Sunday, January 24, 2010

மானா மக்கீன் கட்டுரைக்கு மறுப்பு :

மானா மக்கீன் கட்டுரைக்கு மறுப்பு :
Posted by nagoori in நாகூர் ஹனீபா.:

மானா மக்கீன்“நாகூர் ஹனீபாவின் பாடல்கள் பல்கலைக்கழக மட்டத்தில் ஆய்வு செய்யப்பட வேண்டும்” என்று எஸ்.ஐ.நாகூர் கனி எழுதிய கட்டுரையில் காணப்பட்ட சில கருத்துக்களுக்கு மறுப்பு தெரிவித்து மானா மக்கீன் என்ற இலங்கை வாழ் எழுத்தாளர் அதே பத்திரிக்கையில் கட்டுரை வரைந்திருக்கிறார்.

நாகூர் கனியின் கட்டுரையில் காணப்படும் சொற்குற்றம். பொருட்குற்றத்தை துருவும் முயற்சியில் இசையுலகில் சகாப்தமாக விளங்கும் இசைமுரசு ஹாஜி நாகூர் இ.எம்.ஹனீபா அவர்களின் மரியாதையைக் குறைக்கும் அளவிற்கு சில விஷமத்தனமான வார்த்தைகளை அள்ளி வீசி இருக்கிறார் இலங்கை எழுத்தாளர் கலாபூஷனம் மானா மக்கீன் அவர்கள்.

இதோ அவருடைய குற்றச்சாட்டுகளுக்கு என்னுடைய பதில்கள் :

//“நாகூர் ஹனீபாவின் வாழ்க்கை வரலாற்றை அ.மா.சாமி யின் ஆய்வில் வெளிவந்த பிறகு புதிதாக ஓர் ஆய்வுக்கு நாகூர் ஹனிபாவிடம் எந்தச் சரக்கும் இல்லை”//

திரு மானா மக்கீன் அவர்களே! நாகூர் ஹனீபாவின் இசையுலக அனுபவமாகட்டும், அல்லது அவரது அரசியல் அனுபவமாகட்டும், அள்ள அள்ளக் குறையாத அமுதசுரபி அது. அவரது அனுபவத்தில் சரக்கு இல்லை என்று கூறுவது சிரிப்பை வரவழைக்கிறது.

அ.மா.சாமி எழுதிய அந்த நூலை நாகூர் ஹனீபாவின் முழுவாழ்க்கை வரலாறு என்று ஏற்றுக் கொள்ள இயலாது. அது ஒரு விளம்பரதாரார் நிகழ்ச்சியைப் போன்றது. நாகூர் ஹனீபாவைக் காட்டிலும் அவரோடு சேர்ந்து புகைப்படம் எடுத்துக் கொண்டவர்களை புகழ்வதாக அது இருக்கிறது.

வெளியுலகத்திற்கு கஞ்சத்தனம் மிகுந்தவராக காட்சிதரும் நாகூர் ஹனீபா அவர்களின் கொடைத்தன்மை அளவிட முடியாது. எத்தனையோ ஊர்களுக்கு கச்சேரி நடத்தச் சென்ற அவர், நல்ல காரியங்கள் செய்ய செலவிடுவதற்கும், பள்ளிவாசல்கள் கட்டுவதற்கும் அள்ளிக்கொடுத்திருப்பதை, அந்தந்த ஊர்க்காரர்களும், அவருக்கு நெருக்கமானவர்களும் நன்கறிவார்கள்.

//“அவருக்கு பாடல்கள் எழுதி கொடுத்தவர்களை அவர் பிரபலப் படுத்தவில்லை”//

இந்த வாதத்தை முன்னிறுத்தி இசைமுரசு அவர்களைக் குற்ரவாளி கூண்டில் ஏற்றி அவரைச் சாடுவதை நம்மால் பொறுத்துக் கொள்ள இயலாது. இன்னும் சொல்லப்போனால் நாகூர் ஹனீபா என்ற ஒரு ‘இசைக்குயில்’ இல்லாமல் போயிருந்தால் நாகூர் ஆபிதீன் என்ற ‘கவிக்குயில்’ வெளிச்சத்திற்கு வராமலே போயிருக்கும்.

//“ஹனிபாவுக்காகப் பாடல் இயற்றிய பாவலர்கள் சுமார் 25 பேர் வரை உள்ளனர். இவர்கள் அத்தனை பேருமே திரைமறைவில் தான். ஆரம்ப காலங்களில் அவர்களை நினைவு கூர்ந்த பாடகர் பிற்காலத்தில் மறந்தே போனார்”.//

கட்டுரை ஆசிரியர் பாடகரிடமிருந்து என்ன எதிர்பார்க்கிறார்? ஒவ்வொரு முறையும் பாடலாசிரியர்களை மேடையேற்றி பொன்னாடை போர்த்தி கெளரவித்தப் பிறகு நிகழ்ச்சியைத் தொடங்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறாரா?

//”அவர்களுக்கு (பாடலாசிரியர்களுக்கு) பாராட்டு விழாக்கள் எதுவுமோ பொன்னாடைகள் போர்த்தியோ வைபவங்கள் நடத்தியவரல்லர்”.//

இலங்கையில் வசித்துவரும் மானா மக்கீன், நாகூர் ஹனீபா யார் யாருக்கெல்லாம் பொன்னாடை போர்த்தினார் என்ற எண்ணிக்கையை விரல்நுனியில் வைத்திருப்பார் போலும்.

//“நாகூர் ஹனீபாவுக்காக எழுதப்பட்ட பாடல்களை ஹனீபாவின் பாடல்கள் என்றழைப்பது தவறு”//

ஆஹா! என்னமாய் ஒரு வாதம்? மக்கள் திலகத்திற்காக எழுதப்பட்ட பாடல்களை “எம்.ஜி.ஆரின் கொள்கைப் பாடல்கள்” என்றும். நடிகர் திலகத்திற்காக எழுதப்பட்ட பாடல்களை “சிவாஜியின் தத்துவப் பாடல்கள்” என்றும் எழுதும்போது, இசைமுரசுக்காக எழுதப்பட்ட பாடல்களை “ஹனீபாவின் பாடல்கள்” என்று அழைப்பதில் என்ன தவறு?

//“நாம் மட்டும் பாடகர் ஹனிபாவை ஆய்வுக்குத் தூக்கிப் பிடிக்க வேண்டிய தில்லை”//

நாகூர் ஹனீபாவெனும் சகாப்தத்தை தூக்கிப் பிடிப்பதா அல்லது தூக்கிப் போடுவதா என்று முடிவு செய்வதற்கு இந்த மானா மக்கீனுக்கு என்ன அருகதை இருக்கிறது?

வடநாட்டு இசைமேதை நவுஷாத், பாடகி லதா மங்கேஷ்கர் முதல் ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரகுமான் வரை கொண்டாடும் ஒரு மாபெரும் இசைக்கலைஞனை மானாவாரியாக விமர்சிக்க மக்கிப்போன இந்த எழுத்தாளனுக்கு என்ன யோக்கியதை இருக்கிறது?

//“ஆரம்பத்திலேயே என் பேனா குத்திக் காட்டியது போல், தனக்குப் புகழும் செல்வமும் கொடுத்த உன்னதமான பாவலர் பெருமக்களை அடையாளம் காட்டத் தவறிய பாடகர் அவர்”//

நாகூர் ஹனீபா அவர்கள் பாடிய இசைத்தட்டுகளை எழுத்தாளர் பார்த்ததில்லை போலும். யாரெழுதிய பாடல், இசையமைத்தது யார், அவரோடு இணைந்து பாடியது யார், அவரோடு கோரஸ் பாடியது யார் என்ற முழு விபரமும் காணக் கிடைக்கும்.

நாகூர் ஹனீபாவுக்கு பாடல் எழுதிக் கொடுத்தாலே பெரும் பாக்கியம் என்று நினைப்பவர்கள் பலரும் உண்டு. அந்த அதிர்ஷ்டம் எல்லா கவிஞர்களுக்கும் எளிதில் கிடைத்துவிடக் கூடியதல்ல.

“மருமகனே!” என்று ஹனீபா அண்ணனால் பிரியமுடன் அழைக்கப்படும் கவிஞர் இஜட் ஜபருல்லாவின் பாடல்கள் பல பிரபல இஸ்லாமியப் பாடகர்கள் பாடியிருந்தும், இசைமுரசு அவர்களுக்காக எழுதும் வாய்ப்பு தனக்கு கிடைக்கவில்லையே என்ற ஆதங்கத்தை, அந்த வெண்தாடிச் சிங்கத்திற்கு, ஜனாப் சுல்தான் மாலிம் அவர்களை தலைவராகக் கொண்டு இயங்கும் நாகூர் முஸ்லீம் சங்கம் ஏற்பாடு செய்த, “வாழ்நாள் சாதனையாளர் விருது” அளிக்கப்பட்ட விழாவில் கவிஞரே மேடையில் வெளிப்படுத்தினார்.

[பாடகர் ஜெய்னுல் ஆபிதீனுக்கு பல பாடல்கள் எழுதிக் கொடுத்த நான், என்னுடைய பாடல் நாகூர் ஹனீபா அவர்களின் குரலில் பதிவாகும் பாக்கியம் கிடைக்காதா என்று நான் ஏங்கியதுண்டு.]

அவரது மேடைக் கச்சேரிகளைக் கேட்டு இரசித்தவர்களுக்கு இந்த உண்மை விளங்கும். பாடலை ஆரம்பிப்பதற்கு முன் ஒரு முன்னுரை வழங்குவார். பிற மேடைப் பாடகர்களிடம் இல்லாத வழக்கம் இது. (இவரைப் பார்த்துதான் பிற இஸ்லாமியப் பாடகர்களும் இந்த முன்னுரை வழங்கும் பாணியை பின்பற்றுகிறார்கள் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது)

பாடலைத் தொடங்குமுன், பாடல் எழுதிய கவிஞரின் பெயரை மறக்காமல் குறிப்பிடுவதை ஒரு வழக்கமாகவே கொண்டிருந்தார் நாகூர் ஹனீபா என்பது ஊரறிந்த விஷயம்.

இசைமுரசு அவர்களுடன் இணைந்து – “ஹஸ்பி ரப்பி ஜல்லல்லாஹ்” மற்றும் “ஸலாத்துல்லாஹ் ஸலாமுல்லாஹ்” – ஏனைய இரண்டு பாடல்களுக்கு ‘கோரஸ்’ பாடும் அரிய வாய்ப்பு எனக்கு வாய்த்தது. கூட்டத்தோடு கூட்டமாக என்னுடைய குரல் மெலிதாக ஒலிக்கும். அப்படியிருந்தும் உள்ளுரில் இந்த பாடலை பாடும்போதெல்லாம் இன்னாரின் மகன் இன்னார் என்னோடு இணைந்துப் பாடியது என்று ஒவ்வொரு மேடையிலும் தவறாமல் குறிப்பிடுவார்.

இப்பேர்ப்பட்ட ஒருவரை பாடலாசிரியர்களை இருட்டடிப்புச் செய்பவர் என்று குற்றம் சாட்டுவது மனசாட்சி இல்லாமல் கூறும் குற்றச்சாட்டு.

ஹனீபா என்ற நட்சத்திர அந்தஸ்த்து பாடகருக்காகத்தான் கூட்டம் திரள்கிறதேயன்றி கவிஞர் மதிதாசனுக்காகவோ அல்லது கவிஞர் ஜாபர் அலிக்காகவோ அல்ல.

//”குரல்தானம் மட்டும் செய்த ஒருவரை அரியாசனத்தில் அமர்த்துவது முறையாகாது. அதில் நல்ல தெளிவு அனைவருக்கும் இருக்க வேண்டும்”//

தெளிவு பெறவேண்டியது கட்டுரையாளரே. வாசகர்கள் அல்ல.

இந்தக் குரல் எப்படிப்பட்டது? எத்தனை லட்சோப லட்சம் ரசிகர்களைக் கவர்ந்துள்ளது? எத்தனை நாடுகளில் ஒலித்துக் கொண்டிருக்கிறது? என்பதை இந்த எழுத்தாளர் அறிந்திருக்காதது அவரது பொதுஅறிவை எடுத்துக் காட்டுகிறது.

அன்று முதல் இன்று வரை கழகக் கூட்டங்கள் இந்த குரல் ஒலிக்காமல் தொடங்கியதில்லை. இந்தக் குரல் ஒரு கட்சியையே ஆட்சியில் அமர்த்தவல்லது.

இந்தக் குரலைக் கேட்டு இஸ்லாத்தை விளங்கிக் கொண்டவர்கள் எத்தனையோ பேர்.

//“தன் சொந்த மண்ணின் குரல் வளம் மிக்க ஒருவரை உயர்த்தி வைத்தவர்கள் இக் கவிஞர்கள் (நாகூர் ஆபிதீன், நாகூர் சலீம்) இருவருமே!”//

ஐயா! ஒரு பாடல் வெற்றியடைவதற்கு மெட்டு, இசை, பாடல் வரிகள், குரல் வளம் இவை எல்லாவற்றிற்கும் சமவிகிதத்தில் பங்கு இருக்கிறது என்பது எல்லோருக்கும் தெரிந்த விஷயம்.

நாகூர் ஹனீபாவுக்கு வாய்த்த குரல் இறைவன் தந்த அருள். எட்டுக்கட்டையில் மிக உச்சஸ்தாயியில் பாடவல்ல, தெள்ளுதமிழில் தெளிவாக உச்சரிக்கவல்ல, வெண்கலத்தொனியுடன் கம்பீரமாக முழங்கும் ஒரு மாபெரும் கலைஞனை சிறுமை படுத்தி எழுத தங்களுக்கு அப்படியென்ன தனிப்பட்ட விரோதம் என்று தெரியவில்லை.

//“ஆக நம்மைப் போன்ற மூத்த எழுத்தாளர்கள் தான், ஆய்வுப் பணியில் ஈடுபட வேண்டிய பல்கலைக்கழக மாணவர்களுக்கு யாரை, எவரை, எப்படி அடையாளமிடவேண்டும் எனச் சொல்லிக் கொடுக்க வேண்டும்”//

தன்னை மாணவர்களுக்கு வழிகாட்டும் தகுதியுள்ள மூத்த எழுத்தாளன் என்று பிரகடனப்படுத்திக் கொள்ளும் இந்த மனிதர், பல புளுகு மூட்டைகளை அவிழ்த்து வைத்திருப்பது அவரது முதிர்ச்சியிலா சிறுபிள்ளைத்தனத்தைக் காட்டுகிறது

//“இன்று முதுமையில் தள்ளாடித் தள்ளாடி வாழ்வைக் கடத்திக் கொண்டிருக்கும் கவிஞர் சலீமுடன் உறவாடிக் கொண்டிருப்பது வறுமை மட்டுமே.”//

ஐயா மான மக்கீன் அவர்களே! முதுமையில் தள்ளாடித் தள்ளாடி வாழ்வை நடத்திக் கொண்டிருப்பது நீங்களாக வேண்டுமானால் இருக்கலாம். கலைமாமணி கவிஞர் சலீம் அவர்கள் திடகாத்திரத்துனும், மிகுந்த உற்சாகத்துடனும் இலக்கியப் பணிகளை தொடர்ந்து வருகிறார்.

தாங்கள் புளுகியிருப்பதைப்போல் அவரொன்றும் வறுமையில் வாடவில்லை. அல்ஹம்துலில்லாஹ் இறைவன் அருளால் அவர் நல்ல வசதியில் என்பதை இருக்கிறார் என்பதை அறிந்துக் கொள்ளுங்கள்.

//“பாடகரோ கலைஞரின் தயவில் சென்னையின் சொகுசுப் பகுதி பங்களாவில் வாசம்”//

திரு. மானா மக்கீன் அவர்களே! நாகூர் ஹனீபா கட்டிய வீடுகள் அனைத்தும் ஓடி ஓடிச் சம்பாதித்து, ஒவ்வொரு செங்கல்லாக வருடக்கணக்கில் கட்டிய வீடுகளாகும்.

கட்சிப் பிரச்சாரத்திற்காக தொண்டைக்கிழியக் கத்தி, ரத்த வாந்தி எடுத்த சந்தர்ப்பங்களும் உண்டு. அவர் கட்சிக்காக எத்தனையோ காலம் உழைத்திருந்தும், கட்சியினால் அவர் அடைந்த பொருளாதார இலாபம் ஒன்றுமே கிடையாது எனலாம். மாண்புமிகு சாதிக் பாட்சாவுக்கும் சீனியரான அவர், தனக்குள்ள அரசியல் செல்வாக்கை பயன்படுத்தி அமைச்சராகக்கூட ஆகியிருக்கலாம். காலம் முழுதும் இசைக்காகவே தன் வாழ்நாளை செலவிட்ட கொள்கைபிடிப்பான மனிதரவர்.

//“ஆக மேற்படி குறிப்பிலிருந்து புலவர் ஆபிதீன் கொழும்பில் வாழ்ந்தவர் என்பது புரிந்திருக்கும். அதுவும் எங்கே? வளமிகு வாழைத்தோட்டமே.”//

ஆக புலவர் ஆபிதீன் சிறிது காலம் கொழும்பில் தங்கியிருந்தார் என்ற ஒரே காரணத்துக்காகவே, புலவர் ஆபிதீனைப் புகழ்ந்தும் இசைமுரசு இ.எம்ஹனீபாவை மட்டம் தட்டியும் எழுதியிருக்கிறாரா இந்த எழுத்தாளர்?

நாகூர் ஹனீபா வளமிகு வாழைத்தோட்டத்தில் வசிக்காததுதான் அவரிழைத்த மாபெருங்குற்றமா?

//“ஆக எந்த வகையிலும் சரி பாடல்களை ஆய்வு செய்வோர் பாடகருக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டிய அவசியமில்லை, பாடலாசிரியர்களுக்கே கொடுக்க வேண்டும்”//

திரு மானா மக்கீன் அவர்களே! கலைமாமணி நாகூர் சலீம் அவர்கள் எழுதிய எத்தனையோ அருமையான தத்துவப் பாடல்களை, இஸ்லாமியப் பாடல்களை பிற இஸ்லாமியப் பாடகர்கள் பாடியிருக்கிறார்கள். அவைகள் வெளிச்சத்திற்கு வராமலே போயிருக்கின்றன. மாறாக அவரது சுமாரான பாடல்கள் இசைமுரசு அவர்களால் பாடப்பெற்று மிகப் பெரிய வரவேற்பை பெற்றிருக்கின்றன.

ஆரம்ப காலத்திலிருந்தே நாகூர் ஹனீபாவின் பாடல்களில் - இசையிலாகட்டும், பாடுபொருளில் ஆகட்டும், பாடல் அர்த்தங்களிலாகட்டும் – ஒரு தனிப்பட்ட மகத்துவத்தைக் காண முடியும்.

ஹனீபா அண்ணன் அவர்களின் பாடல் தேர்வுகள், – ராகம், தாளம், ஸ்வரம், ஏற்ற இறக்கம், லயம், உச்சரிப்பு – போன்றவை இணைந்து கேட்போரை இசையில் கிறங்க வைக்கும்.

“குரல் தானம்” மட்டும் செய்யும் பாடகருக்கு பாடலின் வெற்றியில் யாதொரு பங்களிப்பும் இல்லை என்று வாதிடும் மானா மக்கீனின் வாதம் அர்த்தமில்லாமல் இருக்கிறது.

//“புலவர் ஆபிதீனின் பங்களிப்புகள் பற்றி தமிழகப் பதிப்பகமொன்றுக்கு ஆய்வுநூல் எழுதிக் கொண்டிருக்கின்றேன். அன்னார் பற்றி ஒருசிறு வாழ்க்கைக் குறிப்பை வாரமஞ்சரியில் தர ஆவலாக உள்ளேன்.”//

இப்போது புரிகிறது, எழுத்தாளர் கலா பூஷனம் அவர்கள் தானெழுதப் போகும் ஆய்வுநூலுக்கு விளம்பரம் சேர்க்கும் எண்ணத்தில் இசைமுரசு அவர்களை சிறுமைப் படுத்தி எழுதியிருக்கிறார் என்பது தெளிவாகிறது. ஆய்வுக்கான தலைப்பு எப்படி இருக்கவேண்டும் என்று கட்டுரையைத் தொடங்கிய இந்த எழுத்தாளர் தடம் புரண்டு, ஒரு சிறந்த இசைக்கலைஞனை இழிவு படுத்தி எழுதியிருப்பது வேதனையைத் தருகிறது.

தொடர்புடைய சுட்டி : இறைவனிடம் கையேந்துங்கள்

[மானா மக்கீன் எழுதி தினகரன் வாரமஞ்சரியில் வெளியான் முழுக் கட்டுரை]


நாகூர் ஹனீபாவுக்காக எழுதப்பட்ட பாடல்களையே ஆய்வு செய்ய வேண்டும் – ஹனீபாவின் பாடல்கள் என்றழைப்பது தவறு!


- மானா மக்கீன்

நாகூர் கனி, நாகூர் ஹனீபாவின் பாடல்கள் பல்கலைக்கழக மட்டத்தில் ஆய்வு செய்யப்பட வேண்டும் என்று முன்வைத்த வாதம் தவறு என்றும் அப்பாடல்களை எழுதிய பாடலாசிரியர்களும் பாடல்களுமே ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட வேண்டும் என்றும் வாதிடுகிறார் கட்டுரையாளர்.

கடந்த செப்டம்பர் 27 வாரமஞ்சரியில் எஸ். ஐ. நாகூர் கனி எழுதிய இசைமுரசு நாகூர் இ. எம். ஹனீபாவின் பாடல்கள் பல்கலை மட்டத்தில் ஆய்வு செய்யப்பட வேண்டும் என்பது சம்பந்தமான சில சிந்தனை ஓட்டங்களே இந்த எழுத்துக்கள். இந்தக் கட்டுரையின் தலைப்பு கருத்து மயக்கத்தை உண்டு பண்ணுவதாக உள்ளது. முக்கியமாக இளைய தலை முறை ஆராய்ச்சி மாணவர்கள் ஹனிபா இயற்றிப் பாடிய பாடல்கள் எனக் கருத்தில் கொள்வதற்கு இடமிருக்கிறது.

ஏனெனில் ஹனிபாவுக்காகப் பாடல் இயற்றிய பாவலர்கள் சுமார் 25 பேர் வரை உள்ளனர். இவர்கள் அத்தனை பேருமே திரைமறைவில் தான் ஆரம்ப காலங்களில் அவர்களை நினைவு கூர்ந்த பாடகர் பிற்காலத்தில் மறந்தே போனார். பிரபலப்படுத்தவில்லை. அவர்களுக்குப் பாராட்டு விழாக்கள் எதுவுமோ பொன்னாடைகள் போர்த்தியோ வைபவங்கள் நடத்தியவரல்லர்.

பாவலர் பெருமக்களில் கணிசமானோர் இப்பொழுதும் வாழ்கின்றனர். ஆனால் வறுமையில் வாடுகின்றனர்.

ஆக ஹனிபா பாடிய பாடல்களை பல்கலைக்கழக மட்டத்தில் ஆய்வு செய்வது அவசியமேயொழிய பாடகரையல்ல. அதற்கு எவ்விதத் தேவையுமில்லை. ‘குரல்தானம்’ மட்டும் செய்த ஒருவரை அரியாசனத்தில் அமர்த்துவது முறையாகாது. அதில் நல்ல தெளிவு அனைவருக்கும் இருக்க வேண்டும்.

அதுமட்டுமன்றி, நாகூர் ஹனிபாவின் வாழ்க்கை வரலாற்று நூலொன்று, தொழிலதிபர் அ. அய்யூபின் நவமணி பதிப்பக வெளியீடாக ராணி, முன்னைநாள் ஆசிரியர் அ. மா சாமியின் ஆய்வில் வெளியான பிறகு (ஆண்டு : 2006) புதிதாக ஓர் ஆய்வுக்கு நாகூர் ஹனிபாவிடம் எந்தச் சரக்கும் இல்லை.

இன்னும் விளக்கமாக, விரிவாக எழுதுவதாயின், அந்த ஆரம்ப காலத்து எம். கே. தியாகராஜ பாகவதர், பி. யூ. சின்னப்பா, டி. ஆர். மகாலிங்கம் போன் றவர்கள் பாடியவற்றை ஆய்வுக்கு எடுத்துக் கொண் டவர்களும், தற்கால பி. பீ. ஸ்ரீனிவாஸ், டி. எம். செளந்திரராஜன், பி. சுசீலா ஆகியோர் பாடியவற் றையும் ஆய்வு செய்தவர்கள் யார் யாருக்கு முன்னுரிமையும் முதலிடமும் கொடுத்திருக்கிறார்கள் என்று நோக்கினால், அக்கால பாபநாசம் சிவன், உடுமலை நாராயண கவி, மருதகாசி ஆகியோரு க்கும், இக்கால பட்டுக் கோட்டை கல்யாண சுந்தரம், கண்ணதாசன், கம்பதாசன் போன்றோருக்குமே வழங்கியுள்ளனர். தனித்தனி ஆய்வு நூல்களும் வெளியாகியுள்ளன.

நாகூர் ஹனிபாவைப் போல வெண்கலக்குரல் கொண்ட எம். கே. தியாகராஜ பாகவதரை மட்டும் ஆய்வெழுத்தாளர்கள் நினைத்திருந்தால் ஒரு பாபநாசம் சிவன் வெளிச்சத்திற்கு வந்தே இருக்க மாட்டார்.

அவர்கள் யாரும் அப்படிச் செய்ய வில்லை !

நாம் மட்டும் பாடகர் ஹனிபாவை ஆய்வுக்குத் தூக்கிப் பிடிக்க வேண்டிய தில்லை.

அத்தோடு, ஆரம்பத்திலேயே என் பேனா குத்திக் காட்டியது போல், தனக்குப் புகழும் செல்வமும் கொடுத்த உன்னதமான பாவலர் பெருமக்களை அடையாளம் காட்டத் தவறிய பாடகர் அவர்.

ஆக நம்மைப் போன்ற மூத்த எழுத்தாளர்கள் தான், ஆய்வுப் பணியில் ஈடுபட வேண்டிய பல்கலைக்கழக மாணவர்களுக்கு யாரை, எவரை, எப்படி அடையாளமிடவேண்டும் எனச் சொல்லிக் கொடுக்க வேண்டும். கட்டுரை ஒன்றுடன் கருத்துக்களைச் சொல்லி பொறுப்பிலிருந்து ஒதுங்கிக் கொள்ளக்கூடாது.

என் கருத்தில், இசைமுரசு நாகூர் இ. எம். ஹனிபா பாடல்கள் என்றில்லாமல் நாகூர் ஹனிபா பாடிய பாடல்களில் பாவலர்கள் காட்டும் இஸ்லாமும் இறைத் தூதரும் என்றோ அல்லது

‘இசைத் தட்டுக்களில் (கவிஞர்களின்) ‘இஸ்லாமும் இறைத் தூதரும்’ என்றோ நல்ல நல்ல தலைப்புகளில் ஆய்வு செய்யலாம்.

இதற்கு நாகூர் ஹனிபாவின் குரலில் ஒலித்த பாடல்கள் மட்டுமல்ல, அவருக்கு முன் ஜொலித்த என். பி. அப்துல் காதர், காரைக்கால் தாவூது, நாகூர் எம். எம். யூசுப், மதுரை ஹுசைன்தீன், காயல் ஷேக் முஹம்மது போன்ற சுமார் 25 பாடகர்கள் பாடியவற்றையும் உட்படுத்தல் அவசியம்.

மேலும் இன்றைக்கும் கூட சென்னை வானொலி, நாகூர் எம். எம். யூசுப் பாடிய குணங்குடி மஸ்தான் சாஹிபுவின் பாடல்களையும், உமருப் புலவரின் சீறாப் புராணம் பாடல்களையும் ஒலிபரப்பி இஸ்லாமியக் கருத்துக்களை அள்ளித் தெளித்தவண்ணம் உள்ளதே! அவ்வாறாயின் நாகூர் ஹனிபா பாடியவற்றுக்கு மட்டும் தனி ஆய்வு தேவையா?

உண்மையில் அனைத்துப் பாவலர்களாலும் இயற்றப்பெற்று அனைத்துப் பாடகர்களாலும் பாடப் பெற்ற பாடல்களை ஆய்வு செய்யும் முறையே சரியானதாக அமையும் முழுமையானதாகவும் ஆகும்.

நல்லது நான் இனி, நாகூர் ஹனிபாவைப் புகழேணியில் ஏற்றி வைத்த புலவர் பெருமக்களின் ஒரு பட்டியலை இங்கு பெருமையுடன் வழங்கி, அவர்களுள் இருவர் பாடகரின் இன்றைய உயர்வுக்கும் புகழுக்கும் முக்கிய காரணகர்த்தாக்கள் என்பதையும் அடையாளப்படுத்துகின்றேன்.

அத்துடன் அவர்களிலொருவரும், மற்றொருவரும் இலங்கையிலும் வாழ்ந்துள்ளனர். அவர்களையும் தெரிந்து கொள்ள வைக்கிறேன்.

முதலில் புலவர்களின் நாமாவளி!

குணங்குடி மஸ்தான்

பாவேந்தன் பாரதிதாசன்

உடுமலை நாராயணகவி

புலவர் ஆபிதீன்

நல்ல தம்பிப் பாவலர்

ஞானபூபதி இபுராகீம்

இறையருட் கவிமணி பேராசிரியர் கா. அப்துல் கபூர்

அப்துல் ரசீது

இ. எம். நயினார்

சாரண பாஸ்கரன் (அகமது)

பொருள்வை மதிதாசன் (அப்துல் ரகீம்)

கவிஞர் தா. காசிம்

சிங்கப்பூர் க. து. மு. இக்பால்

நாகூர் சேத்தான் எம். எம். ஏ. காதிர்

நாகூர் சாதிக்

கவிஞர் கருணானந்தம்

நூர் மதிதாசன்

திருவை அப்துல் ரகுமான்

நாகூர் சலீம்

தேங்கை சர்புதீன் ஆலிம்

அபிவை தாஜுதீன்

கூறைநாடு அப்துல் சலாம்

வீரை அப்துல் ரகுமான்

தத்துவக் கவிஞர் இ. பத்ருதீன்

தாராபுரம் மு. ஜாபர் அலி

மேலே உள்ள பெயர்களில் புலவர் ஆபிதீனும் நாகூர் சலீமும் மிகமிக முக்கியமானவர்கள்.

பிரபல இதழாளர், அ. மா சாமி புலவர் ஆபிதீனை ‘நாகூர் ஹனிபாவின் பெருமைக்கும் சிறப்புக்கும் முதல் காரணம் அவருடைய ஆசிரியரான புலவர் ஆபிதீன்தான்!’ என ஹனிபாவின் வாழ்க்கை வரலாறு நூலில் வியந்து பாராட்டியுள்ளார். (பக் : 103)

என் கருத்தில், ஆய்வெழுத்தாளன் என்ற வகையில், நாகூர் சலீம் அவர்களுக்கும் மேலே தரப்பட்ட பாராட்டு வரிகள் பொருந்தும்.

புலவர் ஆபிதீனின் காலத்திற்குப் பிறகு பாடகருக்கு நல்ல நல்ல பாட்டுக்களை நினைத்த மாத்திரத்தில் எழுதிக் கொடுக்கும் வல்லமை நாகூர் சலீமிடமே அமைந்திருந்தது.

பிற்காலத்தில் புகழடைந்த பல பாடல்களின் சொந்தக்காரர் அவரேதான். அவர்தம் பாடல் தொகுப்பு நூல் நல்ல அத்தாட்சி.

இந்த இடத்தில் இன்னுமொரு தகவல் புலவர் ஆபிதீனும் கவிஞர் சலீமும் நாகூர் வாசிகளே. தன் சொந்த மண்ணின் குரல் வளம் மிக்க ஒருவரை உயர்த்தி வைத்தவர்கள் இக் கவிஞர்கள் இருவருமே!

இன்று முதுமையில் தள்ளாடித் தள்ளாடி வாழ் வைக் கடத்திக் கொண்டிருக்கும் கவிஞர் சலீமுடன் உறவாடிக் கொண்டிருப்பது வறுமை மட்டுமே.

பாடகரோ கலைஞரின் தயவில் சென்னையின் சொகுசுப் பகுதி பங்களாவில் வாசம்.

அல்ஹம் துலில்லாஹ் என்றே சொல்லி, இதுதான் உலகம் என்போம்!

ஆக எந்த வகையிலும் சரி பாடல்களை ஆய்வு செய்வோர் பாடகருக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டிய அவசியமில்லை, பாடலாசிரியர்களுக்கே கொடுக்க வேண்டும்.

வேண்டுமானால் கடைசி அடிக்குறிப்பாக இப்படி வரிகள் சேர்க்கலாம். இந்தப் பாடல்கள் அனைத்தை யும் நாகூர் ஹனிபா என்ற பாடகர் பாடி பிரபல்யப்படுத்தினார்! அவ்வளவு போதும்!

இதை முடிக்கு முன் மேலும் இரு தகவல்கள்,

இதுவரையில் ஹனிபா பாடிய பாடற்றொகுதிகள் 3 வந்துள்ளன. 1949ல் இரண்டு, 2002ல் இன்னொ ன்று நாகூர் சலீமுடையது தனி!

கொழும்பில் 1949 களில் ‘தேன் கூடு’ என்ற பெயரில் புலவர் ஆபிதீன் கவிதைத் தொகுதி ஒன்று வெளியாகியுள்ளது. அதில் இடம்பெற்றுள்ள பாடல்களை ஹனிபா குரலில் கேட்டு மகிழ்ந்த பழையவர்கள் இருக்கிறார்கள். நான் உட்பட.

ஆக மேற்படி குறிப்பிலிருந்து புலவர் ஆபிதீன் கொழும்பில் வாழ்ந்தவர் என்பது புரிந்திருக்கும். அதுவும் எங்கே? வளமிகு வாழைத்தோட்டமே.

அதே சமயம், பாடகருக்குப் பாடல்கள் சில எழுதிய நல்லதம்பி பாவலர் கம்பளையில் வாழ்ந்தார். அவரது வழித்தடங்கள் இப்பொழு தும் அங்கும் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.

இறுதியாக அபிமானிகளுக்கு இரு வார்த்தைகள்.

புலவர் ஆபிதீனின் பங்களிப்புகள் பற்றி தமிழகப் பதிப்பகமொன்றுக்கு ஆய்வுநூல் எழுதிக் கொண்டிருக் கின்றேன். அன்னார் பற்றி ஒருசிறு வாழ்க்கைக் குறிப்பை வாரமஞ்சரியில் தர ஆவலாக உள்ளேன்.

————————————————————————————————————————————————-

நாகூர் ஹனீபா பாடல்கள்: மானா மக்கீன் குழம்புகிறாரா குழப்புகிறாரா?


எஸ். எம். சஹாப்தீன

“இசைமுரசு நாகூர் இ. எம். ஹனீபாவின் பாடல்கள் பல்கலை மட்டத்தில் ஆய்வு செய்யப்பட வேண்டும்” என்னும் தலைப்பில் கடந்த செப்டம்பர் 27 ஆம் திகதிய ‘தினகரன்’ வாரமஞ்சரியில் எஸ். ஐ. நாகூர் கனி எழுதிய ஆக்கத்தையும், இரு மாதம் 9 நாட்களுக்குப் பின் (6.16.2009) ‘தினகரன்’ வாரமஞ்சரியில் சகோதரர் மானா மக்கீன் “நாகூர் ஹனீபாவுக்காக எழுதப்பட்ட பாடல்களையே ஆய்வு செய்ய வேண்டும்” என்ற மகுடத்தில் எழுதிய கட்டுரையையும் படித்தவர்களுள் நானும் ஒருவன்.

மேற்படி இரு கட்டுரைகளையும் படித்த போது, என்னுள் எழுந்த கருத்துகளை ஒட்டு மொத்தமாக சிந்திக்கையில், ஆய்வெழுத்தாளன் என்று தன்னைத் தானே அழைத்துக் கொள்ளும் மானா மக்கீன் குழம்புகிறாரா? அல்லது வாசகர்களை குழப்புகிறாரா? என்ற மயக்கமே வந்தது.

எஸ். ஐ. நாகூர் கனி எழுதிய கட்டுரையின் நாயகனாக நாகூர் இ. எம். ஹனீபா முகம் காட்டினாலும், அவர் ஹனீபாவின் பாடல்களை பல்கலை மட்டத்தில் ஆய்வு செய்ய வேண்டும் என்றே கூறியிருப்பதை கட்டுரைத் தலைப்பே சொல்லாமற் சொல்கிறது. ஹனீபாவின் பாடல்கள் என்றால், ஹனீபாவே எழுதிய பாடல்கள் என்று ஏன் பொருள் கொள்ள வேண்டும்? இந்தியாவிலும், தமிழ் நாட்டிலும், ஏன் நம் இலங்கையிலும் தாமே எழுதிப் பாடும் பாடகர்கள் ஒரு சதவீதமேனும் இல்லை. எல்லாப் பாடகர்களும் இன்னொரு கவிஞர் எழுதிய பாடல்களை பாடுவோராகவேயிருக்கின்றனர் என்பதை சாதாரண பாமரன் வேண்டுமானால் தெரியாமல் இருக்கலாம்.

கலை இலக்கியத்துறைகளில் ஈடுபாடு கொண்டவர்கள் அனைவரும் இதனை அறிவர். ஆய்வெழுத்தாளனுக்கு தெரியாமற் போனது ஏன்?

உதாரணத்திற்கு டி. எம். செளந்தரராஜன் பாடிய பாடல் என்ற அறிவிப்புடனே வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் ஒலி / ஒளி பரப்புகின்றனர். இதன் பொருள் என்ன? ‘டி.எம்.எஸ்’ எழுதிய பாடல் என்றா அர்த்தம்? வேறு எவரோ எழுதிய பாடலைத்தான் ‘டி.எம்.எஸ்’ பாடுகிறார் என்பது ஊரறிந்த ரகசியமே!

அடுத்து – “குரல் தானம் மட்டும் செய்த ஒருவரை அரியாசனத்தில் அமர்த்துவது முறையாகாது” என்பது மானா மக்கீனின் வாதம்.

இந்த வாதம் ‘இசைமுரசு’ நாகூர் இ. எம். ஹனீபா உட்பட, டி.எம்.எஸ். – முதல் இன்றைய எஸ்.பி பாலசுப்ரமணியம் வரை ஹிந்திப் படவுலகில் முஹம்மத் ரபீக், லதா மங்கேஷ்கார், முகேஷ் என்று பாடகர்கள் அனைவரையுமே கொச்சைப்படுத்துவதாக உள்ளது. குரலை தானமாக இறைவனே தந்தான் – மற்றப்படி அதில் எவ்வித தகுதியும் விஷேடமும் இல்லை; அதனால் குரலை தானமாகப் பெற்றவரை அரியாசனம் அமர்த்த தேவையில்லை என்பது சகோதரர் மானா மக்கீனின் எண்ணம். அப்படியானால் அந்தக் குரலை முழு மனித சமுதாயமும் ரசிக்கும்படி கலாரசனையுடன், ஏற்ற இறக்கத்துடன், மூச்சை இழுத்தும் குறைத்தும் பாடும் திறனை என்னென்பது? அந்தத் திறனை பாராட்ட வேண்டாமா?

இனிய குரல் படைத்தோர் நம்மில் பலர் உண்டு. அவர்கள் எல்லோருக்கும் கலாரசனையுடன் முன் சொன்ன திறமையுடன் பாடிவிட முடியுமா? சகோதரர் மானா மக்கீனும் நல்ல குரலைத்தான் பெற்றிருக்கின்றார். அவரால் சிறுவரியைத்தானும் பிறர் ரசிக்கும்படி (எழுந்து ஓடிவிடும்படி அல்ல) பாடிவிட முடியுமா?

அஜித் நடித்த ‘அமர்க்களம்’ படத்தில் ‘சத்தம் இல்லாத தனிமை கேட்டேன்’ என்ற பாடலை எஸ். பி. பாலசுப்ரமணியம் மூச்சுவிடாமல் (மூன்று முறை மூச்சு விட்டதாகப் பின்னர் ஒரு பேட்டியில் எஸ். பி. கூறினார்) பாடிய நீண்ட பாடலை, வெறும் குரல் தானம் என்று ஒதுக்கிவிட முடியுமா? இப்பாடலை ரசிக்கும்போது பாடகரை புகழ்கிறோம்; ரசித்து முடிந்ததும் “ஆஹா இப்பாடலை கவிஞர் வைரமுத்து அல்லவா எழுதியிருக்கின்றார் என்றுணர்ந்து மனசுக்குள் கவிஞரை வாழ்த்துகிறோம் அல்லவா? இந்த உண்மையை தமிழ்மணி மானா மக்கீன் புரிந்திருக்கவில்லையா?

பிரபலமான ஆங்கில நாடகாசிரியர் ஷேக்ஸ்பியரின் நாடகத்தை பார்க்கும்போது ரசிகர்கள் பாத்திரத்தோடு ஒன்றி, நாடகாசிரியனை மறந்து போவார்களாம்; நாடகம் முடிந்து வெளியே வந்த பின்னர்தான் “ஆஹா… இந்த அருமையான நாடகத்தை நம் ஷேக்ஸ்பியர் அல்லவா எழுதியிருக்கிறார்” என்று ஒட்டுமொத்த ரசிகர்களும் மனசுக்குள் வாழ்த்தி, அரியாசனத்தில் அமர்த்துவார்களாம் ஷேக்ஸ்பியரை! இதுதான் எழுத்துக்கும் – நாடகம் – கவிதை – சிறுகதை – பாடல் போன்ற இலக்கிய வடிவங்களுக்கும் பொருந்தும் பொதுவான வரைவிலக்கணம். ஒருகாலத்தில் நாடகத்துறை ஈடுபாடு கொண்டிருந்த சகோதரர் மானா மக்கீன் இதனை இதுவரை தெரிந்திருக்கவில்லையா?

‘உச்ச ஸ்தாயியில் பாடுவது’ என்கிறார்களே… அது எல்லாப் பாடகராலும் முடியக் கூடிய திறமையா? இசை முரசு அவர்கள் பாடிய பாடல்கள் உச்ச ஸ்தாயியில் பாடப்பட்டவையாகும். ஹிந்திப் படவுலகப் பாடகர் முஹம்மது ரபீக் பாடிய “ரக்குவா…” என்ற ஹிந்திப் பாடலை நம் நாகூர் இ. எம். ஹனீபாவும் பாடியுள்ளர். பாடலின் இறுதியில் உச்ச ஸ்தாயியில் இழுக்கின்றாரே… அதை முஹம்மது ரபீக்கே பாராட்டியுள்ளார். அந்த இழுப்பை வெறும் குரல் தானம் எனக் கொச்சைப்படுத்துவது ரசனையே இல்லாதவர் சொல்லும் கூற்றாகும்.

“கட்டுரை ஒன்றுடன் கருத்துக்களை சொல்லி பொறுப்பிலிருந்து ஒதுங்கிக் கொள்ளக் கூடாது” என்று, முதல் கட்டுரையை எழுதிய நாகூர் கனியை குறை கூறுகிறார் மானா மக்கீன். நாகூர் கனி எழுதிய ஆக்கத்தின் 6 ஆவது பந்தியில் பல விடயங்களைத் தொட்டுக் காட்டி, அவற்றை தலைப்புகளாக இட்டு ஆராயப்பட வேண்டும் எனக் கூறியுள்ளதை லைட் ரீடிங்காகவே வடித்து ஒதுக்கினாரா இந்த மானா மக்கீன்? ஆர்வமுள்ள மாணவர்களுக்குத் தொட்டுக் காட்டினாலே போதுமானது. தேடல் முயற்சி அவர்களைச் சார்ந்தது.

‘எழுத்தாளன் என்பவன், எப்போதும் முட்டையிடும் கோழி போன்று இருக்க வேண்டும். கோழி முட்டையிட்ட பின், அதை எடுப்பவர்களே, முட்டையை சமைத்து சாப்பிடுவதா? ஒம்லட் போட்டு சாப்பிடுவதா? காப்பியில் கலந்து குடிப்பதா? அல்லது கீழே போட்டு உடைப்பதா? என்பதை தீர்மானிக்க வேண்டும். கோழி மறுமுட்டை இடுவது பற்றியே சிந்திக்க வேண்டும்” எனத் தன் குரு எஸ். டி. சிவநாயகம் சொல்லிக் கொடுத்துள்ளதாக சகோதரர் கனி அடிக்கடி கூறுவது போலவே, குரு வழி சிஷ்யனாக செயல்பட்டுள்ளார். இதை சகோதரர் மானா மக்கீன் புரிந்து கொள்ளும்படி வேண்டுகிறேன்.

ஒரு கவிஞர் அல்லது பாடலாசிரியர் தன் எழுத்துப் பணியில் பல பாடல்களை எழுதுவார். அவற்றுள் சிலவற்றை பாடகர் தெரிந்து பாடுவார். பாடலாசிரியரின் மொத்த பாடல்களையும் ஆய்வது வேறு. அவரின் பாடல்களில் தெரிவு &:v>ரி|(சிஹிu, பிற பாடலாசிரியர்களின் தெரிவு செய்த பாடல்களையும் பாடும் பாடகர் பற்றி ஆய்வது வேறு என்ற இருவேரு நிலைகளை குறை கண்ட மானா மக்கீன் புரிந்து கொள்ள வேண்டும்.

புரட்சிக் கவி பாரதி பல பாடல்களை பாடிப் போந்தார். அவற்றுள் சிலவே திரைப்படங்களில் பாடலாக வந்துள்ளன. ‘கை கொடுத்த தெய்வம்’ படத்தில் வரும் சிவாஜி கணேசன் பாரதியாக நடித்து, டி. எம். செளந்தரராஜன் பாடிய ‘சிந்துநதிக் கரையினிலே…’ என்ற பாடலை – பாடல் காட்சியை – பாடி நடித்த சிவாஜியின் நடிப்பை விமர்சிப்பது வேறு. பாரதியின் மொத்த பாடல்களையும் ஆய்வது வேறு என்ற உதாரணம் குறை காணும் மனசை தெளிவுபடுத்தும்.

“வேண்டுமானால் கடைசி அடிக்குறிப்பாக இப்படி வரிகளை சேர்க்கலாம். இந்தப் பாடல்கள் அனைத்தையும் நாகூர் ஹனீபா என்ற பாடகர் பாடி பிரபல்யப்படுத்தினார்! அவ்வளவு போதும்!” என, மானா மக்கீன் தன் ஆக்கத்தின் இறுதிப் பகுதியில் குறிப்பிட்டுள்ளார்.

இந்த வரிகள் அடிக்கடி தமிழகம் செல்லம் சகோதரர் மானா மக்கீனுக்கு ‘இசை முரசு’வின் செயல்பாட்டில் ஏதும் அதிருப்தி – முரண்பாடு – ஓர் அவமரியாதை நிகழ்ந்திருக்கலாமோ என்ற சந்தேகத்தை ஏற்படுத்துகின்றன. அப்படி ஏதேனும் கசப்பான அனுபவம் மானா மக்கீனுக்கு ஏற்பட்டிருந்தாலும், அதைத் தமிழ் பேசும் இஸ்லாமிய நல்லுலகில் பிரபல்யமான ஒரு இசைப்பாடகர் சம்பந்தப்பட்ட பொது விடயத்தில் காட்டுவது, சிரேஷ்ட எழுத்தாளர்களில் ஒருவரான மக்கீனுக்கு அழகல்ல.

தமிழ் கூறும் நல்லுலகில் எத்தனையோ கவிஞர்கள் இருந்தார்கள்; இருக்கிறார்கள். அவர்களில் ஒரு பாரதி – ஒரு பாரதிதாசன் – ஒரு சுரதா போன்ற விரல் விட்டு எண்ணத்தகும் ஒரு சில கவிஞர்கள் மட்டுமே பிரபல்யமானவர்கள். மற்ற கவிஞர்கள் எல்லாம் தமிழகத்தின் பட்டி தொட்டி எங்கும் பிரபல்யமாகவில்லை. சினிமா – திரையிசை என வந்த பிறகே, அத்தகைய கவிஞர்கள் பிரபல்யமானவர்கள். அவர்கள் தம் பாடல்கள் மூலை முடுக்கெங்கும் எதிரொலிக்கலாயின. இதை மறுக்க முடியாது.

இதன்படி ‘இசைமுரசு’ நாகூர் இ. எம். ஹனீபா பாடிய பாடல்களை எழுதிய கவிஞர்களை வேண்டுமானால், ஒரு நாகூர் கனி, ஒரு மானா மக்கீன் போன்ற இலக்கியவாதிகள் அறிந்திருக்கலாம். அத்தகைய கவிஞர்களின் பாடல்களை ஒரு நாகூர் ஹனீபா இசை கலந்து பாடியதாலேயே, அப்பாடல்கள் தெருக்கோடியிலுள்ள பாமரனுக்குப் போய் கிடைத்தன. அக்கவிஞர்களும் பேசப்பட்டனர். இந்த உண்மையை தெரிந்து தெளிவதே அறிவுடையோர் கடன்.

‘இசைமுரசு’ நாகூர் இ. எம். ஹனீபா பாடிய பாடல்களை ஆய்வு செய்தாலே, அப்பாடல்களை எழுதிய கவிஞர்கள் நிச்சயம் ஆய்வு செய்யப்படுவார்கள் என்பதை மறுக்க முடியாது. கவிஞர்கள் பற்றி ஆய்வு செய்யப்படும்போது, அவர்கள் தொடர்பான பல விஷயங்கள் தாமாகவே வெளிவரும். இதை யார் தடுத்தும் நிறுத்திட முடியாது.

மானா மக்கீன் தன் ஆக்கத்தின் கடைசிப் பந்தியில், “புலவர் ஆப்தீனின் பங்களிப்புகள் பற்றி தமிழகப் பதிப்பகமொன்றுக்கு ஆய்வுநூல் எழுதிக் கொண்டிருக்கிறேன்.

அன்னார் பற்றி ஒரு சிறு வாழ்க்கைக் குறிப்பை வாரமஞ்சரியில் தர ஆவலாக உள்ளேன்” எனக் கூறி கட்டுரையை முடித்துள்ளார். ஓஹோ… தனது முயற்சிக்கு ஆதரவு தேடத்தான் பாவம்… நாகூர் ஹனீபா விவகாரத்தை கையில் எடுத்தாரா? ஆமாம்…. சகோதரர் மானா மக்கீன் நம்நாட்டு கவிஞர்களைப் பற்றி ஆய்வுநூல் எழுதி வெளியிடலாமே! வெளிச்சுவர் பூசும் சகோதரர் மானா மக்கீன் எப்போது உட்சுவரை பூசத் துவங்குவார்? இலக்கிய உலகம் ஆவலுடன் எதிர்பார்க்கிறது.

Posted in நாகூர் ஹனீபா

நன்றி :http://nagoori.wordpress.com/

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails