Sunday, October 24, 2010

வணங்காமுடி பதில்கள் (24-10-2010)


கொஞ்சம்கூட  தீவிரவாதம் இல்லாத நாடு  இருக்கிறதா? - ஜகன் சென்னை.

தீவிரவாதம் என்பதற்கு இப்பகுதியில் முன்னர் விளக்கம் கொடுத்துள்ளேன்.  தனி ஆள் என்றாலும் நாடு என்றாலும் சரி, எதிலும் தீவிரம் இல்லாவிட்டால் முன்னேற்றம் இருக்காது. தீவிரமாகப் படித்தால் வெற்றி உறுதி; தீவிரமாகத்  தேடினால் வேலை உறுதி; தீவிர ஓட்டு வேட்டையில் பதவி உறுதி. காவலர் தீவிரமாகத் தேடுதலில் இறங்கினால் குற்றவாளி பிடிபடுவது உறுதி.
அப்படிப் பார்த்தால் தீவிரவாதம் இல்லாத நாடே இல்லை எனலாம்.

உங்கள் வினாவின் நோக்கம் "பயங்கரவாதம்"பற்றியதாக இருக்குமானால் விடை வேறு.

எங்கெல்லாம் மக்களின் உரிமைகள் மறுக்கப்படுகின்றனவோ, அவர்களின்  கோரிக்கைகள் அரசால் செவிகொடுக்கப்படவில்லையோ, எங்கெல்லாம் அரசு அடக்குமுறையைக் கையாள்கிறதோ அங்கெல்லாம் பயங்கரவாதம் உறுதி. நேரடியாகவும் மறைமுகமாகவும் இவ்வரச அடக்குமுறைக்கு ஆதரவு அளிக்கும் நாடுகளிலும் இது நடக்கலாம்.

இவை எதுவுமே இல்லாத அமைதியான நாடுகளின் பட்டியல் நீளமானது.

ஸ்விஸ் போல, சிங்கப்பூர், துபை, கானடா போல .....

வாசகர் சேகரின், "ஆசிய நாடுகளில்தானே தீவிரவாதம் அதிகமாக இருக்கிறது. ஏன்?" என்ற கேள்விக்கான பதிலையும் ஒரு எட்டுப் பார்த்துக்கொள்ளுங்கள்.

சிலி சுரங்கத்தில் மாட்டிக்கொண்டவர்களை காப்பாற்றும் வரை அங்கு அந்நாட்டு பிரதமர் அங்கு முகாமிட்டு இருந்தாக கூறப்படுகிறதே. நம் நாட்டில் இது போன்ற அசாம்பாவிதம் நடந்தால் நம் நாட்டு தலைவர் வருவார்களா.? - கிஷோர், சென்னை.
வருவார்கள்; ஆனால் அவர்களின் பாதுகாப்புக்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல் காரணமாக அவர்கள் இவைபோன்ற இடங்களுக்கு வர பாதுகாப்புக் காரணங்கள் அனுமதிக்கா!.

எனினும் சக அமைச்சர்களையும் உயர் அதிகாரிகளையும் உடனடியாக அனுப்புவர். சுனாமி, நிலநடுக்கம் போன்ற இயற்கைப் பேரிடர்கள் நிகழ்ந்தபோது நாம் இவற்றைக் கண்டுள்ளோமே!

முன்னாள் உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீல் மும்பையில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியசெய்தி கிடைத்த உடனே அங்கு செல்லவில்லை என்பதால்தானே பதவியிழந்தார்?

வருவார்களா என்பது ஒரு புறம் இருக்கட்டும். இதை எதிர்பார்க்க நம் நாட்டிற்குத் தகுதி இருக்கிறதா எனவும் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

சிலி நாட்டில் சுரங்கத்தில் 33 தொழிலாளார்கள்  மாட்டிக் கொண்டபோது நாடே கவலையில் ஆழ்ந்தது. அவர்கள் இறந்து போயிருப்பர் எனப் பலரும் கருத்துத் தெரிவித்தபோது, சிலியின் ஜனாதிபதி SEBASTIAN PINERA புதையுண்ட தொழிலாளர்கள் உயிரோடுதான் இருப்பர் என நம்பிக்கை தெரிவித்தார்.

மாட்டிக் கொண்ட 17 நாட்களுக்குப் பின்  உள்ளே இருந்தவர்கள் அனுப்பிய செய்தியில், "ஐயோ! எங்களைக் காப்பாற்றுங்கள்; நாங்கள் மரணத்தின் விளிம்பில் இருக்கிறோம்" என்று அரற்றவில்லை. "estamos bien en el refugio lo 33" (நாங்கள் முப்பத்துமூவரும் நலமே)என்று செய்தி அனுப்பினர். அவர்களுக்கு அரசின் மீது நம்பிக்கை; அரசுக்கு அவர்கள் மீது அக்கறை. பகலின் வெயிலையும் இரவின் குளிரையும் காற்றையும் பொருட்படுத்தாமல் தொழிலாளர்களின் குடும்பத்தினரும் மீட்புக் குழுவினரும் அமைச்சர்களும் அதிகாரிகளும் அவ்விடத்தில் முகாமிட்டிருந்தனர். அனைவரின் ஒற்றுமையும் நம்பிக்கையும் மன உறுதியும் தொழிலாளார்களை உயிருடன் வெளியே கொண்டுவரத் துணை புரிந்தன.

நம் நாட்டில் இப்படி ஒரு விபத்து  நடந்திருந்தால், புதையுண்ட தொழிலாளர்களை உயிருடன் மீட்கக் கோரி எதிர்க்கட்சிகள் தனித்தனியாகப் போராட்டமும் ஹர்த்தாலும் பந்தும் நடத்தி அரசின் கவனத்தை, மீட்புப் பணியில் இருந்து திசைதிருப்பி இருக்கும். புதையுண்ட தொழிலாளர்களின் குடும்பத்தைத் திரட்டி உண்ணாவிரதம், சாலை மறியல் என நடத்தி  எதிர்க்கட்சிகள் அரசியல் ஆதாயம் தேடப் பார்த்திருக்கும்;. அறிக்கை மேல் அறிக்கை விட்டு ஊடகங்களைத் திணறசெய்திருக்கும்.


காது குடையும் பழக்கத்தை விட்டொழிக்க நல்ல யோசனை சொல்லுங்களேன்? - அருணா, கடலூர்.

நானும் அப்படி ஒரு நல்ல யோசனைக்காகத்தான் காத்திருக்கிறேன்.


ராமர் பிறந்த நம்பிக்கையைக் கருணாநிதி ஏற்றுக்கொண்டிருக்கும் நிலையில், சேது கால்வாய் திட்டம் அவ்வளவு தானா? - கணேசமூர்த்தி, மதுரை.ஏதோ கருணாதியின் ராம நம்பிக்கையில் சேதுக்கால்வாய்த் திட்டம் தொங்கிக் கொண்டிருப்பதுபோல உங்கள் வினா உள்ளது.

ராமன் பிறப்பைக் கருணாநிதி எப்போது ஏற்றுக் கொண்டார்?

"ராமர் கிருதயுகத்தில் பிறந்ததாகச்  சொல்லப்படுகிறது. கிருதயுகம் என்பது 17 லட்சத்து 28 ஆயிரம் ஆண்டுகள் கொண்டது. இப்படி கற்பனைக்கு எட்டாத எண்ணிக்கை கொண்ட ஆண்டுகளுக்கு முன் நடந்த நிகழ்ச்சியைப் பற்றி, ராமர் பிறந்த இடம் இதுதான் என அறுதியிட்டு உறுதியாக தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளதைப் பார்க்கும்போது, 17 லட்சம் ஆண்டுகளுக்கு முன் ராமர் பிறந்த இடத்தை  உறுதிப்படுத்த முடிகிறது; ஆனால், 1,000 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்து, தென்னகத்தைக் கட்டி ஆண்ட மாமன்னன் ராஜராஜ சோழன் மறைந்த விதத்தையோ, அவன் கல்லறையையோ, அவனுக்கு நினைவுத் தூண் அமைத்த இடத்தையோ நம்மால் இன்னமும் அறிய முடியவில்லையே என அகம் நொந்து வருந்தத்தானே வேண்டியுள்ளது.” என்றுதானே  கருணாநிதி கூறியுள்ளார்.

வாசகர் முருகேசனின், "ராமர் பாலமும் வேண்டும், சேது சமுத்திரம் திட்டமும் வேண்டும். வணங்காமுடி கருத்தென்ன?" என்ற கேள்விக்கு முன்னர் அளித்த பதிலையும் பார்வையிடுங்கள்.

பாபரி மசூதி தீர்ப்புக்குப் பின் பாபர் மசூதி இடிப்பு வழக்கு என்னவாகும்? - ராஜா, திருச்சி.
தொடர்ந்து நடக்கும்.

அலகாபாத் உயர்நீதிமனறத்தின் லக்னோ கிளை இப்போது வழங்கியுள்ள தீர்ப்பு மசூதி நின்ற இடம் தொடர்பானது. நில உடைமை தொடர்பான  சிவில் வழக்கு. மசூதியை இடித்தது கிரிமினல் வழக்கு. உச்ச நீதிமன்றத்திற்கு உத்தரப்பிரதேச மாநில அரசு வழங்கிய உறுதி மொழியைக் குலைத்து, சட்டவிரோதமாகக் கூடிக் கலவரம் செய்து ஒரு வழிபாட்டுத்தலத்தைத் தகர்த்த வழக்கு. அது நடக்கும்.

சிமியும் ஆர் எஸ் எஸ் ஸும் உண்மையிலேயே ஒண்ணா நைனா? - கர்ணன், மடப்பட்டு.
மத்திய அரசால் இப்போது தடை செய்யப்பட்டுள்ள சிமி என்பது மாணவர் அமைப்பு; மாணவர் அல்லாதவர்களும் அதில் இணைவர். மத்திய அரசால் முன்பு ஓரிரு முறைகள் தடை செய்யப்பட்டிருந்த ஆர் எஸ் எஸ் அமைப்பில் மாணவர்களும் இணைவர்...

சிமி முஸ்லிம்களுக்கானது; ஆர் எஸ் எஸ் இந்துக்களுக்கானது. இரண்டும் எப்படி ஒன்றாகும்?

"ராப்ரி ஒரு நெருப்பு. நெருங்கிப் பார்" என்று சவால் விட்டிருக்கிறார் லல்லு ப்ரஸாத் யாதவ். இரு தொகுதிகளில் போட்டியிடப் போகும் ராப்ரியை எதிர்த்து நின்று வெல்லும் துணிவு பாஜகவுக்கு உண்டா? - சீவகன், பட்டுக்கோட்டை.

"அரசியலில் இதெல்லாம் சாதாரணம் அப்பா" எனக் கவுண்டமணி பாணியில் இதுபோன்ற சவால்களையும் மிரட்டல்களையும் எடுத்துக் கொள்வர்.  லாலுவே கடந்த நாளுமன்றத் தேர்தலில் ஒரு தொகுதியில் தோற்றுப்போனாருல்லே ....அப்புறமாக்கும் ராப்ரி..ஹெ!பால்தாக்கரே, ரஜினிக்கு கடவுள் மாதிரியாம், நீ என்னா நினைக்கிறே, நைனா? - வீரமணி, வில்லிவாக்கம்.ரஜினி மும்பைக்குப் போனால் பால்தாக்கரேயைக் கடவுள் என்பதும் கர்நாடகாவில் ராஜ்குமாரைக் கடவுள் என்றதும் எல்லாம் வெறும் சொற்களே!. நடிகர்களுக்குத் தம் பிழைப்புக் கெட்டுவிடக்கூடாது. அதற்காக ரசிகர்களையும் கடவுள் என்கின்றனரே?

இவர்களின் புகழுரைகள் வெற்றுச் சொற்களே; உள்ளத்தில் இருந்து வருவன அல்ல.

பால்தாக்கரே ஒரு மராட்டியன். ரஜினியும் அப்படியே!

முன்பு மும்பையில் இருந்து தமிழர்களை விரட்டி அடித்த பால்தாக்கரேயைக் "கடவுள்" என்று ரஜினி சொன்னது, "ஒரு துளி வேர்வைக்கு ஒரு பவுன் தந்த" தமிழ்நாட்டுக்காரன் தயாரித்த படத்தை மும்பையில் சிக்கலின்றி ஓட வைக்கவே! இதெல்லாம் வியாபாரம்; நீங்க இதை ஸீரியஸ்ஸாக எடுத்துக்கொண்டு வினா எழுப்பியுள்ளீர்களே?


கர்நாடக பாஜக அரசு ஐந்து வருடம் நீடிக்குமா? - கண்ணன், தென்காசி.பதவி நீக்கம் செய்யப்பட்ட சுயேட்சை எம் எல் ஏக்களின் வழக்கில், கர்நாடக உயர் நீதிமன்றத் தீர்ப்பு வரட்டுமே!


லேட்டரல் திங்கிங் என்றால் என்ன? - சின்னசாமி,  பண்டாரவாடை.இதைச் சட்டென மொழியாக்கம் செய்தால் "சமயோஜித புத்தி" எனலாம். விரிவாகச் சொன்னால், "சிக்கலான தருணங்களில் கூரறிவைப் பயன்படுத்தி மாறுபட்ட கோணத்தில் விரைந்து சிந்தித்து ஆக்கபூர்வமாய்ச் செயலாற்றல்"  எனலாம். குறுக்கு புத்தி என்பது வேறு. அது ஆபத்தானது. லேடரல் திங்கிங்  என்பது, வழக்கமான பாணியில் இருந்து அகன்று  மாறுபட்ட கோணத்தில் சிந்தித்தல்.

Lateral thinking எனும் சொல்லைத் தந்தவர் மால்டாவைச் சேர்ந்த மருத்துவ அறிஞர்  எட்வர்ட் டி போனோ என்பவர் ஆவார்.

1967 ஆம் ஆண்டு அவர் எழுதிய ஒரு நூலில் இச்சொல்லை அறிமுகப்படுத்தினார்.

இக்கட்டான சூழ்நிலையில் மாறுபட்ட கோணத்தில் விரைந்து சிந்தித்துச் செயலாற்றுவது லேடரல் திங்கிங்.

இதை விளக்க மறைந்த எழுத்தாளர்  சுஜாதா ஒரு கதை சொல்லியிருந்தார்.

ஒரு இளம் பெண்ணை அவளது தந்தையின் பிஸினஸ் பார்ட்னர் மணம் புரிந்துகொள்ள வற்புறுத்திக் கொண்டேயிருந்தார். பெண்ணிற்கு விருப்பமில்லை. அவளது தந்தைக்கோ தர்ம சங்கடமான நிலை. ஒருநாள் மூவரும் ஒரு கடற்கரையில் நடந்து கொண்டிருந்தனர். கடற்கரையில் கருப்பு வெள்ளை நிறக் கற்கள் பரவிக் கிடந்தன. பார்ட்னர் அவளிடம், "நான் உன் கைப்பையில் கருப்பு வெள்ளை நிறக் கற்கள் இரண்டைப் போடுகிறேன்; நீ கருப்பை எடுத்தால் என்னை மணம் புரிய வேண்டாம்; வெள்ளையை எடுத்தால் என்னைக் கல்யாணம் செய்துகொள்ள வேண்டும்" என அவன் அவளிடம் ஒப்புதல் பெற்றான். பின் அவளது கைப்பையில் இரண்டு வெள்ளை நிறக்கற்களை அவன்  போட்டதைக் கவனித்த பெண்  ஒரு கல்லை எடுத்த உடனே கீழே வீசிவிட்டு அவனிடம் சொன்னாள்:--"கைப்பையில் மீதி இருக்கும் கல் வெள்ளை என்றால் நான் எடுத்து வீசியது கருப்புக் கல்; எனவே உன்னைக் கல்யாணம் செய்ய வேண்டிய கட்டாயம் இல்லை".
கேள்விகளை அனுப்ப விரும்பும் வாசகர்கள் ask@inneram.comஎரிதங்களிலிருந்து இம்மின்மடல் பாதுகாக்கப்பட்டுள்ளது. இதனைப்பார்க்க ஜாவாஸ்கிரிப்ட் இயக்கப்படவேண்டும் என்ற மின் அஞ்சல் முகவரி மூலம் அனுப்பலாம்.
Source : http://www.inneram.com/2010102411416/vanagamudi-answers-24-10-2010

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails