Monday, November 11, 2013

மங்கையருக்கு ஒப்பான மலர்கள்!

''பூமி முளைக்கச் செய்வதில் இருந்தும், அவர்களிருந்தும், அவர்கள் அறியாதவற்றிருந்தும் ஜோடிகள் அனைத்தையும் உருவாக்கியவன் தூயவன். (அல்குர்ஆன் 36:36)

இந்த வசனத்தை, ஸுப்ஹானல்லதீ.... என்ற சொற்றொடருடன் திருக்குர்ஆன் துவக்குகின்றது. மிக மகத்தான அற்புதத்திற்கும், அதிசயத்திற்கும் தான் அல்லாஹ் இந்த வார்த்தையைப் பிரயோகிக்கின்றான். இதே வார்த்தையை கீழ்க்கண்ட வசனத்திலும் உபயோகிக்கின்றான்.

''மஸ்ஜிதுல் ஹராமிருந்து, சுற்றுப்புறத்தைப் பாக்கியம் மிக்கதாக நாம் ஆக்கிய மஸ்ஜிதுல் அக்ஸா வரை தனது சான்றுகளைக் காட்டுவதற்காக ஓர் இரவில் தனது அடியாரை (முஹம்மதை) அழைத்துச் சென்றவன் தூயவன். அவன் செவியுறுபவன்; பார்ப்பவன். (அல்குர்ஆன் 17:1)
 
ஜோடிகளைப் படைப்பதில் நிகரற்றவன்
அறிவியல் வளர்ந்திராத ஒரு காலத்தில் ஆயிரக்கணக்கான மைல்கள் தரை மார்க்கமாகவும் பின்னர் ஆகாய மார்க்கமாகவும் போய் விட்டுத் திரும்புவது மனித அறிவு கற்பனை செய்து பார்க்க முடியாத ஒரு காரியமாகும்.
அத்தகைய அதிசயத்தைக் கூறுவதால் இதற்கும் அல்லாஹ், ''ஸுப்ஹான'' லி தூய்மையானவன், தனக்கு நிகரானவன் எவனும் இல்லை என்று குறிப்பிடுகின்றான். அதைப் போன்று தான் இந்தத் தாவர இனத்தில், ஜோடிகளைப் படைத்திருப்பதில் தனக்கு நிகரானவன் எவனும் இல்லை என்று கூறுகின்றான்.
தாவர இனத்தில் அப்படி என்ன ஒரு ஜோடி அமைப்பு? என்று தாவரத்தின் இனப் பெருக்கத்தையும், அதற்கு வழிவகை செய்யும் மகரந்தச் சேர்க்கையையும் பார்க்கும் போது ஆச்சரியத்தில், அதிசயத்தில் அல்லாஹ்வின் அற்புதத்தில் ''ஸுப்ஹானக்க லி - நீ தூய்மையானவன்'' என்று மெய் சிலிர்த்துக் கூறி நிற்கின்றோம்.
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் காலத்தில் தாவர இனத்தில் ஆண், பெண் இனங்கள் இருக்கின்றன என்ற விபரம் மக்களுக்கு மேலோட்டமாகத் தெரிந்திருந்தது. அது முழுமையாக அவர்களுக்குத் தெரிந்திருக்கவில்லை என்பதற்கு கீழ்க்காணும் ஹதீஸ் சான்றாக அமைந்துள்ளது.

மாநபி காலத்தில் மகரந்தச் சேர்க்கை
பேரீச்ச மர உச்சியில் இருந்த மக்களை அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடன் நான் கடந்து சென்றேன். அப்போது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்,
''இவர்கள் என்ன செய்கின்றார்கள்?'' என்று கேட்டார்கள்.
''ஆண் மரத்தைப் பெண் மரத்துடன் இணைத்து மகரந்தச் சேர்க்கை செய்கின்றனர். அதனால் அது சூலுறும்'' என்று அம்மக்கள் பதிலளித்தனர். அதற்கு அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்,
''இது எந்தப் பயனையும் அளிக்கும் என்று நான் எண்ணவில்லை'' என்று சொன்னார்கள். இந்தச் செய்தி அம்மக்களுக்குத் தெரிவிக்கப் பட்டதும் அவர்கள் மகரந்தச் சேர்க்கையை விட்டு விட்டனர். ''இது அவர்களுக்குப் பயன் தருமானால் அதை அவர்கள் செய்து கொள்ளட்டும். நான் தெரிவித்தது (எனது) எண்ணத்தைத் தான். இந்த எண்ணத்தின் மூலம் என்னை நீங்கள் பிடித்து விடாதீர்கள். எனினும் அல்லாஹ்வைப் பற்றி (மார்க்கம் தொடர்பாக) உங்களுக்கு எதையேனும் தெரிவித்தால் அதை நீங்கள் எடுத்துக் கொள்ளுங்கள். ஏனெனில் மகத்துவமும் கண்ணியமும் நிறைந்த அல்லாஹ்வின் மீது ஒருபோதும் நான் தவறான செய்தி கூற மாட்டேன்'' என்று சொன்னார்கள். (அறிவிப்பவர்: தல்ஹா பின் உபைதுல்லாஹ் ரளியல்லாஹு அன்ஹு நூல்: முஸ்ம் 4356)

தாவர இனத்தில் ஆண், பெண் இனச் சேர்க்கை உள்ளது என்ற மேலோட்டமான விளக்கம் மட்டும் அன்றைய மக்களிடம் இருந்தது. ஆழ்ந்த விளக்கம் இல்லை. அதற்கான அறிவியல் சாதனங்கள் அன்றைய கால மக்களிடம் இல்லை.
ஆனால் இன்று அறிவியலார்கள் தாவர இனத்தை சோதனைப் பகுப்பாய்வுக் கூடத்திற்குக் கொண்டு வந்து, அதனுடைய வேர் வரைக்கும் சென்று, தாவர இனத்தை அக்கு வேறு ஆணி வேறாக அலசி, ஆய்ந்தெடுத்து விட்டார்கள்.
அவர்களது இன்றைய காலத்து மகரந்தச் சேர்க்கை பற்றிய கண்டு பிடிப்புகள் மேற்கண்ட வசனத்தில் அல்லாஹ் கூறுவது போல், ''ஸுப்ஹானல்லாஹ்'' என்று கூற வைக்கின்றது.
இப்படி, ஸுப்ஹானல்லாஹ், ஸுப்ஹானல்லாஹ் என்று மூச்சுக்கு மூச்சு சொல்ல வைக்கின்ற தாவர இனத்தில் ரகசிய சுரங்கத்திற்குள் இந்த அறிவியல் எனும் கைவிளக்குடன் சென்று வருவோம்.
மகரந்தச் சேர்க்கை என்பது ஒரு மலரின் மகரந்தத் தூளானது, மலரின் சூலக முடியை அடைவதாகும். இத்தகைய மகரந்தச் சேர்க்கை இரு வகையில் நடக்கிறது. 1. தன் மகரந்தச் சேர்க்கை 2.அயல் மகரந்தச் சேர்க்கை.
தன் மகரந்தச் சேர்க்கை என்பது ஒரு மலரின் மகரந்தத் தூள் அதே மலரின் சூலக முடியை அடைவதாகும். அயல் மகரந்தச் சேர்க்கை என்பது ஒரு மலரின் மகரந்தத் தூள் வேறு மலரின் சூலக முடியை அடைவதாகும்.
அயல் மகரந்தச் சேர்க்கையும் அதன் அற்புதங்களும்

மங்கையரைக் கவிஞர்கள் மலர்களுக்கு ஒப்பிடுவார்கள். உண்மையில் இந்த உவமையும் ஒப்பீடும் மிகப் பொருத்தமானதாகும்.
பெண்களின் கவர்ச்சியும், காந்தமிகு ஈர்ப்பு சக்தியும் தான் இதற்குக் காரணம். அதனால் தான், அவர்களின் கவர்ச்சியைக் கவனத்தில் கொண்டு தான் அவர்களுக்கு புர்கா எனும் கவசத்தை இறைவன் அணியச் சொல்கின்றான்.
மனித இனத்தின் பெருக்கத்திற்குப் பயன்படுகின்ற மகளிருக்குக் கொடுத்துள்ள அதே கவர்ச்சியை அல்லாஹ் மலர்களுக்கும் கொடுத்து பூச்சியினங்களைக் கவர்ந்து இழுக்கச் செய்கின்றான்.
பூக்களும் பூச்சிகளும்
அயல் மகரந்தச் சேர்க்கை நடைபெறும் பூக்கள், வட்டமடித்துப் பாடி நிற்கும் தேனீக்களை, வண்டுகளை, வண்ணத்துப் பூச்சிகளை, வவ்வால்களை, விட்டில்களை வளைத்துத் தங்கள் பக்கம் ஈர்க்கும் வண்ணம், வண்ண, வண்ண நிறங்களைப் பெற்றிருக்கின்றன.
வருகின்ற தேனீக்கள், வண்டு மற்றும் இதர பூச்சியினங்களை மையல் கொள்ள வைக்கும் நறுமணத்தையும் பூக்கள் பெற்றிருக்கின்றன.
தங்கள் வண்ணங்களிலும், வாசனையிலும் மயங்கி வந்த அந்தப் பூச்சிகளுக்கு அந்தப் பூக்கள் மகரந்தத் தூளையும், மதுரத் தேனையும் பரிசாக வழங்குகின்றன.
மலரின் மயக்கும் பகட்டான பாகங்கள்
மலரைத் தாங்கிக் கொண்டிருக்கும் உறுப்பு மலர்க் காம்பு என்று பெயர். மலர்க் காம்பின் நுனிப்பகுதியில் பூத்தளம் உள்ளது. பூத்தளத்தில் மலரின் உறுப்புகள் அமைந்துள்ளன. மலரின் அடுத்தடுத்த நான்கு வட்டங்களில் மலரின் பாகங்கள் உள்ளன.
அவற்றில் வெளி அடுக்கு புல் வட்டம் எனப்படும். இது புல் இதழ்களால் ஆனது. இந்தப் புல் வட்டம் இலைகளைப் போன்று பசுமை நிறத்தைக் கொண்டிருக்கும். மலர் அரும்பாக இருக்கும் போது அதை மூடிக் காப்பது இதன் வேலையாகும்.
மலரின் இரண்டாம் அடுக்கு அல் வட்டம் எனப்படும். இது அல் இதழ்களால் ஆனது. இது தான் மகரந்தச் சேர்க்கைக்கு வண்டு மற்றும் பூச்சிகளை ஈர்க்கிறது. புல் வட்டமும், அல் வட்டமும் துணை வட்டங்கள் எனப்படும். இவை இனப்பெருக்கத்தில் நேரடியாக ஈடுபடுவதில்லை.இந்த அல்
வட்டம் தான் பகட்டான வண்ணத்தையும், நல்ல நறுமணத்தையும் கொண்டிருக்கும் பகுதியாகும். இந்தப் பகுதி தான் பூச்சிகளைத் தங்கள் பக்கம் இழுத்து மகரந்தச் சேர்க்கைக்கு உதவுகின்றன.
மூன்றாம் வட்டம் மகரந்தத் தாள் வட்டம் ஆகும். இது மலரின் ஆண் பாகம் ஆகும். ஒவ்வொரு மகரந்தத் தாளிலும் மகரந்தப் பையும், மகரந்தத் தாள் கம்பியும் உள்ளன. மகரந்தப் பையில் மகரந்தத் தூள்கள் உருவாகின்றன.
நான்காம் வட்டம் சூலக வட்டம் ஆகும். இது மலரின் பெண் பாகம் ஆகும். இதில் சூல்பை, சூல் தண்டு, சூலக முடி என மூன்று பாகங்கள் உள்ளன.
பூக்களின் இந்தச் சுற்று வட்டங்களுக்குள் இப்படி ஒரு மகரந்தத் தூளை உருவாக்கி, மதுர சுவை மிகு பானத்தைச் சுரக்க வைத்து தாவர இனத்தின் பெருக்கத்திற்காக அவற்றை ஜோடியாக ஆக்கி வைத்த இறைவன் உண்மையில் தூய்மையானவன்.
மலரில் சுரக்கும் இந்த சுவை பானம் சூரியனின் சுட்டெரிக்கும் வெயில் ஆவியாகி விடாமலும் கொட்டுகின்ற மழை நீரில் கரைந்து விடாமலும், மகரந்தச் சேர்க்கைக்குப் பயன் தராத பூச்சிக்கள் இந்தப் பானத்தைச் சூறையாடி விடாமலும் சுத்தமான பாதுகாப்பை ஏற்படுத்தியிருக்கின்றது இயற்கை என்று அறிவியலார்கள் சொல்கின்றார்கள்.
ஆனால் அது இயற்கை அல்ல! எல்லாம் வல்ல அல்லாஹ் தான் என்று நாம் சொல்கின்றோம். இப்படி ஒரு படைப்பு இரகசியமா? என்று வியந்து அவன் தூய்மையானவன் என்று கூறுகின்றோம்.
''Jazaakallaahu khairan'' கடையநல்லூர் அக்ஸா.காம்

No comments: