Sunday, January 24, 2010

பழகு மொழி - 13

பழகு மொழி - 13: "தலையாய 'பகுதி'யும் 'விகுதி' உடல் உறுப்புகளும்

(2) 2. இருவகைப் பதங்கள்

காரணம் ஏதுமின்றி, வாழையடி வாழையாகத் தமிழில் வழங்கிவரும் சொற்களை, 'இடுகுறிச் சொற்கள்' என்பர். இடுகுறிச் சொற்களைப் பிரித்துப் பொருள் சொல்ல இயலாது. அவை முழுமையாக நின்றே பொருள் தருபவையாகும். இவ்வாறான இடுகுறிச் சொற்களைப் 'பகாப் பதம்' எனக் கூறுவர். பகாப் பதங்கள் குறைந்த எழுத்துகளைப் பெற்றிருக்கும்.

குறைந்த எழுத்துகளைப் பெற்றிருந்தாலும் வயிறு, முக்காலி, நாற்காலி, காற்றாடி போன்ற காரணப் பெயர்கள் பகாப் பதங்களாகா.

(2) 2.1. பகாப் பதங்கள்

பெயர், வினை, இடை, உரி எனப் பகாப் பதங்கள் நான்கு வகைப்படும்:

பகுப்பாற் பயனற் றிடுகுறி யாகி
முன்னே யொன்றாய் முடிந்தியல் கின்ற
பெயர்வினை இடைஉரி நான்கும் பகாப்பதம்
-நன்னூல் 131.

(2) 2.1.1. பெயர்ப் பகாப் பதம்

பெயர்ப் பகாப் பதங்கள் பெயர்ச் சொற்களாக வரும்.

காட்டுகள் : மண், மழை, நிலா, பலா.

(2) 2.1.2. வினைப் பகாப் பதம்

வினைப் பகாப் பதங்கள் பெரும்பாலும் ஏவல் வினைகளாக வரும்.

காட்டுகள் : எழு, நில், நட, செய்.

(2) 2.1.3. இடைப் பகாப் பதம்

பெயர்ச் சொல், வினைச் சொல் தவிர்த்து, இடைச் சொற்களாக வருபவை இடைப் பகாப் பதங்களாகும்.

காட்டுகள் : மற்று (மற்ற), ஆதல், போல், தான், உம், முன், பின், இனி, ஏ, ஓ போன்றவையும் வேற்றுமை உருபுகளான ஐ, ஆல், கு, ன், அது, கண் ஆகியனவும் இடைப் பகாப் பதங்களாகும்.

(2) 2.1.4. உரிப் பகாப் பதம்

பெரும்பாலும் 'மிக்க' எனும் ஒரு சொற்பொருளைப் பல சொற்களாகப் பயன்படுத்த உதவும் உரிச் சொற்கள், உரிப் பகாப் பதங்களாகும்.

காட்டுகள்: சால, உறு, தவ, நனி, கூர், கழி.

இவற்றுள் 'சால' எனும் உரி, சொல்லின் முன்னும் பின்னும் முறையே, பகுதி ('சாலச் சிறந்தது') ஆகவும் தொகை ('அன்புசால் நண்பர்களே!') ஆகவும் இடம் பெறும்.

இவை தவிர, சேர்ந்து வரும் சொற்களைப் பொருத்து, வேறுபட்ட பொருள்களைத் தரத்தக்க, 'கடி' எனும் ஓர் உரிச் சொல்லும் உண்டு: கடிமணம் = புதுமையான திருமணம்; கடிவேல் = கூர்மையான வேல்; கடிமுரசு = ஆர்க்கும் முரசு; கடிவந்தான் = விரைந்து வந்தான். 'கடி' உரி, பகுதியாக வரும்.

மேற்காணும் காட்டுகளில் குறிப்பிட்டுள்ள பெயர், வினை, இடை, உரிச் சொற்களைப் பிரிக்க முடியாது; பிரித்தால் அவை பொருள் தரா.

பகுக்கத் தக்க ஒரு பெயர்/வினைச் சொல் எத்துணை நீளமானதாக இருந்தாலும் அதன் பகாப் பதமே அச்சொல்லின் தலையாய பகுதி ஆகும். தத்தம் பகாப் பதங்களே பகுதி யாகும் - நன்னூல் 134.

காட்டு : வா+த்+த்+அன்+அன் = 'வந்தனன்' எனும் வினைச் சொல்லின் தலையாய் உள்ள 'வா' எனும் வினையடிதான் இச்சொல்லின் பகுதியாகும். (எடுத்துக் காட்டில் எழுத்துப்பிழை ஏதுமில்லை). வெகு அரிதாக இடை/உரிச் சொற்கள் பகுதியாக அமைவதுண்டு. அவை பற்றி அடுத்து வரும் பாடங்களில் படிக்கலாம்.


சத்தியமார்க்கம்.காம் தளத்தில் ... தொடர்வோம், இன்ஷா அல்லாஹ்.

"

No comments: