மூச்சுக்கு முச்சு தேவைப்பட்டு
மூச்சு நின்றபின் கிட்டும்
அமைதியா நிம்மதி என்றேன்
வாழ்வின் தேவைக்கு செத்தபின் வருமென்பது
எப்படி ஈடாகும் என்கிறாய்
என்னிலும் துயரத்தில் தள்ளாடும்
உள்ளங்களைக் கண்டு சமாதானம் கொள்ளும்
புத்திதான் நிம்மதி என்றேன்
உன்னை மீறும் எண்ணங்களை
எத்தனைநாள் ஏமாற்றுவாய் என்கிறாய்
எல்லாம் துறந்து
எதையும் சுவைக்காமல
மௌனித்துக் கிடப்பதே நிம்மதி என்றேன்
இயற்கையைச் சுத்தமாய்த் துடைத்தெறிவது
எப்படி நிகழும் என்கிறாய்
அன்னை மடி துயிலும்
மழலைச்சுகமே நிம்மதி என்றேன்
வளராமல் இருக்க
வரம் இல்லையே என்கிறாய்
காதலியின் அணைவில்
நினைவுகளற்றுப் பறக்கும்
சிறகுகளே நிம்மதி என்றேன்
ஒடிப்போயோ அல்லது உடனிருந்தோ
ஒரு நாளவள் காணாதொழிவாளே என்கிறாய்
கண்மூடிக் கண்ணீர் பெருக்கி
தெய்வமே என்று காலடி கிடக்கும்
பக்தியே நிம்மதி என்றேன்
தினமும் தொழுதெழும் தீவிர பக்தனும்
தாளாத்துயரென்று வந்துவிட்டால்
இருக்கிறாயா தெய்வமே என்றுதானே
அழுகிறான் என்கிறாய்
அட எதுதான் நிம்மதி எங்குதான் நிம்மதி
எப்படித்தான் வரும் நிம்மதி
என்றேன் சலிப்போடு
உனக்குள் தேடி
உன்னையே வளர்த்தெடுத்து
உன்னை ஆளவைக்கும்
உன் சக்தியே நிம்மதி என்கிறாய்
மலங்க மலங்க விழிக்கிறேன்
வழியறிந்தும் வாசல் அடையும்போது
ஆயுள் முடியுமே என்ற
கவலையில்
நன்றி : http://anbudanbuhari.blogspot.com/
No comments:
Post a Comment