Monday, October 18, 2010

நேரந்தவறாமை

நேரந்தவறாமை


தொழுகையானது (மூமினான) விசுவாசிகள் மீது நேரங்குறிக்கப்பட்ட கடமையாகும்.
 நிஸா 103, குர்ஆன்
    குறித்த நேரத்தில் தொழுகையைச் சரியாக நிறைவேற்றாதவன், எதையுமே குறித்த நேரத்தில் செய்ய மாட்டான்.
    பொன்னுக்கும், மண்ணுக்கும், முத்துக்கும், மணிக்கும் விலையும் பெரிய மதிப்பு உண்டு, ஆனால் நேரத்திற்கு விலைமதிக்க முடியாது.
    தனது நேரத்தின் பெறுமதியை மதிக்காதவன் பிறர் நேரத்தின் பெறுமதியையும் மதிக்க மாட்டான்.
    குறித்த நேரந்தவறாமல் காரியம் பார்த்தோர் வாழ்க்கையில் வெற்றி பெற்று எங்கேயோ சென்று விட்டார்கள்.  நேரந்தவறிக் காரியம் பார்த்தோர் கோட்டையும் விட்டு, கொட்டாவியும் விட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
    விளங்கவில்லையே! என்ன சொல்கிறீர்கள்?
    நான் மட்டும் ஐந்து நிமிடம் முன்னர் குறித்த நேரத்தில் நேரந்தவறாமல் பரீட்சை மண்டத்திற்கு வந்திருந்தால் ஒரு வருடம் முன்னரே நான் எனது டாக்டர் பட்டத்தைப் பெற்றிருப்பேன்.  பரீட்சைக்கு ஐந்து நிமிடம் பிந்தியதால் வைத்தியக்கல்லூரி பிரவேசம் ஓராண்டு தள்ளப்பட்டு விட்டதே.
    ஆயுள் பூராவும் ஆயத்தம் செய்து வந்த எனது புனிதப்பயணம் அரை மணி நேரம் பிந்தி விமான நிலையம் வந்த படியால், தடைபட்டு விட்டதே.  இனி அடுத்த ஆண்டில் தானே ஹஜ் செய்ய முடியும்.  ஆரை மணி நேரம் தாமதம் ஓராண்டு காலத்துக்கு என்னை ஏங்க வைத்து விட்டதே.
-ஹஜ் விமானத்தைத் தவறவிட்டவரின் புலம்பல்
    “மின்சார வரியையும், தண்ணீர் வரியையும் நேரந்தவறிச் செலுத்தினேன்.  ஆவை துண்டிக்கப்பட்டு வீண் சிரமத்திற்கு ஆளானேன்.”
    இவர்கள் யாவரும் நேரத்தின் பெறுமதியை மதியாதபடியால், நேரந்தவறி வேலைகளைச் செய்து வாழ்வில் ஏமாற்றங்களுக்கு ஆளானோர்.  கடுமையான தோல்விகளையும், ஏமாற்றத்தையும், கவலைகளையும் தவிர வேறென்ன தான் இவர்களுக்கு மீதப்படப்போகிறது?
    நேரந்தவறாமல், குறித்த வேளையில் குறித்த வேலை செய்து வருவோர் வாழ்வின் சகல துறைகளிலுமே சிறப்பாக – சீர் வெற்றி பெறுவர் என்பதை யார் தான் மறுக்க முடியும்?
    அற்ப உலகின் சொற்ப கால வாழ்வின் நிதானமாகவும், புத்திசாலித்தனமாகவும் அறிவுடமையுடனும் பயன்படுத்திய மணித்துளிகள் இம்மை மறுமை இரண்டிலுமே ஒரு மனிதனுக்குக் கை கொடுக்கும்.
    வாழ்வாங்கு வாழ்ந்து வாழ்க்கையில் வெற்றி வாகை சூடிய இறை நேசர்களாம் வலிமார்கள் தமது நேரத்தை முறையாக வகுத்து, நேரந்தவறாது தொழில்பட்டதாலேயே ஈருலகப்பெருவாழ்வு கண்டார்கள்.

    நேரந்தவறித் தொழும் தொழுகையோ, நேரந்தவறிச் செய்யும் உபதேசமோ, நேரந்தறவறி உட்கொள்ளும் உணவோ, நேரந்தவறி உறங்கும் உறக்கமோ, நேரந்தவறி உபயோகிக்கும் மருந்தோ, நேரந்தவறிச் செல்லும் பயணமோ, நேரந்தவறிச் செய்யும் திருமணமோ நேரந்தவறிச் செய்யப்படும் விவசாயமோ நேரந்தவறி அடைகாத்த கோழியோ உரிய பயன் நல்கப்போவதில்லை.
மதினாவில் கண்ட ஸவாத்


ஸ்ரீ லங்கா, அல்-ஹாஜ் மௌலவி ர். ஸலாஹ{த்தீன்

No comments: