Sunday, December 16, 2012

உள்ளத்தில் உருக்கொள்ளும் ஒப்பாரி தந்ததெது?

எப்போதாவது ஒரு சித்தன் வருவான் எனக்குள். பித்தாக்கித்தான் போடுவான் அவன் என்னை நட்ட நடு வீதியில். மத்தளப் பிறப்பெடுப்பெதற்கு? மகராசன் அடித்து நொறுக்கத்தானே? ம்ம்ம்.... நடக்கட்டும்!


எல்லாமும் ஆனதுபோல்
          இம்மண்ணில் பூத்த பின்னர்
முள்ளில் கால் நோகுதென்றே
          முனகித்தான் பயனேது

சொல்லில் தினம் புண்ணாகிச்
          சுரக்கும் விழி ஏனெதற்கு
உள்ளத்தில் உருக்கொள்ளும்
         ஒப்பாரி தந்ததெது

ஒன்றுபோல வயிறுமனசு
         உடலென்ற பெருந்தொடரோ
என்றென்றும் இயம்புகின்ற
         ஒற்றைச்சொல் பசியன்றோ

வன்மையாக வாட்டுமிந்த
         வளர்பசிக்கு நசிந்துபோக
மண்ணில் நீ மலர்ந்ததென்ன
         எவரிடத்தோ யாசித்தா

கல்தாண்டி கடல்தாண்டி
         காற்றெனவே பறந்தாலும்
எல்லைக்கு அப்பாலும்
        இருளன்றி வேறேது

இல்லையொளி எங்குமென
         எண்ணிமட்டும் ஓயாதே
உள்ளத்தில் தேடிப்பார்
        உள்ளேதான் ஒளியுண்டு

பெண்ணுக்குள் உதயமாகும்
        பிறப்புக்கள் விபத்துக்கள்
மண்ணுக்குள் அமைதிதரும்
        மரணங்கள் பாக்கியங்கள்

இன்னும்கேள் இவையிரண்டின்
        இடைவந்த வாழ்க்கையோ
உண்மையல்ல உண்மையல்ல
        உடைதரித்தப் பொய்வனப்பே

உண்மையெங்கே என்றுநீயும்
        ஓயாமல் தேடித்தினம்
உன்நாட்கள் செலவழிய
        உண்டாகும் மாற்றமோ

என்றைக்கோ தேடிநின்ற 
         எவரெவரின் சுவடுகளில்
இன்றைக்கும் உன்பாதம்
         உருவாக்கும் புதுச்சுவடே

உண்மைதான் புத்துயிரே
          உன்பாதம் மட்டுமல்ல
பெண்ணுக்குள் புதையுண்டு
         பிறந்தபெருங் கூட்டத்தின்

வன்மையான பாதங்கள்
         வான்தொட்டுத் தேடிநின்று
மண்தந்த அழைப்பேற்று
         மரணத்தில் நிறுத்தினதாம்

என்மனதிற் பட்டதைநான்
         என்றென்றும் சொல்லிவைப்பேன்
இன்றும்நான் சொல்லுகின்றேன்
         இசைவாயோ மாட்டாய் நீ

உன்நாட்கள் முடியும்வரை
         உலகலாவித் தேடிநிற்பாய்
உன்னைமட்டும் விட்டொழித்து
         உறங்கிடுமோ பசியின் விசை

என்சொல்லும் கேளாமல்
         எங்கெங்கோ தேடிநிற்பாய்
உண்மைதனைக் கண்டறிந்தால்
         உடன்வந்து கூறிவிடு

உன்னைநான் எதிர்பார்த்து
         உயிர்பிரியும் வரையிருப்பேன்
என்னறிவு உரைப்பதுவோ
         என்றும் நீ வரமாட்டாய்
Source : http://anbudanbuhari.blogspot.in

No comments: