Tuesday, November 13, 2012

குர் ஆனை புரிந்து கொள்ள மொழிபெயர்ப்புகள் போதாது!


குர் ஆனை புரிந்து கொள்ள மொழிபெயர்ப்புகள் போதாது!

திருக் குர் ஆனை நாம் ஆழமாக புரிந்து கொள்ள – அதன் மொழிபெயர்ப்புகள் போதாது என்பது ஏற்றுகொள்ளப்பட்ட ஒரு கருத்தாகும்.

ஒரு எடுத்துக் காட்டு:

வ ஆஷிரூஹுன்ன பில் ம’-ரூஃப்! – இது சூரத்துன் நிஸாவின் 19 வது வசனத்தின் ஒரு சிறு பகுதி மட்டுமே.

இதற்கு எப்படி மொழிபெயர்க்கப் படுகிறது என்று பார்ப்போமா?

“இன்னும், அவர்களுடன் கனிவோடு நடந்து கொள்ளுங்கள் – இது தமிழில் குர் ஆன் வலை தளத்தின் மொழிபெயர்ப்பு. ஜான் ட்ரஸ்ட் மொழிபெயர்ப்பும் இதுவே.

“மேலும் அவர்களுடன் அழகான முறையிலும் நடந்து கொள்ளுங்கள்” – இது சவூதி அரசால் வெளியிடப்பட்டுள்ள சங்கைமிக்க குர் ஆன் மொழிபெயர்ப்பில் இருந்து.

“அவர்களோடு நல்ல முறையில் வாழ்க்கை நடத்துங்கள்.” – இது IFT – யின் திருக்குர் ஆன் மொழிபெயர்ப்பிலிருந்து.

“மேலும் அவர்களுடன் கண்ணியமான முறையிலும் (சகிப்புத்தன்மையுடனும்) நடந்து கொள்ளுங்கள்” – இது அல்லாமா ஆ.கா.அப்துல் ஹமீது பாகவி அவர்களின் மொழிபெயர்ப்பு.

ஆனால் அரபி மூலத்தில் உள்ள இரண்டு சொற்களையும் நாம் சற்று ஆழமாக இங்கே பார்ப்போம்.

ஒன்று: ஆஷிர் (அய்ன் – ஷீன் – ரா)

இம்மூலச் சொல்லிலிருந்து பிரிகின்ற பல சொற்களுடன் திருமறை வசனங்கள் இடம் பெற்றுள்ளன.

முதலில் ஆங்கில அகராதி மொழிபெயர்ப்பை எடுத்துக் கொள்வோம்.

‘Ashara – to divide into tenths; to be on intimate terms, associate (closely with someone). associate with one another

‘Ishrah – (intimate) association, intimacy, companionship, relations, (social) intercourse. company. conjugal community, community of husband and wife

‘Ishaar – with young, pregnant(animal)

‘Asheer – companion, fellow, associate, friend, comrade

‘Asheerah – clan, kinsfolk, closest relatives, tribe

அகராதியில் காணப்படும் அனைத்து பொருள்களையும் நாம் உற்று நோக்கினால் – ஆஷிர் என்ற சொல்லின் பொருள் – நெருக்கம், நெருங்கியிருப்பவை, நெருங்கிய தோழமை ஆகியவற்றைச் சுற்றியே இருக்கின்றன என்றே புரிகிறது.  இது ஏன் மொழிபெயர்ப்ப்புகளில் பிரதிபலித்திடவில்லை என்பதே எம் கேள்வி.


அடுத்து இச்சொல் இடம் பெறுகின்ற சில திருமறை வசனங்களைப் பார்ப்போம்.

“எவனது தீமை, அவனது நன்மையை விட மிக நெருங்கியிருக்கிறதோ அவனையே அவன் பிரார்த்திக்கிறான் – திடமாக (அவன் தேடும்) பாதுகாவலனும் கெட்டவன்; (அப்பாதுகாவலனை அண்டி நிற்பவனும்) கெட்ட தோழனே. (22: 13)

கெட்ட தோழனைக் குறித்திட அஷீர் என்ற சொல் பயன்படுத்தப் பட்டுள்ளது.

“இன்னும், உம்முடைய நெருங்கிய உறவினர்களுக்கு அச்சமூட்டி எச்சரிக்கை செய்வீராக!” (26: 214)

நெருங்கிய உறவினர்களைக் குறித்திட – அஷீரதக – என்ற சொற்பிரயோகம் பயன்படுத்தப்பட்டுள்ளது. மேலும் 58: 22 வசனத்தில் இதே போன்று அஷீரதஹும் என்று வருகிறது.

“சூல் நிறைந்த ஒட்டகைகள் (கவனிப்பாரற்று) விடப்படும் போது-” (81: 4)

இங்கே கருவுற்றிருக்கும் ஒட்டகங்களைக் குறித்திட – இஷார் என்ற சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது. தாயும் சேயும் நெருங்கியிருப்பதால் இச்சொல் பயன்படுத்தப் படுகிறதோ என்று தோன்றுகிறது.

அடுத்து இச்சொற்றொடரில் இடம் பெற்றுள்ள இன்னொரு சொல்: ம’-ரூஃப்!

ம’-ரூஃப் – என்ற இச்சொல்லுக்கு “அறியப்பட்டது” என்பதே சரியான பொருளாகும்.

அதாவது – இஸ்லாம் கட்டளையிட்டுள்ள எல்லாவிதமான நன்மைகளையும் குறிக்கும் சொல் இது என்கிறது ஜவாஹிருல் குர் ஆன்.

இவ்வாறு – இந்த இரு சொற்களின் விரிவான பொருள்களை கவனித்துப் பார்க்கும் போது

“அவர்களோடு கனிவோடு நடந்து கொள்ளுங்கள்” என்று பொத்தம் பொதுவாக மொழிபெயர்ப்பதை விடுத்து

” (மார்க்கம் அனுமதித்துள்ள) நன்மையான காரியங்கள் அனைத்திலும் அவர்களுடன் மிக நெருங்கிய உற்ற நண்பர்களாக நடந்து கொள்ளுங்கள்”

- என்று மொழிபெயர்க்கலாமோ என்று தோன்றுகிறது.

“behave with them as intimate companions in all the good things that are allowed in Islam “

- என்று ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பதில் என்ன தவறு இருக்க முடியும் என்றும் தெரியவில்லை.

இப்படி நாம் இந்த இறைவசனத்தைப் புரிந்து கொண்டால் – பின் வரும் நபி மொழிகளின் முக்கியத்துவம் நமக்குப் பளிச்சென்று விளங்கும்.

நானும் அல்லாஹ்வின் திருத்தூதர் (ஸல்) அவர்களும் குளிப்புக் கடமையானவர்களாக இருக்கும் போது ஒரே பாத்திரத்தில் சேர்ந்து குளிப்போம் என அன்னை ஆயிஷா (ரளி) அறிவிக்கிறார்கள். (அபூதாவுது, முஸ்லிம், நஸயீ, அஹ்மது)

‘ஒரே பாத்திரத்தில் இருந்து நானும் நபி (ஸல்) அவர்களும் உலூச் செய்யும் போது எனது கையும் ரஸுல் (ஸல்) அவர்களின் கையும் போட்டி போட்டுக் கொள்ளும்’ என்று உம்மு சுமைய்யா (ரளி) அறிவிக்கிறார்கள். (அபூதாவுது)

“நீங்கள் அல்லாஹ்வின் திருப்தியை நாடிச் செலவழிக்கிற எதுவாயினும் அதற்குரிய பலன் உங்களுக்கு அளிக்கப்பட்டே தீரும். உங்கள் மனைவியின் வாயில் ஊட்டும் (ஒரு கவளம்) உணவாயினும் சரியே” என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புஹாரி)

அனஸ் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்: யூதர்கள் மாதவிடாய்க்காரியுடன் வீட்டில் சேர்ந்து அமர மாட்டார்கள், பருக மாட்டார்கள். இது பற்றி நபி (ஸல்) அவர்களிடமும் கூறப்பட்டது. அப்போது, ‘மாதவிடாய் பற்றி உம்மிடம் கேட்கின்றனர். அது தொல்லை தரும் தீட்டு ஆகும். எனவே மாதவிடாய் சமயத்தில் பெண்களை விட்டு விலகி இருங்கள்’ என்ற 2:222 வசனம் இறங்கியது. அதை நபி (ஸல்) அவர்கள் விளக்கும் போது, ‘உடலுறவைத் தவிர மற்ற அனைத்தையும் செய்து கொள்ளுங்கள்’ என்றார்கள். (நூல்கள்: முஸ்லிம், திர்மிதி, நஸயீ, இப்னுமாஜா, அபூதாவூது)

நாம் இங்கே வலியுருத்திச் சொல்ல விரும்புவது என்னவெனில் -

கணவன்மார்களே! உங்கள் மனைவியுடன் நெருங்கிய நண்பனைப் போல நடந்து கொள்ளுங்கள் என்ற இறைவனின் அறிவுரையை அப்படிக்கு அப்படியே செயல்படுத்துங்கள். அப்போது தான் உங்கள் மனைவிமார்கள் உங்களுக்கு “கண் குளிர்ச்சியாகத்” தெரிவார்கள்.

கட்டுரை எழுதியவர் S.A. மன்சூர் அலி M.A., B.Ed.,
நீடூர். 
Source : http://meemacademy.com/?p=1391

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails