Friday, November 8, 2013

காதல் என்பது ...

காமத்தை
சுமந்துகொண்டே
செல்வதால்
காதல் இங்கே
கழுதைகளின்
அழுக்கு மூட்டை !
o
கடற்கரைகளும்
குளிரூட்டப்பட்ட
வாடகை அறைகளும்
இங்கே
காதலை
கற்பழிப்பு செய்கின்றன !
o
முளையிலே வந்த
முறையில்லாக் காதல்
காவல் நிலையத்தில்
கையெழுத்துப் போடுகிறது!

o
இவன்தானென்று
நிச்சயித்து ...
நிலம் பார்த்து ...
தன் நிழல் பார்த்து ...
மணமேடை வரும்
நாள் பார்த்து ...
நாளெல்லாம்
நாணிக்கிடந்து ...
நாயகன்
முகம் பார்க்க
பூத்துக் கிடப்பது
புனிதக் காதல் !
o
காதலுக்காகத்தான்
வானமே
கொஞ்சம் வழி விட்டது!
o
ஆதமும் ஹவ்வாவும்
ஆடையை மறந்து வந்தார்கள்
ஆசையை சுமந்து வந்தார்கள்!
o
காதல் சுவனத்தின்
இறக்குமதி!
o
சொர்க்கத்தில் நிச்சயிக்கப்பட்டதை
சொப்பனத்திலும் தேடுவது
காதல்!
o
நோகாத இடியும்
கருகாத மின்னலும்
குடை பிடிக்காத மழையும்
மனசுக்குள்
நாளெல்லாம் தருவது
காதல்!
o
நோய் வந்தாலும்
பாயில் படுக்க விடாத
துன்பம்
காதல்!
o
நோயும் அதுதான்
மருந்தும் அதுதான்
மருத்துவன்
இறைவன்!
o
உப்பில்லாத உணவைப் போன்றது
காதலில்லாத வாழ்க்கை!
o
உயிரில்லாத உடலைப் போன்றது
காதல் இல்லாத மனசு !
o
நெருப்பின்
ஒரு பொறியைப்போல
காதல்
பற்றிக் கொள்ளும்
காலம் முழுதும்
அதுவே
காதலாய் வாழ்கையில்
பற்றுதல் கொள்ளும் !
o
காதலுக்கும் உண்டு வாசம்
அது -
தான் நேசிக்கும்
உயிரோடு மட்டுமே பேசும் !
o
காலங்களானாலும்
காதல்
காத்திருக்கும்
காதலுக்காக!
o
காதல்
கண் விழித்து
பாதுகாக்கும்
காதலின் பரிசுகளை !
o
காதல்
தேகத்தில் மட்டுமல்ல
தியாகத்திலும் என்பதை
வாழ்ந்து காட்டும்!
o
கண்ணீரில் நனைந்தாலும்
காதலின்
நிறம் வெளுக்காது!
o
கொண்டவனேயன்றி
கண்டவனையும்
அண்டவிடாத
கற்புள்ளது காதல்!
o
காதல் -
மனங்களின் தவம்
இறைவன் தந்த வரம்!
o
காதலிப்போம் -
காதலைக்
காதலிப்போம் !

கவிதை : அபூ ஹாஷிமா

No comments: