Saturday, November 10, 2012

தலை தாழ்தல் காரணமாக தன்னை தாழ்த்தி கொள்ள வேண்டாம்

 "வேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தார்க்கு
யாண்டும் இடும்பை இல."
எதிலும் விருப்பு வெறுப்பு இல்லாத இறைவனை  மனத்தால் எப்போதும் நினைப்பவருக்கு உலகத் துன்பம் ஒருபோதும் இல்லை.
சிரம் தாழ்தலும் இறைவனுக்கே இருக்க வேண்டும் .அதைவிடுத்து காரியம் கைக் கூடவேண்டும் என்பதர்க்காகவும் மரியாதை என்ற பெயரிலும்  மற்றவர் கால்களில் விழுதல் சிறப்பாக இருக்க முடியாது.
மரியாதை மனதளவில் இருப்பதும் அதனை நடைபடுத்துவதிலும் ஒரு தனித்தன்மை இருக்க வேண்டும் . அது நமது சுமரியாதையை ஒரு காலமும் இழக்கும் நிலைக்கு வந்து விடக்கூடாது..
எந்த தனி மனிதரும் ஒருவருக்கு ஒருவர் உயர்ந்தவருமில்லை மற்றும் தாழ்ந்தவருமில்லை.
.
“வெள்ளையர்கள் கறுப்பர்களை விடவும் எவ்விதத்திலும் உயர்ந்தவர்களில்லை, அதே போல் கறுப்பர்கள் வெள்ளையர்களைவிட எவ்விதத்திலும் உயர்ந்தவர்களில்லை. மேலும் அரேபியர்கள், அரேபியர் அல்லாதவர்களைவிட எவ்விதத்திலும் உயர்ந்தவர்களில்லை, அதே போல் அரேபியர் அல்லாதவர்கள் அரேபியர்களைவிட உயர்ந்தவர்களில்லை. அவர்களிடையே வேறுபாடு எதில் உண்டு என்றால் அவர்களிடையே இருக்கும் இறையச்சத்தினால் தான்” 

வெள்ளையனாக இருந்தாலும், கறுப்பினத்தைச் சேர்ந்தவனாக இருந்தாலும், உயர் குலத்தோனும், தாழ்த்தப் பட்டவனும், ஆணாக இருந்தாலும், பெண்ணாக இருந்தாலும், பணக்கார வீட்டுக் குழந்தையானாலும், ஏழையாக ஒருவன் பிறந்தாலும் – இவர்கள் அனைவருமே விலை மதிப்பற்றவர்கள் தாம்!

யாரும் யாரையும் இழிவாகக் கருதிட வேண்டாம் என்பது நபிமொழி.


மரியாதை கொடுப்பது சேவை உணர்விலும் இருக்கலாம் . நாம் பிரயாணம் செய்யும்போது நாம் அமர்ந்திருந்தால் முதியோரைக் கண்டு நாம் நம் இருக்கையை அவருக்காக விட்டுக் கொடுகின்றோம். இது சிறப்பு.
ஒருவர் நம் இல்லத்திற்கு வரும்போது அவருக்கு மரியாதை கொடுத்து வரவேற்பதும் அனுப்பி வைப்பதும் நன்மையே.


நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் காலத்தில் நடந்த இந்த நிகழ்ச்சி:

நான் ஹியரா என்னும் நகருக்குச் சென்றேன். அங்குள்ளவர்கள் தமது தலைவருக்குச் சிரம் பணிந்து கும்பிடுவதைப் பார்த்தேன். “இவ்வாறு சிரம் பணிவதற்கு நபிகள் நாயகமே அதிகத் தகுதியுடையவர்கள்” என்று (எனக்குள்) கூறிக் கொண்டேன். நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் வந்து “நான் ஹியரா என்னும் ஊருக்குச் சென்றேன். மக்கள் தமது தலைவருக்குச் சிரம் பணிவதைக் கண்டேன். நாங்கள் சிரம் பணிந்திட நீங்களே அதிகம் தகுதியுடையவர்” என்று கூறினேன். அதற்கு நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் “(எனது மரணத்திற்குப் பின்) எனது அடக்கத் தலத்தைக் கடந்து செல்ல நேர்ந்தால் அதற்கும் சிரம் பணிவீரோ?” எனக் கேட்டார்கள். “மாட்டேன்” என்று நான் கூறினேன். அதற்கு நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் “ஆம்; அவ்வாறு செய்யக் கூடாது. ஒரு மனிதன் இன்னொரு மனிதனுக்குச் சிரம் பணியலாம் என்றிருந்தால் கணவனுக்காக மனைவியை அவ்வாறு செய்யச் சொல்லியிருப்பேன்” என்று கூறினார்கள். அறிவிப்பவர்: கைஸ் பின் ஸஅத் ரளியல்லாஹு அன்ஹு நூல்: அபூதாவூத் 1828தமது காலில் விழுவதற்கு அனுமதி கேட்கப்பட்ட போது “”எந்த மனிதரும் எந்த மனிதரின் காலும் விழக் கூடாது” என்று பொதுவான விதியை நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் காரணம் காட்டுகிறார்கள். காலில் விழுபவரும், விழப்படுபவரும் இருவருமே மனிதர்கள் தான் என்று கூறி சிரம் பணிதல் கடவுளுக்கு மட்டுமே உரியது எனக் கூறுகிறார்கள்.

உலகத்தில் நபிகள் நாயகத்தை விட எங்களுக்கு விருப்பமான ஒருவரும் இருந்ததில்லை. ஆயினும் அவர்கள் எங்களை நோக்கி வரும் போது நாங்கள் அவர்களுக்காக எழ மாட்டோம். இதை அவர்கள் கடுமையாக வெறுப்பார்கள் என்பதே இதற்குக் காரணம். அறிவிப்பவர்: அனஸ் ரளியல்லாஹு அன்ஹு நூல்கள்: அஹ்மத் 12068, 11895 திர்மிதீ 2678
தமக்காக மக்கள் எழக் கூடாது என்பதை எந்த அளவுக்கு நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் வெறுத்தார்கள் என்பதற்கு பின்வரும் நிகழ்ச்சி சான்றாகவுள்ளது.

ஒரு முறை நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் நோய் வாய்ப்பட்டார்கள். அப்போது அவர்கள் உட்கார்ந்த நிலையில் தொழுகை நடத்தினார்கள். நாங்கள் அவர்களுக்குப் பின்னால் நின்று தொழுதோம். அவர்கள் திரும்பிப் பார்த்த போது நாங்கள் நின்று கொண்டிருப்பதைக் கண்டார்கள். சைகை மூலம் எங்களை உட்காரச் சொன்னார்கள். நாங்கள் உட்கார்ந்த நிலையில் அவர்களைப் பின் பற்றித் தொழுதோம். தொழுகையை முடித்தவுடன் “பாரசீக, ரோமாபுரி மன்னர்கள் அமர்ந்திருக்க மக்கள் நிற்பார்களே அது போன்ற செயலைச் செய்ய முற்பட்டு விட்டீர்களே! இனிமேல் அவ்வாறு செய்யாதீர்கள். உங்கள் தலைவர்களைப் பின்பற்றித் தொழுங்கள்! அவர் நின்று தொழுகை நடத்தினால் நீங்களும் நின்று தொழுங்கள்! அவர் உட்கார்ந்து தொழுகை நடத்தினால் நீங்களும் உட்கார்ந்து தொழுகை நடத்துங்கள்” என்று கூறினார்கள். நூல்: முஸ்லிம் 624

No comments: