Sunday, December 16, 2012

நானும் ஆஃப்ரிக்காவும்...!

                                                                                                                               குறுந்தொடர் : 1

ஆஃப்ரிக்கா என்றதும் பலரின் நினைவிற்கு வருவது, வறுமை, ஏழ்மை, யானை, எய்ட்ஸ், கருப்பு கலர், கரடு முரடான தோற்றமுள்ள மக்கள், இயற்கை வளங்கள் மேலாக, முஸ்லிம்களுக்கு பிலால்(ரலி) அவர்கள், ஆம் ஆஃப்ரிக்காவின் அவல நிலையைச் சொல்லி மாளாது.

அந்த கண்டத்தின் வளங்களைக் கொள்ளையடித்து தம் மக்களையும், நாடுகளையும் ஜொலிக்க வைக்கும் அருவருப்பு குணம் படைத்த மேலைநாடுகள், அவர்கள் பயன்படுத்தியது போக மிச்சமிருக்கும் எச்சங்களையும், தொழிற்நுட்ப, அணுக்கழிவுகளையும் இன்னபிற இழிவுகளையும் கண்டெய்னர் கண்டெய்னராக ஏற்றி அவர்களுக்கு விலையின்றித் தருவதாகக் கூறி அவர்களை மெதுவாகக் கொல்கின்றன.

காலனி ஆதிக்கங்கள் முடிவுக்கு வந்திருந்தாலும், சில கட்டுப்பாடுகளை விதித்து இன்னும் நவீன அடிமைத்தனம் ஒழியவில்லை என்பதைக் கண்கூடாகக் காணும் வாய்ப்பை அல்லாஹ் எனக்குத் தந்தான்.



“என்ன இது, பயணக்கட்டுரை இவ்வளவு சிரியஸாகவா ஆரம்பிப்பது?” என்று யோசிக்கின்றீர்களா? கண்ட காட்சிகள் மனதிலிருந்து மறையாததால் வார்த்தைகளில் வெளிப்படுத்தி இருக்கின்றேன். மற்றபடி எல்லாம் நல்லாத்தான் போனது, இந்த மக்களையும் நாடுகளையும் கண்ட பிறகு அல்லாஹ் நம்மை எந்த அளவிற்கு மேம்படுத்தி வைத்து இருக்கின்றான் என்று அல்லாஹ்விற்கு நன்றி நவின்றவனாக!

ஆஃப்ரிக்க பயணத்தின் பயங்கரங்களையும், சுகங்களையும், வேடிக்கைகளையும் உங்களுடன் நீண்ட தொடராக பகிரலாம் என்று வந்திருக்கின்றேன். பயணத்தின் நடுநடுவே அந்த நாடுகளைப்பற்றி சில முக்கிய குறிப்புகளையும் காண்போம்.

ஆஃப்ரிக்கா நாடுகளை எங்கள் வியாபார பாஷையில் “கன்னி மார்க்கெட்” virgin market என்று சொல்லுவோம், அதிக வியாபார போட்டி இல்லாததாலும், லாபம் ஒரளவிற்கு பல்லிப்பதாலும் இவ்வாறு அழைக்கின்றோம். ஆனால், வளைகுடா / ஐரோப்பா நாடுகளை “முதிர்ச்சி அடைந்த மார்க்கெட்”matured market  என்று அழைப்போம், அங்கேப் போய் பொருள் விற்றால் ஒரு வேலை காலை சாப்பாட்டுக்கு தேவையான காசு சம்பாதிப்பதே பெரும்பாடாகிவிடும்,முதலில் நாங்க என்ன பிசினஸ் செய்கின்றோம் என்பதைச் சொல்லி ஆரம்பிக்கின்றேன் அது “ தொழிநுட்ப தொடர்பு சாதனங்கள் (Information Technology Goods Exports) ஏற்றுமதி.. தமிழாக்கம் சரியா ?? :)

கானா, ஐவரி கோஸ்ட் போன்ற நாடுகளில் பயணம் செய்திருந்தாலும், பயணக்கட்டுரை எழுதும் நோக்கம் அப்போ இல்லாததால் ஃபோட்டோவும் இல்லை, மண்டையில் டேட்டாவும் இல்லை. நிறைய எழுதினா உங்களுக்கும் போர் அடிக்கும் என்பதால் ஒரு சில நாடுகளை மட்டும் காண்போம்.

முதலில் நைஜீரியா


நார்த் ஆஃப்ரிக்காவில் துபாய்காரவங்க ஈ போல மொய்ப்பதால் அப்படி கொஞ்சம் தள்ளி இருக்கும் வெஸ்ட் ஆஃப்ரிக்காவைப் போய் கொஞ்சம் சீண்டி பார்ப்போமே என்று நானும் எங்க தலையும் முடிவு செய்து ஆஃப்ரிக்க கண்டத்திலேயே அதிக மக்கள் தொகை கொண்ட (175+ மில்லியன்) நைஜீரியாவைத் தேர்ந்தெடுத்தோம். சரி எங்கே இருந்து தொடங்குவது என் ஆராய்ந்தபோது முதலிம் ஊசி போடணுமாம் பயப்படாதீங்க அங்கே உள்ள நிலைமை அப்படி, கண்டிப்பாக இரண்டு (யெல்லோ ஃபிவர், மஞ்சள் காமாலை) அறிவுறுத்துவது ஏழு,  அப்புறம் பார்த்தா அட!!! அவங்களும் இன்விடேஷன், லட்டர் பேங்க் பேலண்ஸ் இருந்தால்தான் விசா கொடுப்பாய்ங்களாம் என்று கூற இங்கிலாந்து போய் வந்தது எனக்கு ஈஸியாக தெரிந்தது.

ஒரு வழியாக எல்லாம் ஏற்பாடு செய்து கொண்டு அபுதாபியில் இருக்கும்  அந்நாட்டின் தூதரகத்திற்கு வந்து சேர்ந்தாச்சு, (படம் : எங்கூடு இல்ல சத்தியமா நைஜீரிய எம்பஸிதான்) டோக்கன் கொடுத்து வரிசையில் உட்கார வைச்சாங்க… நான் பிறப்பாலேயே பொறுமைசாலி, ஆனால் எங்க தலை கொஞ்சம் கிர் கிர்…. மூல வியாதி உள்ளவன் கூட ஓர் இடத்தில் கம்முண்டு உட்கார்ந்து இருப்பான் போல ஆனா நம்ம ஆளு இரு செகண்ட் கூட..’ம்ம்ம்’. ஆக, ஒரு வழியாக எங்கள் நம்பர் வந்தது, இவ்வளவு நேரம் கழித்து வந்தாலும், சற்று சந்தோஷத்துடன் சென்ற எங்களுக்கு அசிஸ்டண்ட் கான்செலர் எங்கள் பேப்பர்களைப் பார்த்த பிறகு ஒரு குண்டைப் போட்டார். (”திகில்” courtesy  : சகோ.அ.ர.அல.)
                                                                                               பயணங்கள் விரிவடையும்…
முகமது யாசிர்
Source : http://adirainirubar.blogspot.in/2012/12/blog-post_866.html

2 comments:

ஸாதிகா said...

சுவாரஸ்யமாக உள்ளது.தொடருங்கள்.

புதுகை.அப்துல்லா said...

இந்தத் தொடரைப் பதிவேற்றும் ஒவ்வொரு முறையும் எனக்கு ஒரு மெயில் தட்டிவிடுங்க...இறைவன் நாடினால்

pudukkottaiabdulla@gmail.com