Tuesday, January 19, 2010

தலைநகரை உலுக்கிய பாரிய பூமியதிர்ச்சி; ஆயிரக்கணக்கானோர் பலி

Posted by எம்.ரிஷான் ஷெரீப்
ஹையிட்டியின் தலைநகர் போர்ட் அயு பின்ஸை செவ்வாய்க்கிழமை இரவு தாக்கிய 7.0 ரிச்டர் பூமியதிர்ச்சியில் ஆயிரக் கணக்கானோர் பலியாகியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

கடந்த இரு நூற்றாண்டுகளில் ஹையிட்டி எதிர்கொண்ட மிக மோசமான பூமியதிர்ச்சியாக இது கருதப்படுகிறது. இப்பூமியதிர்ச்சியால் அந்நாட்டிலுள்ள ஐக்கிய நாடுகள் தலைமையக கட்டிடம், ஜனாதிபதி மாளிகை உள்ளடங்கலாக ஆயிரக்கணக்கான கட்டிடங்கள் சேதமடைந்துள்ளன.

ஜனாதிபதி மாளிகை இடிந்து விழுந்த போதும் ஜனாதிபதி ரேன் பிரேவலும் அவரது மனைவியும் உயிர் தப்பியுள்ளதாக ஹெயிட்டியின் அமெரிக்காவுக்கான தூதுவர் ரேமண்ட் ஜோசப் தெரிவித்தார்.



இந்த பூமியதிர்ச்சியைத் தொடர்ந்து பெருந்தொகையான ஐக்கிய நாடுகள் சபை உத்தியோகத்தர்கள் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில் தலைநகர் முழுவதும் இருளடைந்து காணப்பட்டதுடன் பாரிய பூமியதிர்ச்சியை தொடர்ந்து மேலும் பல பூமியதிர்ச்சி சம்பவங்கள் இடம்பெறலாம் என்ற அச்சத்தில் மக்கள் வீதிகளில் இரவைக் கழித்தனர்.

பூமியதிர்ச்சியின் பின் மேற்படி நகரப் பிராந்தியத்திலுள்ள பலரைக் காணவில்லை என முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாகவும் அவர்களில் பலர் இடிபாடுகளிடையே சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுவதாகவும் பிராந்திய அதிகாரிகள் தெரிவித்தனர்.

பெரும் பாதிப்பை எதிர்கொண்டுள்ள ஹையிட்டிக்கு தேவையான உதவிகளை வழங்குவதற்கு அமெரிக்கா, பிரித்தானியா மற்றும் வெனிசுலா ஆகிய நாடுகள் அணி திரண்டுள்ளன.


போர்ட் அயு பின்ஸின் தென் மேற்கே சுமார் 10 கிலோமீற்றர் தொலைவில் தாக்கிய இந்த பூமியதிர்ச்சியைத் தொடர்ந்து 15 முதல் 20 நிமிடங்கள் வரையான இடைவேளையில் முறையே 5.9 ச்டர் மற்றும் 5.5 ச்டர் அளவான இரு பூமியதிர்ச்சிச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன.

ஹையிட்டியின் வீதிகளில் பெரும்பாலானவை குறுகியவை என்பதால் கட்டிட இடிபாடுகள் காரணமாக போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அத்துடன் நீர் மற்றும் மின்சார விநியோகத்திலும் தடை ஏற்பட்டுள்ளது.

கட்டிட இடிபாடுகளிடையே எத்தனை பேர் சிக்கியுள்ளனர் என்பதை அனுமானிக்க முடியாதுள்ளதாக ஹையிட்டியிலுள்ள ஐக்கிய நாடுகள் சமாதானப் படைத் தலைவர் அலெயின் லீ ரோய் தெரிவித்தார்.

இந்த பூமியதிர்ச்சியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் பான் கீ மூன் அனுதாபத்தை தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா ஹையிட்டி மக்களுக்காக பிரார்த்திப்பதாக தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

 

No comments: