Saturday, November 10, 2012

மக்காவில் தெரு கூட்டும் தொழிலாளி கோடிஸ்வரனான சம்பவம்..!!

பங்களாதேசை சேர்ந்த சகோதரர் ஒருவர் மக்காவின் தெருவை கூட்டி சுத்தம் செய்துவரும் பல்தியாவின் கூலி வேலையை செய்து வந்துள்ளார். சில தினங்களுக்கு முன் அவ்வாறு ரோட்டில் நின்று சுத்தம் செய்து கொண்டிருக்கும் போது, இஹ்ராம் அணிந்த நிலையில் உள்ள முதியவர் ஒருவர், திடீரெண்டு தன்னை கட்டி ஆரத்தழுவி தன்னை மன்னித்துவிடும்படி கண்ணீர்விட்டு அழுததை கண்ட அந்த கூலித் தொழிலாளி அதிர்ந்தேவிட்டார்...! ஆம். அதற்கான காரணம் அந்த முதியவர் வேறு யாரும் அல்ல..! தன் உடன் பிறந்த சகோதரர்தான் அந்த முதியவர்.


கடந்த ஐந்து வருடங்களுக்கு முன் தமக்கிடையே ஏற்பட்ட சொத்து தகராறில், தன் தம்பிக்கு சேரவேண்டிய பங்கினை தராமலும், பங்கை கேட்கும் போதெல்லாம் தன்னை சிறைக்கு தள்ளிய அந்த கொடூர சகோதரர்தான், தற்போது புனித மக்காநகரில் தன்னை கட்டித்தழுவி மன்னிக்கும்படி மன்றாடிய அந்த முதியவர் ஆவார்.

மேலும் இந்த இரு சகோதரர்கள் ஒன்றும் பொருளாதாரத்தில் சாதாரண நிலையில் உள்ளவர்களும் அல்ல. பொருளாதாரத்தில் மிக வலிமையான குடும்பத்தை சேர்ந்தவர்கள் ஆவார்கள். இவர்களின் கைவசம் இருக்கும் ரொக்கம் மட்டுமே இந்திய ரூபாயில் சுமார் 25 கோடிக்கும் மேல். இது அல்லாமல் பல சொத்துக்களுக்கும் சொந்தக்காரர்கள் ஆவார்கள். இப்படிப்பட்ட நிலையில் வாழ்ந்த இந்த இளைய சகோதரர்தான் இன்று மக்கா நகரில் சில நூறு ரியால் சம்பளத்திற்காக தெருக்களை கூட்டி சுத்தம் செய்யும் தொழிலை செய்து வந்துள்ளார். தன் மூத்த சகோதரர் தனக்கு செய்த தவறினால் சவூதி சென்று பிழைப்பு நடத்தி வந்துள்ளார்.

கடந்த ஐந்து வருடத்திற்கு முன், மூத்த சகோதரர் தன்தம்பிக்கு, தான் செய்த தவறை நினைத்து வருந்தி தன் தம்பியை தேடி பல இடங்களுக்கும் அலைந்துள்ளார். காண்போரிடம் எல்லாம் தன் தம்பியை கண்டுபிடித்து தந்தால் தக்க சன்மானம் வழங்குவதாகவும் தெரிவுத்துள்ளார். இந்த நிலையில், இந்த வருடம் புனித ஹஜ் சென்றபோதுதான் மக்கா நகரின் தெருவில் ஏதேச்சையாக தன் சகோதரரை கண்டு ஆரத்தழுவி உள்ளார். தன்னை மன்னிக்கும்படியும் மன்றாடியுள்ளார். தற்போது தான் புற்று நோயால் (கேன்சர்) அவதிபடுவதாகவும், இன்னும் எத்தனை காலம் இந்த உலகில் தான் வாழப்போகிரேனோ தெரியவில்லை என்றும், உடனே ஊருக்கு திரும்பும்படியும், தன் தம்பிக்கு சேரவேண்டிய அனைத்து பங்கினையும் தருவதாகவும் உறுதியளித்துள்ளார்.

தம்பியும் தன் சகோதரர் தனக்கு செய்த அணைத்து பாவங்களையும் மன்னித்து விட்டதாகவும், சகோதரருடன் ஊருக்கு திரும்பவும் சம்மதித்துள்ளார். மேலும் தனக்கு தம் சகோதரர் செய்த அணைத்து தீமைகளையும் மன்னித்துவிட்டு ஊர் சென்று புதுவாழ்வு தொடங்க உள்ளதாகவும், தான் எப்போதும் ஏழைகளிடமும், தேவை உள்ளோரிடமும் இரக்கம் காட்டுவதாகவும், அவர்களுக்கு உதவி செய்யப் போவதாகவும், கடந்த ஐந்து ஆண்டுகளில் ஏழ்மை என்றால் என்ன என்ற பாடத்தை தான் கற்றுக்கொண்டதாகவும், கோடிஸ்வரனாக இருந்து குப்பை பொறுக்கி தற்போது மீண்டும் கோடிஸ்வரனாக மாறியுள்ள அந்த சகோதரர் கூறியுள்ளார்.

பொறுமையாளர்களுடன் அல்லாஹ் இருக்கின்றான் என்ற வசனத்திற்கு இந்த நிகழ்வை ஆதாரமாகவும், தான் செய்த நல்ல அமல்கள் மட்டுமே தன் மரணத்திற்கு பின் வரும் தாங்கள் சேர்த்து வைத்த சொத்துக்கள் அல்ல என்ற உண்மையையும் பிரிந்த அந்த சகோதரர்களை இணைத்து வைத்து அல்லாஹ் இந்த ஹஜ்ஜின் மூலம் நிலைநாட்டியுள்ளான்.

ஏற்றுக்கொள்ளப்பட்ட ஹஜ்ஜின் மூலம் அன்று பிறந்த பாலகன் போல் தான் திருப்ப வேண்டும் என்று மூத்த சகோதரரின் நினைப்பிற்கும், தனக்கு அநீதி இழைக்கப்பட்ட காரணத்தினால் கடும் வெயிலில் நின்று தெரு கூட்டி பிழைத்தாலும், மன்னிப்பைவிட இந்த உலகில் சிறந்த பண்பு வேறொன்றும் இல்லை என்ற இளைய சகோதரரின் நடத்தைக்கும் அல்லாஹ் அவர்களுக்கு சிறந்த வாழ்வை தர நாமும் துவா செய்வோம்.

இந்த நிகழ்வுமூலம் பல முஸ்லிம் சகோதர்களுக்கு நல்ல படிப்பினையுண்டு.

அதிரை முஜீப்
நன்றி : : முஜீப்.காம்
 http://adirainirubar.blogspot.in

Makkah cleaner turns into millionaire overnight in Saudi Arabia

No comments: