Sunday, October 17, 2010

வணங்காமுடி பதில்கள் (17-10-2010)





பாபரி மஸ்ஜித் தொடர்பாக வெளியான ஹைகோர்ட் தீர்ப்பு நீதித்துறை காவிமயமாகி வருவதைக் காண்பிக்கிறதா? நீதிபதிகளின் திறமைக் குறைவை வெளிப்படுத்துகிறதா?- சலீம், கோலாலம்பூர்.
இரண்டும் இல்லை!

அலஹபாத் உயர்நீதிமன்ற லக்னோ கிளையின் நீதிபதிகள் மூவரும் திறமையான நீதிபதிகள் ஆவர். அதனால்தான், "பாம்பும் சாகக்கூடாது; கோலும் ஒடியக்கூடாது" என்ற 'தந்திரத்தில்' தீர்ப்பு வழங்கியுள்ளனர். அதாவது பிரச்சனையும் ஓயக்கூடாது; கலவரமும் வரக்கூடாது என்ற ஆழ்ந்த சிந்தனையில் வழங்கப்பட்ட தீர்ப்பு இது. பிரச்சனை இப்போது உச்சநீதிமன்றத்திற்குச் செல்கிறது; மக்களும் அமைதியாக அடுத்த தீர்ப்பை எதிர்பார்த்து இருக்கின்றனர்.

முஸ்லிம் நீதிபதி முஸ்லிம்களை அமைதிப்படுத்தும் விதமாகக் கோயிலை இடித்து மசூதி கட்டப்படவில்லை என்று தீர்ப்பு வழங்குகிறார்; இந்து நீதிபதிகளுள் ஒருவர் மிகச்சரியாக மசூதியின் கும்பம் இருந்த இடத்தின் கீழ்தான் ராமன் பிறந்தான் என்று கூறி இந்துக்களின் நம்பிக்கைக்குப் பால்வார்க்கிறார். ஆளுக்குக் கொஞ்சம் நிலம் பிரித்துக் கொடுக்கப்படுகிறது.

ஓர் இளம்பெண்ணை அவளது விருப்பமின்றி வன்புணர்ச்சி செய்தவனுக்கே அவளைக் கட்டி வைக்கும் தமிழ்த்திரைப்படங்களில் வரும் பதினெட்டுப்பட்டிப் பஞ்சாயத்துத் தீர்ப்புப் போன்றது இது.

இந்தியா ஒலிம்பிக்ஸ் விளையாட்டை நடத்த முடியுமா ? - சந்திரகுமார், சுவாமியார் மடம்.
முயன்றால் முடியாதது எதுமே இல்லை.

அணுகுண்டு வெடித்தும் விண்வெளிக்கலம் அனுப்பியும் சாதனை படைத்த ஒரு நாட்டுக்கு ஒலிம்பிக் போட்டிகள் நடத்த முடியாதா என்ன?

அணு குண்டு வெடிப்பிலும் ராக்கெட் விடுவதிலும் அரசியல்வாதிகளையும் ஊழல் பேர்வழிகளையும் நெருங்க விடுவதில்லை. அதுபோல ஒலிம்பிக் ஏற்பாட்டிலும் இவர்களை ஒதுக்கி விட்டு நேர்மையான, துடிப்பும் ஆர்வமும் உள்ள இளைய அதிகாரிகளைச் சுதந்திரமாகச் செயல்பட விட்டால் அடுத்தப் பத்தாண்டுகளில் இந்தியாவில் ஒலிம்பிக் போட்டிகள் சாத்தியமே!


நாடுகள் வித்தியாசப்படும்போது பெண்களுக்கான ஆடை அணிகலன் வித்தியாசப்படுகின்றது. செருப்பு வித்தியாசப்படுவதில்லையே ஏன்? - கலையரசன், காங்கேயம்.

உண்டல்லோ!

நீங்கள் பெண்களின் பாதங்களைப் பார்ப்பதே இல்லையா? பாதணிகளைப் பார்க்க அஞ்சும் அளாவுக்கு என்ன......?.

ஆடை அணிகலன்களைப்போலவே அவர்களின் காலணிகளிலும் எத்தனை மாற்றம்?

சீனப் பெண்களின் செருப்பு மற்ற நாட்டுப் பெண்களின் செருப்புகளை விட வேறுபட்டிருக்கும். ஏனெனில் அவர்களின் பாதம் சின்னதாக்கப்பட்டுள்ளது.


குரங்கு அப்பம் பிரித்த கதையாக பாபர் மசூதி நிலம் பங்கு பிரிக்கப் பட்டுள்ளதே. இந்தத் தீர்ப்பைச் சொல்வதற்கு 60 ஆண்டு காலமா? - நௌஷாத், குவைத்.ஆமையையும் நத்தையையும் தோற்கடிக்கும் வேகத்தில் இந்தியாவின் நீதித்துறை இருப்பதாக நம் தளத்தில் "ரஸ்ஸலின் அலசலில்" சொல்லப்பட்டிருந்தது உண்மையே!

வழக்கு சமர்ப்பித்தல், வாதங்கேட்டல், சாட்சி விசாரணை, குறுக்கு விசாரணை, மறுவாதங்கேட்டல், வழக்காளிகள் ஆஜராகாமை, வழக்கறிஞர்கள் நேரங்கேட்டல், நீதிபதிகள் வழக்கை மறுவிசாரணைக்கு ஒத்திவைத்தல்,  வாய்தாவுக்கு மேல் வாய்தா, தீர்ப்பு, மேல்முறையீடு, அதற்கும் மேலே மற்றொரு முறையீடு என  இந்தியாவில் நீதிமன்ற நடவடிக்கைகள் தாமதப்படுவதற்கு ஆயிரம் காரணிகள்.

பாபர்மசூதி வழக்கு இரு மதத்தவர் சம்மந்தப்பட்ட நில உடைமை தொடர்பான சிவில் வழக்கு. அவ்வழக்கால் கலவரங்களும் உயிர்ப்பலிகளும் அரசியல் ஏற்றங்களும் ஆட்சி மாற்றங்களும் நிகழ்ந்தன. இவ்வழக்கால் பயனடைந்தோர் பலர்; இழந்தோர் பலர்.

ஆனால் இந்தச் சிக்கல்கள் ஏதும் இல்லா ஒரு வழக்கு ஆள்வோரின் பிடிவாதத்தால் இருபது ஆண்டுகள்
நடந்தது என்றால் நம்ப முடிகிறதா?

ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்த "டோங்க்" சமஸ்தானத்தை ஆண்டுகொண்டிருந்த நவாப் பரம்பரையினர் 570 பேர் பெற்றுக்கொண்டிருந்த மன்னர் மானியம் மாதம் தோறும் தலைக்கு ரூபாய் இரண்டு என்றிருந்ததை, 1979 ஆம் ஆன்டு ஆட்சியில் இருந்த ஜனதாக் கட்சி அரசு தலைக்கு நாற்பது ரூபாய் என உயர்த்தியது. எட்டாண்டுகளில் ராஜஸ்தான் அரசு, அந்த மன்னர் பரம்பரைக்கு நாற்பது ரூபாய் தர முடியாது எனக்கூறி, மீண்டும் தலைக்கு இரண்டு ரூபாய்வீதம் தரத் தொடங்கியது.

அரசின் இம்முடிவை எதிர்த்த அவர்கள் அம்மாநில உயர்நீதிமன்றத்தில் 1989 ஆம் ஆண்டு, நாற்பது ரூபாய்க்காக  வழக்குத் தொடுத்தனர். 2006 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் உயர்நீதி மன்றம் அந்தப் பரிதாபத்துக்குரிய மன்னர் பரம்பரைக்கு மாதம் நூறு ரூபாய் வீதம் கொடுக்க வேண்டும் எனத் தீர்ப்பு வழங்கியது.

இந்தத் தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தது ராஜஸ்தான் அரசு. அரசின் முறையீட்டத் தள்ளுபடி செய்து கடந்த ஆண்டு தீர்ப்பு வழங்கியது உச்சநீதிமன்றம்.

கேவலம் அற்பத் தொகைக்காக மக்கள் வரிப்பணத்தில் இருபது ஆண்டுகள் வெட்டியாக ஒரு வழக்கு நடந்தது என்றால் இந்தியாவின் நீதித்துறையின் வேகம் எளிதில் விளங்கும்.

ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் அயோத்தி தீர்ப்பு பற்றி பார்வையாளர் ஒருவர் கருத்து தெரிவிக்கும் போது  100, 150 வருடங்களுக்கு பிறகு வரும் நம் சந்ததியினர் இந்த தீர்ப்பை பற்றி என்ன நினைப்பார்களோ என்று வினவினார். அவருக்கு பதில் சொல்லப்படவில்லை.

இது பற்றி  என்ன நினைக்கிறீர்கள் வணங்காமுடியாரே?
- நேசமணி, குடியாத்தம்.
அந்தத் தொலைக்காட்சிப் பார்வையாளர் யாரிடம் வினவினார்; யார் விடை தரவில்லை என எந்த விளக்கமும் தராமல் "மொட்டைத்தாதன் குட்டையில் விழுந்தான்" என்பதுபோல  ஒரு வினா எழுப்பிவிட்டு இதுபற்றி என்ன நினைக்கிறீர்கள் வணங்காமுடி என்றால் என்ன செய்வது?

அவரின் வினாவுக்கு எவரோ விடைதராதது பற்றி வணங்காமுடி என்ன நினைப்பது?

அயோத்தி வழக்கில் இப்போது வழங்கப்பட்டிருக்கும் இந்தத் தீர்ப்பைப் பற்றி, நூறு, நூற்றைம்பது  வருடங்களுக்குப் பிறகு வரும் நம் சந்ததியினர் என்ன நினைப்பார்களோ என்று நீங்கள் வினவுவதாகக் கொண்டு விடை தருகிறேன்.

இந்தத் தீர்ப்பு முடிவானதில்லை; உச்ச நீதிமன்றத் தீர்ப்பே முடிவானது.

அத்தீர்ப்பும் இப்படியே அமைந்தாலும் நூறு, நூற்றைம்பது வருடங்களுக்குப் பின் வரும் நம் தலைமுறை இதை வரலாறாகத்தான் பார்ப்பார்களே ஒழிய பெரிய தாக்கம் ஒன்றும் இருக்காது.

இது வெறும் கனவோ ஊகமோ அல்ல! நடைமுறையில் நாம் காண்பதுதான்.

பாபர்மசூதிப் பிரச்சனையை அரசியல் லாபத்திற்காகவே பா.ஜ.க கையில் எடுத்துக் கலவரங்களை நடத்தியது என்பதைப் பொதுமக்கள் நன்கு புரிந்து கொண்டனர். அதனால்தான் இந்தத் தீர்ப்பு பற்றி அறிவு ஜீவிகளும் ஊடகங்களும் அலசும் அளவுக்குப் பொதுமக்கள் அலசவில்லை.

மேலும் ஒவ்வொரு பொதுத் தேர்தல் நேரத்திலும் "ராமர் கோயில் கட்டுவதே லட்சியம்" என பா.ஜ.க முழங்குவதைப் போலவே  இப்போது நடந்து முடிந்த  தேர்தலிலும் அக்கட்சி முழங்கியது;  ஆனால்  பா.ஜ.க நம்பியிருந்த பெரும்பான்மைச் சமூகத்து மக்களே அக்கட்சியையும் அதன்  கோஷத்தையும் புறக்கணித்து, காங்கிரஸையே  ஆட்சியில் அமர்த்தினர். மீண்டும் பா.ஜ.க ஆட்சிக்கு வருமானால், அது காங்கிரஸ் செய்யும் தவறுகளால்தான் இருக்குமே அன்றி மதவெறியால் இருக்காது.

பாபர் மசூதியை இடித்தவர்களிடம் இப்போதும் அதே வெறியும் வேகமும் இருக்கலாம். ஆனால் அதற்குப் பின் உருவான இளம் தலைமுறைக்கு இது தேவை இல்லாதது. கலவரங்கள் செய்யவும் ஊர்வலங்கள், பேரணிகளில் பங்கெடுக்கவும் கட்சிகளால் குறிவைக்கப்படும் இளைஞர்கள் இப்போது ரொம்பவும் மாறிவிட்டனர். இணையத்தின் வழி விரிந்த உலகியல் பார்வை பெற்றுவிட்டனர். இதனாலேயே அவர்களுக்கு இத்தீர்ப்பு ஒரு செய்தியாக மட்டுமே தெரிகிறது.

இப்போதே இப்படி என்றால் நூற்றைம்பது ஆண்டுகளுக்குப் பின் உலகம் எங்கேயோ போய் விடும்; மதம், சாதி, மசூதி, கோயில் கடவுள் எல்லாம் சமூகத்தைப் பாதிக்காத தனிநபர் விவகாரம் என்றாகிவிடும்.

சாப்பாட்டிற்க்கே வழியில்லாமல் வாழ்க்கையே வேள்விக் குறியாகியிருக்கும் பலர் நம் நாட்டில் உள்ளனர். இந்நிலையில் பல கோடி செலவில் நம்நாட்டில் காமன்வெல்த் போட்டி நடத்தலாமா? இது நமக்கு தேவையா? - ஸ்வேதா, ராமநாதபுரம்.
ஆசியப் பகுதியில் வல்லரசாக வளர்ந்துகொண்டிருக்கும் நாடு நம் தாய்நாடான இந்தியா!

விண்வெளி ஆய்வில் திறன் பெற்று விண்கலம் செலுத்தும் நாடு  நம் தாய்நாடான இந்தியா!

அணு ஆற்றலில் திறன்பெற்று அணுகுண்டு வெடித்த நாடு நம் தாய்நாடான இந்தியா!

இத்தனையும் நீங்கள் சொன்ன நிலையில்தாமே நடந்தன!

பசி, பஞ்சம், பட்டினி என்று நினைத்துக் கொண்டு மூலையில் முடங்கியிருந்தால் இந்த அளவு முன்னேற்றம் வருமா?

அதுபோலவே விளையாட்டுப் போட்டிகள் நடத்துவதும் .

நம் நாட்டின் வளர்ச்சியையும் விளையாட்டுத் திறமையையும் உலகிற்கு உணர்த்த இவைபோன்றவை கட்டாயம் தேவை.

பசி, பஞ்சம், பட்டினிக்கு, ஆள்வோரின் ஊழலும் திறமைக் குறைவுமே காரணங்கள். நதிகளை இணைத்து விட்டால் இந்தியாவில் தண்ணீர்ப்பஞ்சம் இருக்காது; தரிசு நிலங்களை விளை நிலங்களாக்கலாம். உணவுப்பொருள் பங்கீட்டை முறையாகச் செய்தால் மக்களின் பசியைப் போக்கலாம்.

"தீண்டாமை ஒரு பாவச்செயல்; தீண்டாமை பெருங்குற்றம்; தீண்டாமை மனிதத்தன்மையற்ற செயல்" என பாடப்புத்தங்களில் எழுதப்பட்டுள்ளது வெறும் ஏட்டுக்கு மட்டும் தானா? சுதந்திரமடைந்து 63 ஆண்டுகள் கடந்த பின்னரும் தீண்டாமையை முற்றாக ஒழிக்கமுடியாமைக்குக் காரணம் என்ன? - நஸீர், திருவிதாங்கோடு.

ஏட்டில் இருப்பது நடைமுறைக்கு வரவில்லை; மக்களின் மனங்களில் இன்னும் மாற்றம் வரவில்லை. அதனால்தானே, உலகிற்கே நாகரிகம் கற்றுத் தந்ததாகக் கூறிக்கொள்ளும் தமிழ்நாட்டில் கூட திண்ணியங்களும் மேலவளவுகளும் இரட்டைக் குவளைகளும் காணப்படுகின்றன.

எவ்வளவோ படித்து எத்தனையோ உயர் பதவிகள் பெற்றாலும் கூட, சாதியால் வெறுக்கப்படும் நிலையும் தீண்டாமைக் கொடுமையும் அவர்களுக்கு இருக்கத்தான் செய்கிறது.

பனாரஸ் பல்கலைக்கழகத்தில்  சம்பூர்ணானந்தாவின் சிலையை, 1979 ஆம் ஆண்டில்  இந்தியாவின் துணைப் பிரதமராகவும் பாதுகாப்பு அமைச்சராகவும் இருந்த நிலையில் திறந்து வைத்தார், இன்றைய இந்திய நாடாளுமன்றத் தலைவர் திருமதி மெய்ராகுமாரியின் தந்தையான பாபு ஜெகஜீவன்ராம்.

அவர் சிலையைத் தொட்டுத் திறக்கவில்லை. மின்சாரப் பொத்தானை அழுத்திச் சிலையை மூடியிருந்த துணி விலகும்படி செய்தார். உடனே அவரை நோக்கி, "செருப்புத் தைப்பவனே திரும்பிப்போ" என்று கூச்சல் போட்டு அச்சிலை தீட்டுப்பட்டுவிட்டதாகக் கூறி கங்கை நீரால் அச்சிலையைக் கழுவினர் உயர்சாதியினர்.

நாட்டின் உயர்ந்த பதவியில் இருந்தவருக்கே இந்நிலை இருந்தது என்றால், தீண்டாமைக் கொடுமை மறைய  இன்னும் எத்தனை நூற்றாண்டுகள் நாம் பயணப்பட வேண்டுமோ?


உச்சநீதி மன்றத்தின் தீர்ப்பே இறுதியானது என்றால் அதற்கு அடுத்தநிலை நீதிமன்றங்களில் வழக்காடுவது வீண்வேலைதானே? - திருஞானசம்பத்-அதிராம்பட்டினம்.எல்லா வழக்குகளும் உச்சநீதி மன்றத்திற்குச் செல்லா!.

கீழ் நீதிமன்றங்களில் தீர்க்கப்படும் வழக்குகள் உள்ளன, அவை உயர்நீதிமன்றப் படியைக்கூட மிதிக்க முடியாது!

வழக்கின் தன்மையைப் பொறுத்தே மேல் முறையீடுகள் உச்சநீதிமன்றத்தால் ஏற்கப்படுகின்றன.


அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் அப்படி என்னதான் பிரச்னை? - றாஃபி, நாமக்கல்.முப்பத்தொன்பது ஆண்டுகள்  ஈரானை ஆண்ட மன்னர் முகமது ஷா பஹ்லவி, 1979 ஆம் ஆண்டு, கொமைனியால் நடத்தப்பட்ட இஸ்லாமியப் புரட்சியால் பதவியிலிருந்து விரட்டப்பட்டு, நாட்டைவிட்டே துரத்தப்பட்டார்.

எகிப்து, மொராக்கொ, பஹாமாஸ், மெக்ஸிகோ போன்ற நாடுகளில் வாழ்ந்திருந்த அவர், புற்றுநோய்ச் சிகிச்சைக்காக அமெரிக்காவுக்குச் சென்றார். அவர் ந்யூயார்க் நகரை அடைந்ததும் ஈரானில் இருந்த அமெரிக்கத் தூதரகத்தைக் கொமைனி ஆதரவு மாணவர்கள் பிடித்து அங்கிருந்தவர்களைப் பணயக் கைதிகள் ஆக்கினர்.

சுமார் 444 நாட்கள் தொடர்ந்த இம்முற்றுகையில், இன்றைய ஈரானின் அதிபர் மகமூத் அகமது நஜாதும் முக்கியப் பங்கெடுத்திருந்தார் என்பது அமெரிக்காவின் கடுப்பு. கூடவே, அமெரிக்காவின் செல்லப்பிள்ளையான இஸ்ரேலைத்  தீவிரமாக ஈரான் எதிர்க்கிறது. இதைவிட ஈரானை வெறுக்க அமெரிக்காவுக்கு வேறு காரணம் தேவையா?



லஞ்சத்திற்கும் ஊழலுக்கும் என்னங்க வித்தியாசம்? - ரமேஷ், துபை.சட்டத்திற்குப் புறம்பாக அல்லது விதிகளைப் புறக்கணித்துச் செய்யப்படும் செயல்களுக்காக, லஞ்சம் பணமாகவோ பொருளாகவோ சேவையாகவோ அசையும்/ அசையாச் சொத்துகளாகவோ தரப்படுவது ஆகும். இதில் கடைநிலை ஊழியர் முதல் பெரும்பெரும் அமைச்சர்கள் வரை பங்கெடுக்கும் வாய்ப்பு உண்டு.


ஊழல் என்பது மோசடியாகும். அரசு அல்லது தனியார்த் திட்டங்களில் சொந்த லாபங்களுக்காகவோ அல்லது பிறருக்காகவோ அல்லது லஞ்சத்துக்ககவோ செய்யப்படும் நம்பிக்கை மோசடி ஊழல் ஆகும்.

லஞ்சம் = bribery

ஊழல் = corruption

கேள்விகளை அனுப்ப விரும்பும் வாசகர்கள் ask@inneram.comஎரிதங்களிலிருந்து இம்மின்மடல் பாதுகாக்கப்பட்டுள்ளது. இதனைப்பார்க்க ஜாவாஸ்கிரிப்ட் இயக்கப்படவேண்டும் என்ற மின் அஞ்சல் முகவரி மூலம் அனுப்பலாம்.
Source : http://www.inneram.com/2010101711242/vanagamudi-answers-17-10-2010

No comments: