துன்பம் வரும்போது சிரியுங்கள். அந்தத் துன்பத்தை எதிர்த்துப் போராடவல்லது அந்தச் சிரிப்பைத் தவிர வேறு எதுவும் இல்லை
(இடுக்கண் வருங்கால் நகுக அதனை
அடுத்துஊர்வது அஃது ஒப்பது இல்(குறள்-621)
என்பர் வள்ளுவர்.
“வாழ்க்கை என்றால் ஆயிரம் இருக்கும்
வாசல் தோறும் வேதனை இருக்கும்
வந்த துன்பம் எது வென்றாலும்
வாடி நின்றால் ஓடுவதில்லை
வாடி நின்றால் ஓடுவதில்லை
எதையும் தாங்கும் இதயம் இருந்தால்
இறுதி வரைக்கும் அமைதி இருக்கும்“
என்பர் கண்ணதாசன்.
துன்பம் வரும் போது அழுகை தானே வரும்.
சிரிப்பு எப்படி வரும் என்கிறீர்களா..?
நேர்மறை எண்ணங்களை வளர்த்துக் கொண்டால் துன்பத்திலும் சிரிக்க முடியும்.!
நேர்மறை எண்ணங்களுக்கும் – எதிர்மறை எண்ணங்களுக்கும் இடையிலான போராட்டம் தான் நம் வாழ்க்கை.
ஒரு சின்ன கதை...
ஒரு ஊரில் ஒரு (உண்மையான) துறவி இருந்தாராம். அவருக்கென்று ஒரு குடிசை வீடு இருந்ததாம். ஒரு நாள் புயலும் மழையும் அடித்ததில் பல வீடுகளும் சேதம் அடைந்ததாம். அதில் அந்தத் துறவியின் வீடும் ஒன்றாக இருந்ததாம்.
ஒவ்வொருவரும் தம் வீடு போய்விட்டதே என்று அழுது வருந்திக்கொண்டிருந்தார்களாம்.
துறவி மட்டும் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தாராம்..
ஊர்மக்களுக்கு ஒரே வியப்பு!!!!!!
அவரிடமே சென்று கேட்டார்களாம்.
ஐயா..
அடித்த புயலில் உங்க வீட்டுக் கூரையே பிய்த்துக் கொண்டு சென்றுவிட்டதே...
உங்களுக்கு வருத்தமாக இல்லையா..? என்று..
அந்தத் துறவி அவர்களிடம் கேட்டாராம்..
ஏன் வருந்த வேண்டும்...? என்று...
துன்பமான இந்த நிகழ்வுக்கு வருத்தம் வராதா என்று மீண்டும் கேட்டார்களாம்..
அதற்குத் துறவி சொன்னாராம்...
“ நான் இதுவரை நிலவை பார்த்து மகிழ வீட்டை விட்டு வெளியே செல்லவேண்டியதாயிருந்தது..
இன்று முதல் அந்தத் தொல்லை எனக்கில்லை..
இனி வீட்டுக்குள் இருந்து கொண்டே நிலவை பார்த்து மகிழ்வேன்“ என்றாராம்.
• ஒரு பெரிய மலையையே தூரத்தில் இருந்து பார்க்கும் போது சிறிய கல்போலத் தான் காட்சியளிக்கும்!
ஒரு சிறிய கல்லைக் கூட கண்ணருகில் வைத்துக் காணும் போது பெரிய மலை போலத்தான் தெரியும்.
• பணம் சம்பாதிப்பதைச் சொல்லித்தர ஆயிரம் பயிற்சி மையங்கள் உண்டு!
எப்படி வாழ வேண்டும் என்பதைச் சொல்லித் தரும் பயிற்சி மையங்கள் குறைவு!
எப்படி வாழ வேண்டும் என்பதை இலக்கியங்கள் வழி நம் முன்னோர்கள் நிறையச் சொல்லிச்சென்றுள்ளனர்.
கலித்தொகையில் ஒரு பாடல்...
(தலைவன் பொருள் வயிற் பிரிகின்ற காலத்து “ காடு கடியவாயினும் இவ்வகைப்பட்டனவும் உள“ என்று கூறினார்.
அவை காண்டலின் வருவர், எனத் தோழிக்குக் கூறி அதற்கு நிமித்தமும் கூறி ஆற்றுவித்தது.)
தலைவன் பொருள் தேடுவதற்காப் பிரிந்து சென்றிருக்கிறான், அவன் சென்ற பாலை நிலம் மிகவும் கொடுமையானது.
தலைவனின் பிரிவுத் துன்பம் ஒரு பக்கமிருக்க,
பாலை நிலத்தின் கொடுமை இன்னொருபுறமாகத் தலைவியைத் துன்புறுத்துகிறது.
ஆயினும் தலைவி தம் தலைவன் பிரியும் போது சொல்லிச்சென்றதை எண்ணிப்பார்த்து மனதைத் தேற்றிக் கொள்கிறாள்.
தலைவன் பிரியும் போது “ காடு கொடுமையானது தான் ஆயினும் அங்கு இனிய காட்சிகள் பல உண்டு “ என்றான்.
அவன் சொன்ன காட்சிகளை எண்ணிப்பார்த்தும் நிமித்தங்களை நோக்கியும் தலைவி தன்னை ஆற்றுப்படுத்திக்கொள்கிறாள் இதுவே பாடலின் போக்கு...
இனி பாடலுக்குச் செல்வோம்...
தலைவன் பொருள் தேடச்சென்றிருக்கிறான்.
அவன் பிரிவினை ஆற்றாது தலைவி வருந்துவாளே என்று தோழி வருந்துகிறாள்..
தலைவி –
• நம்மிடம் பொருள் வேண்டி வருவோருக்கு இல்லை என்று சொல்லாது கொடுத்தல் வேண்டும்.
• பெரிய பகைகளையெல்லாம் வென்று அடிபணியாதவரை அழித்தல் வேண்டும்.
• முற்பிறப்பில் நம் இருவருக்கும் உண்டான பிணைப்பு நம்மைச் சேர்த்து வைக்கும். என்று,
வாழ்க்கைக்குப் பொருள் இன்றியமையாதது என்பதைத் தான் உணர்ந்து எனக்கும் உணர்த்திச் சென்றார் தலைவர். அவர் விரைவில் திரும்பி வருவார்.
தோழி –
பொருள் தேடச்சென்ற அவர் தாம் தேடச்சென்ற பொருள் முற்றிய பின்னர் தானே திரும்பி வருவார்.
தலைவி-
இல்லை அவர் அந்நிலத்தில் இடைச்சுரத்தில் காணும் காட்சிகள், அவரை மேலும் செல்லாது திரும்பி வரச்செய்யும்.
தோழி-
அக்கொடிய நிலத்தில் அப்படியென்ன காட்சிகனைக் காண்பார்?
தலைவி-
• காடுகள் நெருப்புப் போன்ற வெம்மையினால், பாதங்கள் பொறுக்கும் அளவின்றி இருக்கும் என்றார் தலைவர்,
அக்காட்டிடத்தே, துடியினைப் போன்ற அடியினைக் கொண்ட யானைக்கன்று, தாயும் தந்தையும் உண்ணவேண்டும் என்று கருதாது சிறிதளவு உள்ள நீரையும் கலக்கும். அந்தக் கலங்கிய நீரையும், முதலில் பிடியுண்ணுமாறு ஊட்டிப் பின்னரே களிறு உண்ணும் என்றார்.
• காடுகள் இலைப் பசுமை நீக்கி சென்றோரை வருத்தும் தன்மையுடையனவாக இருக்கும் என்றார்.
அக்காட்டிலே, ஆண்புறாக்கள், தம்மீது அன்பு கொண்ட பெண்புறாக்கள் வெம்மையில் வாடக்கூடாது என்று கருதி தம் சிறகை விரித்து ஆற்றும் என்றும் உரைத்தார்.
• சூரியனின் வெம்மையால் மூங்கி்ல் வாடும்படி இருக்கும் அந்நிலத்தில் செல்வோர் மிகவும் துன்புறுவர்.
அந்நிலத்தில் கலைமான், நிழலின்றி வருந்தும் பெண்மானுக்கு தன் நிழலை அளிக்கும் என்றும் உரைத்தார்.
தோழி-
இந்தக் காட்சிகள் போதுமே...
இவற்றில் ஏதாவது ஒன்றை அவர் பார்த்தாலும், உன் நினைவு வந்து அவர் திரும்பி வந்து விடுவாரே.
தலைவி-
ஆம்! அது மட்டுமல்ல பல்லியும் நம் வீடடில் நல்ல நேரத்தில், நல்ல இடத்தில் ஒலித்தது. அவ்வொலி அவரின் வருகையை அறிப்பதாகவே எனக்குத் தோன்றுகிறது.எனது கண்ணும் இடப்பக்கம் துடிக்கிது இது நல்ல நிமித்தம் தானே..?
தோழி-
ஆம். தலைவர் விரைவில் திரும்பி வருவார். இந்த நிமித்தங்கள் கூட அவரின் வருகையையே சுட்டுகின்றன.
இதுவே பாடலின் பொருள்.
பாடல் இதோ........
“அரிது ஆய அறன் எய்தி அருளியோர்க்கு அளித்தலும்,
பெரிது ஆய பகை வென்று பேணாரைத் தெறுதலும்,
புரிவு அமர் காதலின் புணர்ச்சியும் தரும்' எனப்
பிரிவு எண்ணிப் பொருள் வயின் சென்ற நம் காதலர்
வருவர்கொல், வயங்கு இழாஅய்! வலிப்பல், யான்; கேஎள் இனி:
'அடி தாங்கும் அளவு இன்றி, அழல் அன்ன வெம்மையால்,
கடியவே, கனம் குழாஅய்! காடு' -என்றார்; அக்காட்டுள்,
துடிஅடிக் கயம்தலை கலக்கிய சின் நீரைப்
பிடி ஊட்டிப், பின் உண்ணும் களிறு, எனவும், உரைத்தனரே;
'இன்பத்தின் இகந்து ஒரீஇ, இலை தீந்த உலவையால்,
துன்புறூஉம் தகையவே காடு' -என்றார்; அக்காட்டுள்,
அன்புகொள் மடப் பெடை அசைஇய வருத்தத்தை
மென் சிறகரால் ஆற்றும் புறவு, எனவும், உரைத்தனரே;
'கல் மிசை வேய் வாடக் கனை கதிர் தெறுதலான்,
துன்னரூஉம் தகையவே காடு' - என்றார்; அக்காட்டுள்,
இன்நிழல் இன்மையான் வருந்திய மட பிணைக்குத்
தன் நிழலைக் கொடுத்து அளிக்கும் கலை, எனவும், உரைத்தனரே.
என ஆங்கு,
இனை நலம் உடைய கானம் சென்றோர்
புனை நலம் வாட்டுநர் அல்லர்; மனை வயின்
பல்லியும் பாங்கு ஒத்து இசைத்தன;
நல்எழில் உண் கண்ணும் ஆடுமால், இடனே“
கலித்தொகை -11
இப்பாடலில்,
• பாலை நிலமோ மிகவும் துன்பத்தைத் தருவது, என்பதும் உற்று நோக்கினால் மனதுள் இன்பத்தை விளைவிக்கும் காட்சிகளும் அங்கு உண்டு என்பதை உணரலாம்.
• தலைவனின் பிரிவு ஆற்றாலாகத் துன்பத்தை விளைவிப்பது ஆயினும் தலைவி வாடி நிற்கவில்லை மாறாகத் தன்னைத் தானே தேற்றிக்கொள்கிறாள். நேர்மறையான எண்ணங்களை நினைத்து தலைவர் விரைவில் திரும்பி வருவார் என்று நினைக்கிறாள்.
• பல்லி கத்துதல், தம் கண் இடப்பக்கம் துடித்தல் ஆகியன சிலருக்கு மூடத்தனமாகத் தோன்றினாலும். மனதைத் தேற்றிக்கொள்ள இது ஒரு நல்ல உத்தியாகவே தோன்றுகிறது.
இலக்கியங்கள் மனிதர்களைப் பண்படுத்தவே தோன்றின. நம் முன்னோர் இவ்விலக்கியங்களின் வழியாக அவர்தம் அனுபவங்களை நமக்குத் தந்து சென்றுள்ளனர். நம் அறிவோடு அவர்தம் அனுபவமும் சேரும் போது நம் வாழ்வு இனிக்கும். அதனால் அவ்விலக்கியங்களைப் படிக்கும் போது நம் வாழ்வில் நேரும் துன்பங்களிலும் இன்பம் காணமுடியும்.
லேபிள்கள்: கலித்தொகை
நன்றி : http://gunathamizh.blogspot.com
1 comment:
எனது கட்டுரையை மீண்டும் பதிவு செய்தமைக்கு நன்றிகள் ...!!
Post a Comment