்வாக
உரைக்கின்ற தாய்மைதான் லேசானதா?
என்ன ஈன்ற தாயே  உன் ஆசியே என் வாழ்வு
தாயே உன் நல்லாசி தா என் தாயே !
                                             என் தாயே என் மூச்சு!
                                                       அம்மா ....


 பாடல் - கொள்ளுமேடு, ஹாபீஸ் பாருக் ஹஜ்ரத் அவர்கள்.
பாடல் பாடியவர் -தேரிழந்தூர் தாஜுதீன் அவர்கள்.
வீடியோ - S.E.A. முஹம்மது அலி ஜின்னா, நீடூர்.



தீனிசைத் தென்றல், தேரிழந்தூர் தாஜுதீன் தனது தேனிசைக் குரலால் செறிவுமிக்க இஸ்லாமியப் பாடலைப் பாடி சமூக நலத்தொண்டாற்றி வருகின்றார்.
S.E.A. முஹம்மது அலி ஜின்னா
நீடூர்.
JazakAllah Khayr : جزاك اللهُ خيراً‎
"Allah will reward you [with] goodness."
நன்றி







அல்லாவை அல்லாமல் இறையோனில்லை


அல்லாவை அல்லாமல் இறையோனில்லை
அம்மாவைப் போலிங்கு சொந்தம் இல்லை
சொந்த பந்தம் வாழ்வில் உண்டு - பெற்ற
பெற்ற தாய் போல சொந்தம் ஏது?
                            
                                அல்லாஹ்வைப்...

உயிர் ஒன்று உயிர் செய்ய இறை செய்யும் ஒரு மாயம்
உடல் கொண்டு தாய் செய்ய வைத்தானம்மா

தாய்யுண்ணும் உணவோடு உணர்வெல்லாம் குழந்தைக்கும்
தரமாகப் சேர வைத்தானம்மா!  

தாயாரின் காலுக்குக் கீழ் சொர்க்கம் உண்டென்று
தாஹா நபி சொன்ன மொழி தானம்மா!

தாய் தந்த அன்புக்கும் தாலாட்டுப் பாட்டுக்கும்
யார் என்ன செய்தாலும் நிகராகுமா?
எப்போதும் மெய்தானே !
                                                       அல்லாஹ்வைப்...





அல்லாவை அல்லாமல் இறையோனில்லை !
அம்மாவைப் போலிங்கு சொந்தம் இல்லை
சொந்த பந்தம் வாழ்வில் உண்டு - பெற்ற
பெற்ற தாய் போல சொந்தம் ஏது?
                              



                               அல்லாஹ்வைப்...

Monday, May 7, 2012

அம்மாவுக்கும் மகளுக்கும் உள்ள நேசம் உயர்வானது .

 
     அம்மாவுக்கும் மகளுக்கும் உள்ள நேசம் உயர்வானது . அம்மாவின் அன்புதான் மகளின்  அறிவை வளர்க்கும். தாய்  மகளுக்கு தனக்கு தெரிந்த அத்தனை கலையையும்  சொல்லித் தருவாள்.தனக்கு தெரியாததையும் அறிந்துக் கொள்ள வழி வகுப்பாள். உடை உடுத்துவது முதல் சமைப்பதுவரை தெரியவைப்பாள். பொதுவாக  தாயின்   குணமே மகளுக்கும் இருக்கும்.  அதனால்தான் தாயைப்போல பிள்ளை நூலைப் போல சேலை  என்பார்கள். ஒரு தகப்பன் கெட்டவனாக இருந்தால் அதனால் அந்த தாய் படும் அவதியினைப் பார்த்து அந்த தாய்க்கு  பிறந்த குழந்தைகள் பொறுப்புடன் நடப்பார்கள்.ஆனால் அந்த தாய் நல்லவளாக இல்லையென்றால் அந்த குடும்பமே சீர்கெட்டுவிடும். உன் நண்பனைப் பற்றி சொல் உன்னப் பற்றி  சொல்கின்றேன்
என்பதுபோல் தாயைப்பற்றி சொல் அவள் மகளைப்  பற்றி அறிய முடியும் என்பார்கள். பெண் பார்க்க போகும்போது தாயின் குணங்களை கேட்டு அறிந்துக் கொள்வார்கள். தாயின் வளர்ப்பு முறையும் தாயின் குணமும் பொதுவாக அவள் மகளுக்கு வந்தடைய வாய்ப்பாக உள்ளது.

ஒரு  தாய்க்கு தன்  மகளுக்கு செய்யும்  பணி எளிமையாக  இருக்க முடியாது. தாய் மகளை அன்பு காட்டி நேசமாக வளர்ப்பதால்  இருவருக்கும் நட்பு  மனப்பான்மை உயர்ந்து நிற்கும்.இந்த நிலை தாய்க்கும் அவளது மகனுக்கும் இருப்பதில்லை. தாய்க்கு பணிவிடை செய்வதிலும் மகளே உயர்ந்து நிற்கின்றாள். பெண் பிள்ளை இல்லாத தாய் தனது இறுதிக் காலத்தில் படும் அவதி பரிதாபத்திற்குரியது.
 நபி மொழி
 தாயின் காலடியில் சுவர்க்கம் இருக்கிறது.

பெண்களிடம் நல்ல முறையில் நடந்து கொள்ளுங்கள்.

 ''நான்கு நோக்கங்களுக்காக ஒரு பெண் மணமுடிக்கப்படுகிறாள்;
முதலாவதாக அவளுடைய செல்வத்திற்காக, இரண்டாவதாக அவளுடைய குடும்ப(வம்ச)பாரம்பரியத்திற்காக, மூன்றாவதாக அவளுடைய அழகிற்காக நான்காவதாக அவளுடைய மார்க்க(நல்லொழுக்க)த்திற்காக. எனவே, மார்க்க(நல்லொழுக்க)ம் உடையவளை மணந்து, வெற்றி அடைந்து கொள். அறிவிப்பவர் : அபு ஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு, நூல்: புகாரி


Friday, May 4, 2012

உங்கள் பெயர் என்ன? இதற்கு என்ன பதில்?

உங்கள் பெயர் கேட்டால் பல நாடுகளில் நம் பெயருடன் ஆணாக இருந்தால் தகப்பனார் பெயரும் இணைத்து சொல்ல வேண்டும் அதுவே பெண்ணாகவே இருந்தால் கணவன் பெயரை இணைக்க வேண்டும். அனைத்துக்கும் தகப்பனார் பெயர் கேட்காமல் இருக்க மாட்டார்கள். அல்லது இரண்டாவது பெயர் கேட்பார்கள். (Someone's second name is their family name, or the name that comes after their first name and before their family name.) 

தாய் எங்கே போனால்! அவள் பெறுவதும் வளர்ப்பதும் தான்  பெற்ற குழந்தைக்காக தன்னை அற்பணித்துக் கொள்வதோடு முடிந்து விடுகின்றதா!
குழந்தையை  வளர்க்க தந்தையின் பங்கும் இருக்கலாம் ஆனால் தாயல்லவா ஒன்பது மாதங்கள் சுமந்து நம்மை உருவாக்கினாள்.ஒரு தாய் கருவுற்றதிலிருந்து பிள்ளையைப் பெற்றெடுக்கும் வரை துன்பத்துக்கு மேல் துன்பத்தை அனுபவிக்கிறாள். தன் சிசுவைக் கண்களால் காணாமலேயே அதன் மீது அன்பும், ஆவலும் கொள்கிறாள். கர்ப்ப காலத்தில் உடல் ஆரோக்கியத்திலும் சிசுவின் நலனிலும் அதிக அக்கறை காட்டுகிறாள். பின்னர் குழந்தையைப் பிரசவிக்கும்போது வார்த்தைகளால் வர்ணிக்க முடியாதளவு இன்னல்களைத் தாங்குகிறாள்.பிள்ளையைப் பெற்றெடுத்தபின் குழந்தைப் பருவம் முதல் அதன் வளர்ப்பிலே ஆவலுடன் ஈடுபட்டு, அதற்காக அரும் பாடுபடுகிறாள். தாய் பாசம் காட்டி வளர்ப்பாள் .பிள்ளைகளுக்கு சக்தி நிறைந்த சீம்பாலைக் கொடுத்து உயிருக்குயிராய்க் காப்பாற்றி பாசத்தைக் காட்டி , பரிவைக் காட்டி,கனிவைக் காட்டி, அன்பாகப் பேசி ஆனந்தம் கொடுத்து  அக மகிழ்ந்து ஆனந்தம் அடைவாள்   தன்னை அர்ப்பணிப்பாள். இத்தனைக்கும் அவள் அடைந்த பட்டத்தில் உயர்ந்த பட்டமாக "அம்மா" என்பதுதான் அவளை உயர்த்தி வைகின்றது. அதனால் தாயோடு தந்தையும் இணைத்து பெயர் சொல்வதே பொருத்தம்.

 “(நபியே!) உமதிறைவன் தன்னைத் தவிர (மற்றெவரையும்) வணங்கக் கூடாதென்றும் (கட்டளையிட்டிருப்பதுடன்) தாய் தந்தைக்கு நன்றி செய்யும்படியாகவும் கட்டளையிட்டிருக்கிறான். (17 :23)

Wednesday, May 2, 2012

அம்மாவின் ஆற்றாமையும் அவரது அவசியமான பொய்யும்!

அன்பு மகனே உன் வருகைக்காக வழிமேல் விழி  வைத்து காத்திருந்தேன். என் மகன் பெரிய படிப்பு படித்து வேலையில் சேர்ந்து ஒரு மாதம் முடிந்து முதல் சம்பளம் இன்று வாங்கி வருவான் அதில் வீட்டில் உள்ள அனைவரும் மகிழ்ந்து இறைவனைத் தொழுது அந்த தொகையில் ஒரு பங்கை தர்மம் செய்வதோடு உறவினருக்கும் கொடுத்து ,மற்றொரு பங்கை உனது மேல்  படிப்புக்காக வாங்கிய கடனில் சிறிது கொடுத்து மீதி உள்ளதனில் சிறிது மாத செலவுக்கு சேமிப்பதோடு   மகிழ்வுடன்  நாங்களும் வெகு நாட்களுக்குப் பிறகு  நல்ல உணவு சமைத்து சாப்பிடலாம் என்ற நினைவோடு இருந்தேன் . நான் நினைத்ததை மற்றவர்களிடமும் சொல்லி மகிழ்ந்தேன்.
  பலமணி நேரங்கள் நானும் குடும்பத்தில் உள்ள அனைவரும் காத்திருந்தோம். மாலை நேரம் முடிந்தது. இரவு நேரமும் வந்தது. நீ வந்த பின்புதான் அனைவரும் சேர்ந்து உணவு அருந்தும்  முடிவுடன் இருந்தோம். நேரம் கடந்துக் கொண்டே இருந்தது . ஒவ்வொருவராக அயர்ந்து போய் உண்ணாமலேயே இருந்த இடத்திலேயே அமர்ந்தவாறே தூங்க ஆரம்பித்து விட்டனர்.
நான் மட்டும் உறங்காமல் உன் நலம் நாடி இறைவன் பெயரைச் சொல்லி ஓதிக் கொண்டிருந்தமையால் நடுநிசியில் நீ வந்து வாசற் கதவை தட்டும்போது மலர்ந்த முகத்துடன் உன்னை வரவேற்றேன். 'ஏன் இவ்வளவு நேரம்! உன் வருகைக்காக எல்லோரும் காத்திருக்கிறார்களே நேரத்திற்கே வீடு வந்திருக்கலாமே' என்றேன்!   'அம்மா நான் வருவதாகத்தான் இருந்தேன் ஆனால் என்னோடு  வேலை செய்யும்  நண்பர்கள் என்னை அவர்களுக்கு முதல் சம்பளத்தில் ஒரு விருந்து கொடு என்று பெரிய நட்சத்திர ஹோட்டலுக்கு அழைத்து சென்று விட்டாரர்கள். நான் வாங்கிய சம்பளத்தில் பாதி செலவழிந்து விட்டது' என்றான்.
 நான் போட்ட திட்டங்கள் நிறைவேறாமல் போனதே என்ற  ஆற்றாமை மனதில் இடியாகத் தாக்கினாலும் அதனை வெளியே காட்டிக் கொள்ளாமல் 'நீ இதனை சொல்ல வேண்டாம் மாதக் கடைசியானதால் விடுபட்ட வேலைகளை முடிக்க நேரமாகிவிட்டது மற்றும் பாதி சம்பளம்தான் தந்தார்கள் மீதியை அடுத்த மாதம் தருவதாக சொல்லியுள்ளார்கள்'  என்று சொல்லிவிடு என்றேன்.
 பெற்ற மனது மகனுக்காக பொய் சொல்ல சொல்லிக் கொடுத்தது.
 தவறான காரியம் நிகழாமல் தடுக்கவும், நல்லவரைக் காப்பாற்றவும் மற்றவருக்குள் சமாதானத்தினை உருவாக்கும்  எண்ணத்தோடும் அதனால் ஒரு நல்ல காரியம் நிகழுமென்றால் பொய் சொல்லலாம். குடும்பத்திற்குள் ஒரு கவலை வராமல் இருக்க குடும்பத்தில் உள்ளோர் மகிழ்வுக்காக தாய் தனது மகனுக்காக சொல்லிய பொய்யை இறைவன் மன்னித்தருள்வான். அவன் மிக்க கருணையுள்ளவன்.

Tuesday, December 20, 2011

உங்களை சுமக்கப் போவர்களுக்கு நீங்கள் சுமைத்தாங்கியாக இருங்கள்.

 வாழ்வில் இனிய சுமை குழந்தைகளை சுமப்பது. தன் குழந்தையை சுமப்பது மகிழ்வு தந்தாலும் அதைவிட பேரின்பம் தன் பேரக்  குழந்தைகளை  சுமப்பது. அதிலும் மகள் வழி பேரக்  குழந்தைகளை  சுமப்பது மிகவும் மகிழ்வு தரக் கூடியது. இவைகள் சுமைகள் அல்ல .நமக்கு மன மகிழ்வு தரக் கூடிய மாமருந்து, அனுபவித்து பார்க்கும்போது இதன் அருமை தெரியும். குழந்தை வயிற்றில் இருக்கும் போது எந்த தாயும் அதனை சுமையாக நினைப்பதில்லை. அந்த தாயின் முகத்தின் அழகே உயர்வானது. அந்த நேரத்தில் அவள் எந்த சிரமங்களையும் மகிழ்வாக ஏற்றுக் கொள்வாள். தாய் எந்த எதிர்பார்ப்புமின்றி தன்குழந்தையை பாதுகாத்து வயிற்றில் சுமக்கிறாள்.   இதுதான் தாய்மையின் மகிழ்மை. அந்த தாயை எந்த காலத்திலும்  நாம் சுமையாக கருத முடியுமா! அவளின்றி நாம் ஏங்கே? ஆனால் பெற்ற தாயையே ஒரு பாரமாக நினைப்பது நினைத்துப் பார்க்க முடியாத கொடுமை.

 "நீண்ட நேரம் தொழுகை நடத்தும் எண்ணத்துடன் நான் தொழுகையைத் துவக்குகிறேன். அப்போது குழந்தையின் அழுகுரலை கேட்கிறேன். (எனக்குப் பின்னால் தொழுது கொண்டிருக்கும்) அந்தக் குழந்தையின் தாயாருக்குச் சிரமமளிக்கக் கூடாது என்பதனால் தொழுகையைச் சுருக்கமாக முடித்து விடுகிறேன்" என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : அபு கதாதா (ரலி) அவர்கள்.
நூல் : புஹாரி
 
 ஒருவர் நபி(ஸல்) அவர்களிடம், ‘நான் (இந்த) அறப்போரில் கலந்து கொள்ளட்டுமா?’ என்று கேட்டார். நபி(ஸல்) அவர்கள், ‘உனக்குத் தாய் தந்தையர் இருக்கின்றனரா?’ என்று கேட்டார்கள். அவர், ‘ஆம் (இருக்கிறார்கள்)’ என்று கூறினார். நபி(ஸல்) அவர்கள், ‘(அவ்வாறாயின் திரும்பிச் சென்று) அவர்கள் இருவருக்காகவும் பாடுபடு’ என்றார்கள்.

அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் இப்னு அம்ர்(ரலி)
ஆதாரம்: புகாரி
  
"ஒருவர் தம் தாய் தந்தையரை சபிப்பது பெரும் பாவங்களில் உள்ளதாகும்" என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது "இறைத்தூதர் அவர்களே! ஒருவர் தம் தாய் தந்தையரை எவ்வாறு சபிப்பார்?" என்று கேட்கப்பட்டது. நபி (ஸல்) அவர்கள், "ஒருவர் இன்னொருவரின் தந்தையை ஏசுவார். உடனே (பதிலுக்கு) அவர் இவருடைய தந்தையையும் தாயையும் ஏசுவார் (ஆக, தம் தாய் தந்தையர் ஏசப்பட இவரே காரணமாகிறார்)" என்றார்கள். 

அறிவிப்பவர் : அப்துல்லாஹ் இப்னு அம்ர் (ரலி) 
ஆதாரம் : புகாரி



Sunday, November 27, 2011

படித்ததில் ரசித்தது. ஆழமாய் மனதில் பதிந்த வரிகள்!


எரிவதில் தீபம்...............................அழகு
.

மறைவதில் சூரியன்.......................அழகு.

சுற்றுவதில் புவி.............................அழகு.

வளர்வதில் பிறை..........................அழகு.

மின்னுவதில் விண்மீன்..................அழகு.

தவழ்வதில் குழந்தை......................அழகு.

நடப்பதில் நதி............................... அழகு.

விழுவதில் அருவி........................ அழகு.

உறைவதில் பனி.......................... அழகு.

விளைவதில் நெற்கதிர்..................அழகு.

குளிர்ச்சியில் தென்றல்................. அழகு.

உழைப்பதில் வியர்வை................. அழகு.

பாடுவதில் குயில்......................... அழகு.

பறப்பதில் பருந்து..........................அழகு.

காதலில் புரிதல்........................... அழகு.

உறவினில் நட்பு...........................அழகு.


மொழிகளில் எனது மொழி "தமிழ்"..அழகு.

இத்தனைக்கும்

இதற்கு மேலேயும்

எப்போதும் என் "தாய்" எனக்கு......."அழகு".


{படித்ததில் ரசித்தது. சிறிய மாற்றங்களுடன் பகிர்ந்துள்ளேன்.}

Mansur Ali
Abu Hurairah, may Allah be pleased with him, reported: A person came to Allah's Messenger (may peace be upon him) and said: Who among the people is most deserving my companionship (of a kind treatment from me?) He said: Your mother. He, again, said: Then who (is the next one)? He said: It is your mother (who deserves the best treatment from you). He said: Then who (is the next one)? He (the Holy Prophet) said: It is your mother. He (again) said: Then who? Thereupon he (The Prophet (peace be upon him)) said: It is your father.