பாவையை விட்டு வந்து
….பாலையின் சூட்டில் நொந்து
தேவையைக் கருத்திற் கொண்டு
…தேடினோம் செல்வம் இன்று
யாவையும் மறக்கும் நெஞ்சம்
..யாழிசை மழலை கொஞ்சும்
பூவையும் மிஞ்சும் பிள்ளை
..பிரிவினைத் தாங்க வில்லை!
விடையினைக் கொடுத்த நேரம்
…விலகியே நிற்கும் தூரம்
தடைகளாய்ப் போன தூக்கம்
..தவிப்பினில் நெஞ்சில் ஏக்கம்
மடையென திறக்கும் கண்ணீர்
..மனத்தினில் கொதிக்கும் செந்நீர்
உடைந்திடும் இளமைக் கட்டும்
..உடையினில் வேடம் மட்டும்!
வாயினைக் கட்டிப் பூட்டி
…வயிற்றினைப் பசியால் வாட்டி
காயமும் தாங்கிக் கொண்டு
…கயிற்றினில் தொங்கிக் கொண்டு
தாயகத் தேவை ஆசை
..தீர்ப்பது எங்கள் காசே
மாயமாம் இந்த மோகம்
…மடியுமோ இந்த வேகம்?
வாடிய பயிராய் வாழ்க்கை..
…வளமுள காசின் சேர்க்கை
தேடிய செல்வம் தீரும்
..தேவையோ நாளும் ஊறும்
ஓடியே களைத்து மீண்டும்
…ஓடவே நம்மைத் தூண்டும்
ஓடிடும் விலையின் ஏற்றம்
..ஓட்டுமே ஊரை விட்டும்
ஒட்டகம் போல நாங்கள்
ஓய்விலாச் சுமைகள் தாங்க
ஒட்டகம் மேயும் நாட்டில்
..உழைப்பதைச் சொன்னேன் பாட்டில்
பெட்டகம் நிறைய வில்லை
…பெரிதினும் பெரிதாய் இங்கே
கட்டிடம் கட்டும் வேலை
….கரணமும் விட்டால் மேலே!
'கவியன்பன்' கலாம்
கவியன்பன் கலாமின் கவிதை
இனிய குரலில் ஜாஃபர் பாடிய காணொளி :
'பாலைவனத் தொழிலாளியின் பா(ட்)டு!' இந்தக் கவிதையை தஞ்சை மாவட்டம் அதிரை என்ற ஊரைச்சேர்ந்த பிரபல பதிவர் ஜாஃபர் அவர்கள் தனது இனிய குரலில் பதிவு செய்து காணொளியாக வடிவமைத்துள்ளார்.
நண்பர் ஜாஃபர் அவர்களைப்பற்றிய சிறு குறிப்பொன்றை நாம் பார்ப்போம்...
தஞ்சை மாவட்டம் அதிரை காதிர் முகைதீன் கல்லூரியில் கல்வி பயின்றுள்ள இவர் சவூதி அரேபியாவின் மருத்துவமனை ஒன்றில் மருத்துவக் காப்பீட்டு ஒருங்கிணைப்பாளராக பணிபுரிகின்றார்.
சமூக ஆர்வலரான இவர் அய்டா என்ற சமுக அமைப்பின் ஆலோசணைக் குழு உறுப்பினராகவும் இருக்கின்றார். பதிவர், ஊடக ஆர்வலர், உள்ளூர் வலைத்தளம் அதிரை எக்ஸ்பிரஸ்ஸின் நிர்வாகி மற்றும் இன்னும் சில தளங்களின் பங்களிப்பாளர் போன்ற பணிகளில் ஈடுபட்டு சேவை செய்து வருகின்றார்.
சமூக விழிப்புணர்வு ஆக்கங்கள் பலவற்றை உள்ளூர் தமிழில் அழகாக எழுதியுள்ளார். இயற்கையாகவே நகைச்சுவை உணர்வுடன் பேசும் இவருக்கு ஏராளமான நட்பு வட்டாரம் உள்ளன. இளம் பதிவர்களை ஊக்குவிக்கும் நோக்கில் தொடர்ந்து அவர்களின் ஆக்கங்களுக்கு பின்னூட்டமிட்டு அவர்களை உற்சாகப்படுத்தி வருகின்றார்.
Source : http://nijampage.blogspot.in/
No comments:
Post a Comment