(*) உருக்கொள்ளத் தொடங்கியது
உள்ளுக்குள் கருவொன்று.
ஈன்று புறந்தருதல்
எந்தலைக் கடனென்று.
(*) ஆரம்ப காலங்கள்..ஆச்சர்யங்கள்.
எனக்குள்ளா?
எனக்குள்ளுள்ளேயுமா?
எதற்காக?
எப்படி?
கேள்விகளின் வேள்விகளில்
தூக்கம் தொலைக்கும்
இருட்டுப் பகல்கள்
எத்தனை எத்தனை!!
(*) அழகாக இருக்குமா?
அர்த்தங்கள் கொடுக்குமா?
இப்படி இருப்பது
அப்படி ஆகினால்
எப்படி இருக்கும்?
செப்படி வித்தை
செய்து பார்க்கும் மனசு.
(*) வேகம் கூட்டும்
தேகக் காற்றும்-
திணறலுடன் கூடிய
தித்திப்பு ஏற்றும்.
(*) உள்ளே இருப்பதை
உலகுக்குச் சொல்லுதல்
இத்தனை கடினமா?
இத்தனை வடிவமா?
ஆழ்ந்த்த சிந்தனையில்
அமர்ந்து அமர்ந்து
குறுக்கு வலிக்கும்-உடல்
முறுக்கப் பிடிக்கும்.
(*) தட்டிக்கொடுக்கும்
சில நேரம்,
எட்டி உதைக்கும்
சில நேரம்,
எண்ண ஓட்டங்கள்.
(*) நிலைகொள்ளாக் கால்களை
நீட்டி மடக்கி
வலிகளை ஒன்றுதிரட்டி
வரும் வேளை...
(*) மொழிக்குடம் உடைந்து
அவசரம் அவசரமாய்
அறுவை சிகிச்சையில்தான்
பிறக்கின்றன என்
கவிக் குழந்தைகள்.
- அதிரை என் ஷஃபாத்.
பிரசவ வேதனை... !
/*கவிதை…
எழுதியவர் பிரசவித்தபின்
வாசிப்பவர் கருவுறும் விந்தை.*/
இது தான் கரு... அதிரைநிருபரின் ஆஸ்தான கவி அவர்கள் பிரசவித்த கவி வரிகளால் அதிரை என்.ஷஃபாத்தின் கவிதை கருவுற்ற விந்தை நிகழ்வு
Source : http://adirainirubar.blogspot.in/
No comments:
Post a Comment