ஜலாலுத்தீன் ரூமியின் வாழ்க்கையை அவருடைய தந்தையாரிடமிருந்து துவக்குவதே பொருத்தமானதாகும். ஏனெனில் தந்தையிடமிருந்து ரூமி இரண்டு முக்கியமான விஷயங்களை எடுத்துக்கொண்டிருக்கிறார். ஒன்று மார்க்க அறிவு. இரண்டாவது இறைநேசம்.
ரூமியின் தந்தை பஹாவுத்தீன் அந்தக்காலத்தில் தலைசிறந்த மார்க்க அறிஞராக இருந்தார். '·பத்வா' எனப்படும் மார்க்கத் தீர்ப்பு வழங்கத் தகுதியானவராக இருந்தது மட்டுமின்றி, அந்தக்கால மார்க்க அறிஞர்களாலேயே "அறிஞர்களின் அரசர்" என்ற புகழ்ப்பெயரைப் பெற்றவராக இருந்தார். தந்தைவழி சொத்தைப்போல ரொம்ப இளம் வயதிலேயே ரூமிக்கு மார்க்க ஞானம் வந்து சேர்ந்தது.
பஹாவுத்தீன் ஒரு இறைநேசராகவும், சூ·பியாகவும் ஞானியாகவும் இருந்தார். (ஒருவகையில் இறைநேசர், சூ·பி, ஞானி போன்ற சொற்கள் யாவும் ஒரு குறிப்பிட்ட மனநிலையையும் பக்குவத்தையும் அடைந்திருந்தவரையே குறிக்கும் என்றாலும் சூழலுக்கு ஏற்றபடி இந்த சொற்கள் வேறுவேறுவிதமான மரியாதைகளை வலியுறுத்துகின்றன.) பஹாவுத்தீன் 'ஒரு வலியுல்லாஹ்'வாக அதாவது இறைநேசம் கொண்ட ஞானியாக இருந்ததனால் ஒரு கட்டத்தில் யாரும் எதிர்பாராத ஒரு முக்கியமான முடிவு எடுக்கிறார். திடீரென்று ஒரு முகூர்த்த நாளில் பல்க் என்ற தங்களது ஊரைவிட்டு துருக்கியின் பகுதியாக இருந்த கொன்யாவுக்கு குடும்பத்துடன் குடிபெயர்கிறார். ஏன் அப்படிச் செய்தார் என்று யாராலும் யூகிக்க முடியவில்லை.
அவருடைய காலமான 13ம் நூற்றாண்டு ஒரு அமைதியற்ற, க்கிரமிப்புகளின் காலமாக இருந்தது. ஒருபக்கம் கிறிஸ்தவர்களிடமிருந்தும் இன்னொரு பக்கம் செங்கிஸ்கான் போன்ற மங்கோலியர்களின் படையெடுப்புகளில் இருந்தும் ப்கனிஸ்தான் தன்னைக் காப்பாற்றிக்கொள்ள வேண்டியிருந்தது. இன்றைய ப்கனின் ஒரு பகுதியாக அப்போது இருந்த கொராசான் என்ற பகுதியில் ஒரு ஊராக பல்க் இருந்தது.
சொல்லிவைத்த மாதிரி பஹாவுத்தீன் கூடாரத்தைக் காலி செய்து சென்ற மறு ண்டு மங்கோலியப்படையெடுப்பினால் பல்க் முற்றிலுமாக அழிக்கப்பட்டது. பஹாவுத்தீன் ஊரைவிட்டுச் சென்றுவிட்டதன் மர்மம் புரியாமல் சந்தோஷப்பட்டுக் கொண்டிருந்த பொறாமைகொண்ட அவருடைய மார்க்க எதிரிகளுக்கு பஹாவுத்தீனின் தீர்க்கதரிசனம் புரிபடுவதற்குள் அவர்கள் உயிர்கள் போயிருக்கலாம்.
கி.பி.1207ம் ண்டு செப்டம்பர் 30ம் தேதி பல்க் என்ற ஊரில் ரூமி பிறந்தார். ரூமி என்பது உண்மையில் ஒரு ஊரின் பெயர். பீஹார்க்காரர் பீஹாரி, மதராஸ்காரர் மதராஸி என்பதுபோல ரூம்வாசி ரூமி. ரூம் என்பது துருக்கியில் இருந்த 'அனதோலியா' என்ற ஒரு பகுதியின் பெயர். அந்த ஊரிலிருந்து அல்லது பகுதியிலிருந்து வந்தவர் என்பதைக் குறிக்குமாறு 'ரூமி' என்று அழைக்கப்பட்டு பின்பு அதுவே அவர் புகழ்ப்பெயராகிவிட்டது.
ரூமியின் தகப்பனார் பல்க்கைவிட்டு குடிபெயர்ந்து பயணப்பட்டபோது பல ஊர்களுக்கும் மக்காவுக்கும் சென்று புனிதப்பயணம் செய்துவிட்டு வரும் வழியில் மத்திய ஈரானின் பகுதியாக இருந்த நிஷாபூர் -- உமர் கய்யாமின் ஊர் -- என்ற ஊருக்கு வரும்போது ஞானி ·பரீதுத்தீன் அத்தார் என்பவரை சந்திக்கிறார்கள். அத்தாரும் ஸனாயும் ரூமிக்கு முன்னோடிகளாக இருந்த கவிஞானிகள் என்பதை முன்னரே சொன்னோம். அத்தார் "பறவைகளின் மாநாடு" (மன்த்திகுத் தய்ர்) என்ற ஒரு அற்புதமான பாரசீக ஆன்மீகக் காவியத்தைப் படைத்தவர். ரூமியின் "மஸ்னவி" காவியம் இயற்றப்படுவதற்கு பெரும் தூண்டுகோலாயிருந்த இரண்டு நூல்களுள் அத்தாரின் 'பறவைகளின் மாநாடு'ம் ஒன்று. அத்தார் ரூமியை நிஷாபூரில் சந்திக்கும்போது ரூமி சின்னப்பையன். பத்துப் பன்னிரண்டு வயதிருக்கும். னால் ரூமியைப் பார்த்தவுடன் ஞானி அத்தார், "இந்தச் சிறுவன் இறையன்பு கொண்ட பல இதயங்களில் ஒளியேற்றப்போகிறான்" என்று தீர்க்கதரிசனம் சொல்லிவிட்டு தனது "அஸ்ரார் நாமா" (ரகசியங்களின் நூல்) என்ற நூலை அவருக்கு அன்பளிப்பாகக் கொடுத்துவிட்டுச் சென்றார்.
அந்த காலகட்டத்தில் ரூமி சந்தித்த இன்னொரு மிகப்பெரிய ஞானி இப்னு அரபி என்பவர். 'வஹ்தத்துல் உஜூத்' என்ற அற்புதமான இறைக்கொள்கையை கொடுத்தவர் அவர். அரபி மொழியில் மிக முக்கியமான பல ஆன்மீகப் படைப்புகளைக் கொடுத்தவர். தந்தையின் பின்னால் நடந்துவரும் ரூமியைப் பார்த்தவுடனேயே அவர், "எல்லாப் புகழும் இறைவனுக்கே! என்ன விந்தை! ஒரு ஏரியின் பின்னால் ஒரு கடல் நடந்து வருகிறது" என்றாராம் !
பஹாவுத்தீனின் மார்க்க அறிவை வியந்த கொன்யாவின் சுல்தான் ஒரு கல்லூரியை நிறுவி அதில் முதல்வராக அவரை நியமித்தார். இரண்டு ண்டுகள் அதில் பணியாற்றிய பஹாவுத்தீன் பிறகு காலமானார். அவருக்குப் பிறகு அந்தப் பொறுப்பை ரூமி ஏற்றார். ரூமிக்கு அப்போது 24 வயதே கியிருந்தது. னாலும் அவருடைய அறிவும் கீர்த்தியும் திக்கெட்டும் பரவியிருந்தது. பல்லாயிரக்கணக்கான மாணாக்கர்கள் அவரிடம் மார்க்கக் கல்வியும் ஆன்மீகப் பாதையில் ஞானசிஷ்யையும் பெற்றுக்கொண்டனர். ஏழு ண்டுகள் சிரியா போன்ற நாடுகளுக்கு சுற்றுப்பயணம் செய்துவிட்டு ரூமி கொன்யா திரும்பினார். 1224 வாக்கில் ரூமிக்கு பத்தாயிரம் சீடர்கள் இருந்ததாக அவருடைய மகன் சுல்தான் வலத் தனது "ரகசியச் சொல்" என்ற நூலில் குறிப்பிடுகிறார்.
னால் இந்த சாதனைகளெல்லாம் ரூமிக்கு திருப்தியளித்துவிடவில்லை. எங்கோ எதுவோ முக்கியமானவொன்று குறைவதாக அவருடைய உள்மனது சொல்லிக்கொண்டே இருந்தது. அந்தக்குறையை ஒரு சற்குருமூலம் நிவர்த்தி செய்யுமாறு அவர் இறைவனை பிரார்த்தித்த வண்ணமிருந்தார். 1244ன் இறுதியில் அவருடைய பிரார்த்தனையை இறைவன் அங்கீகரித்தான்.
திருப்புமுனை
ஷம்ஸ் தப்ரேஸ் என்ற ஞானியை, தனது லட்சிய குருவை ரூமி அந்த ண்டில்தான் சந்திக்கிறார். அது அவருடைய வாழ்வின் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது. ஷம்ஸ் மட்டும் அவர் வாழ்வில் வந்திருக்காவிட்டால் இன்று இந்த உலகம் ரூமியை வியந்திருக்காது. அறிந்திருக்காது என்றே சொல்லலாம். ரூமியின் வாழ்வை, ளுமையை, துவைத்துக் தலைகீழாக காயப்போட்ட கால்சட்டையை கையைவிட்டு மறுபடியும் தலைகீழாக, அதாவது நேராக, மாற்றுவதுபோல ரூமியை முழுமைப்படுத்தியவர் ஷம்ஸ். அதுவரை இருந்த ரூமியை அழித்துவிட்டு புதிதாக ஒரு பரிபூரண ரூமியை உருவாக்கினார். ஷம்ஸின் உறவும் பிரிவும் ரூமியின் வாழ்வில் மிகப்பெரும் தாக்கங்களாக நிலைத்து நின்றன.
"நான் சமைக்கப்படாமல் இருந்தேன். ஷம்ஸ் என்னைச் சமைத்தார். பிறகு நான் சாம்பலாகிவிட்டேன்" என்று ரூமி ஷம்ஸோடு தனக்கு ஏற்பட்ட உறவின் விளைவைப் பற்றிக் கூறுகிறார்.
ஷம்ஸ் தப்ரேஸ் ஒரு வித்தியாசமான வினோத மனிதர். கடுங்கோபம் கொண்டவர். அதனால் யாரையும் தன்னிடம் அவர் அண்டவிடுவதில்லை. அல்லது அவரை நெருங்குவதற்கு அவருடைய கோபமே ஒரு தடையாக இருந்தது. னால் வேண்டுமென்றேதான் அவர் அப்படிச் செய்துகொண்டிருந்தார். அவருடைய இந்த குணத்தின் காரணமாக அவருக்கு பல எதிரிகள் இருந்தனர். னால் அவர் யாரையும் எதையும் பொருட்படுத்துவதில்லை என்பது வேறுவிஷயம். அவர் ஊர் ஊராக சுற்றித்திரிவார். ஒரு பைத்தியக்காரர் மாதிரி. அவரும் இறைவனிடம் ரூமியைப் போலவே ஒரு பிரார்த்தனையை வைத்துக்கொண்டிருந்தார். யாரிடமும் எதற்கும் எந்த சமரசமும் செய்து கொள்ளாத தனது உண்மை ஒளியின் தீவிரத்தைத் தாங்கக்கூடிய ஒரு இதயத்தைக்காட்டு என்பதுதான் அவருடைய பிரார்த்தனையாக இருந்தது.
அப்படி ஒரு இதயத்தைக் காட்டினால் பதிலுக்கு என்ன தருவாய் என்று இறைவன் கேட்டதற்கு, என் உயிரைத்தருவேன் என்று அவர் சொன்னதாகவும் அதன் பிறகு இறைவன் அவரை கொன்யாவுக்குச் சென்று அங்கே பஹாவுத்தீனின் மகன் ஜலாலுத்தீனை சந்திக்கும்படி உத்தரவு கொடுத்தான் என்றும் சொல்வர்.
தண்ணீரும் தேடிக்கொண்டிருக்கிறது
தாகம் கொண்டவர்களை
என்று 'மஸ்னவி'யில் வரும் பாடல் இதனைக் குறிப்பதாகவும் எடுத்துக்கொள்ளலாம்.
ரூமியும் ஷம்ஸ் தப்ரேஸ¤ம் முதன்முதலாக சந்தித்துக் கொண்டது வரலாற்றின் பக்கங்களில் பதியப்பட்ட மிகமிக சுவையான நிகழ்ச்சிகளில் ஒன்றாகும். ஒரு நாள் ரூமி தனது சிஷ்ய பரிவாரங்கள் பின்னால் நடந்துவர, தனது கழுதையின் மீதேறி வந்துகொண்டிருந்தார். அப்போது அவரை எதிர்கொண்ட ஷம்ஸ் அவரை நோக்கி, "பயாஸித் பெரிய ஞானியா அல்லது முஹம்மதா?" என்று கேட்டார்.
ஒரு கணம் ரூமிக்கு ஒன்றும் புரியவில்லை. பயாஸித் என்ற ஒரு ஞானியோடு ஞானிகளின் ஞானியாகிய முஹம்மது நபியை எப்படி ஒருவர் ஒப்பிடமுடியும்? "தீர்க்கதரிசிகளிலேயே தலைசிறந்தவராக முஹம்மது இருக்கும்போது, பயாஸித்தை எப்படி அவரோடு நீங்கள் ஒப்பிட்டுப் பேசுகிறீர்கள்?" என்று கேட்டார்.
பதிலுக்கு ஷம்ஸ், "என் நாயனே! உன்னை எப்படி அறிந்துகொள்ள வேண்டுமோ அப்படி நான் அறிந்து கொள்ளவில்லை" என்று முஹம்மது சொன்னார். னால் பயாஸித், "எனக்கே எல்லாப் புகழும்! என் கண்ணியம்தான் எவ்வளவு உயர்ந்தது" என்று கூறினார். இப்போது சொல்லும், யார் உயர்ந்த ஞானி?" என்று கேட்டார்.
இந்த கேள்விக்கான பதில் ஷம்ஸ¤க்குத் தெரியும்தான். ரூமிக்கான பரிசோதனையாகவே அவர் அந்த கேள்வியை ரூமியிடம் கேட்டார்.
"பயாஸித்தின் தாகமோ விரைவில் தீர்ந்துவிட்டது. ஒருவாய் குடித்தவுடனேயே அவருடைய புரிந்துகொள்ளலின் கோப்பை நிரம்பிவிட்டது. எந்த அளவு அவருடைய இதயத்தில் இடுக்கு இருந்ததோ அந்த அளவுதான் ஒளி உள்ளே நுழைந்தது. னால் முஹம்மதுவோ நித்திய தாகம் கொண்டவராக இருந்தார். குடிக்கக் குடிக்க அவருடைய தாகம் அதிகரித்துகொண்டே இருந்தது. அவருடைய அருள்பாலிக்கப்பட்ட இதயத்தை விசாலமாக்கிவிட்டதாக இறைவனும் கூறுகிறான் (திருக்குர்ன் 94 : 01). தாகம், மேலும் தாகம் என்று அவர் சென்றுகொண்டே இருந்தார். இறைவனைப் பற்றித் தெரிந்துகொள்ள வேண்டிய எல்லாவற்றையும் தெரிந்துகொண்டுவிட்டேன் என்று அவர் எப்போதுமே நினைத்ததில்லை. உண்மையான ஞானத்தின் அதிருப்தியிலேயே அவர் எப்போதும் இருந்தார். அதனால்தான் அவர் அப்படிச் சொன்னார்" என்று ரூமி தனது அற்புதமான பதிலைச்சொன்னார். அந்த பதிலைக் கேட்டதும் தனது பிரார்த்தனைகளுக்கான பதில் கண்ணெதிரே கழுதைமேல் இருந்ததை ஷம்ஸ் கண்டுகொண்டார்.
அதே சமயம், பதிலைச் சொன்ன ரூமிக்கு ஏதோ கிவிட்டது. உடனே தன்னிலை இழந்தவராக மயக்கமுற்று ரூமி விழுந்துவிட்டார். மயக்கம் தெளிந்து அவர் எழுந்தபோது வேறு மனிதராக இருந்தார். ஷம்ஸின் கைகளைப் பற்றிக்கொண்டார். இருவரும் நடந்தே சென்று ஒரு அறையில் 40 நாற்கள் தனித்திருந்தனர். ஷம்ஸ் அந்தக் கேள்வியைக் கேட்டபோது, "எனது தலையின் மேற்பகுதியில் இருந்து ஒரு ஜன்னல் திறந்தது. அதிலிருந்து சாம்பல் கிளம்பி இறைவனின் இருக்கையான அர்ஷை அடைந்ததை நான் பார்த்தேன்" என்று ரூமி சொன்னார்.
ஷம்ஸ¤க்குத் தெரியும். இருப்பது கொஞ்சகாலம்தான். அதற்குள் ரூமியை தலைகீழாகப் புரட்டி கொடுக்க வேண்டியதைக் கொடுத்தாக வேண்டும். எனவே எதிர்ப்பையும் பொறாமையையும் பொருட்படுத்தாமல் காதலர்களைப்போல அவர்கள் தனித்திருந்து புத்தகங்களில் பார்க்கமுடியாத அறிவை, அனுபவத்தின் மூலமாகவும் புரிந்துகொள்வதற்கு காலம் தேவைப்படும் அறிவை, உண்மையான அறிவை, ஞானத்தை, தன்னுடைய இதயத்திலிருந்து ரூமியின் இதயத்திற்கு இறக்கிக்கொண்டிருந்தார் ஷம்ஸ்.
னால் கனியாத இதயங்களில் இந்த பரிமாற்றம் அசிங்கமான அர்த்தங்களையும் பொறாமையையும் விளைவித்தது. அதன் பலனாக ஷம்ஸ் பல வேதனைகளை அனுபவித்தார். கடைசியில் அவர் கொன்யாவை விட்டு டமாஸ்கஸ¤க்குச் சென்றார். அந்தப் பிரிவைத் தாங்கமுடியாத ரூமி தன் மகன் சுல்தான் வலதை விட்டு சிரியாவுக்குச் சென்று அவரைத் தேடிக்கண்டுபிடித்து வருமாறு அனுப்பினார். கடைசியில் ஷம்ஸ் திரும்பிவந்தார். னால் சீடர்களிடையே மறுபடியும் பொறாமையும் எதிர்ப்பும் தனது வேலையைக் காட்ட ரம்பித்தன.
1244 ம் ண்டு டிசம்பர் 3ம் தேதி ஷம்ஸ¤ம் ரூமியும் தனித்திருந்தபோது கதவு தட்டப்படும் ஓசை கேட்டது. அப்போது ஷம்ஸ் திருக்குர்னிலிருந்து "சூரியனும் சந்திரனும் தங்களுக்கென்று விதிக்கப்பட்ட தனித்தனி பாதையில் செல்கின்றன" என்று சொல்லும் வசனங்களை ஓதிக்கொண்டிருந்தார். ஷம்ஸ் எழுந்து அமைதியாக இரவினூடே வெளியில் சென்றார். பிறகு திரும்பி வரவேயில்லை. அவர் வெறிகொண்ட சீடர்கள் சிலரால் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்றும் அதில் ரூமியின் மூத்த மகனும் இருக்கலாம் என்றும் நம்பப்படுகிறது.
ஷம்ஸ் உயிரோடுதான் இருக்கிறார், அவர் நிச்சயம் ஒரு நாள் திரும்பி வருவார் என்று ரூமி நம்பி பல ண்டுகள் எதிர்பார்த்துக் காத்திருந்தார். வேதனையின் உச்சத்தில் அவர் டமாஸ்கஸ் தெருக்களில் ஷம்ஸைத் தேடி அலைந்தார். அப்போது அவரிடமிருந்து ஆன்மீகக்கவிதைகள் பொங்கிப் பிரவஹித்தன. காண்போரையெல்லாம் தனது கவிதைகளால் அவர் ச்சரியப்படுத்திக் கொண்டிருந்தார். "ஷம்ஸ் தப்ரேஸை அவர் சிரியாவில் பார்க்கவில்லை. னால் தன்னிலேயே அவரைக் கண்டுகொண்டார்." என்று சுல்தான் வலத் கூறுகிறார்.
காதலியைத் தேடிப்போன காதலன் காதலியாகவே மாறி, கடைசியில் காதலாகவே மாறியதுபோல னார் ரூமி. ஷம்ஸ் அவருக்குள்தான் வாழ்ந்தார் என்ற ஸ்தம்பிக்க வைக்கும் உண்மையை அவர் உணர்ந்தார். அது அவரை நிலைப்படுத்தியது. அவரது மனம் அமைதியடைந்தது. பிறகு வந்த இருபது ண்டுகளில் ஜர்குபி, ஹ¤ஸாமுத்தீன் என்ற இரண்டு உன்னத சீடர்களை அவர் பெற்றார். எஞ்சிய காலத்தில் அலைகளற்ற கடலாக ரூமி கொன்யாவில் இருந்தார். யூதர்கள், கிறிஸ்தவர்கள், முஸ்லிம்கள் என யிரக்கணக்கான இதயங்களில் ஒளியேற்றிக்கொண்டு. ஹ¤ஸாமுத்தீன் கேட்டுக்கொண்டபடி "மஸ்னவி" காவியத்தையும் இந்த உலகுக்குக் கொடுத்தார்.
ரூமியின் உயிர் பிரிந்துகொண்டிருந்த தருணத்தில் அவருடைய நண்பரொருவர் அவரைப் பார்க்க வந்திருந்தார். அப்போது ரூமி கீழ்க்கண்ட கவிதையைப் பாடிக்கொண்டிருந்தார் :
நான் ஏன் துக்கிக்க வேண்டும்?
என் ஒவ்வொரு அணுவும் முகிழ்த்துள்ளது முழுமையாக
இந்த குழியைவிட்டு நான் ஏன் போகக்கூடாது?
உறுதியான கயிறு என்னிடம் இல்லையா என்ன?
ஆன்மாவின் புறாக்களுக்காக ஒரு புறாக்கூடு கட்டினேன் நான்
என் ஆன்மாவின் பறவையே
பறந்துவிடு இப்போது
கூடு என்ன
யிரம் உறுதியான கோட்டைகள் உண்டு
என்னிடம் இப்போது
கி.பி.1273ம் ண்டும் டிசம்பர் 17ம் தேதி அந்தி மாலை நேரம் அவர் கொன்யாவில் மறைந்தார். மறைந்தார் என்றுதான் சொல்லமுடியுமே தவிர இறந்தார் என்று சொல்ல முடியாது. அவருடைய ஆன்மீகப் பாதையின் சீடர்கள் அவர் மறைந்த தினத்தை "ரூமியின் திருமண இரவு" (ஷப்-எ-அரூஸ்) என்றே குறிப்பிடுகின்றனர்.
ரூமியின் இறவாத கவிதைகளில் இருந்து கொஞ்சம் உங்களுக்கு சுவைக்கத் தருவதே என் நோக்கம். ரூமியிடம் கதை, கவிதை என்ற பாகுபாடெல்லாம் கிடையாது. எல்லாமே கவிதையாகத்தான் ஊற்றெடுத்து வந்தன. உண்மையில் மஹாகவி ரூமி சொல்லும் நூற்றுக்கணக்கான கதைகளும் கவிதை வடிவிலேயே பாடப்பட்டுள்ளன.
No comments:
Post a Comment