Wednesday, November 27, 2013
பொழுதுகளின் எல்லையற்ற நீட்சிகளில் ...
பொழுதுகளின்
எல்லையற்ற நீட்சிகளில்
நீந்திச் செல்லும்
எண்ணற்ற காட்சிகளிலும்
வந்து வந்து
கலைந்து செல்கிறது
அது !
குதூகலிக்கும் தருணங்களிலும்
கூடிக்கூடி குலாவி
கும்மாளமிடும்
குடும்ப சங்கமங்களிலும்
எங்கோ ஒரு மூலையில்
ஒளிந்து கொண்டுதான் இருக்கிறது
அது !
ஆரவார சிரிப்புகளின்
விளிம்புகளிலும்
நழுவி விழுந்துவிடும்
சாகச சந்தர்ப்பங்களிலும்
தடுமாறி நிற்கிறது
அது !
எத்தனையோ புன்னகைகள்
போர்த்தப்பட்ட பின்னும்
போலியாய் புன்னகைத்து
உமிழ்நீர் விழுங்கி
ஊமையாகி
எழுந்துபோன
தருணங்களிலும்
எங்கோ ஒரு மூலையில்
முனங்கிக் கொண்டேதான்
இருக்கிறது
அது !
உடல் ஒடுங்கி
உறக்கத்தில்
விழுந்த பிறகும்
அடங்காமல்
நடுநிசி கடந்து
நெஞ்சு முட்டும்
துயரத்தை
அடக்கமுடியாமல்
மகளை இழந்து
விம்மியழும்
தாய்க்கு
எதைத் தந்து
ஆறுதல் தருவேன்
கண்ணே என் ரஹ்மானே ...
(ரஹ்மான்=அகிலங்கள் எல்லாவற்றையும் படைத்து வளர்த்துப் பரிபக்குவப்படுத்தும் (நாயனான) அல்லாஹ் (இறைவன்)
கவிதை யாத்தவர் : அபூ ஹாஷிமா
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment