Wednesday, October 27, 2010

க்ராஃபிக்ஸ் பயிற்சி - பாடம் 2

ஹலோ அன்பர்களே!

க்ராஃபிக்ஸ் பாடத்தின் இரண்டாவது பகுதியின் மூலம் உங்களைச் சந்திப்பதில் மகிழ்ச்சி. முதல் பகுதியில், adobe creative suite 4 ன் photoshop மற்றும் Illustrator ஆகிய இரு வடிவமைப்பு மென்பொருட்களை அறிந்தோம். இப்பகுதியிலிருந்து ஒவ்வொரு மென்பொருட்களையும் விரிவாகப் பார்க்க இருக்கிறோம். உங்கள் கணினியில் மேற்கண்ட இரு மென்பொருட்களும் நிறுவப்பட்டு, அவற்றின் முகப்புகளை நீங்கள் அறிந்துள்ளீர்கள் என்று நம்புகிறேன். முன்னர் கூறியது போன்று, ஒவ்வொரு பாடப்பகுதியில் கூறப்படுவதைப் படிப்பதோடு விட்டு விடாமல், திரும்பத் திரும்ப செய்து பார்த்துக்கொள்ளுங்கள். பாடங்களில் எழும் அனைத்துச் சந்தேகங்களையும் உடனுக்குடன் தெரிவித்து விளக்கம் பெற்றுக்கொள்ளுங்கள். இப்போது ADOBE PHOTO SHOP மென்பொருளின் முக்கியப் பகுதிகளை ஒவ்வொன்றாகக் காண்போம்.

ADOBE PHOTO SHOP - 1. The Interface

PHOTOSHOP மென்பொருளினைப் பயன்படுத்தும் பயனர்களின் வசதிக்காகப் பல இடைமுகங்கள்(Interface) இதில் காணப்படுகின்றன. அவற்றில் முக்கியமாக,

1.1 Tabbed Window

1.2 Tools

1.3 Panels

1.4 Keyboard

1.5 Custom

1.6 Screen mode

ஆகிய ஆறு இடைமுகங்களின் பயனையும் அவற்றைப் பயன்படுத்தும் முறைகளையும் இனி காண்போம்.

1.1 Tabbed Window

அடோபின் பழைய வெளியீடுகளில் இல்லாத இப்புது இடைமுகத்தின் பயன், திறக்கப்படும் ஒன்றுக்கு மேற்பட்ட கோப்புகளை ஒரே விண்டோவில் வரிசைப்படுத்துவதும் தேவையான பக்கத்துக்கு இலகுவாக செல்வதற்குமாகும்.

முன்பெல்லாம் ஒன்றுக்கு மேற்பட்ட கோப்புகள் திறந்தால் அது,  ஒன்றன்பின் ஒன்றாக மறைந்திருக்கும். நாம் வேலை செய்ய வேண்டிய கோப்புக்குச் செல்ல, Menu Bar சென்று அதில் Scroll செய்து கண்டுபிடிக்க வேண்டும். இந்த இடைமுக வசதி மூலம், நேரடியாக நமக்குத் தேவையான கோப்பைத் தேர்வு செய்துகொள்ள முடியும். (Internet Browser களின் புதிய வெளியீடுகள் இதே முறையைத்தான் பயன்படுத்திவருகின்றன).

படம் 1.1.1

மேற்கண்ட படத்தைக் கவனியுங்கள். படத்தில் கண்டவாறு நான்கு என்றல்ல, நூற்றுக்கணக்கான கோப்புகளை இப்படி திறந்து வைக்கமுடியும்.  உங்கள் கணினி தற்காலிக நினைவகத்தின்(RAM Memory) அளவு எவ்வளவு உள்ளதோ அதற்குத்தகுந்தவாறு, அதிகமதிகம் பக்கங்களை எளிதில் திறந்து கையாளலாம்.


இப்புதிய டேப் முறை இடைமுகம் வந்துள்ள நிலையில் பழைய முறையை உபயோகிக்க முடியுமா? என்றால் முடியும்!

Old is Gold எனும் சொல்லுக்கொப்ப Tab முறையில் இல்லாத தனித்தனி விண்டோக்களின் தேவை உள்ளது என்பதைப் பின்னர் அறிந்துகொள்ளலாம். டேப் முறையில் இணைந்துள்ள கோப்புகளில் நாம் விரும்பும் கோப்பின்மீது Click & Drag செய்தால் அந்தப் பக்கம் தனியாக பிரிந்துவிடும். அதைப்போல் பிரிந்துள்ள பக்கத்தை Click & Drag செய்து தேவையான இடத்தில் மாற்றிச் சொருகவும் முடியும். Tab இடைமுகத்தின் மூலம் நாம் விரும்பும் கோப்புகளை வலமிருந்து இடமாகவோ, இடமிருந்து வலமாகவோ மாற்றிக்கொள்ளவும் முடியும். 1.1.1 படத்தில் Untitled - 2, Untitled - 1, Untitled - 3, Untitled - 4 என வரிசை மாற்றத்துடன் வைக்கப்பட்டுள்ளதைக் காண்க. இந்த Click & Drag  Short Cut முறையன்றி, Tab இடைமுகத்தை மெனு வழியாகவும் கையாள முடியும்.

Tab முறையில் இணைந்துள்ள கோப்பில் குறிப்பிட்ட ஒன்றை தனியாகப் பிரிக்க Menu Bar செல்லுங்கள். அதில் Window -> Arrange -> Float in Window என்பதைத் தேர்வு செய்ய வேண்டும்.

அனைத்து கோப்பையும் Tab இடைமுகத்திலிருந்து தனித்தனியாக பிரிக்க Menu Bar -- Window -> Arrange -> Float All in Windows என்பதைத் தேர்வு செய்ய வேண்டும்.

தனித்தனியாக பிரிந்துள்ள ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட கோப்புகளை இணைக்க, Menu Bar -- Window -> Arrange -> Consolidate All to Tab என்பதைத் தேர்வு செய்யவேண்டும்.

நிரந்தரமாக தனித்தனி கோப்புகளாகவோ அல்லது Tab இடைமுகத்தில் வரிசை முறையிலோ திறந்துகொள்ளவும், வரிசை முறையை மாற்றியமைக்கவும் வேண்டுமானால் Menu Bar --Edit > Preferences > Interface என்பதை Click செய்யவும்.

இப்போது கீழே படத்தில் காண்பது போன்ற பக்கம் திறக்கும்.

படம் 1.1.2

படம் 1.1.2 இல் காண்பது போன்று வட்டமிடப்பட்டுள்ள இரு ஆப்ஷன்களை மாற்றி மாற்றி ஒன்றுக்கு மேற்பட்ட முறை தேர்வு செய்து பயிற்சி மேற்கொள்ளுங்கள்.

Tab விண்டோக்களை கையாளும் பகுதியில் இது தொடர்பான மற்றொரு சிறந்த ஆப்ஷனும் உள்ளது. அதை இவ்வார பயிற்சியாக கீழ்கண்டவாறு செய்து பாருங்கள்:

1. Tab இடைமுகத்தில் 6 பக்கங்களை உருவாக்குங்கள்.

2. முதல் பாடத்தில் ஆரஞ்சு நிறத்தில் ஹைலைட் செய்யப்பட்டுக் காண்பிக்கப்பட்டிருந்த Menu Bar க்கு மேலே உள்ள பகுதி Application Bar எனப்படும். கீழே படம் காண்க.

படம் 1.1.3

படத்தில் சிகப்பு வண்ணத்தில் ஹைலைட் செய்யப்பட்ட பகுதியில் தேர்வு செய்தால் கிடைக்கும் பல ஆப்ஷன்களை ஒவ்வொரு முறையும் மாற்றி மாற்றி தேர்வு செய்து பாருங்கள்.

Tab கோப்புகளை மூட, அந்தந்த டேபின் வலப்பக்கமுள்ள X குறியைத் தேர்வு செய்ய வேண்டும் என்பது இணைய பயன்பாட்டாளர்களுக்குத் தெரிந்திருக்கும். அனைத்து Tab கோப்புகளையும் மூட, Menu Bar -- File -> Close All என்பதைத் தேர்வு செய்தால் போதும். மெனு செல்லாமல் ஷார்ட் கட்டில் அனைத்து கோப்புகளையும் மூட, Close All பக்கத்தில் குறிப்பிட்டிருக்கும் கீகளைச் சேர்த்து அழுத்துங்கள்.

Tab இடைமுகம் குறித்த குறிப்புகளை இத்துடன் முடித்துக்கொள்வோம்.

தனக்குத் தெரியாததைக் கற்றுக்கொள்தல் என்பது நல்லதொரு பண்பு. எவ்வளவுக்கெவ்வளவு திறமைகளை வளர்த்துக்கொள்கிறோமோ, அந்த அளவுக்கு நம்மால் முன்னேற முடியும். அதே நேரம் சிலர், புதிதாக கற்கும் ஆர்வத்தில் அடிப்படைகளை விட்டு ஒரேயடியாக அனைத்தையும் ஒரே நேரத்தில் பரந்து மேய முயல்வர். குறிப்பிட்ட விஷயத்தில் நிபுணத்துவம் பெறுவது என்பதற்கும் அவ்விஷயத்தை வெறுமனே தெரிந்து வைத்துக் கொள்வதற்கும் வித்தியாசம் உண்டு.

நிறுவனம் ஒன்றில் குறிப்பிட்ட வேலைக்கு நேர்காணல்(Interview) நடந்தது. வேலை தேடி வந்தவரிடம் நேர்காணலில் நிறுவன மேலாளர், "உங்களுக்கு என்ன வேலை தெரியும்?" என கேட்டார். "என்ன வேலை தந்தாலும் செய்வேன்", என பதிலளித்தார் வந்தவர். "அவ்வளவு திறமைசாலியா?" என வியப்பதற்குப் பதிலாக, "ஸோ, உருப்படியா ஒன்றும் தெரியாது" என மேலாளர் ஒரு போடுபோட்டார்.

கற்றுக்கொள்பவர்களில் பெரும்பாலோரின் நிலை இவ்வாறாகத் தான் உள்ளது. அதாவது ஒரேயடியாக அனைத்தையும் ஆர்வத்தில் பரந்து மேயச் சென்றால், ஒன்றிலும் திறமையானவர்களாக முடியாது. ஆகவே, நாம் அறிந்திருக்கும் விஷயமாக இருந்தாலும் ஒன்றை முறையாகப் பயிலும் போது, உரிய பயிற்சிகளுடன் அடிப்படையிலிருந்து மேலே சென்றால் அதில் நாம் திறமையானவர்களாகப் பிரகாசிக்க முடியும்.

வெறுமனே வாசித்து விட்டு, "இவ்வளவு தானா? ஓக்கே தெரிந்தாயிற்று" என மூடி வைத்து விடாமல், ஆழ்ந்த ஈடுபாட்டுடன் ஒவ்வொரு பகுதியினையும் செய்முறை பயிற்சி செய்து பாருங்கள். அவ்வாறு செய்முறை பயிற்சிக்குச் செல்லும் போதே, சந்தேகங்களும் வினாக்களும் உருவாகும். பயிற்சியுடன் எழும் சந்தேகங்களுக்கு விளக்கம் பெற்று முன்சென்றால் நீங்களும் வெல்லலாம்.

பயிற்சியே பலனைத் தரும்!

அடுத்த பகுதியில் இடைமுகம் Tools(1.2) பற்றி பார்ப்போம்.

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails