Monday, November 11, 2013

பூக்களில் உறங்கும் மெளனம்

     பூவுக்குள் கவியொன்றே புதைந்தி ருக்கும்
    ...புன்னகையின் சாந்தத்தைப் போர்த்தி ருக்கும்
    நாவுக்கும் தெரியாத நாதத் தென்றல்
    ...நறுமுகையாய் சிறுவிதையாய் ஒளிந்தி ருக்கும்.
    பாவொன்று படம்பிடித்து எழுத வந்த
    ...பாவலனென் கவிதையிலே இடம்பி டிக்கும்
    தாவென்று கேட்போர்க்கு தந்து நிற்கும்
    ...தனிச்சிரிப்பின் நற்சிறப்பை பூவில் கற்போம்!

    வான்சிந்தும் மழைத்துளியில் உழவர் இன்பம்
    ...வைத்திருக்கும் இறையோனே பூவைத் தந்தான்
    தேன்சிந்தும் பூமலரும் காதல் சொல்லும்
    ...துணைசேரும் உலகத்தில் உயிர்கள் பூக்கும்
    தானேந்தும் புன்சிரிப்பைத் தொற்ற வைக்கும்
    ...தன்மகிழ்வை பிறமுகத்தில் பற்றச் செய்யும்
    ஏனென்று கேளாமல் எங்கும் பூக்கும்
    ...எல்லாமே சமமென்று எடுத்துச் சொல்லும்

   பிறப்புக்கும் இறப்புக்கும் பூக்கள் உண்டு
    ...பொதுவான வெற்றியிலும் ஒருபூச் செண்டு
    சிறப்பான செய்கைக்கே பூவின் கூட்டம்
    ...சேர்ந்துவந்து மாலையாக கழுத்தில் வீழும்!
    விருப்பத்தைத் தெரிவிக்கும் காதல் சின்னம்
    ...வகைவகையாய் நிறமிருக்கும் வார்த்தைக் கேற்ப
    பொறுப்பான பேச்செல்லாம் பூவே பேசும்
    ...பார்த்தாலோ வேறில்லை ஒற்றை மெளனம்.

    பேசுகிற பூவுமுண்டு; மழலை என்பார்
    ...புன்னகையும் பூவினைத்தான் ஒத்தி ருக்கும்
    தூசுகளாம் பாவங்கள் தீண்டா முல்லை
    ...தூய்மையிலும் சொல்வதற்கு வேறு இல்லை
    நேசமிகு உள்ளத்தில் மழலைப் பூக்கள்
    ...நல்குகின்ற மகிழ்ச்சிக்கும் அளவு முண்டோ?
    வாசமிகு இளம்பூவில் விதையே மெளனம்
    ...வளர்ந்தபின்னர் வெளிப்படுமே விருட்சப் பாடல்!


by இப்னு ஹம்துன்
நன்றி : http://ezuthovian.blogspot.in

No comments: