Saturday, November 16, 2013
நேருவின் ரோஜா
கணவரின் கைபிடித்து முதன்முதலாக புகுந்த வீட்டுக்குள் நுழைந்த கமலாவுக்கு படபடவென்று நெஞ்சு அடித்துக் கொண்டது. இதற்கு முன்பாக இவ்வளவு பெரிய வீட்டை பார்த்தது கூட இல்லை. நவநாகரிக தோற்றத்தில் இருந்த மாமியார் வீட்டாரை பார்த்ததுமே, எப்படித்தான் இங்கே காலத்துக்கும் வாழப்போகிறோமோ என்று அச்சப்பட்டார். பதினேழு வயது. முகத்தில் அப்பட்டமாக அச்சம். டெல்லியில் காஷ்மீரி பிராமண குடும்பத்தில் பிறந்தவர். ஆச்சாரமான நடுத்தரக் குடும்பம். நொடிக்கு நாலு முறை வெட்கப்படுவார். வாய்திறந்து ‘களுக்’கென்று பேசமாட்டார். ரொம்பவும் அமைதியான சுபாவம். பெரிய குடும்பத்தில் பெண் கேட்கிறார்கள் என்றதுமே எதையும் யோசிக்காமல் கன்னிகாதானம் செய்துவிட்டார் கமலாவின் அப்பா.
அலகாபாத்துக்கு வந்தபிறகுதான் தெரிந்தது, தான் வாழ்க்கைப்பட்டிருக்கும் குடும்பம் அரசக்குடும்பத்துக்கு நிகரான அந்தஸ்தோடு வாழ்கிறார்கள் என்று. ‘ஆனந்த பவன்’ என்கிற அந்த மாபெரும் மாளிகைக்குள் கவனமாக வலதுகாலை எடுத்து வைத்து நுழைந்தார் கமலா நேரு.
மேற்கத்திய நாகரிகத்தில் வாழும் கணவர். வீட்டில்கூட நுனிநாக்கு ஆங்கிலத்தில் பேசுவதை பார்க்க பார்க்க பற்றிக்கொண்டு வந்தது. கமலாவுக்கு ஒரு வார்த்தைகூட ஆங்கிலத்தில் பேசவராது. மனைவியையும், குடும்பத்தையும் விட நாடுதான் முக்கியம் நேருவுக்கு. எப்போது பார்த்தாலும் அரசியல், போராட்டம், பயணம். திருமணமாகி சில நாட்களிலேயே இமாலயத்துக்கு ‘டூர்’ போட்டார் நேரு. தேனிலவு அல்ல, தனியாகதான். பின்னர் தன்னுடைய வாழ்க்கை வரலாற்றில் இச்சம்பவத்தை எழுதும்போது, “அப்போது கிட்டத்தட்ட கமலாவை நான் மறந்தேவிட்டேன்” என்று வேடிக்கையாக குறிப்பிடுகிறார் நேரு.
“எங்கள் மணவாழ்வில் நாங்கள் இருவரும் சேர்ந்திருந்த நாட்களை விரல்விட்டு எண்ணிவிடலாம். அரிதிலும் அரிதான அச்சந்திப்புகளுக்கு விலைமதிப்பே இல்லை” என்றும் நேரு சொல்கிறார்.
கமலாவின் ஒரே ஆறுதல் நாத்தனார் விஜயலஷ்மி பண்டிட்தான். நேருவுக்கு இணையான புத்திக்கூர்மையும், கல்வியறிவும் பெற்றிருந்தவர். தன்னுடைய அண்ணியை எப்படியாவது தேற்றிவிட வேண்டுமென்று விஜயலட்சுமி கடுமையாக முயற்சித்தார். அவரது உழைப்பு வீண் போகவில்லை. சீக்கிரமே மாமியார் வீட்டை புரிந்துக்கொண்டு, தன்னை புகுந்த வீட்டோடு இயல்பாக பொருத்திக்கொள்ள தொடங்கினார் கமலா. கல்யாணம் ஆன அடுத்த வருடமே நேருவை அச்சு அசலாக உரித்துக்கொண்டு அழகான மகள் பிறந்தாள். இந்திரா பிரியதர்ஷனி. இந்திராவுக்கு பிறகு பிறந்த மகன், ஒரு வாரத்திலேயே காலமாகிவிட்டான்.
கணவர் ஏன் எப்போதும் ஊர் சுற்றிக் கொண்டே இருக்கிறார் என்று வருத்தப்பட்டுக் கொண்டிருந்த கமலாவுக்கு சுதந்திரப் போராட்டம், காங்கிரஸ் குறித்து பாடமெடுத்தார் விஜயலஷ்மி. இதையடுத்து நாட்டுக்காக கணவரோடு இணைந்து போராடுவது தன்னுடைய கடமை என்கிற முடிவுக்கு அவர் வந்தார்.
1921ல் நடந்த ஒத்துழையாமை இயக்கம் மூலமாக பொதுவாழ்வுக்கு வந்தார். அலகாபாத் நகர் மகளிரை ஒன்றிணைத்தார். அயல்நாட்டு பொருட்களையும், மதுவகைகளையும் விற்றுவந்த கடைகளுக்கு முன்பாக மறியல் செய்தார். ஒத்துழையாமை இயக்கத்தின் அவசியத்தை விளக்கி மாபெரும் பொதுக்கூட்டம் ஒன்றினை நடத்த நேரு திட்டமிட்டிருந்த நிலையில், அவரை வெள்ளையர் கைது செய்தனர்.
கணவர் திட்டமிட்டிருந்த கூட்டத்தை வெற்றிகரமாக கமலா கூட்டினார். அக்கூட்டத்தில் ஆற்றுவதற்காக நேரு தயார் செய்திருந்த உரையை கமலா வாசித்தார். அந்நிய ஆட்சிக்கு எதிராக போர் முழக்கம் புரிந்தார். சில ஆண்டுகளுக்கு முன்பாக ஆங்கிலவாசனையே இல்லாமல் ஆனந்தபவனுக்குள் கமலாவா இதுவென்று நேரு குடும்பத்துக்கே ஆச்சரியம்.
நேருவுக்கு இணையான அச்சுறுத்தல் அவரது மனைவி கமலாவாலும் தங்களுக்கு நேரலாம் என்று வெள்ளையர்கள் யூகித்தனர். ஏனெனில் கமலாவின் பின்னால் அலகாபாத் பெண்கள் மட்டுமல்லாமல், நாடு முழுக்கவிருந்த பெண்களும் அணிதிரள தயார் ஆனார்கள். அடுத்தடுத்து இருமுறை கமலா கைது ஆனார். தொடர்ச்சியான போராட்டங்கள், சிறைவாசமென்று அவரது உடல் சீர்குலைந்தது. ஏற்கனவே காசநோய் பிரச்சினை இருந்தது. சிறப்பு சிகிச்சை அளிப்பதற்காக ஐரோப்பாவுக்கு மனைவியை அழைத்துச் சென்றார் நேரு. இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, சுவிட்சர்லாந்து என்று பல இடங்களுக்கும் மகள், மனைவியோடு சுற்றிக் கொண்டிருந்தார்.
இந்தியாவில் உப்பு சத்தியாக்கிரக போராட்டங்கள் உக்கிரம் பெற்ற நிலையில் குடும்பத்தோடு அப்போராட்டங்களில் கலந்துகொண்டார். நேரு, அவரது மனைவி, தங்கை என்று மொத்தமாக குடும்பத்தோடு சிறைவைக்கப் பட்டார்கள். சிறையில் மீண்டும் கமலாவின் உடல்நிலை படுமோசமானது. ஐரோப்பாவில் அவருக்கு சிகிச்சை தேவைப்பட்ட நிலையில் வெள்ளையர் அரசு கருணை அடிப்படையில் அவர்களை விடுதலை செய்தது.
சுவிட்சர்லாந்தில் கமலாவுக்கு சிகிச்சை தொடர்ந்தது. அவர் படுத்த படுக்கையானார். இந்தியாவில் நேருவின் சுதந்திரப் போராட்டம், சுவிட்சர்லாந்தில் கமலாநேரு உயிருக்குப் போராட்டமென்று குடும்பம் தத்தளித்தது.
இந்த அவலம் வெகுவிரைவிலேயே முடிவுக்கு வந்தது. கமலா நேரு 1936ல் தன்னுடைய 37வது வயதில் சுவிட்சர்லாந்தில் காலமானார். மனைவியின் நினைவாக தன்னுடைய உடையில், கமலாவுக்கு பிடித்த சிகப்பு ரோஜாவை செருகிக்கொள்ளத் தொடங்கினார் நேரு. இந்தப் பழக்கம் 1964ல் அவர் மரணிக்கும் வரை தொடர்ந்தது.
#படித்ததில்_பிடித்தது
தகவல் தந்தவர்
--------------------------------------------------------------------
நேரு அவர்களுடன் எனது அண்ணன் அப்துல்ஹக்கீம் அவர்கள்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment