Friday, November 29, 2013

எல்லைகள் கடந்த மனித நேயம்


இந்த பூமியின் இயற்கை முழுவதும் ஏதோ ஒரு அழகிய வகையில் இணைந்தே கிடக்கிறது. கால் நனைக்கும் கடலின் முதல் துளியையும் உலகின் மறுகோடியில் கிடக்கும் கடைசித் துளியையும் ஏதோ ஒரு ஈர இழை தான் இணைத்துக் கட்டுகிறது. உலகின் ஒரு துருவத்தையும், மறு துருவத்தையும் காற்றின் ஏதோ ஓர் கயிறு தான் இறுக்கிக் கட்டுகிறது. நம் தலைக்கு மேல் விரியும் வானமும் தேசங்களுக்கு மேல் கரம்கோத்தே கிடக்கிறது. பிரிந்தே இருந்தாலும், இணைந்தே இருக்கும் வித்தை கற்றிருக்கிறது இயற்கை. ஆனால் மனிதர்களோ இணைந்தே இருந்தாலும் மனதால் பிரிந்தே இருக்கிறார்கள் !

மனிதர்களும் பிரிந்தே இருந்தாலும் இணைந்தே இருக்கும் வல்லமை பெற்றிருந்தால் வாழ்க்கை அர்த்தப்படும். அந்தப் பிணைப்பை நல்கும் ஒரே ஒரு ஆயுதம் அன்பு தான் ! ஒரு இதயத்தில் ஊற்றெடுக்கும் அன்பு, மற்ற இதயங்களுக்குள் சாரலடித்துச் சிரிக்கும் போது மனித வாழ்க்கை அழகாகிறது. ஆனால் அந்த ஊற்றை உள்ளுக்குள்ளேயே புதைத்து வைக்கும் போது சுயநலச் சுருக்குப் பைகளாய் மனித வாழ்க்கை சுருங்கி விடுகிறது !


தன்னலச் சுவர்களை உடைத்துக் கடக்கும் மனித விரல்கள் மனித நேயத்தை அணிந்து கொள்கின்றன. அந்த மனித நேயம் தேவையான வாசல்களைத் தேடிச்சென்று உறவைப் பகிரும் உன்னத வேலையைச் செய்கிறது. நோயாளிகளின் படுக்கைகளின் அருகே ஆறுதல் கரங்களாய் மாறுகிறது. வறுமையின் வயிறுகளில் சோற்றுப் பருக்கைகளாய் உருமாறுகிறது. பாரம் சுமக்கும் தொழிலாளியின் தோள்களாய் மாறுகிறது. தேவையென நீளும் கரங்களின் உள்ளங்கைகளில் பொருளாதார பரிசுகளாக மாறிப் போகிறது. தன்னலத் தடையுடைக்கும் நதிகள் அன்பின் அருவிகளாக அவதாரம் எடுக்கின்றன.

மதங்கள் மனிதநேயத்தை தங்கள் அடித்தளமாய் அமைத்திருக்கின்றன. ஆனால் அவற்றின் மேல் மதங்களின் சடங்குகளும் சம்பிரதாயங்களும் பாசி போலப் படிந்து படிந்து உண்மையான அடிப்படையை உலகமே மறந்து கொண்டிருக்கிறது. சடங்குகளின் துகிலுரித்து உண்மையின் நிர்வாணத்தைக் கண்டுகொள்ளும் ஞானம் பலருக்கும் இருப்பதில்லை. அவர்கள் சாரலில் நனைந்து அதையே பெருமழையென புரிந்து கொள்கிறார்கள். அவர்கள் தங்களைத் தாண்டுவதும் இல்லை, உண்மையைத் தீன்டுவதும் இல்லை. மதக் கலவரங்களின் வேர்கள் இத்தகைய போலித்தனங்களின் மேல் பற்றி படர்ந்திருக்கின்றன.

இதயத்தில் மனித நேயம் இருக்க வேண்டியது மானுடத்தின் கட்டாயத் தேவை. அதற்கு வேர்களை விசாரிக்கும் வலிமை வேண்டும். மரங்களின் இயல்புகளைப் பொறுத்தே அதன் கனிகளும் அமையும். மாமரத்தின் கிளைகளில் ஆப்பிள் பழங்கள் விளைவதில்லை. ஆனால் போலித்தனமான மனிதர்களோ பட்டுப் போன கிளைகளில் கூட பழங்களை ஒட்டவைத்து நடக்கிறார்கள். வெளிப்படையான சில செயல்களால் தங்களை புனிதர்களாய்க் காட்டும் சுய விளம்பரதாரர்கள் அவர்கள். அவர்கள் மனிதநேயம் உள்ளவர்கள் போல நடிக்கும் வித்தைக்காரர்கள்.

உண்மையான மனிதம் வேர்களில் நிலவும். அதன் கனிகள் அதற்கேற்ப விளையும். ஒட்டவைக்கும் பழங்கள் அங்கே இருப்பதில்லை. மொட்டவிழ்ந்த பழங்களே விளையும். கனிகளால் மரங்கள் அடையாளப்படும். கனிகளால் தோட்டங்கள் அர்த்தப்படும். போலித்தனமில்லா ஒரு பழத்தோட்டம் விழிகளில் விரியும். உள்ளுக்குள் ஊற்றெடுக்கும் அன்பு இத்தகையதே ! அது இயல்பிலேயே கனிகொடுக்கும் மரமாக செழித்து வளர்க்கிறது !

மனிதநேயம், கர்வத்தைக் கழற்றி வைக்கும். நான் பெரியவன் எனும் சிந்தனைகளின் படிகளில் மனித நேயம் நடை பழகுவதில்லை. எனவே தான் ஏற்றத்தாழ்வுகளைச் சிந்திக்கும் மனங்கள் மனித நேயத்தை விட்டு வெகுதூரத்தில் கூடாரம் கட்டிக் குடியிருக்கின்றன. கர்வமற்ற மனது தான் மனிதனை மனிதனாய்ப் பார்க்கும். தூணிலும் துரும்பிலும் கடவுளைப் பார்ப்பதை விட, காணும் மனிதர்களில் இறைவனைப் பார்க்கும் ! அப்போது சக மனிதனை நேசிக்கவும், மதிக்கவும், அன்புடன் அரவணைக்கவும் அதற்கு சிக்கல் எழுவதேயில்லை.

மனித நேயம் உலகெங்கும் இருக்க வேண்டிய மனித இயல்பு. அது மட்டும் வாய்த்துவிடின் மதங்களின் சண்டைகளோ, இனப் பாகுபாடுகளோ உலகில் உருவாவதில்லை. சண்டைகளின் வரவு, இறைவனை அறியாததன் விளைவு. மனித நேயம் இல்லாததன் செயல் வடிவமே வன்முறை !

உங்களிடம் மனித நேயம் இருக்கிறதா ? ஒரு அவசர பரிசோதனை செய்து பாருங்கள். உங்கள் மேலதிகாரிக்கும் கொடுக்கும் மரியாதையையும் அன்பையும் உங்கள் உடன் பணியாளருக்குக் கொடுக்கிறீர்களா ? உங்கள் நண்பருக்குக் கொடுக்கும் அன்பை உங்கள் சமையல் காரருக்குக் கொடுக்கிறீர்களா ? உங்கள் பிள்ளைகளைப் போலவே தெருவோர ஏழையின் அழுக்குக் குழந்தையை அரவணைக்கிறீர்களா ? மனித நேயத்தின் சிதைந்து போன சிதிலங்கள் உங்கள் விழிகளுக்கு முன்னால் புதிய விடைகளை எழுதும்.

இன்னும் கேள்விகள் எழலாம். சகமனிதனின் வெற்றி உங்களை மகிழவைக்கிறதா ? ஆனந்தமாய் ஆடிப் பாட வைக்கிறதா ? அவனுக்குக் கிடைக்கும் வசதிகளும், பெருமையும் உங்களை ஆனந்தமடையச் செய்கிறதா ? இல்லை எரிச்சலின் உச்சியில் எறிகிறதா ? அடுத்தவனின் தோல்வியில் நீங்கள் உடைந்து போய் அழுகிறீர்களா ? இல்லை அவை வெறும் வேடிக்கைக் கதையாகி வெறுமனே செல்கிறதா ? சிந்தித்துப் பாருங்கள். உங்கள் கேள்விகளின் விடைகளில் இருக்கிறது உங்கள் மனிதநேயத்தின் எல்லைகளும், ஆழங்களும் ! உங்கள் விடைகளின் அடிப்படையில் உங்கள் செயல்களை மாற்றிக் கொள்ளுங்கள்.

வாழ்க்கை மிகவும் அழகானது. இணைந்தே வாழ்வதற்காய் நமக்குக் கிடைத்திருப்பது தான் இந்த வாழ்க்கை. எனவே அன்பினால் உலகைத் தீண்டுவோம். நேசத்தால் உயிர்களைத் தொடுவோம். கோபத்தில் எல்லைகளையும், பொறாமையின் தடைகளையும் உடைத்தே எறிவோம்.

அன்பின்றி அமையாது உலகு !
அதுவே அணையாத ஆன்மீக விளக்கு !




சேவியர்

வெற்றிமணி - ஜெர்மனி

No comments: