by Rafeeq புதுசுரபி
குழந்தைகளும் தூக்கமும் - புதுசுரபி
”காலமிது காலமிது கண்ணுறங்கு மகளே.............
காலமிதைத் தவறவிட்டால் தூக்கமில்லை மகளே............”
என்று பின்வரும் காலங்களில் வயதிற்கேற்ப பொறுப்புகளினால் தூக்கம் என்பது ஏக்கத்திற்குரிய விஷயமாகிப் போகுமெனப் பட்டியலிட்டு, குறைந்தபட்சம் குழந்தைப் பருவத்திலாவது தூங்கிக் கொள் என்கிறது கவிஞரின் அற்புதமான வரிகள்.
ஆனால் இன்று நம் வீடுகளில் “கண்ணா 11 மணி ஆகிறது, தூங்கப்போ” என்று பெற்றோர்களும், ‘இல்லம்மா........ இன்னும் கொஞ்ச நேரத்தில் இந்த நிகழ்ச்சி முடிந்தவுடன் ...” என்று கெஞ்சும் சிறார்களையும் பரவலாகப் பார்க்க முடிகிறது. தொலைக்காட்சி (நிகழ்ச்சிகள்) என்று மட்டும் இல்லாமல் இன்று கணினியும், வீடியோ விளையாட்டுகளும் படுக்கை அறைகளில் நுழைந்து கொண்டன. விளைவு, கதாபாத்திரங்களாகவே தன்னை சித்தரித்துக்கொண்டு கண்ணாடித் திரையில் தன்னை ஒட்டிக் கொண்டவர்கள்தான் ஏராளம்.
இங்கு நாம் கவலை கொள்ள வேண்டிய விஷயம் என்னவென்றால், குழந்தைகள் எப்பொழுது தூங்கப் போகிறார்கள் என்பதல்ல, மாறாக எவ்வளவு நேரம் தூங்கினார்கள் என்பதுதான். ‘குழந்தைகளின் தூக்கத்தைப் பற்றிக் கவலையடைய என்ன இருக்கிறது?’ என்ற கேள்வி ம்னதில் எழலாம்.
ஆம், நம் குழந்தைகள் நல்ல குழந்தைகளாக, ஆரோக்கியமான உடல்நிலை பெற்ற குழந்தைகளாக, ஆக்கப்பூர்வமான சிந்தனைகள் கொண்ட குழந்தைகளாக, கல்வியில் சிறந்த குழந்தைகளாக உருவாவதற்கு
அவர்களுடைய தூக்கமும் தூங்கும் நேரமும்தான் பேருதவி புரிகின்றன.
குழந்தை மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் குழந்தைகளுக்கான் தூக்க நேரம் குறித்து அட்டவணையே தயாரித்திருக்கிறார்கள். ஒரு வயது குழந்தை நாளொன்றுக்கு 12 முதல் 14 மணி நேரம் தூங்க வேண்டும். இதே போல் மூன்று வயது முதல் ஆறு வயதிற்குட்பட்டோர் 11 முதல் 12 மணி நேரம் தூங்க வேண்டும். ஆறிலிருந்து 12 வயது வரையிலான குழந்தைகள் 10 முதல் 11 மணி நேரம் தூங்குவது அவசியமாகிறது. இந்த தூக்க நேர மாறுதல்களினால் குழந்தைகளின் உடலும், மனமும் பாதிக்கப்படுவதாக மருத்துவ வல்லுனர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
அயர்ந்து தூங்கும் இந்த அற்புதமான நேரத்தில்தான் குழந்தைகளின் எலும்பு வளர்ச்சியும், ஹார்மோன்களின் வெளிப்பாடும் நடக்கிறதென்பது அதிசயமான அறிவியல் உண்மை. மேலும் சீரான உடல் வளர்ச்சியும் இப்போதுதான் நடைபெறுகிறது.
தூக்கம் ஒரு மாமருந்து என்றால் அது மிகையன்று. ஏனெனில் தூக்கம், நோயினால் நலிவுற்றிருக்கும் உடலைத் தேற்றுகிறது. நோய் எதிர்ப்புத் திறனை அதிகரிக்கவும், மூளை வளர்ச்சியடையவும், சுருங்கச் சொல்லின் ஒரு மனிதனின் முழு வளர்ச்சிக்கும் தூக்கம் பெரும் பங்காற்றுகிறது.
சரியான தூக்கமின்மை அல்லது குறைவான தூக்க நேரம், குழந்தைகளுக்கு உடல் கோளாறுகளைத் தோற்றுவிப்பதுடன் மட்டுமல்லாது பல மனநோய்களைத் தோற்றுவிப்பதிலும் முதன்மையாய் இருக்கிறது. முக்கியமாய் மனப்பதற்றம், மனச்சிதைவு, கற்றலில் குறைபாடு, சாதாரண செயல்களில் கூட தடுமாற்றம் போன்றவற்றை ஏற்படுத்துகிறது. குழந்தைகளின் செயல்திறன்களிலும், விளையாட்டுத் திறன்களிலும் எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்துகிறது. மேலும் ச்மூக உறவுகளில் விரிசல் விழவும் இந்தத் தூக்கப் பற்றாக்குறைதான் முன்னிலை வகிக்கிறதென்னும் ஆய்வு நம்மைத் தலைசுற்ற வைக்கிறது.
சரி, இனிமேல் என் குழந்தைகளின் தொலைக்காட்சி பார்க்கும் நேரத்தினைக் கண்காணிக்கிறேன். அவர்கள் நிகழ்ச்சிகள் பார்க்கும் நேரங்களை கட்டுக்குள் வைத்திருப்பேன். அவர்களுக்கு தூக்கத்தின் அவசியத்தை உணர்த்துவேன் என்று நீங்கள் உணர்வது நிச்சயமாக வரவேற்கத் தகுந்த மனமாற்றமே.. சந்தேகமில்லை. ஆனாலும் தூக்கத்திற்குரிய சூழலை உருவாக்கிக் கொடுக்கவேண்டியது பெற்றோர்களது கடமையென்பதினை மறக்கக்கூடாது.
அவர்கள் பார்க்கும் நிகழ்ச்சிகள் அவர்களின் மனதை எந்த விதத்திலும் பாதிக்காதவாறு இருக்க வேண்டும்.
குறிப்பாக 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளின் மனதில் வன்முறை, கூச்சல், அடிதடி போன்றவை (சமயத்தில் செய்திகளில் கூட விரும்பத்தகாத படங்கள் வெளி வ்ந்து விடுகிறது. )பதியப்படும் போது தொலைவது தூக்கம் மட்டுமல்ல, அவர்களது கற்பனை வளமும் தான். தொலைக்காட்சி என்ற வில்லனை படுக்கையறையிலிருந்து தொலைத்துவிட்டால் - தேவையற்ற ஒலி / ஓசை, ஒளி, வெப்பநிலை நீங்கி நல்லதொரு (தூக்கத்திற்கேற்ற) சூழல்
உருவாகும், பிறகென்ன -
தூக்கம் அவர்கள் கண்களில்............................!
அமைதி அவர்கள் நெஞ்சினில்..........................!
வளமான இந்தியா விடியலில்...........!!!!!!!!!!!!!!!!!!
No comments:
Post a Comment