Wednesday, November 20, 2013

இஸ்மாயிலை, இஸ்மாயில் நாஜி ஆக்கிய நீடூர் மிஸ்பாஹுல் ஹுதா

என் மீது அன்புக்கொண்டவர்கள் 'நாஜி' என்றால் என்ன நீங்கள் வாங்கிய பட்டமா! என்று கேட்கின்றனர்.

'நாஜி' என்பது என்னுடைய புனைப் பெயர்.

என்னுடைய தந்தை முஹம்மது யாக்கூப் வாத்தியார்(எங்கள் ஊர் மக்கள் அவ்வாறு தான் அழைப்பார்கள்).அவர் ஒரு கவிஞர்.ஆனந்த விகடன் என்ற இதழ் வெளியாவதற்கு முன்னால் ஆனந்த போதினி என்ற இதழ் வந்துக் கொண்டிருந்தது. அதிலே தன்னுடைய 17ஆவது வயதிலிருந்தே கவிதை எழுதி வந்தார்.எனவே, எனக்கும் சிறு வயதிலிருந்தே கவிதையின் மீது ஆர்வம் இருந்தது.குறிப்பாக, கண்ணதாசன் கவிதைகள் எனக்கு மிகவும் பிடிக்கும்.

  1960ஆம் ஆண்டு ஈ.வே.கி.சம்பத் தி.மு.க.வை விட்டு வெளியேறிய பொழுது கவிஞர் கண்ணதாசனும் அவருடன் இணைந்து தமிழ் தேசியக் கட்சி என்று ஒரு அமைப்பை உருவாக்கினார்கள். அந்த அமைப்பில் என்னுடைய உறவினர் ஒருவர் முக்கிய பொறுப்பில் இருந்தார். அந்த கட்சியின் மாநாடு நடக்கும் இடமெல்லாம் என்னை அவர் அழைத்து செல்வார்.கண்ணதாசன் இருக்கும் அறைக்கு சென்று அவரது அருகில் நின்று அவரது நகைச்சுவை மிக்க பேச்சை நான் ரசித்துக் கொண்டிருப்பேன்.அப்பொழுது எனக்கு வயது 13.கோவையில் நடைப் பெற்ற மாநாட்டின் போது மதியம் 3 மணிக்கு கவிஞரின் தலைமையில் கவியரங்கம்.மதிய உணவிற்கு பின்னால் கவிஞர் மாநாட்டு பந்தலின் வாசலில் நின்று பேசிக் கொண்டிருந்தார்.அங்கு வந்த சம்பத் அவர்கள் என்ன கவிஞரே! நேரம் ஆகிவிட்டதே. கவியரங்கத்திற்கு தயார் ஆகவில்லையா? என்று கேட்டார்.இதோ தயார் ஆகிவிட்டேன் என்று மேடைக்கு சென்றார்.அங்கே அமர்ந்துக் கொண்டு பேப்பரில் கவிதை எழுத ஆரம்பித்தார்.அந்தக் கவிதையின் முதல் வரி “கன்னியரின் இதழ் இரண்டை கோவை என்பார்” என தொடங்கி கோவை மாவட்டத்தின் மக்களை கவிதையிலே புகழ்ந்து தள்ளினார். அப்பொழுதிலிருந்து எனக்கும் கவிதை எழுத வேண்டுமென்று ஆசை வந்தது.


  லால்பேட்டை மதரஸாவில் ஓதும் பொழுது என் நண்பன் லப்பைக்குடிக்காடு தாவூதுஅலியுடன் இணைந்து ஒருக் கையெழுத்து ஏடு நடத்தினோம்.அதில் நான் கவிதை எழுத ஆரம்பித்தேன்.அப்பொழுது எனக்கு ஒரு புனைப் பெயர் வைக்கலாமென்று யோசித்த பொழுது என் நண்பன் சொன்னான்:நீ எப்பொழுது பார்த்தாலும் பாடிக்கொண்டே இருக்கிறாய் எனவே, 'கானம் பாடும் வானம்பாடி' என்று பெயர் வை என்று சொன்னான்.

 வானம்பாடிக்கு அரபியில் kubbaraa என்று பெயர்.எனவே என் பெயரில் kubbaraaவை இணைத்து muhammed ismail kubbaraa என்று அரபியில் எனது நோட்புக்கில் எழுதி வந்தேன்.ஒரு முறை அதனை பார்த்த லால்பேட்டை எனது ஆசிரியர் இஸ்மாயில் ஹஜ்ரத் எனது பெயரை முஹம்மது இஸ்மாயில் கப்ரா என்று வாசித்து என்ன 'கப்ரா' 'கிப்ரா' என்றெல்லாம் பெயர் வைத்திருக்கிறாய். புனை பெயர் என்றால் கூப்பிட அழகாய் இருக்க வேண்டும் 'துஆ' செய்வதைப் போன்றும் இருக்க வேண்டும் என்று சொன்னார்கள்.மீண்டும் நான் தேடுதலை ஆரம்பித்தேன்.அப்பொழுது இப்னு மாஜா என்ற ஹதீஸ் நூலை ஷம்சுதீன் மில்லத் ஜக்கரியா ஹஜ்ரத்திடம் ஓதினோம்.அதில் ஹதீஸுடைய அறிவிப்பாளர்களில் ஒரு பெயர் அபூ சித்தீக் அந்நாஜி என்று இருந்தது.அதில் 'நாஜி' என்ற பெயர் எனக்கு பிடித்து விட்டது.

நாஜி என்ற வார்த்தைக்கு ஈடேற்றம் பெறுபவர். வெற்றி பெறுபவர்,

பாதுகாப்பு பெறுபவர் என்றெல்லாம் பொருள் இருக்கின்றது.

நான் சர்வஜித் என்ற தமிழாண்டில் பிறந்தேன். சர்வஜித் என்றால் சர்வமும் வெற்றி எல்லாமும் வெற்றி என்று பொருள்.எனவே, நாஜி என்ற பெயர் என் புனைப் பெயராக தேர்ந்தெடுத்துக் கொண்டேன்.


அதன் பின் தேவ்பந்த் மதரஸாவில் மூன்று ஆண்டுகள் அங்கு கல்வி பயின்றேன்.அதன் பின் கவிதை எழுதும் நாட்டம் எனக்கு போய் விட்டது. அதனால் 'நாஜி' என்ற பெயரை உபயோகிக்கும் வாய்ப்பு எனக்கு கிடைக்கவில்லை. தேவ்பந்த் மதரஸாவில் ஓதி முடித்த பின் பல்வேறு இடங்களில் வேலைத் தேடி நீடூர் ஜாமிஆ மிஸ்பாஹுல் ஹுதா
மதரஸாவிற்கு
வந்தேன்.(அது ஒரு தனிக் கதை).என்னை ஆசிரியர் வேலைக்கு நாஜிர் ரஹ்மத்துல்லாஹ் ஹஜ்ரத் அவர்களும் அப்பொழுது செயலாளராக இருந்த மவ்லவி எம்.எஸ்.அப்துல் அஜீஸ் பாகவி அவர்களும் நேர்முகத் தேர்வு நடத்தி என்னை ஆசிரியர் பணிக்கு தேர்ந்து எடுத்தனர்.அப்பொழுது நாஜிர் ஹஜ்ரத் அவர்கள் கணக்குப் பிள்ளையை அழைத்து இவர் பெயரை ஆசிரியரின் பட்டியலில் சேர்த்துக் கொள்ளுங்கள்.ஏற்கனவே,முஹம்மது இஸ்மாயில் என்ற பெயரில் ஒரு ஆசிரியர் இருப்பதால் சரியான இனிஷியலுடன் இவரது பெயரை எழுதுங்கள் என்று சொன்னார்கள்.அப்பொழுது நான் என் பெயருடன் நாஜியை சேர்த்துக் கொள்ளுங்கள் என்று சொல்ல பரக்கத்தான மிஸ்பாஹுல் ஹுதா பட்டியலில் 'முஹம்மது இஸ்மாயில் நாஜி 'என்ற பெயர் முதல் முதலாக பதிவு செய்யப்பட்டது.
அதன் பின் எல்லோரும் என்னை 'நாஜி' என்றே அழைக்க ஆரம்பித்தார்கள். இதில் வேடிக்கை என்னவென்றால் நாஜியை இணைக்காமல் முஹம்மது இஸ்மாயில் என்றால் என் நினைவு யாருக்கும் வராது. அந்த அளவுக்கு ஜாமிஆ மிஸ்பாஹுல் ஹுதாவின் பாரக்கத்தினால் 'நாஜி' என்ற பெயர் பிரபல்யமானதுடன் என் வாழ்விலும் 'நாஜி' என்ற பெயருக்கு ஏற்ப அல்லாஹ்வின் அருளால் பல வெற்றிகளை பெற்றேன். என்றென்றும் ஜாமிஆ மிஸ்பாஹுல் ஹுதாவிற்கும் நீடூர் மக்களுக்கும் நான் நன்றி கடன் பட்டுள்ளேன்.

அல்ஹம்துலில்லாஹ்.




முஹம்மது இஸ்மாயில் நாஜி

2 comments:

கொள்ளுமேடு பை.மு.ரிபாயி said...

என்னடா இது ஹிட்லரின் நாஜி'யை நினைவு படுத்துகிறதே என்று இது நாள் வரை நான் நினைத்ததுண்டு.இந்த நாஜி'என்ற பெயருக்கு பின்னால் பரக்கத் பொருந்திய பொருள் இருப்பது இப்பொழுது தான் எனக்கு தெரிகிறது. அந்த பெயரை உலகறிய செய்த நீடூர் ஜாமிஆ மிஸ்பாஹுல் ஹுதா'வுக்கு பாராட்டுக்கள்.

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

எங்கள் அன்பு நாஜி அவர்களுக்கு, 'நாஜி' என்ற புனைபெயர் வந்த வரலாற்றுத் தகவலை சுவைபட தந்தீர்கள். அறிய மிக்க மகிழ்ச்சி.

எனினும் எங்களூர் 'நீடூர்' பெயரை 'நீடுர்' என்று குறிப்பிட்ட அத்தனை
இடங்களிலும் 'நீடூர்' என்று மாற்றம் செய்திட அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.