ஜப்பானில் உள்ள கோபே நகரில் மாணிக்கப் பொருட்காட்சி நடந்தது. எங்கள் "செலக்டிவ் ஜெம் அவுஸ்" அந்தப் பொருட்காட்சியில் கலந்து கொண்டது. நானும் போயிருந்தேன்.
நான் ஜப்பானுக்குப் போவது இது முதல் முறை அல்ல. பல முறை ஏற்கனவே போயிருக்கிறேன். ஆனால் இப்பொழுதுதான் ஜப்பானை சுற்றிப் பார்க்க - ஜப்பானிய மக்களுடன் நெருங்கிப் பழக வாய்ப்புக் கிடைத்தது.
ஜப்பானைப் பார்த்துத் திகைத்துப் பொய் விட்டேன் ! இரண்டாவது உலகப்போரில் அடியோடு அழிந்து போன நாடு,ஜப்பான். உலகின் முதல் அணுகுண்டு ஜப்பானில்தான் விழுந்து, பேரழிவை ஏற்படுத்தியது. அடியோடு அடிமன் வேரோடு அழிந்து போன ஜப்பான், இன்று துளிர்த்து, தழைத்து, கிளைத்து, விழுதுகள் விட்டு, வின் முட்டும் அளவுக்கு வளர்ந்து நிற்பதைப் பார்க்க, எனக்கு வியப்பாக இருந்தது.
அழிவு ஏற்பட்டு அரை நூற்றாண்டுதான் ஆகிறது. அதற்குள் ஜப்பான் எப்படி எழுந்து நிற்கிறது! எப்படி வளர்ச்சியில் அமெரிக்காவுக்கு ஈடாக விளங்குகிறது ! அறிவியல் வளர்ச்சியில் அமெரிக்காவையும் மிஞ்சிவிட்டது! குறிப்பாகத் தொலைத் தொடர்பு இயலில் இன்று ஜப்பான்தான் ஏ ஒன்!
ஜப்பானியர்களும் என்னமாக வளர்ச்சி அடைந்து விட்டார்கள் ! பொதுவாக ஜப்பானியர்களை "குள்ளர்கள் " என்று கூறுவோம். இன்று அவர்களை நிமிர்ந்து பார்க்க வேண்டியிருக்கிறது!
இந்த வளர்ச்சி எப்படி ஏற்பட்டது ?
உழைப்பு தந்த உயர்வு !
ஜப்பானியர்கள் கடுமையான உழைப்பாளிகள். எறும்பு போன்ற சுறுசுறுப்பை அவர்களிடம் காண முடிகின்றது. ஓடி ஓடி உழைகின்றார்கள்! ஓய்ந்து இருப்பவர்களையே காண முடியவில்லை! உழைப்பால் உயர்ந்த ஒரு இனம் உண்டென்றால் அவர்கள் ஜப்பானியர்களே!
தொழில் துறையில் நல்ல வளர்ச்சி அடைந்திருக்கிறார்கள். ஜப்பானில் இரும்பும் கிடையாது,நிலக்கரியும் கிடையாது. ஆனால் இரும்பை உருக்கி குண்டூசி முதல் ரெயில் என்ஜின் வரை செய்கிறார்கள்! இரும்பு, நிலக்கரி இரண்டையும் வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்கிறார்கள். இந்தியாவிலிருந்து கூட கப்பல் கப்பலாக இரும்புத்தாது ஜப்பானுக்கு ஏற்றுமதி செய்கிறோம். அந்த இரும்பை உருக்கி கார்கள் செய்து ஜப்பானியர் ஏற்றுமதி செய்கிறார்கள். மலேசியாவில் இரப்பர் மரங்களை வெட்டியபோது,ஜப்பானியர்கள் வாங்கினார்கள். மரங்களை வாங்கி ஜப்பானுக்கு கொண்டுபோய், அரைத்து கூழாக்கி பேப்பர் செய்து,வெளிநாடுக்கு ஏற்றுமதி செய்தார்கள்!
இயற்கை வளமே இல்லாத ஒரு நாடு. தனது உழைப்பால் முயற்சியால், எங்கோ எட்டாத தொலைவுக்கு முன்னேறிவிட்டது!
படிப்பு
ஜப்பானியர் முன்னேற்றத்துக்கு,அவர்களின் படிப்பும் ஒரு காரணம்.
தாய் மொழியான ஜப்பானிய மொழியில்தான் அவர்கள் படிகிறார்கள். அறிவியல் முன்னேற்றச் செய்திகள் உடனுக்குடன் ஜப்பானிய மொழியில் மொழிபெயர்க்கப்பட்டு விடுகின்றன. நல்ல ஆங்கில நூல்கள் உடனுக்குடன் ஜப்பானிய மொழியில் வருகின்றன.
தொழில் துறையில் ஈடுபட்டுள்ளார்கள். ஆங்கிலம் கற்றுக் கொள்ளுகிறார்கள். இது அவர்களின் தொழில் வளர்ச்சிக்கு மிகவும் உதவியாக இருக்கிறது. டோக்கியோ, ஒசாகோ போன்ற பெரிய நகாங்களில் இளைய தலைமுறையினர் எல்லோருமே ஆங்கிலம் பேசுகிறார்கள்.
நான் ரெயிலில் போகும்பொழுது பார்த்தேன். ஒவ்வொருவர் கையிலும் ஏதாவது ஒரு புத்தகம் இருக்கிறது. படித்துக் கொண்டே போகிறார்கள். முதியவகள் வந்தால் எழுந்து இடம் கொடுக்கிறார்கள். அப்பொழுதும் கூட நின்று கொண்டே படிக்கிறார்கள்.
உதவி செய்கிறார்கள்.
ஜப்பானியர்கள் காரியமே கண்ணாக இருக்கிறார்கள். வீண் அரட்டைக் கச்சேரிகளை அவர்களிடம் காண முடியவில்லை. தெருவில் நின்று பேசிக் கொண்டிருப்பவர்களையும் பார்க்க முடியவில்லை. நண்பர்கள் தெருவில் சந்தித்துக் கொண்டால் கூட "அலோ"சொல்லிக்கொண்டு போய்க் கொண்டே இருக்கிறார்கள்.
அதே நேரம், உதவி செய்யக் கூடிய மனப்பான்மையும் ஜப்பானியர்களிடம் இருக்கிறது.
நான் ஒரு நண்பரைத் தேடிப் போனேன்.ஆனால் அவர் வீட்டை காலி செய்து கொண்டு போய் விட்டார்.இப்பொழுது அந்த வீட்டில் வேறொரு ஜப்பானியக் குடும்பம் வசிக்கிறது. அந்தக் குடும்பத்துப் பெண் ஒருத்தி, என் நண்பர் வீடு மாறிப் போய்விட்டார் என்பதை தெரிவித்ததுடன், நண்பரின் புதிய வீட்டுக்கும் என்னை அழைத்துப் போனாள்! அதே தெருவில்தான் வேறொரு வீட்டில் நண்பர் குடியிருந்தார்.
மூதாட்டி செய்தது!
ஜப்பானியர் பெரியவர்களை - முதியவர்களை மிகவும் மதிக்கிறார்கள் . பெரியவர்களுக்கு உரிய மரியாதை தருகிறார்கள்.
குடும்ப வாழ்வுக்கு மிகவும் முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். குடும்பப் பொறுப்புப் பெண்களிடம்தான் இருக்கிறது.
ஜப்பானியப் பெண்கள் படித்து,வேலைக்குப் போய்,அமெரிக்கப் பெண்களைப் போல் பேன்ட் -சட்டை போட்டுக் கொள்ளப் பழகிக் கொண்டாலும், குடும்பக் கடமைகளில் இன்னும் கருத்தாகத்தான் இருக்கிறார்கள் .ஆனால் , ஆண்கள் மட்டும் இன்னும் குடும்பப் பொறுப்பில் பங்கு கொள்ளவில்லை.
வீட்டையும், வீதியையும் சுத்தமாக வைத்துக் கொள்ளுகிறார்கள். நடை மேடைகளில் அழகாகக் கல் (கிரானைட்) பதித்திருக்கிறார்கள். குப்பை இல்லாமல் சுத்தமாகப் பார்த்துக் கொள்ளுகிறார்கள்.நான் ஒரு சாலையில் போய் கொண்டிருந்த பொழுது , ஒரு வயதான பெண் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார், சாலையில் குப்பைத்தாள் கிடந்தது, சைக்கிளிலிருந்து இறங்கி, அந்தத் தாளை எடுத்து குப்பைத் தொட்டியில் போட்டு விட்டுப் போனார்.
இது நமது தாய் நாட்டை சுத்தமாக, அழகாக வைத்துக் கொள்ள வேண்டும் என்ற ஆசை. மக்களுக்கு ஏற்பட வேண்டும்.
அப்பொழுதுதான் அந்த நாடு - நகரம் சுத்தமாக இருக்கும். இதை ஜப்பானியரிடம் நேரில் கண்டு, மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன்.
வெளிநாட்டு முதலீடு
ஜப்பானில் வெளிநாட்டு - குறிப்பாக அமெரிக்க முதலீடு நிறைய இருக்கிறது. ஜப்பானின் முன்னேற்றதிற்கு இதுவும் ஒரு காரணம்.
வெளிநாட்டு முதலீட்டால் தொழில் வளர்ச்சி அடைகிறது. பொருளாதாரம் வளர்கிறது. மக்களுக்கு வேலை கிடைக்கிறது . இன்று சென்னை நகரில் வகை வகையான கார்கள் ஓடுகின்றன. நாம் சென்னையில் இருக்கிறோமா
என்று ஆங்காங்கில் இருக்கிறோமா என்று நான் கூட வியப்பது உண்டு !
"வெளிநாட்டுத் தொழில்கள் வந்தால், உள்ளுர்த் தொழில்கள் எப்படி வளரும் ?" என்கிறார்கள். கடந்த 60 ஆண்டு காலத்தில் அம்பாசிடர் அல்லது பியட் மாடல் கார் ஒன்றை அறிமுகப்படுத்தியது உண்டா? போட்டி ஏன்று வந்தால்தான் வளர்ச்சி அடையும் ! சோனியா காந்தியை இந்தியாவின் பிரதமராக ஏற்றுக் கொள்ளத்தயாராக இருப்பவர்கள் கூட வெளிநாட்டு முதலீடுகளை எதிர்ப்பது ஆச்சர்யமாகத்தான் இருக்கிறது!
முனைவர் அ.இரபியுதீன்.
நன்றி : நினைத்தேன் எழுதுகிறேன்
No comments:
Post a Comment