Thursday, January 7, 2010

களவு குறியிடம் பிழைத்தல்-மொழியும் வளமும் - 9

புலமாடன் 



"ஒரு பார்வை பார்த்தே உயிர் தந்த பெண்மை வாராமல் போய்விடுமா
ஒரு கண்ணில் கொஞ்சம் வலிவந்த போது மறு கண்ணும் தூங்கிடுமா
நான் கரும்பாறை பலதாண்டி வேராக வந்தேன்
கண்ணாளன் முகம் பார்க்கவே
என் கடுங்காவல் பலதாண்டி காற்றாக வந்தேன்
கண்ணா உன் குரல் கேட்கவே
அடடா அடடா இன்று கண்ணீரும் தித்திக்கின்றதே"--

(வைரமுத்து)

*******************

ளவில் தோழியின் பங்கு பற்றி முன்னர்க் கண்டோம். குறியிடத்தில் தலைவியுடன் துணையாக வருவதும் அல்லது தலைவனிடம் தலைவியின் செய்திகளைச் சொல்வதும் தோழியே!

இரவுக்குறியில் வந்து தலைவியைக் காணாது கலங்கி நிற்கிறான் தலைவன். அப்போது அவனிடம், "உயர்ந்த மலைநாட்டின் தலைவனே! உன் வாக்குறுதிகள்  ஒழிந்து போகட்டும். அவை பாழ்வாக்குகளாயின. வழியில் எதிர்ப்படும் துன்பங்களைப் பேணாது,  பூந்தாள்கள் நெருங்கிய கற்கள் நிறந்த சிறுவழியினூடே, நீ இரவில் வந்து இவளின்  தேமல் நிறைந்த, திரண்டு விளங்கும் மார்பினைத் தழுவிச் சென்றதால் நறுநாற்றம் நிறைந்த அவளது தோளில் வண்டுகள் மொய்த்தன. அதுகண்டு ஐயுற்ற தாயோ விழிகளில் ஐயமும் சினமும் தோன்ற, "முன்னரும் இவ்வண்ணம் நடந்ததுண்டோ" என வினவினாள். அதற்கு மறுமொழி அளிக்க இயலாமல் திகைத்து என் முகம் நோக்கினாள் இவள். என் தோழியான உன் காதலியையும் உங்கள் காதலையும் காப்பாற்ற, ஆங்கு மணம் பரப்புதற்காய் எரிந்து கொண்டிருந்த சந்தனக் கொள்ளியைக்காட்டி, இதிலிருந்து வந்த வண்டுகள் இவளை மொய்த்தன என்றேன். தாய் ஐயுற்றதால் தலைவி இற்செறிக்கப்பட்டாள்; அதனால் அவள் வாராள்". என்றாள் தோழி..

பண்டைத் தமிழர் வாழ்வில் ஆண்கள் மார்பில் சந்தனம் பூசுவதும் வீடுகளில் நறுமணம் விளங்குதற்காய்ச் சந்தனக் கட்டைகளை எரிப்பதும் வழக்கம் என்பதும் இப்பாடலால் புலப்படுகிறது.

"ஓங்கு மலை நாட ஒழிக நின் வாய்மை
காம்பு தலைமணந்த கல் அதர்ச் சிறு நெறி
உறு பகை பேணாது இரவின் வந்து இவள்
பொறி கிளர் ஆகம் புல்ல தோள் சேர்பு
அறுகாற் பறவை அளவு இல மொய்த்தலின்
கண் கோள் ஆக நோக்கி பண்டும்
இனையையோ என வினவினள் யாயே
அதன் எதிர் சொல்லாளாகி அல்லாந்து
என் முகம் நோக்கியோளே அன்னாய்
யாங்கு உணர்ந்து உய்குவள்கொல் என மடுத்த
சாந்த ஞெகிழி காட்டி
ஈங்கு ஆயினவால் என்றிசின் யானே"

நற்றிணை :- பாடல் 55 - பாடியவர் - பெருவழுதி

**************************************

நாடோறும் இரவுக்குறியில் தன்னைத் தழுவிப் புணர்ந்த தலைவனைக் காண்பதற்கெனக் குறியிடத்தில் காத்து நிற்கும் தலைவி, காலம் கடந்தும் அவன் வாராமையால் , இனி வாரானோ என அஞ்சித் துயருருகிறாள்.துணைக்கு வந்த தோழி அவனைக் காணாமை பற்றி வினவ,

"அடியே என் தோழீ! புன்னை மரங்கள் செழித்துச் செறிந்த மலைச் சாரலில் முழவொலிபோல் இடியோசை அதிர்ந்து முழங்க மழை பொழியும் நள்ளிரவிலும்  பாம்புகள் உலவும் கொடிய வழியை அஞ்சாது, பாம்பின் படத்தை மிதித்துக் கொண்டு, நாள்தோறும் தவறாமல் வந்து துன்பம் நீங்க என்  மார்பைத் தழுவி இரவுப் பொழுதுகளில் மகிழ்ந்திருந்தவன் இப்போது என் கைவளை நெகிழும் வண்ணம் நான் துயரால் மெலிய என்னை நீங்குவான் என நான் அறிந்திருந்தால், மழை மேகம் தழுவி நிற்கும் மலை முகட்டில் கன்றை ஈன்றதால் உண்டான உடல் நலிவு தீர  மூங்கிலை மேயும் பெண் யானையைக் காதலுடன் துதிக்கையால் வருடிக்கொடுத்துக் கொண்டு களிறு நிற்பதுபோல்,   கதலி வாழை நிறைந்த சாரலை உடைய மலைநாட்டின் தலைவன் என்னுடன்  இணைந்திருக்க, அனைத் தழுவும் தோறும் தழுவும்தோறும் இன்பம் நீடிக்க என் மார்போடு இறுக்கிக் கொண்டிருந்திருப்பேனே"..என மறுமொழி நல்குகிறாள்.

"வழையமல் அடுக்கத்து வலனேர்பு வயிரியர்
முழவதிர்ந் தன்ன முழக்கத்து ஏறோடு
உரவுப் பெயல் பொழிந்த நள்ளென் யாமத்து
அரவின் பைந்தலை இடறிப் பானாள்
இரவின் வந்தெம் இடைமுலை முயங்கித்
துனிகண் அகல வளைஇக் கங்குலின்
இனிதின் இயைந்த நண்பவர் முனிதல்
தெற்றா குதனற் கறிந்தன மாயின்
இலங்குவளை நெகிழப் பரந்து படர் அலைப்பயாம்
முயங்குதொறும் முயங்குதொறும் உயங்கமுகந்து கொண்டு
அடக்குவம் மன்னோ தோழி மடப்பிடி
மழைதவழ் சிலம்பிற் கடுஞ்சூல் ஈன்று
கழைதின் யாக்கை விழைகளிறு தைவர
வாழையஞ் சிலம்பிற் றுஞ்சுஞ்
சாரல் நாடன் சாயல் மார்பே."
அகநானூறு :- பாடல் 328 -- பாடியவர் :- மதுரைப் பண்டவாணிகன் இளந்தேவனார்
(தொடர்ந்து காதலிப்போம்)

Sourcs : http://www.inneram.com







No comments: