பயணங்கள் அனுபவம் – “ சீனா “ - பகுதி 4
என் வீட்டிற்க்கு நாங்கள் வந்தததும் என் சீன நண்பன் “ஜேம்ஸ்“ என்னிடம் “ ஸ்ஸீ” “ ஸ்ஸீ “ Xie Xie ( நன்றி வருகிறேன் ) என்று சொல்லி விடைப்பெறத் தயாரானான்.
அப்பொழுது என்னுடைய “உம்மம்மா” கொடுத்தனுப்பிய நம்மூர் “நூர் லாட்ஜ்” அல்வா, மௌலானா “தம்ரூட்” , சொட்டை சாகுலாக்கா “பனியான்”, வல்கூஸ் ராத்தா “நானக்கொத்தான் “ போன்றவைகளை அவனுக்குக் கொடுத்து வழியனுப்பினேன்.
அவனும் பதிலுக்கு சீனர்கள் விரும்பி பருகக்கூடிய “கிரீன் டீ” பாக்கெட்டை என்னிடம் தந்தான். கிரீன் டீயில் அதிக அளவில் நோய் எதிர்ப்பு சக்தி உள்ளது என்றும், எனவேதான் சீனர்கள் சராசரியாக 90 வயதை தாண்டி வாழ்வதாக ( ! ? )ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிடுவதாக ஒரு கருத்து (?) நிலவுகிறது.
மேலும் அவன் தந்த சிம் கார்டையும் ( China Mobile ) வாங்கி வைத்துக்கொண்டேன்.
நான் கொண்டுவந்த பார்சலைப் பிரித்து அதில் உள்ள மசாலாப் பொருள்கள், நூடுல்ஸ் ( சீனாவுக்கே நூடுல்ஸா ? ), டேட்ஸ், பிரட், சீஸ் போன்றவைகளை எடுத்து சமையலறையில் வைத்துவிட்டு, தொழுவதற்கு இலகுவாக “ Qibla Direction ” கருவியை வைத்து “கிப்லா” வின் திசையையும் அறிந்துகொண்டேன்.
நாளை சர்வதேச ஏற்றுமதி இறக்குமதி வணிகச் சந்தைக்கு ( Trade Fair ) செல்ல இருப்பதால், கீழ்க்கண்ட தேவையான பொருட்களை முன்கூட்டியே எடுத்து வைத்துக்கொண்டேன்.
1. Pen, Note Book , Stapler
2. Business Card
3. Passport
4. Photos - 2
5. Trolley Bag
6. Booth List ( ‘இறைவன் நாடினால்’ இதைப் பற்றி பின் வரும் வாரங்களில் விவரிக்கிறேன் )
சிறிது உணவு எடுத்துக் கொண்டுவிட்டு உறங்கச் சென்றுவிட்டேன்............................
அடுத்த நாள் : காலைப்பொழுது
அருகில் உள்ள “மெட்ரோ” ரயில்வே ஸ்டேஷனை நோக்கி பயணமானேன்.
அங்கே உள்ள இயந்திரத்தில் பொருட்காட்சி நடக்கக்கூடிய இடமாகிய “XingGongDong” ஐ தேர்வு செய்து பயணச் சீட்டைப் ( Token ) பெற்றுக்கொண்டேன்.
உலகில் அதிவேக ரயில் போக்குவரத்தினை மேற்கொள்ளும் நாடுகளுள் சீனாவும் ஒன்று. குவாங்சோ ( Guangzhou ) நகர போக்குவரத்தைச் சீர்படுத்தியதில் “மெட்ரோ” ரயில் பெரும் பங்கு வகிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
சிறிது நேரத்தில் அமைதியாக ஆரவாரங்கள் இன்றி வந்த ரயிலில் ஏறி இருக்கையில் அமர்ந்து கொண்டேன். மெதுவாக நகர்ந்தது........................
புதிய தொழில் நுட்பத்தின் படி உருவாக்கப்பட்ட “மெட்ரோ ரயில்” கள் தடம் புறளும் வாய்ப்புகள் குறைக்கப்பட்டு வழக்கமான ரயில் பாதையாக இல்லாமல் தட்டையான பாதையாகவே உள்ளது. வேகம் எடுக்கும் போது மெதுவாக ஊர்ந்து தான் செல்லும் , ஏனெனில் உராய்வு சத்தங்கள் எதுவும் பயணம் செய்யும் போது கேட்கவே இல்லை. ( நம்மூர் ரயில்களின் இரைச்சல் செவியைப் பிளக்கும், ஆடு மாடுகள் அலறி அடித்துக்கொண்டு ஓடும், கரும்புகைகளைக் கக்கி சுற்றுச்சூழலை மாசுபடுத்தும், இருப்புபாதைகளை கடக்கும் முன் விபத்துகள் ஏற்படுத்தும்.............. )
சீன இளைஞர்களும், பெண்களும் ஒரே உருவ ஒற்றுமையுடனும் காட்சியளித்தார்கள். அவர்களின் உடைகள் பளிச்சென்று காணப்பட்டது. ( துணிகளை நம்மூர் “உஜாலா” வை போட்டு துவைத்திருப்பார்களோ ? ) அதேபோல் சுறுசுறுப்புடன் கூடிய கடின உழைப்பாளிகள் என்பது குறிப்பிடத்தக்கது.
ரயில் அடுத்த ஸ்டேஷனில் நின்றதும், வயதான சீன தம்பதிகள் இருவர் அதில் ஏறினார்கள். அருகில் இருந்த சீனர்களோ தங்களின் இருக்கைகளை ஒதுக்கி அதில் அவர்களை அமரச் செய்தார்கள். குறிப்பாக வயதானவர்களுக்கு சீனர்கள் மரியாதையுடன் கூடிய அன்பை பொழிவதைக்கண்டு நான் வியந்தேன், நெகிழ்ந்தேன், மகிழ்ந்தேன். “நமதூரில் இன்னும் வயதான தங்களின் தகப்பன்களை அவர்களின் முதுமை கருதி தங்களின் வீட்டில் ஓய்வு எடுக்க அனுமதிக்காமல் பணிபுரிய விட்டு வேடிக்கை பார்க்கும் கூட்டங்கள் ஏராளமாகவே உள்ளது...........! அதிகாலை நேரங்களில் அவர்களின் முதுமை கருதி வயிற்றுப்பசிகளை ஆற்றுவதற்கு உணவுகளைக் கொடுக்க தாமதப்படுத்துபவர்கள் கவனிக்கப்பட வேண்டியவை...................”
எனது அலைப்பேசி ஒலித்தது. எடுத்தேன்.... பேசினேன்..................!
இறைவன் நாடினால் ! “ பயண அனுபவங்கள் ” தொடரும்.....................
சேக்கனா M. நிஜாம்
Source : http://nijampage.blogspot.in
சீனா பயண அனுபவம்!
சீனா பயண அனுபவம்! - (பகுதி 2)
சீனா பயண அனுபவம்! - (பகுதி 3)
No comments:
Post a Comment