Sunday, November 10, 2013

கலைஞர் கருணாநிதியின் உள்ளம் கவர்ந்த தாவூத ஷா

நமது தமிழகத்தின் தனிப்பெரும் முதல் அமைச்சரும், திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவருமான கலைஞர் அவர்கள், முஸ்லிம் சமுதாயம்

பற்றி எழுதும்போதும், பேசும்போதும் குறிப்பாக, முஸ்லிம் லீக் நிகழ்ச்சிகளில் பங்கேற்று உரையாற்றும்போதெல்லாம் அவர் நினைவு கூர்ந்து உச்சரிக்கக் கூடிய பெயர்களில் ஒன்று தாருல் இஸ்லாம் பத்திரிகையும், அதன் ஆசிரியர் தாவூத் ஷாவும் ஆகும்.

நான் சிறுவனாக பள்ளியில் படிக்கும் மாணவனாக இருந்த பருவத்திலே எனக்கு சமுதாய சீர்திருத்ததக் கருத்துக்களை - சிந்தனைகளை உண்டாக்கியவை தந்தை பெரியார் நடத்திய குடியரசு பத்திரிகையும், பெரியவர் தாவூத் ஷா நடத்திய தாருல் இஸ்லாம் பத்திரிகையுமே ஆகும்.”

-என்றெல்லாம் முத்தமிழ் அறிஞர் முதல்வர் கலைஞர் அவர்களால் சிறப்பிக்கப்பட்ட தாவூத் ஷாவின் பிறந்த நாள் விழா இன்று (மார்ச் 29) இலக்கிய ஆர்வலர்களால் கொண்டாடப் படுகிறது.

தஞ்சை மாவட்டம் நாச்சியார்கோவிலைச் சார்ந்த தாவூத் ஷா தமிழ் இலக்கண இலக்கியத்தில் சிறந்து விளங்கியதுடன் சிறந்த பேச்சாற்றலும். எழுத்தாற்றலும், சமுதாய் சீர்திருத்த புரட்சிகர எண்ணமும் கொண்டிருந்தார். அவரது எழுத்துக்கள் அன்றைய காலத்தில் (80 ஆண்டு காலத்திற்கு முன்) தமிழ் உலகத்தில் மிகப் பெரும் புரட்சியை உண்டாக்கின.

அவர் கல்லூரி மாணவராக இருந்தபோது. தமிழ்த்தாத்தா உ.சே. சாமிநாத அய்யரும், தத்துவமேதை முன்னாள குடியரசுத் தலைவர் டாக்டர் ராதா கிருஷ்ணணும் அவருக்கு பேராசிரியர்களாக இருந்து வழிநடத்தினர். அவர் 1912-ம் ஆண்டு பி.ஏ. பட்டம் பெற்றார். சப் மாஜிஸ்திரேட் பதவியேற்று பணிபுரிந்தார். மகாத்மா காந்தியடிகளின் மீது மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்தார். காந்தியடிகள் தொடங்கிய ஒத்துழையாமை இயக்கத்தில் பங்கேற்று தனது மாஜிஸ்திரேட் பதவியைத் துறந்து இந்திய சுதந்திரப் போராட்டத்தில் தீவிரமாக பங்கேற்று பல்வேறு தியாகங்களைப் புரிந்தார். கிராமம் கிராமமாக சென்று அனல் பறக்கு பேச்சுக்களால் பொதுமக்களிடம் சுதந்திரப் போராட்ட உணர்வை ஊட்டினார்.

சென்னை மாவட்ட காங்கிரஸ் தலைவராக செயல்பட்டதுடன் கட்சியின் கொள்கையை பரப்புவதற்காக ”தேசக் கேசவன்” என்ற பத்திரிகையை தொடங்கினார். சென்னை மாநகரத் தந்தை (ஆல்டர்மேன்)யாக அவர் பதவி ஏற்று சிறப்பாக பணியாற்றினார்.

பின்னர் அகில இந்திய முஸ்லிம் லீகில் இணைந்து காயிதெ ஆஜம் முஹம்மதலி ஜின்னாவுடன் சேர்ந்து சுதந்திரப் போராட்டத்தில் தீவிரமாக ஈடுபட்டார். தமிழ்நாட்டில் அகில இந்திய முஸ்லிம் லீக் கட்சியின் முதுகெலும்பாக முதன்மையான பிரச்சாரகராக திகழ்ந்தார். 1941-ம் ஆண்டில் சென்னையில் நடைபெற்ற அகில இந்திய முஸ்லிம் லீக் கட்சியின் மாநாட்டில் முஹம்மதலி ஜின்னா கலந்து கொண்டு உரையாற்றியதை தமிழில் மொழிபெயர்ப்பு செய்து அனைவரது பாராட்டையும் பெற்றார். தமிழ்நாட்டின் ”ஜின்னா” என்றும அழைக்கப்பட்ட அவர் முஸ்லிம் சமுதாயத்தின் விழிப்புணர்வுக்காகவும், ஒற்றுமைக்காகவும் பல்வேறு பத்திரிகைகளை துவங்கி நடத்தினார். அவரது தாருல் இஸ்லாம் பத்திரிகையும், தத்துவ இஸ்லாம் பத்திரிகையும் அன்றைய காலத்தில் பெரும் புரட்சியை ஏற்படுத்தின.

முஸ்லிம்களின் கல்விக்கு குறிப்பாக பெண்களின் கல்விக்காகவும், முன்னேற்றத்திற்காகவும் தொடர்ந்து எழுதியும், பேசியும் வந்தார். சென்னை தேனாம்பேட்டையில் இன்று சிறப்புடன் செயல்பட்டுக் கொண்டிருக்கும் எஸ.ஐ.ஈ.டி. மகளிர் கல்லூரியை துவக்குவதற்கு நீதிபதி பஷீர் அஹமது அவர்களுக்கு பெரிதும் துணையாக இருந்து செயல்பட்டவர்.

தமிழாய்ந்த தலைமகனார் முத்தமிழ் அறிஞர் முதல்வர் கலைஞர் அவர்கள் தமிழகத்தின் முதலமைச்சராக இருந்து பாருலகமே பாராட்டும் வகையில் உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டினை வருகிற ஜுன் மாதம் கோவையில் நடத்த இருக்கிற இந் நேரத்தில் முதல்வர் கலைஞரின் உள்ளம் கவர்ந்த தாவூத் ஷா அவர்களின் பிறந்த நாளில் அவரை நினைவு கூரவும், அவரது சமூக சீர்திருத்த - தமிழ்ப் பணிகளை பாராட்டி நன்றி தெரிவிக்கவும் முஸ்லிம் சமுதாயம் மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த தமிழ்ச் சமுதாயம் கடமைப்பட்டிருக்கிறது.

மணிச்சுடர் பத்திரிகையின் 29/30.3.2010 தேதியிட்ட இதழில், “முதல்வர் கலைஞரின் உள்ளம் கவர்ந்த தாருல் இஸ்லாம் பத்திரிகை நிறுவனர் தாவூத ஷா“ என்ற தலைப்பில் இரா. ச. மு. ஹமீது எழுதிய கட்டுரை

நன்றி: மணிச்சுடர்
நன்றி : http://www.darulislamfamily.com/

No comments: